என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 95187"

    குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உள்ள தொடர்பும், நெருக்கமும்தான், ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கைக்கான அடித்தளம் என்று உளவியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
    பரபரப்பாக சுழலும் வாழ்க்கையில், குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்காக பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இதனால், இருவருக்கும் இடையேயான நெருக்கமும், தொடர்பும் குறைந்துகொண்டே வருகிறது. இந்த இடைவெளி, கணவன்-மனைவி உறவை மட்டுமில்லாமல், பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையிலான உறவையும் பாதிக்கிறது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உள்ள தொடர்பும், நெருக்கமும்தான், ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கைக்கான அடித்தளம் என்று உளவியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அதை அதிகரிப் பதற்கான சில எளிய வழிகள் இதோ...

    முன்னுதாரணம்: குழந்தைகள் பெற்றோரின் பிம்பங்களாக இருக்கிறார்கள். பெற்றோரின் செயல் எப்படி உள்ளதோ, அதைப் பொறுத்தே குழந்தைகளின் செயல்பாடுகளும் வெளிப்படும். பெற்றோருக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், அதை குழந்தைகள் முன்னால் காண்பிக்கக்கூடாது. நமக்கு இருக்கும் வேலைப்பளுவை சிறிது நேரம் ஒதுக்கி வைத்துவிட்டு, குழந்தைகளுடன் பொழுதுபோக்கான விஷயங்களில் ஈடுபடலாம். இது அவர்களின் மனநிலையைச் சீராக்கும்.

    மனம்விட்டு பேசுதல்: பெற்றோர் மற்றும் குழந்தைகள் இடையே, தகவல் பரிமாற்றம் இயல்பானதாக இருக்க வேண்டும். இதற்கு மனம் விட்டுப் பேசுதல் முக்கியமானது. குழந்தைகள் நமது பேச்சை கவனிப்பதற்கு ஏற்றவாறு, நாம் பேசும் முறையைச் சற்று மாற்றிக் கொள்ள வேண்டும். எப்போதும் வார்த்தையை விட, உடல் மொழியைத்தான் குழந்தைகள் அதிகமாக கவனிப்பார்கள். உளவியல் வல்லுனர்களின் கூற்றுப்படி, குழந்தைகளிடம் பேசும்போது வார்த்தை 7 சதவீதமும், உடல்மொழி 55 சதவீதமும், குரலின் சத்தம் 38 சதவீதமும் இருக்க வேண்டும்.

    குழந்தைகளை பேச வைத்தல்: பல பெற்றோர் குழந்தைகள் 100 சதவீதம் தங்கள் பேச்சைக் கேட்க வேண்டும், என்று எதிர்பார்க்கின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும். பெற்றோர் குழந்தைகளிடம் பேசும் நேரத்தில், குழந்தைகளுக்கும் பேசும் வாய்ப்பை அளிக்க வேண்டும். இது குடும்பத்தின் தகவல் தொடர்பை அதிகப்படுத்துவதற்கான சிறந்த வழி.

    நேரத்தைத் திட்டமிடுதல்:  ஒரு நாளில், சில மணி நேரத்தைக் குடும்பத்திற்காக மட்டும் ஒதுக்குங்கள். இந்த நேரத்தில், வெளி வேலைகள், அலுவலக வேலைகள் மற்றும் தேவையற்ற விஷயங்களை ஒதுக்கி வையுங்கள். குழந்தைகளும் இதைத்தான் பெற்றோரிடம் எதிர்பார்ப்பார்கள். தினமும் ஒரு வேளையாவது, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுங்கள். இந்த நேரத்தை அனைவரும் வெளிப்படையாகவும், தெளிவாகவும், மனம் விட்டுப் பேசும் வாய்ப்பாக மாற்றுங்கள்.

    நடைமுறையை உருவாக்குதல்: அலுவலக பணிகளுக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தைப் பின்பற்றுவதுபோல், குடும்பத்தின் நடைமுறைக்கும் சில வழிமுறைகளை உருவாக்க வேண்டும். படுக்கைக்கு செல்வது, உணவுக்கான நேரம், விளையாட்டு நேரம், பெற்றோருடன் நேரத்தை செலவிடுவது என, முறைப்படுத்த வேண்டும்.

    பாராட்டுங்கள்: குடும்ப உறுப்பினர்களிடையே நேர்மறையான தொடர்பை வளர்ப்பதற்கும், ஆரோக்கியமான உணர்ச்சிகளை நிர்வகிப்பதற்கும் உதவும் ஒரே வழி ஒருவருக்கொருவர் தொடர்ந்து பாராட்டி ஆதரவளிப்பதுதான். குழந்தைகள் சவாலான விஷயங்களைச் சந்திக்கும்போது, இந்த பழக்கம் அவர்களை ஊக்குவிக்க உதவும்.
    ஏதாவது ஒரு காரணத்தால், நட்பில் ஏற்படும் சிறு விரிசல், வளரும் இளம் பருவத்தினரைப் பெரிதும் பாதிக்கும். அதில் இருந்து பிள்ளைகளை மீட்டுக்கொண்டு வர சில வழிகள்:
    வாழ்க்கையில் அழகிய தருணங்களை உருவாக்கும் உறவு ‘நட்பு’. ஏதாவது ஒரு காரணத்தால், நட்பில் ஏற்படும் சிறு விரிசல், வளரும் இளம் பருவத்தினரைப் பெரிதும் பாதிக்கும். அதில் இருந்து பிள்ளைகளை மீட்டுக்கொண்டு வர சில வழிகள்:

    சோகமும் தேவையே:

    இளம் வயதில், நட்பின் இழப்பால் ஏற்படும் துக்கத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. நட்பின் இழப்பினால், அவர்கள் அழுவதற்கு விரும்பினாலும், பழைய விஷயங்களை அசை போட விரும்பினாலும் அதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டும். எந்த இழப்பையும் உடனடியாக சமாளித்து வெளி வருவது கடினமானது. எனவே, அதற்கான நேரத்தை ஒதுக்கி, காத்திருங்கள். இது எதிர்காலத்தில், அடுத்த அடியை நோக்கி பிள்ளைகளை நகர்த்துவதை எளிதாக்கும்.

    மாற்றுப் பாதையில் மனதைத் திருப்புங்கள்:

    நட்பின் இழப்பு மூலம் அவர்களுக்கான உலகம் சுருங்கி விட்டதாக உணரக்கூடும். ஆனால், அந்த மனநிலையை மாற்றத் தகுந்த முயற்சியைப் பெற்றோர்தான் உருவாக்க வேண்டும். எதிர்மறையான எந்தக் கருத்தையும் இந்த நேரத்தில் உருவாக்காமல், அவர்களுடனே பயணிக்க முயலுங்கள்.

    அவர்களின் எண்ண ஓட்டத்தை மாற்றும் வகையில், சிறுசிறு விஷயங்களில் ஈடுபடுத்தலாம். வீட்டில், உங்களுக்குத் தேவையான தகவலை, பிள்ளைகளின் மூலம் பெறுதல், காலண்டரில் தேதி சரி செய்தல், போனில், எண்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற சிறு சிறு விஷயங்களை செய்ய வைப்பதன் மூலம் மாற்றுப் பாதைக்கு கொண்டு செல்லுங்கள். அதன் மூலம் அவர்களின் மனம் தடம் மாறாமல் உங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கச் செய்யலாம்.

    பேச அனுமதியுங்கள்:

    மனம் துவண்டு இருக்கும் நேரத்தில், நம் எண்ணங்களைப் பிறருடன் பகிர்வது கடினமாக இருக்கலாம். ஆனால், இந்த தயக்கத்தைக் குடும்ப உறுப்பினர்கள்தான் தகர்த்தெறிய வேண்டும். நீங்களே சென்று முதலில் பேச்சைத் தொடங்க வேண்டும். இதில், பிள்ளைகளுக்கு முழு நம்பிக்கையும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

    பிள்ளைகளுக்கு ஆதரவு தரும் நபராக நீங்கள் இருக்க வேண்டும். இதன் மூலம், மன எண்ணங்கள் வெளிப்படுவதுடன், மன அழுத்தத்தையும் குறைக்க முடியும். பிரச்சினைக்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிவதுடன், சரியான தீர்வு காணவும் முடியும்.

    புதிய நட்புக்கு உதவுங்கள்:

    ஒரு நட்பை இழந்துவிட்டோம் என்றால் அதனுடன் இந்தப் பயணம் முடிந்துவிடுவதில்லை, அதைத் தாண்டியும் வாழ்க்கை உள்ளது என்பதைப் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும். நட்பு முறிந்தாலும், நட்புடனான பழைய நினைவுகள் என்பது என்றும் நம் மனதில் நீங்காது இருக்கும்.

    அதனுடன், நிற்காமல் வாழ்க்கையின் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல புதிய நட்பு தேவைப்படும். இதுபோன்று புதிய நட்பை அமைக்கும்போது, பெற்றோராக உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த நட்பைத் தேர்வு செய்ய உதவுங்கள். எதிர்காலத்தில், சமூகத்தில் மற்றவர்களுடன் பழகுவதற்கான சிறந்த வாய்ப்பை இதன் மூலம் ஏற்படுத்தலாம்.
    ஆசிரியர் தன் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களை பற்றிய புரிதலும், நம்பிக்கையும் கொண்டிருந்தால், அவர்களின் மனநிலையில் எந்த முரண்பாடும் வராது.
    ஒரு குழந்தையின் வளர்ச்சியில் காணப்படும் மாற்றங்களை சரியான நேரத்தில் கண்டுபிடித்து பயிற்சி அளித்தால் அதில் இருந்து அவர்களை பாதுகாக்க முடியும்.

    மாணவர்கள் அனைவருமே ஏதோ ஒரு திறன் கொண்டவர்கள் என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் ஆசிரியரின் ஒத்துழைப்பால் மாணவர்கள் முன்னேற்றம் அடைய முடியும்.

    அவர்கள் அதிக நேரம் செலவிடுவது பள்ளியில் தான். ஆசிரியர் தன் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களை பற்றிய புரிதலும், நம்பிக்கையும் கொண்டிருந்தால், அவர்களின் மனநிலையில் எந்த முரண்பாடும் வராது.

    மாணவர்களின் கவனம் சிதற இப்போது பல வகையான வாய்ப்புகள் இருக்கின்றன. பெரியவர்களைப் பார்த்தே அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள், ஒரு நாள் தங்கள் மொபைல் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டால், மாணவர்களின் நிலைப்பாட்டினை மாற்ற முடியும்.

    பிள்ளைகளின் வளர்ச்சியில், பெற்றோர்களின் பொறுப்பையும் அறிந்து கொள்ள வேண்டும். இதில் குழந்தைகள் கேட்கும் நியாயமான கோரிக்கைகளுக்குப் பெற்றோர்கள் செவி சாய்க்க வேண்டும்.

    அதற்கு உரிய நேரத்தில் பதிலளிப்பதன் மூலம், மாணவர்கள் மரியாதை கொண்டு தன்னிலை புரிந்து செயல்படுகிறார்கள் என்று ஆராய்ச்சிகள் நிரூபித்து உள்ளன. எனவே, மாணவர்களின் சிறப்பான எதிர்காலத்தில் ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் சமமான பங்கு உள்ளது.
    குழந்தைகளை வீட்டிற்கு வெளியே விளையாட அனுப்புவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சன்ஸ்கிரீன் பூசிவிடவும். அதன் பிறகு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அதனை பூசவேண்டியது அவசியம்.
    கோடை என்றாலே `உஷ்.. என்ன வெயில்!' என்று, முகம் சுளிக்கவேண்டாம். ஒரு ஐஸ்கிரீம் சுவைப்பது போன்ற உணர்வுடன் `ஜில்லென்று' கோடைகாலத்தை ஜாலியாக கழிக்கவும் வாய்ப்பிருக்கிறது. கோடை காலத்தில் குழந்தைகள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். காலை 11 மணிக்கு முன்பும், மாலை 4 மணிக்கு பிறகும் குழந்தைகளை வீட்டிற்கு வெளியே விளையாட அனுமதிக்கவேண்டும். சூரியன் உச்சத்தில் இருக்கும் இதர நேரங்களில் இன்டோர் கேம்ஸ்களை வீட்டிற்குள்ளே விளையாட ஊக்குவியுங்கள்.

    குழந்தைகளை வீட்டிற்கு வெளியே விளையாட அனுப்புவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சன்ஸ்கிரீன் பூசிவிடவும். அதன் பிறகு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அதனை பூசவேண்டியது அவசியம். சூரிய கதிர்கள்பட்டு சரும பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க இந்த சன்ஸ்கிரீன் உதவும். சூரிய கதிர்களின் கடுமையான தாக்கத்தால் குழந்தைகளின் சருமத்தில் `சன் பர்ன்' காயம் ஏற்பட்டால் அந்த இடங்களில் ஐஸ்கட்டிகளால் ஒத்தடம் கொடுக்கலாம். குளிர்ந்த தண்ணீரையும் அந்த இடத்தில் ஊற்றலாம்.

    குழந்தைகள் கடுமையான உஷ்ணத் தாக்குதலுக்கு உள்ளானால் தலைச்சுற்றல், மயக்கநிலைகூட ஏற்படலாம். அப்போது அவர்களுக்கு உடல்வெப்ப நிலை அதிகரிக்காது. ஆனால் இதயத் துடிப்பு அதிகரிக்கும். கோடைகாலத்தில் பருகும் தண்ணீரின் அளவு குறைவதுதான் இதற்கான காரணம். இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட குழந்தையை உடனே காற்றோட்டமிக்க பகுதிக்கு கொண்டு சென்று, ரத்த ஓட்டம் அதிகரிக்கும் விதத்தில் தலையை சற்று தாழ்த்திவைக்கவேண்டும். குளிர்ந்த நீரில் முக்கிய டவலால் முகம் மற்றும் உடல்பகுதியை துடைத்துவிடுங்கள். சத்தமாக அழைத்தும் குழந்தை பதில் குரல் தராவிட்டாலும், சுவாசம் சரியாக நடந்துகொண்டிருக்கிறதா என்று பாருங்கள். சுவாசத்தில் தடை ஏற்பட்டிருந்தால் முதலுதவி அளித்துவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுங்கள்.

    கோடையில் குழந்தைகளை போதுமான அளவு தண்ணீர் பருகவையுங்கள். அவர்களுக்காக சிப்பர் பாட்டில் வாங்கி, அதில் தண்ணீரை நிறைத்துக்கொடுங்கள். மதியத்திற்குள் குறிப்பிட்ட அளவில் பருகிவிட்டால் பரிசு தருவதாக கூறி, தினமும் தேவையான அளவில் நீரை பருகவைத்து விடுங்கள். எலுமிச்சை சாறில் உப்பும் தண்ணீரும் கலந்துகொடுங்கள். கஞ்சிதண்ணீர், மோர் போன்றவைகளையும் குடித்துக்கொண்டிருக்கச் செய்யலாம். பழச்சாறும் பருகக் கொடுக்கலாம்.
    நீச்சல், ஓவியம், சிலம்பம், ஸ்கேட்டிங் என... குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்ப்பது நல்லதுதான் என்றாலும், அவர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தையும் கற்றுக்கொடுங்கள்.
    உலகறிந்த மந்திரவாதி சிறுவனான, ஹாரி பாட்டரின் வாழ்க்கையை சொல்லும் ‘ஹாரி பாட்டர்’ வரிசை புத்தகங்கள் ஏழு பாகங்களாக கிடைக்கின்றன.

    ஹாரி பாட்டரும், அவனுடைய நண்பர்களும் படிக்கிற மாயாஜால பள்ளியை பற்றியும், அதைச் சார்ந்திருக்கிற உலகத்தையும், இதன் எழுத்தாளரான ரவுலிங்கின் நேர்த்தியான எழுத்தாற்றலில், படிக்க படிக்க திகட்டாதது.

    ‘பேமஸ் பைவ் மற்றும் சீக்ரெட் செவன் வரிசைப் புத்தகங்கள்’, துப்பறியும் கதைகளை கொண்டவை. ‘ஹாரிபிள் ஹிஸ்டரி’, வரலாற்றை இப்படியும் சுவையாகச் சொல்ல முடியுமா என, திகைக்க வைக்கும் வரிசைப் புத்தகங்கள் இவை.

    கிட்டத்தட்ட, ‘காமிக்ஸ்’ மாதிரி தான் இருக்கும். அதனால் புத்தகங்கள் படித்து, அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் குழந்தைகளே...

    நீச்சல், ஓவியம், சிலம்பம், ஸ்கேட்டிங் என... குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்ப்பது நல்லதுதான் என்றாலும், அவர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தையும் கற்றுக்கொடுங்கள்.

    நிறைய புத்தகங்கள் படிப்பவர்களுடைய மூளை, மற்றவர்களை விட, கூர்மையாக இயங்குகிறது; எந்தத் துறையிலும், வெற்றி பெறுகின்றனர்; இது, திரும்பத் திரும்ப பல ஆய்வுகளில், ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

    வயதுக்கு ஏற்ப குழந்தைகள், அவசியம் படிக்க வேண்டிய சில புத்தகங்களைப் பற்றி, இங்கே பார்ப்போம்...

    * மூன்று முதல் ஏழு வயதுள்ள குழந்தைகளுக்கு...

    படங்கள் அதிகம் உள்ள, எழுத்துக்கள் குறைவாக உள்ள புத்தகங்கள் ஏராளமாக கிடைக்கின்றன. வண்ண மயமான படங்களை, குழந்தைகள் விரும்பிப் பார்ப்பார்கள். பெற்றோர், அவர்களுக்கு படித்துக்காட்ட வேண்டி இருக்கும். சில சொற்களை, குழந்தையை சொல்ல வைக்கலாம். படங்களை சுட்டிக்காட்டி, ‘இது என்ன?’ என்று கேட்கலாம். ‘இதே போல் பொம்மை நம்ம வீட்ல இருக்கே. அதைக்காட்டு பார்க்கலாம்..’ என்று புதிர் போடலாம்.

    * ஏழு வயது முதல் பத்து வயதுள்ள குழந்தைகளுக்கு...

    இந்த வயது குழந்தைகளும் படம் உள்ள புத்தகங்களை தான் அதிகம் விரும்புவர். ஆனாலும், படத்துக்கு சமமாக, எழுத்துக்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பர். நகைச்சுவை, புராணம், சரித்திரம், ஆன்மிகம் மற்றும் வாழ்க்கை வரலாறு போன்ற புத்தகங்களை இவர்கள் விரும்பி படிப்பார்கள்.

    இவர்களுக்கு பஞ்ச தந்திர கதைகள், நீதிக்கதைகள் போன்ற புத்தகங்களையும் வாங்கிக் கொடுக்கலாம். எளிய சம்பவங்களின் மூலம், குழந்தைகளின் மனதில், நீதியை பதிய வைக்கும் நோக்கங்களுடன் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளதால், அவர்கள் மனதில் எளிதில் பதியும்.

    ஆங்கில வரிசையில், ‘தி விசார்ட் ஆப் ஊஸ்’, ‘ஆலிஸ் இன் ஒன்டர்லாண்ட்’ போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம். ‘தி விசார்ட் ஆப் ஊஸ்’ இது ஒரு ஜாலியான, மாயாஜாலக் கதை. அழகழகான படங்களுடன் கிடைக்கும். ஆலிசின் அற்புத உலகம், இதுவும் முந்தைய கதையை போலவே, மாய உலகம் சம்பந்தப்பட்டது தான். இதன் தமிழ் மொழி பெயர்ப்பும் கிடைக்கிறது.

    * பத்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு...

    தானாகவே தேடித்தேடி வாசிக்க ஆரம்பிக்கும் இந்த வயதினருக்கு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. குறிப்பாக, துப்பறியும் கதைகள், மாயாஜாலக் கதைகள் மற்றும் சாகச கதைகள் என, ஏராளமான புத்தகங்கள் உள்ளன.
    இன்றைய குழந்தைகள் ரொம்ப ஸ்மார்ட். பெற்றோர் சொல்லித்தரும் விஷயங்களை கற்பூரம் போல பற்றிக்கொள்கின்றன. அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது.
    பெற்றோர் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒருசில நல்ல பழக்கங்களை பின்பற்ற வைக்க வேண்டும். அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பு வந்துவிடும். எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும் பொழுதே, அதற்கான நன்மைகளையும் வெளிப்படையாக புரியுமாறு சொன்னால், குழந்தைகள் புரிந்து கொண்டு, அதனை விருப்பத்துடன் பின்பற்றுவார்கள்.

    நிறைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் சொல்லி தருகிறேன் என்று அதிகாலையிலேயே குழந்தைகளது தூக்கம் கலைவதற்குள்ளேயே எழுப்பி விடுவார்கள். சிறு குழந்தைகளுக்கு 8-9 மணிநேரத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஆகவே அவர்களது தூக்கம் கலைவதற்கு முன்பே, அடித்து எழுப்ப வேண்டாம். அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தூங்க விடக் கூடாது. இல்லாவிட்டால், நாளடைவில் அதுவே கெட்ட பழக்கமாகிவிடும்.

    குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே எப்படி உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.

    குழந்தைகளை சிறு வயதிலேயே சுத்தம் செய்யும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். உதாரணமாக, பால் குடிக்கும் போது பாலை கீழே சிந்திவிட்டால், அதனை அவர்களையே சுத்தம் செய்ய சொல்ல வேண்டும். மேலும் படிக்கும் அறையை வாரந்தோறும் சுத்தம் செய்யுமாறு பழக்கப்படுத்த வேண்டும்.

    குழந்தைகளுக்கு தவறாமல் கற்றுக் கொடுக்க வேண்டியவைகளில் முக்கியமானது 'நன்றி' மற்றும் 'தயவு செய்து' போன்ற மரியாதையான வார்த்தைகள் தான். எனவே இதனை மறக்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு பொறுப்புக்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு செலவிற்கு பணம் பொடுத்தால், அதை சேமித்து வைத்து, தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்று சொல்லி பழக்க வேண்டும். இதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரித்து, நல்ல பொறுப்புள்ள மனிதனாக இருப்பார்கள்.

    குழந்தைகளை சுத்தமாக டிவி பார்க்கவே கூடாது என்று சொல்லக்கூடாது. அதேசமயம் அளவுக்கு அதிகமாக டிவியையும் பார்க்க விடக்கூடாது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக விளையாட்டில் ஈடுபட வைக்கலாம். இதனால் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, கண்ணிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் இருக்கும்.
    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நோயற்ற வாழ்வை வாழவே அனைத்து பெற்றோரும் விரும்புவர்.
    தேசிய பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு வாரத்தையொட்டி தஞ்சை ஆர்.கே. மருத்துவமனையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கரு மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் உஷாநந்தினி பேசியபோது எடுத்த படம். டாக்டர்கள் ராஜராஜேஸ்வரி, ராஜேஸ்வரன், மணிராம்கிருஷ்ணா, எழிலன் ஆகியோர் அருகில் உள்ளனர்.

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நோயற்ற வாழ்வை வாழவே அனைத்து பெற்றோரும் விரும்புவர்.

    ஆனால் தற்போது காலச்சக்கரத்தின் சுழல் வேகத்தில் மருத்துவத்துறை அபார வளர்ச்சியை பெற்று இருந்தாலும் குழந்தைகளை பாதிக்கும் நோயின் அளவும் அதிகரித்து வருகிறது என்பது தான் உண்மை. குழந்தை பிறந்த 7 நாட்களும், குழந்தைகளை தாய்மார்கள் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம்.

    இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு வாரம் நவம்பர் மாதம் 15-ந் தேதி முதல் முதல் 21-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. பச்சிளம் குழந்தைகள் பிழைத்து நோயற்ற வாழ்வு வாழ தேசிய பச்சிளம் குழந்தைகள் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

    குழந்தை பிறந்த முதல் மாதம் தான் குழந்தையின் வாழ்க்கை முழுவதுக்குமான ஆரோக்கியத்துக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைகிறது. அதிகமான குழந்தை பருவ இறப்பு விகிதம் கொண்ட காலகட்டமும் இதுவே ஆகும்.

    ஆரோக்கியமான குழந்தையே ஆரோக்கியமான வளர்ச்சி அடைந்து சமூகத்துக்கு பயன்பட முடியும். ஒரு நாட்டில் 1000 குழந்தைகள் பிறந்தால் அதில் 30 குழந்தைகளுக்கு குறைவான குழந்தை இறந்தால் மட்டுமே அந்த நாட்டின் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
    சில நேரம் உங்கள் கவனத்தை ஈர்க்க அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். அல்லது அவர்கள் தேவைகள் நிராகரிக்கப்படும் போதும் அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம்.
    குழந்தைகள் அடம் பிடித்து சண்டித்தனம் செய்யும் போது பெற்றோர்களுக்கு மன அழுத்தமும் எரிச்சலும் ஏற்படும். இதனை நடத்தை பிரச்சனையின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளலாம். நிலையான அக்கறையும் மன ஒருமித்தலும் இருந்தால் போதும், உங்கள் குழந்தையின் இந்த குணத்தை மாற்றி விடலாம். அவர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி அமைதியான பிறகு அவர்களுடன் பேசுங்கள். இது ஒரு தீய பழக்கம் என்று புரிய வையுங்கள். இவ்வகை சூழ்நிலைகளை சமாளிக்க சில தகவல்களை நீங்கள் அறிந்திருந்தால் இந்த வேலையை சுலபமாக செய்து முடிக்கலாம்.

    உங்கள் குழந்தைக்கு கோபம் வருவதற்கான காரணத்தை முதலில் கண்டறிய முற்படுங்கள். சில நேரம் உங்கள் கவனத்தை ஈர்க்க அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். அல்லது அவர்கள் தேவைகள் நிராகரிக்கப்படும் போதும் அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். உங்கள் குழந்தைக்கு கோபத்தை உண்டாக்கும் சூழ்நிலைகள் திரும்ப ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். செயல்பாட்டில் இறங்குவதற்கு முன்பு சரியாக திட்டமிடுவது மிகவும் முக்கியம். அதனால் களத்தில் இறங்கும் முன் முதலில் சில விதிமுறைகளை போடுங்கள். குழந்தையின் சில தேவையை நீங்கள் நிராகரிப்பதற்கான சரியான காரணத்தை அவர்களுக்கு புரிய வையுங்கள். அதே நேரம் அவர்களின் அனைத்து தேவைகளையும் நீங்கள் நிராகரிக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

    உங்கள் குழந்தைக்கு அதிக அளவில் கோபம் வருவதை நீங்கள் கண்டறிந்தால், அதற்குரிய நடவடிக்கைகளில் உடனே இறங்குங்கள். இதனால் அதிக கோபம் கொள்ளும் உங்கள் குழந்தையை சுலபமாகவும் வேகமாகவும் சரி செய்து விடலாம். ஓய்வில்லாமல் இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் குணத்தை மேம்படுத்த போதிய நேரம் ஒதுக்குவதில்லை. குழந்தைகள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவதற்கு இதுவும் கூட ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. அதனால் உங்கள் குழந்தைகளுடன் போதிய நேரம் செலவழித்து எது சரி எது தப்பு என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.

    சில நேரங்களில் உங்கள் குழந்தையின் முன் கோபத்தை கையாள அவர்களின் கோபத்தை புறக்கணிப்பதே சிறந்த வழியாக விளங்கும். அவர்களின் தேவை எல்லாம் அவர்களின் பிடிவாதத்தால் நிறைவேறும் என்று அவர்கள் தெரிந்து கொண்டால், தொடர்ந்து பிடிவாதம் பிடித்துக் கொண்டே தான் இருப்பார்கள். நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளால் உடனடி பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். அதற்கு சிறிது காலம் எடுக்கும். நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியான பொறுமையை நீங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் குழந்தையின் முன் கோபத்தை கையாள இதுவும் உங்களுக்கு உதவி புரியும்.

    உங்கள் குழந்தை கோபத்தை எப்படி வெளிப்படுத்தினாலும் சரி, அவர்களை பார்த்து கத்தாதீர்கள். உங்களின் கவனத்தை ஈர்க்கவே அவர்கள் இப்படி நடந்து கொள்ளும் போது, நீங்கள் அவர்களை பார்த்து கத்துவது அவர்களுக்கு கூடுதல் சுவாரசியத்தை உண்டாக்கி விடும். அவர்களை அடிக்கும் பொழுது அதுவே அவர்களுக்கு பழகிவிடும். பயம் என்பதே இல்லாமல் போய் விடும்.
    படிப்பில் ஒரு குழந்தை கொஞ்சம் மார்க் குறைத்து வாங்கி விட்டால் போதும், அது என்ன செய்தாலும் குற்றம். சற்று நேரம் டி.வி பார்த்தால் கூட, “இப்போது என்ன டி.வி. கேட்கிறது முதலில் மார்க் அதிகம் வாங்கப் பார்” என்கிறோம்.
    நம் பிள்ளைகளை நாம் குறை சொல்லாவிட்டல் பின் எப்படி திருந்துவார்கள்? இது ஒவ்வொரு பெற்றோரின் அசைக்க முடியாத நம்பிக்கை. உண்மையில் ஒரு மாற்றுக் குறையில்லா பிள்ளையை நான் உருவாக்கி இருக்கிறேன் என்று இந்த உலகிற்கு மார் தட்டிச் சொல்ல வேண்டும் என்று நாம் நினைப்பது தவறில்லை தான்.

    இதில் அந்தக் குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறோம்? உன்னிடம் குறையே இருக்கக் கூடாது என்று மட்டுமா சொல்லித் தருகிறோம். நீயும் இப்படித் தான் மற்றவரிடம் என்ன குறை இருக்கிறது என்று உற்றுப் பார்த்து சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைத் தானே அந்த பிஞ்சு மனதில் விதைக்கிறோம்.

    ஏனென்றால் ஒரு குழந்தை பிறந்து ஏழு வயது வரை தன்னைச் சுற்றி நடப்பவற்றிலிருந்தே எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது.

    படிப்பில் ஒரு குழந்தை கொஞ்சம் மார்க் குறைத்து வாங்கி விட்டால் போதும், அது என்ன செய்தாலும் குற்றம். எது கேட்டாலும் சாடைப் பேச்சு. அது சற்று நேரம் டி.வி பார்த்தால் கூட, “இப்போது என்ன டி.வி. கேட்கிறது முதலில் மார்க் அதிகம் வாங்கப் பார்” என்கிறோம்.

    அந்தக் குழந்தை சட்டை வாங்கிக் கேட்டாலும், ஸ்வீட் வாங்கிக் கேட்டாலும் வாங்கிக் கொடுப்பதில் நாம் தவறுவதில்லை. ஆனால் நம் செயலின் முடிவு அவர்கள் தவறுகளை சுட்டிக் காட்டுவதிலும் அதை அவர்கள் மறந்துவிடக் கூடாது என்பதிலும் தான் முடிகிறது.
    குழந்தையின் பிறந்த நாளிலோ, அவர்களைப் பாராட்டுவதற்காகவோ ஓர் உண்டியலைப் பரிசளியுங்கள். வீட்டில் எல்லோரின் பார்வையில் வைத்து தினமும் அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் போடப் பழக்குங்கள்.
    குழந்தைகள் நீண்ட நாட்களாகக் கேட்கும் பொருட்ளைத் தன் சேமிப்பிலிருந்தே வாங்கும் குணத்தை ஊக்கப்படுத்த்துங்கள். இதனால், குழந்தைகளுக்குக் காத்திருக்கும் குணமும் பொறுமையும் வளரும். நம் குழந்தைகள் நம்மைப் பார்த்தே வளர்கிறார்கள். நம்மிடம் சேமிக்கும் பழக்கம் இருந்தால், அவர்களிடமும் அந்தக் குணம் வரும். எனவே, குழந்தைகளுக்குச் சேமிப்பு பழக்கத்தைச் சிறுவயது முதலே கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம்.

    1. கடைக்குச் சென்றால், குழந்தை கேட்கிறது என்று கண்களில் பட்டதையெல்லாத்தையும் வாங்கக் கூடாது. ஒரு பொருளின் முக்கியத்துவத்தையும், அதன் அவசியத்தையும் பொறுமையாக உணர்த்த வேண்டும். அதன்பின் அந்தப் பொருள் அவசியமா இல்லையா என்பதைக் குழந்தைகளையே தீர்மானிக்கச் சொல்லுங்கள்.

    2. சிறுசேமிப்பு பற்றி குழந்தைகளுக்குக் கதைகளாகவோ, அல்லது அவர்களுக்குப் புரியும் விதத்திலோ கூறி மனதில் ஆழப் பதியவையுங்கள்.

    3. சேமிப்பு என்பது காசு பணம் சேமிப்பது மட்டுமல்ல. எந்தப் பொருளானாலும் தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்துவதும் ஒரு வகை சேமிப்பே. பென்சில், ரப்பர் என எந்தப் பொருளை வாங்கினாலும், அதை முழுவதுமாக உபயோகித்த பின்னரே, அடுத்து வாங்க வேண்டும் என்ற உறுதியைக் குழந்தைகளிடம் விதைக்க வேண்டும்

    4. குழந்தையின் பிறந்தநாளிலோ, அவர்களைப் பாராட்டுவதற்காகவோ ஓர் உண்டியலைப் பரிசளியுங்கள். வீட்டில் எல்லோரின் பார்வையில் வைத்து தினமும் அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் போடப் பழக்குங்கள்

    5. பாக்கெட் மணி கலாசாரத்துக்குப் பதில், சேவிங்க்ஸ் மணி கலாச்சாரத்துக்குக் குழந்தையைப் பழக்குங்கள். அவர்களுக்குக் கிடைக்கும் தொகையை உண்டியலில் போட வேண்டும் எனச் சொல்லி, மாதம் ஒருமுறை சேமித்த பணத்தைக் குழந்தையைவிட்டே எண்ணிப் பார்த்து உற்சாகப்படுத்துங்கள்.

    6. குழந்தைகள் நீண்ட நாட்களாகக் கேட்கும் பொருட்ளைத் தன் சேமிப்பிலிருந்தே வாங்கும் குணத்தை ஊக்கப்படுத்துங்கள். இதனால், குழந்தைகளுக்குக் காத்திருக்கும் குணமும் பொறுமையும் வளரும்.  

    7. சாக்லேட், பிஸ்கட் என எதுவானாலும் தேவையானதை மட்டுமே எடுத்துச் சாப்பிட பழக்குங்கள். மொத்த பாக்கெட்டையும் கையில் வைத்துக்கொள்ளும் பழக்கத்தைப் படிப்படியாகக் குறைக்க கற்றுக்கொடுக்கலாம்  

    8. குழந்தையின் அம்மா அல்லது அப்பாவின் பிறந்த நாளுக்கு, குழந்தை உண்டியலில் சேர்த்துவைத்திருக்கும் பணத்தில் ஒரு பகுதியில் சிறு பரிசை வாங்கிக்கொடுக்கச் சொல்லி வாங்கிக்கொள்ளுங்க. அந்தப் பரிசை உறவினர்கள், நண்பர்களிடம் 'என் மகள் / மகன் சேமிப்பில் வாங்கித்தந்தது' எனப் பெருமையாகச் சொல்லுங்கள்.

    9. குழந்தைகள், மற்றவர்களுக்குப் பரிசு அளிக்க விரும்பினால், உண்டியலைப் பரிசளிக்க ஊக்கம் அளியுங்கள். இது, அவர்களின் மனதில் சேமிப்புக்கான முக்கியத்துவத்தை உணரவைக்கும்.
    குழந்தைகளுக்கு மண்டை ஓடு மெலிதாக இருக்கும். செல்போனை குழந்தைகள் பார்க்கும் போது செல்போனின் கதிர்வீச்சு மூளையைதாக்கும் அபாய நிலை உள்ளது.
    தட்ப வெப்ப மாற்ற நிலை காரணமாக இந்தியா முழுவதும் தற்போது பலவித வைரஸ் கிருமிகள் பெருக்கம் ஏற்பட்டு ஒருவித காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பனிக்காலம் முடிந்தாலும் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதும் தற்போது பரவும் காய்ச்சலுக்கு ஒரு காரணம். இந்தக்காய்ச்சல் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளையும் அதிகம் பாதித்து உள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கண்கள் சிவப்பாக மாறி எரிச்சலை ஏற்படுத்துகிறது.

    குழந்தைகளுக்கு தொண்டைவலியும், உடல் வலியும் ஏற்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக கண் டாக்டரை சந்தித்து நோய் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக்காய்ச்சல் ஒரு வாரம் வரை இருக்கும். கண்ணுக்கு பாதிப்பு இருந்தாலும் பெரிய அளவில் இருக்காது. குழந்தைகளுக்கு கண்வலியுடன் இருமலும், சளியும் இருக்கும். இதனால் பெற்றோர்கள் தாமதிக்காமல் குழந்தைகள் டாக்டர் மற்றும் கண் டாக்டரை அணுகி மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்பக்கூடாது. பள்ளி சென்று திரும்பியவுடன் குழந்தைகளை சுத்தப்படுத்தி தூய்மையான ஆடைகளை அணிவிக்க வேண்டும்.

    இன்றைய காலக்கட்டத்தில் தொழிற்நுட்ப வளர்ச்சியில் செல்போன் சிறந்த கண்டுபிடிப்பாகும். இருப்பினும் இதில் சாதக பாதகங்களும் உள்ளன. செல்போனில் ’புளூலைட்’ உள்ளது. நீண்ட நேரம் செல்போனை பார்க்கும் போது புளுலைட் கண்களை பாதிக்கும். ஓய்வே இல்லாமல் செல்போனை பயன் படுத்துவதால் பார்வைக்கோளாறு, தலைவலி, மந்தமான பார்வை, ஒளியைக்காணும் போது கண்ணில் ஏற்படும் கூச்சம், கண்கள் சிகப்பு ஏற்படுதல் போன்றவை அடிக்கடி ஏற்படும்.

    கண்வலி, நிறங்கள் மங்கலாக தெரிதல். கண் உலர்ந்து காணப்படுதல், அதோடு கண் எரிச்சல் போன்றவை கண்களுக்குண்டான பிரச்சினைகளை உறுதிப்படுத்தும். நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளின் நிழலும் கண்ணின் பின்புறம் உள்ள விழித்திரையில் குவிகிறது. நீண்ட நேரம் செல்போனை பார்க்கும் போது கண்ணில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. செல்போனை இருளில் உபயோகிக்கக்கூடாது. வெளிச்சத்தில் தான் பயன்படுத்த வேண்டும். செல்போனை கண்களுக்கு அருகில் வைத்து பார்க்கக்கூடாது. தூரத்தில் வைத்து தான் பார்க்க வேண்டும். கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். இதனால் கண்களில் கண்ணீர் வரும்.

    ஸ்மார்ட்போனை தூரத்தில் வைத்து தான் பார்க்க வேண்டும். இருளில் பார்த்தால் கண் அழுத்தம், தலைவலி ,கழுத்துவலி ஏற்படும். ‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழிக்கேற்ப செல்போனை அதிகமாக பயன் படுத்தினால் அதனால் பல்வேறு பிரச்சினைகளை குறிப்பாக கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

    முன்பெல்லம் வீட்டில் குழந்தைகள் அழுதால் பெண்கள் தாலாட்டுப்பாடல்கள் பாடி சமாதானப்படுத்துவார்கள். தற்போதுள்ள கம்ப்யூட்டர் உலகில் குழந்தைகள் கையில் செல்போனில் தாலாட்டுப்பாடல். அல்லது கார்ட்டூன்களை போட்டு கொடுத்து விடுகிறோம். குழந்தைகளும் அழுகையை நிறுத்திவிட்டு செல்போனை கூர்ந்து கவனிக்கின்றன. இதில் இன்னொரு பிரச்சினையும் இருப்பதை மறந்து விடக்கூடாது.குழந்தைகளுக்கு மண்டை ஓடு மெலிதாக இருக்கும். செல்போனை குழந்தைகள் பார்க்கும் போது செல்போனின் கதிர்வீச்சு மூளையைதாக்கும் அபாய நிலை உள்ளது. சில சமயம் மூளையில் கட்டிக்கூட ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குழந்தைகளின் ஆரோக்கியம் கருதி அவர்களிடம் பெற்றோர்கள் செல்போனை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

    டாக்டர் விஜய் சங்கர்
    குழந்தைகள் தனித்து செயல்படும் போது ஏதேனும் தவறு ஏற்பட்டால் அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து அவர்களையே யோசிக்குமாறு செய்ய வேண்டும்.
    குழந்தை வளர்ப்பு முறையில் பெற்றோருக்கிடையே தனிப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் தங்கள் குழந்தை யாரையும் சாராமல் தனித்து செயல்பட வேண்டும் என்ற நோக்கம் பொதுவாக இருக்கும்.

    குழந்தைகள் 3 வயதிலிருந்தே தங்களை சுற்றி நடக்கும் செயல்களை எளிதாக கிரகிக்க ஆரம்பிப்பார்கள். இந்த வயதிலிருந்தே அவர்களை சுயமாக செயல்பட அனுமதிக்கவும், கற்றுத்தரவும் வேண்டும். இதற்கு சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதும். அதை பற்றி இங்கே பார்ப்போம்.

    குழந்தைகள் தனித்து செயல்படுவதற்கு முடிவு எடுக்கும் திறன் அவசியமானது. உடைகள் விளையாட்டு பொருட்கள் உணவு போன்றவற்றை தேர்வு செய்யும் போது அவர்களின் விருப்பத்தை கேட்டு அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். அவர்களின் தேர்வு தவறாக இருக்கும் போது அதைப்பற்றி மென்மையாக எடுத்துக்கூறிபுரிய வைக்க வேண்டும். இதன் மூலம் அவர்களது முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும்.

    தனித்து செயல்படும் போது குழந்தைகளின் தைரியத்தை பாராட்டவேண்டும். அவர்கள் எந்த செயலில் ஈடுட்டாலும் அதன் முடிவை பற்றி கவலைப்படாமல் அதை நிறைவேற்ற எடுக்கும் முயற்சியை ஊக்குவிக்க வேண்டும். முடிவு தோல்வியாக இருந்தாலும் அடுத்த முறை அந்த செயலை சரியாக செய்யும் படி உற்சாகம் அளிக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தலாம்.

    குழந்தைகள் தனித்து செயல்படும் போது ஏதேனும் தவறு ஏற்பட்டால் அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து அவர்களையே யோசிக்குமாறு செய்ய வேண்டும். அவர்களால் அந்த சிக்கலை சமாளிக்க முடியாத சமயங்களில் மறைமுகமாக உதவ வேண்டும். இதன் மூலம் குழந்தைகளின் சிந்தனையை தூண்ட முடியும்.

    வீட்டு வேலைகளிலும் குழந்தைகளின் பங்களிப்பை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். அதன் மூலம் குடும்ப பொறுப்பை அதிகரிக்க செய்ய முடியும். குறிப்பிட்ட வேலையை செய்யும் போது அதை முடிப்பதற்கான நேரத்தையும் நிர்ணயம் செய்ய வேண்டும். அந்த நேரத்திற்குள் வேலையை கண்டிப்பாக முடிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இதன் மூலமாக குழந்தைகள் நேர மேலாண்மையை கற்றுகொள்வார்கள்.

    உங்கள் கருத்தை குழந்தைகள் மீது திணிக்காமல் அவர்களின் எண்ண ஓட்டத்தை தெரிந்து கொள்ளுஙகள். இதற்காக தினமும் சிறிது நேரம் செலவழியுங்கள். சாப்பிடும் நேரத்தை கருத்துகளை பரிமாறுவதற்கான நேரமாக மாற்றலாம். அதே சமயம் மற்றவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் பண்பையும் வளர்க்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு தகுந்த நேரங்களில் உதவுவது பெற்றோரின் கடமையாக இருந்தாலும், சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். முடிந்தவரை அந்த செயலை அவர்களே முயன்று முடிக்குமாறு செய்ய வேண்டும். இதன்மூலம் மற்றவர்களை சார்ந்திருக்கும் எண்ணம் உருவாகாமல் தானாகவே எந்தவொரு செயலையும் நிறைவேற்றும் வகையில் அவர்களின் மூளை வேகமாக செயல்படும்.
    ×