search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலி தங்க கட்டிகளை கொடுத்து பெண்களிடம் லட்சக்கணக்கில் பணமோசடி - 2 தம்பதிகள் கைது
    X

    போலி தங்க கட்டிகளை கொடுத்து பெண்களிடம் லட்சக்கணக்கில் பணமோசடி - 2 தம்பதிகள் கைது

    • பலரிடம் அவர்கள் போலி தங்க கட்டிகளை கொடுத்து பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
    • மறுநாள் செல்லும் போது போலி தங்க கட்டிகளை கொண்டு சென்றுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர்-பல்லடம் சாலை குப்பாண்டபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48). இவரது மனைவி சுருதி (45). இவர்கள் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பல்லடம் பகுதியில் வசித்து வரும் ரவி (41), அவரது மனைவி துர்கா (35) ஆகியோர் கடந்த 2 வருடங்களாக குடும்பத்தில் ஒருவராக பழகி வந்துள்ளனர்.

    இந்த தம்பதியினர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக சுருதியிடம் " பல்லடம் பகுதியில் குடியிருக்கும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மற்றொரு கணவன்-மனைவியிடம் ஒரு கிலோ தங்க கட்டி இருப்பதாகவும், அதன் மதிப்பு ரூ.60 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்றும், அதனை எப்படி விற்பனை செய்வதென்று தெரியாமல் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். உடனே சுருதி அவர்களிடமிருந்து தங்கத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபத்துக்கு விற்று விடலாம் என்ற பேராசையில் தான் வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து மளிகை கடை நடத்தி வரும் தம்பதியை ரவியும், அவரது மனைவி துர்க்காவும், பல்லடம் பகுதியில் குடியிருக்கும் ஆந்திர மாநில மற்றொரு தம்பதியான முனுசாமி ( 38), அவரது மனைவி குமாரி (31) வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த தம்பதி தங்கக் கட்டி என்று கூறி 2 கட்டிகளை சக்திவேல் மற்றும் சுருதியிடம் கொடுத்துவிட்டு ரூ.13 லட்சத்தை பெற்றுக் கொண்டனர். அந்த கட்டிகளை வீட்டிற்கு கொண்டு வந்த மளிகை கடை தம்பதியினர் பரிசோதித்துப் பார்த்த போது அவை தங்க கட்டிகள் அல்ல என்றும், தங்கமுலாம் பூசப்பட்ட பித்தளை என்பது தெரியவந்தது.


    இதனால் அதிர்ச்சி அடைந்த மளிகை கடை தம்பதியினர் உடனடியாக பல்லடம் சென்று தங்க கட்டி என்று கூறி ஏமாற்றிய தம்பதிகளை தேடிப்பார்த்தனர். அப்போது அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து சக்திவேல் மற்றும் சுருதி வீரபாண்டி போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திர மாநில மோசடி தம்பதிகளை தேடி வந்தனர். இதையடுத்து அவர்களை பிடிக்க திருப்பூர் தெற்கு இணை கமிஷனர் நந்தினி உத்தரவின் பேரில் வீரபாண்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் ரவி அவரது மனைவி துர்கா, முனுசாமி அவரது மனைவி குமாரி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 கிலோ போலி தங்க கட்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் திருப்பூரை சேர்ந்த மேலும் சில பெண்களிடம் போலி தங்க கட்டிகளை கொடுத்து பணமோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை சந்தித்து பேசும் அவர்கள் உண்மையான தங்க கட்டிகளை கொடுத்து அதனை வாங்கி கொள்ளுங்கள் என்று கூறுவார்கள். அந்த தங்க கட்டிகளை பெண்கள் வாங்கி பார்த்து ஆய்வு செய்யும் போது தங்க கட்டிகள் உண்மையானது என தெரியவரவே அவர்கள் தங்க கட்டிகளை வாங்க முன்வந்துள்ளனர்.

    பின்னர் மறுநாள் செல்லும் போது போலி தங்க கட்டிகளை கொண்டு சென்றுள்ளனர். பெண்கள் அதனை உண்மை என்று நம்பி லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி ஏமாற்றமடைந்துள்ளனர். இப்படி பலரிடம் அவர்கள் போலி தங்க கட்டிகளை கொடுத்து பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

    Next Story
    ×