search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சசிகலா"

    தமிழகத்தில் கொலை குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. சரியான நிர்வாகம் இல்லாததே அதற்கு காரணமாக அமைந்திருக்கிறது என சசிகலா கூறியுள்ளார்.
    சென்னை:

    சென்னை தி.நகரில் இன்று திருமண விழா ஒன்றில் பங்கேற்ற சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி:- அ.தி.மு.க. விரைவில் ஒன்றிணையும், ஆட்சிக்கு வரும் என்று கூறி இருந்தீர்கள்? ஆனால் இதுவரை அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் உங்களை சந்திக்கவில்லை. எந்த அடிப்படையில் அது போன்று தெரிவித்தீர்கள்?

    பதில்:- அது தொண்டர்கள் கையில்தான் உள்ளது. தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் வெற்றி பெறும். அந்த அடிப்படையில் தான் நான் கூறினேன்.

    கேள்வி:- அ.தி.மு.க. பொதுக்குழுவை விரைவில் கூட்ட போவதாக கூறி இருக்கிறார்களே?

    பதில்:- எதை செய்தாலும் அவர்களால் ஒரு கருத்துக்கு வர முடியாது. ஏனென்றால் தொண்டர்கள் அவர்களுடன் இல்லை.

    கேள்வி:- அ.தி.மு.க. இரண்டாம் கட்ட தலைவர்கள் அனைவருமே உங்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார்களே?

    பதில்:- எல்லோரும் பேசவில்லை. ஒரு சிலர் பேசுகிறார்கள். அவர்கள் ஏதாவது பதவி கிடைக்கும் என்பதற்காக கூட பேசலாம் இல்லையா?

    கேள்வி:- உங்களை அ.தி.மு.க.வில் இணைக்கவே முடியாது என்றும் அவர்கள் கூறுகிறார்களே?

    பதில்:- இதனை சொல்வதற்கு அவர்கள் யார்? அ.தி.மு.க.வில் யார் தலைமை பதவியில் இருக்க வேண்டும் என்பதை தலைவர் சொல்லி இருக்கிறார். அதன்படி பார்த்தால் தொண்டர்கள்தான் தலைமையை தேர்வு செய்ய வேண்டும்.

    கேள்வி:- அ.தி.மு.க. சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளதே?

    பதில்:- அ.தி.மு.க. எந்த விஷயத்திலும் எதிர்க்கட்சியாக செயல்படவில்லை.

    அதனால் தலைமைக்கு நீங்கள் வர வேண்டும் என்று கூறுகிறார்கள். இதுவே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

    கேள்வி:- தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை எப்படி பார்க்கிறீர்கள்? நேற்று கூட பா.ஜனதா பிரமுகர் ஒருவர் போலீஸ் பாதுகாப்பு இருந்த போதே கொலை செய்யப்பட்டுள்ளாரே?

    பதில்:- தமிழகத்தில் கொலை குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. சரியான நிர்வாகம் இல்லாததே அதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. போலீஸ் துறையை வைத்திருக்கும் முதல்-அமைச்சர் கட்டுப்பாட்டில் அந்த துறை உள்ளதா? என்பதே சந்தேகமாக உள்ளது.

    கேள்வி:- அ.தி.மு.க.வை சட்ட ரீதியாக மீட்க நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறதா?

    பதில்:- பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக எப்படி கூறுகிறீர்கள். இது சுப்ரீம் கோர்ட்டு முடிவா என்ன?

    கேள்வி:- அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்ய போகிறீர்கள்?

    பதில்:- அடுத்த கட்ட நடவடிக்கைகளை நான் விரைவில் மேற்கொள்ள உள்ளேன்.

    கேள்வி:- அ.தி.மு.க. தலைவர்கள் தற்போதும் தொடர்பில் உள்ளனரா?

    பதில்:- இப்போதும் தொடர்பில் இருக்கிறார்கள். யார்-யார் என்பதை வெளியில் செல்ல முடியாது.

    இவ்வாறு சசிகலா கூறி உள்ளார்.

    சசிகலா தனது வருங்கால அரசியல் பயணம் குறித்து விஜயசாந்தியுடன் விரிவாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    சென்னை:

    ஜெயலலிதாவின் தோழி சசிகலா தமிழகம் முழுவதும் தனது ஆதரவாளர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    அப்போது அவர் அரசியல் பயணத்தை மீண்டும் தொடங்குவேன் என்றும், அ.தி.மு.க.க்கு தான் தலைமை தாங்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புவதாகவும் கூறி வருகிறார்.

    அ.தி.மு.க. தலைவர்கள் தற்போதும் தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், சிலர் மட்டுமே தன்னை எதிர்க்கிறார்கள் என்றும் சசிகலா கூறி இருந்தார்.

    இப்படி அ.தி.மு.க.வை மீட்க சசிகலா ரகசிய திட்டம் தீட்டி காய்களை நகர்த்தி வருகிறார்.

    இது தொடர்பாக கடந்த வாரம் சசிகலா அளித்த பேட்டியில் அ.தி.மு.க.வுக்கு தான் நிச்சயம் தலைமை தாங்குவேன். அதற்கான நம்பிக்கை 100 சதவீதம் உள்ளது என்றும் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் சசிகலாவை பா.ஜனதா முன்னாள் எம்.பி.யான விஜயசாந்தி சமீபத்தில் ரகசியமாக சந்தித்துள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த நேரத்தில் தி.நகரில் உள்ள இல்லத்தில் வெளிப்படையாக சந்தித்த விஜயசாந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ரகசியமாக சந்தித்துள்ளார்.

    இந்த சந்திப்பின்போது சசிகலாவின் வருங்கால அரசியல் பயணம் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வின் செயல்பாடுகளை பாரதிய ஜனதா கட்சி கட்டுப்படுத்தி வருவதாக கூறப்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போதே அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அ.தி.மு.க.வில் இருந்து விலகி இருப்பவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாகவே விஜயசாந்தி சசிகலாவை சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


    தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்த்துக் கொண்டால் அக்கட்சி வளரும். அ.தி.மு.க.வில் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை என்று கூறினால் பா.ஜ.க.வில் சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம். அது பாரதிய ஜனதா கட்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஏன் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்று தி.மு.க. கூறியது. ஆனால் இரண்டு முறை தற்போது பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்து விட்டது, இருப்பினும் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க தயாராக இல்லை. பெயரளவிற்கு பெட்ரோல் விலையை மட்டும் சிறிது குறைத்து விட்டு அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு வருகின்றனர்.

    மத்திய அரசு என்று கூறுவதை தி.மு.க.வினர் பெருமையாக கருதுகின்றனர். தி.மு.க. தங்களை பெருமைப்படுத்திக் கொள்வதை முன்னெடுத்து செல்கிறதே தவிர, மக்கள் பிரச்சினையை, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கருத்தை அவர்கள் முன்னெடுக்கவில்லை

    தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்வர் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது கையில் உள்ள துண்டு சீட்டில் உள்ள விவரங்கள் அனைத்தும் பொய்யானது என்று பிரதம மந்திரியை வைத்துக்கொண்டு ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை குறித்து பேசியது ஒரு சாட்சி. ஜி.எஸ்.டி. இழப்பு நிலுவைத் தொகை தமிழகத்திற்கு ஜூன் மாதம் மட்டும் தான் பாக்கி உள்ளது.

    கச்சத்தீவு குறித்து பேசுவதற்கு பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் தான் அருகதை உண்டு. ஏனென்றால் 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரை வார்த்த போது அதை எதிர்த்து வழக்குப் போட்டது பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி தான். அதை பாராளுமன்றத்தில் எதிர்த்தது அடல் பிகாரி வாஜ்பாய் தான்.

    தற்போது உள்ள சூழ்நிலையை பார்த்தால் கச்சத்தீவு நமக்கு வந்து விடும் என்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தாங்கள் தான் முயற்சி செய்தோம் என்று பொய் பி ரசாரம் செய்வதற்காக தமிழக முதல்வர் தற்போது பிரதம மந்திரி முன்னிலையில் கச்சத்தீவு குறித்து பேசி நாடகம் நடத்தியுள்ளார்.

    கச்சத்தீவு குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஊராட்சி தலைவர் அதாவது முதல்வருக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை. தமிழ் மொழியை வழக்கிலும் என்று கூறிக்கொண்டு பிற மொழியை வெறுக்கின்ற வெறுப்பு அரசியல் தமிழகத்தில் நடைபெறுகிறது. இதனை தி.மு.க. கைவிட வேண்டும்.

    தமிழ் மொழிக்கு ஆட்சியில் இருக்கும் தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை. மொழிகளுக்கு இடையே உள்ளது தேசிய மாடல். அதை தான் பா.ஜ.க. செய்து வருகிறது. பிறமொழிகளை எதிர்ப்பது திராவிட மாடல். இது தமிழ் மொழி வளர்ச்சிக்கு பயன்படாது.

    பா.ஜ.க.வின் 8 ஆண்டு கால சாதனையை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பூத்திற்கும் சென்று பொதுமக்களிடையே எடுத்து கூறுவதுதான் பா.ஜ.க.வின் அடுத்த இலக்கு. தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கூறியவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும். அதுவரை பா.ஜ.க.வின் போராட்டமானது தொடரும்.

    மத்திய அரசின் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்படாமலேயே அரசு அதிகாரிகள் நிதி முறைகேடு செய்துள்ளனர். இதுதான் திராவிட மாடல். ஒன்றரை லட்சம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் சுட்டுக் கொன்றபோது உண்ணாவிரதம் என்ற பெயரில் நான்கு மணி நேரம் நாடகம் போட்டது கருணாநிதி தான். அது தான் தற்போது தமிழ் சமுதாயத்தையே பாதித்துக் கொண்டு இருக்கிறது.

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் 5-க்கும் மேற்பட்ட லாக்கப் டெத் கொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இதுதான் அமைதிப் பூங்கா லட்சணமா? தமிழ்நாடு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் காட்சியாக நடந்து வருகிறது, அதற்கு முடிவு கட்ட வேண்டும். இருபத்தி நான்கு மாதத்திற்குள் இதற்கு ஒரு முடிவு கட்டி பாராளுமன்றத் தேர்தலோடு தமிழகத்திற்கும் தேர்தல் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தன்னிடம் மலர்கொத்து, பொன்னாடை மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்குவதை தவிர்க்குமாறு சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. நம் புரட்சி தலைவரால் உருவாக்கப்பட்டு, புரட்சி தலைவி ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு பேரியக்கம். ஏழை, எளியவர்களின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இயக்கம்.

    எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் இரு கண்களாக பார்க்கும் கழக உடன்பிறப்புகளுக்கும், என்னை நேசிக்கும் அனைவருக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.

    ஆனால் என்னிடம் மலர்கொத்து, பொன்னாடை மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்குவதை தயவு செய்து தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    அவ்வாறு ஏதேனும் எனக்கு செய்ய விரும்பினால் நீங்கள் வசிக்கும் இடங்களில் உள்ள ஏழை, எளியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் வயதானவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யுங்கள், பள்ளிகளில், கல்லூரிகளில் கல்வி கற்க கட்டணம் செலுத்த முடியாத ஏழை, எளிய மாணவ செல்வங்களுக்கு உதவி செய்யுங்கள், பசியால் வாடுகின்ற ஏழை, எளிய மக்களுக்கு உணவு அளியுங்கள்.

    கழக உடன்பிறப்புகள், இதுபோன்று தங்களால் இயன்ற உதவிகளை செய்தாலே அதுவே தாங்கள் எனக்கு அளிக்கும் ஒரு சிறந்த பரிசாக மனதார ஏற்றுக்கொள்கிறேன்.

    அதேபோன்று என்னை சந்திக்கும் பொழுது காலில் விழுந்து வணங்குவதை கண்டிப்பாக தவிர்த்திடுங்கள். என் மீது நீங்கள் காட்டுகின்ற மரியாதையை மனதில் வைத்துக்கொண்டாலே போதும். எனவே உங்கள் அனைவரது ஒற்றுமையும், ஒப்பற்ற அன்பு மட்டுமே எனக்கு வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    ×