என் மலர்
நீங்கள் தேடியது "Tamil Language"
- அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியோ, சமஸ்கிருதமோ தேசிய மொழி என்று வரையறுக்கப்பட்டுள்ளதா?
- பாஜக கட்டமைக்க விரும்பும் தேசியம் என்பது இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பது தானா ?
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் (கே.வி) தமிழ் கற்பிப்பதற்கு தமிழாசிரியர்களே இல்லை என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கனிமொழி எம்பி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை என்ன என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு அளித்துள்ள பதில் "0". ஆனால், இந்தி கற்பிக்க 86 ஆசிரியர்களும், சமஸ்கிருதம் கற்பிக்க 65 ஆசிரியர்களும் இருப்பதாகக் கூறுகிறது ஒன்றிய பாஜக அரசு.
அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியோ அல்லது சமஸ்கிருதமோ தேசிய மொழி என்று வரையறுக்கப்பட்டுள்ளதா? அல்லது பாஜக கட்டமைக்க விரும்பும் தேசியம் என்பது அதுதானா?
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் வழியாக எந்த தாய்மொழியைக் காக்கிறீர்கள் அல்லது கற்றுக்கொடுக்கிறீர்கள்? மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இப்படி இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதைத்தான் காலம் காலமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கிறது.
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
- மொழிக்கொள்கையில் உறுதியைக் காட்ட ‘ரூ’ தேவையில்லை.
- தமிழ்நாட்டில் இன்னும் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட வில்லை.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மொழிக் கொள்கையில் தமிழ்நாடு அரசு எந்தளவிற்கு உறுதியாக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகத் தான் நிதிநிலை அறிக்கைக்கான லட்சினையில் 'ரூ' அடையாளத்தை வைத்திருந்தோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தமிழை இந்த அரசு தேடிக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இந்த அணு குமுறையை வைத்துக் கொண்டு அன்னைத் தமிழுக்கு எந்த நன்மையையும் செய்ய முடியாது.
தமிழை பயிற்றுமொழியாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய தி.மு.க. அரசு 2006-ம் ஆண்டில் முதன் முதலில் சென்னையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை அறிமுகம் செய்து அன்னைத் தமிழுக்கு துரோகம் செய்தது. இன்று வரை அதன் தமிழ் துரோகம் தொடர்கிறது.
தமிழ்நாட்டில் இன்னும் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட வில்லை. இது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கையும் விரைவாக விசாரணைக் கொண்டு வந்து தமிழை கட்டாய பாடமாக்க எந்த நடவடிக்கையையும் இன்றைய அரசு மேற்கொள்ளவில்லை.
உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்து தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும். பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழை பயிற்று மொழியாக்க நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சட்டம் இயற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதியை குறைத்து, சமஸ்கிருத மொழிக்கு அதீக நிதி ஒதுக்கீடு.
- தமிழ் மொழியை அழித்தொழிக்கும் செயலை அண்ணாமலை ஏற்பாரா? என மக்கள் கேள்வி.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பிரதமர் மோடியும், பாஜகவும் தமிழ்நாட்டில் அரசியல் ஆதாயம் தேட பல்வேறு சாகசங்களை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழில் இரண்டொரு வார்த்தைகள் பேசுவது, மகாகவி பாரதியார் கவிதைகள், திருக்குறள் உள்ளிட்ட தலைசிறந்த படைப்புகளில் சிலவற்றை மேற்கோள் காட்டி பேசுவது, அண்மையில் காசியில் தமிழ் சங்கம் விழா எடுத்தது என்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி, ஆரவார வாய்ச்சவாடல் அடித்து வருகின்றனர்.
ஆனால் தமிழ் மொழியை அழித்தொழிக்கும் வஞ்சகச் செயலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் அரசியல் அமைப்பு சட்டப்படி அங்கீகரிக்கபட்ட 22 மொழிகளை சமமாக அணுக வேண்டிய மத்திய அரசு, தமிழ்மொழி உட்பட பல மாநில மொழிகளை புறக்கணித்து, சமஸ்கிருத மொழியை திணித்து, ஏற்குமாறு நிர்பந்தித்து வருகிறது.
குறிப்பாக தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை வெட்டி குறைத்து, சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ் மொழி வளர்ச்சி தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணை மந்திரி அளித்த எழுத்து மூலமான பதிலில் சமஸ்கிருதத்துக்கு ரூ.199 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.12 கோடிக்கும் குறைவாக நிதி ஒதுக்கியிருக்கும் தகவலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு வளர்ச்சி, மக்கள் நலன் குறித்து நீலிக் கண்ணீர் வடித்து வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாய் திறந்து பேசுவாரா? எட்டுக் கோடிக்கும் அதிகமான மக்கள் பேசும் மொழியான தமிழுக்கு, தொன்மை சிறப்பும், இலக்கிய செறிவும் கொண்ட செம்மொழியாம் தமிழ் மொழியை அழித்தொழிக்கும் செயலை வாய் பொத்தி, கைகட்டி, முதுகை வளைத்து பணிந்து ஏற்பாரா? என தமிழக மக்கள் வினா எழுப்பி வருகின்றனர். தமிழ்மொழிக்கு வஞ்சகம் செய்யும், மோடி அரசை, அதிகாரத்தில் இருந்து நீக்குவது மட்டுமே தமிழ்மொழிக்கு பாதுகாப்பாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் உள்ளது.
- கீழமை நீதிமன்றங்களில் மாநில மொழிகள் வழக்காடு மொழியாக உள்ளன.
திருப்பூர்:
இந்திய உயர்நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது . கீழமை நீதிமன்றங்களில் மாநில மொழிகள் வழக்காடு மொழியாக இருக்கின்ற நிலையில் உயர் நீதிமன்றங்களிலும் அந்தந்த மாநில மொழிகள் வழக்காடு மொழிகளாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது .
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் இருப்பதால் உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் தான் தேர்வு நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
- தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுத்துத் தேர்வை நடத்த வேண்டும்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சி.ஆர்.பி.எப் துணை ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் பணியிடங்களைத் தேர்வு செய்ய மே 8-ந் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
அதில் ஜூலை மாதம் இணைய வழி எழுத்து தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் தான் தேர்வு நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சி.ஆர்.பி.எப் எனப்படும் துணை ராணுவப் படையில் ஆட்களை சேர்க்க நடைபெறும் எழுத்து தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டும்தான் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது கண்டனத்துக்கு உரியது.
அனைத்து மாநிலங்களிலிருந்தும் துணை ராணுவப் படையில் வீரர்கள் சேரும் வகையில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுத்துத் தேர்வை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- 22 மாநிலங்களை சோ்ந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தங்கி பணியாற்றி வருகின்றனா்.
- புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகள் 300க்கும் மேற்பட்டோா் பங்கேற்கவுள்ள
திருப்பூர்:
புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகளுக்கான 'தமிழ்மொழி கற்போம்' திட்டத்தை திருப்பூரில் பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தொடங்கிவைக்கிறாா்.
பின்னலாடை நகரமான திருப்பூரில் பிகாா், ஒடிசா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், ராஜஸ்தான் உள்ளிட்ட 22 மாநிலங்களை சோ்ந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தங்கி பணியாற்றி வருகின்றனா். திருப்பூரில் குடும்பத்துடன் வசிக்கும் தொழிலாளா்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றனா்.
இந்த நிலையில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு 'தமிழ்மொழி கற்போம்' திட்டத்தை திருப்பூா் ஆத்துப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில்மகேஸ் பொய்யாமொழி இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் தொடங்கி வைக்கிறாா்.
இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் உள்ளிட்ட பலா் பங்கேற்கவுள்ளனா். தொடக்க விழாவில் புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகள் 300க்கும் மேற்பட்டோா் பங்கேற்கவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தாய்மொழி தமிழ் மொழியை பாதுகாப்போம் என்று உறுதியேற்கப்பட்டது.
- முடிவில் கல்லூரி அறங்காவலர் பொறியாளர் விடுதலைவேந்தன் நன்றி கூறினார்.
தஞ்சாவூர்:
தனித்தமிழ் ஆர்வலர், தமிழாசிரியர் முதுமுனைவர் பி.விருத்தாசலனார் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று காலை தஞ்சாவூர் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி அறங்காவலர் முனைவர் இளமுருகன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை இணை இயக்குனர் (ஓய்வு) முனைவர் குணசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார் . நாட்டார் கல்லூரி ஆட்சி குழு செயலாளர் கலியபெரு மாள், கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக மக்கள் ஒருங்கிணைப்பு மேடை மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் மதச்சார்பின்மை, சோசலிசம், குடியரசு என்ற தலைப்பிலும், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு மக்களுக்கான கல்வி என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றினார்கள். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ் புலவர்களும் தமிழ் பண்டிதர்களும் தேர்வு எழுத அரசாணை வெளியிட வேண்டும்.
தமிழ் வழியில் படித்த வர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது, தாய் மொழி தமிழ் மொழியை பாதுகாப்போம் என்று உறுதியேற்கப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்ச்சியில் அனைத்து கட்சி ,இயக்க நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள், பேரா சிரியர்கள், அலுவ லர்கள்,மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியினை பேராசிரியர்கள் பாரி, தமிழ்ச்செல்வன், மருத்துவர் தென்றல் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
முடிவில் கல்லூரி அறங்காவலர் பொறியாளர் விடுதலைவேந்தன் நன்றி கூறினார்
- 63 தமிழ்நாடு மாநிலச் சட்டங்கள், என மொத்தம் 100 சட்டப் புத்தகங்களை வெளியிட்டார்.
- தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம், தமிழ்நாடு விளம்பரப் பொருள்களின் கட்டாயத் தணிக்கைச் சட்டம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிறைவினை முன்னிட்டு, தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலமாக ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 37 மையச் சட்டங்கள் மற்றும் 63 தமிழ்நாடு மாநிலச் சட்டங்கள், என மொத்தம் 100 சட்டப் புத்தகங்களை வெளியிட்டார்.
மையச் சட்டப் புத்தகங்களின் பட்டியல், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013, இந்திய அரசுச் சின்னம் (முறையற்று பயன்படுத்தப்படுவதைத் தடை செய்தல்) சட்டம், 2005, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம் 2005.
பேரழிவினைச் சமாளித்தல் சட்டம் 2005, பெற்றோர்களையும் மூத்த குடிமக்களையும் பேணுதல் மற்றும் அவர்களின் நல் வாழ்வு சட்டம், 2007, பாலியல் குற்றங்களிலிருந்து சிறார்களைப் பாதுகாத்தல் சட்டம் 2012, சாலை வழி சரக்கூர்திச் சட்டம் 2007.
முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகளைப் பாதுகாத்தல்) சட்டம் 2019, மையக் கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர்களின் பணி நிலைப் பிரிவில் ஒதுக்கீடு) சட்டம், 2019, சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் (விளம்பரம் செய்தலைத் தடைசெய்தல் மற்றும் உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகம் செய்தலை முறைப்படுத்துதல்) சட்டம் 2003.
தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகச் சட்டம் 2018, மாற்றுப்பாலினத்தவர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019, தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம், தமிழ்நாடு விளம்பரப் பொருள்களின் கட்டாயத் தணிக்கைச் சட்டம்.
தமிழ்நாடு திரைப் படங்கள் தொடர்பான விளம்பரங்களைக் கட்டாய மாகத் தணிக்கை செய்தல் சட்டம், தமிழ்நாடு மருந்துப் பொருள்கள் மற்றும் பிற பண்டகப் பொருள்கள் (சட்ட விரோதமாக வைத்தி ருத்தல்) சட்டம், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றச் சட்டம் உள்ளிட்டவை அடங்கும்.
மேற்கண்ட 100 சட்டப் புத்தகங்களையும், தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் இருந்து (www.tn.gov.in) பதிவிறக்கம் செய்து பயன் படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுஉள்ளது.
- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து வருகிறார்கள்.
- உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ்மொழி என்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி மாதந் தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை வானொலி மூலம் மன்-கி-பாத்-மனதில் குரல் நிகழ்ச்சியில் நேற்று பேசும் போது, 'உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ்மொழி என்தில் ஒவ்வொரு இந்தியருக்கு பெருமை என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார்".
இதைப்போல கடந்த காலங்களில் திருவள்ளுவர், மகாகவி பாரதியார் ஆகியோரை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார். இதன்மூலம் அனைத்து மொழிகளையும் சமமாக கருதுவதாக ஒரு நாடகத்தை நீண்டகாலமாக அரங்கேற்றி வருகிறார். அதன் தொடர்ச்சியாகத் தான் நேற்றைய பேச்சும் அமைந்திருக்கிறது.
மோடியையும், பா.ஜ.க. வையும் தமிழக மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் நிராகரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து வருகிறார்கள். எனவே, பிரதமர் மோடியின் கபட நாடகத்தை தமிழக மக்கள் என்றைக்குமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக அரசு பள்ளியில் வட மாநிலத்தவர்கள் குழந்தைகள் தமிழ் மொழியை கற்க தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும்.
- அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த வலியுறுத்தல்.
தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் பயிலும் வட மாநிலத்தவர்கள் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை பயிற்றுவிக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும், அவ்வாறு சேர்ந்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை, பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்த வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
வடமாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து தமிழ் மொழியை படிக்க வைப்பதாகவும் மாணவர்கள் விரும்பி படித்து நன்கு புலமை பெற்றுள்ளதாகவும் வடமாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழ்மொழியை பயிற்றுவிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பணிபுரிந்து வாழும் வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்குமாறும் அவ்வாறு சேர்ந்து கல்வி பயிலும் மாணவர்கள் அரசு நடத்தும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால் உதவி தொகை பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்துமாறும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- தமிழ் வாழ வேண்டும் என்றால் 9 கோடி தமிழர்களும் தமிழில் பேச வேண்டும்.
- தமிழ் ஆட்சி மொழியாக என்றென்றும் இருக்க வேண்டும்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த நூலக திறப்பு விழாவில் முன்னாள் மந்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-
தமிழ் வாழ வேண்டும், தமிழ் வளர வேண்டும், வாழ்வதற்கும் வளர்வதற்கும் வேறுபாடு உண்டு. தமிழ் வாழ வேண்டும் என்றால் 9 கோடி தமிழர்களும் தமிழில் பேச வேண்டும். தமிழில் எழுத வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் ஆட்சி மொழியாக என்றென்றும் இருக்க வேண்டும். தமிழ் வளர வேண்டும் என்றால் பல புதிய வடிவங்களில் மாற வேண்டும். இந்த சிறிய நூலகத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. இது தனி நூலகம் அல்ல. ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் அங்கம் இந்த நூலகம்.
சிவகங்கை பூமி தமிழ் வளர்த்த பூமி. தமிழ் வளர்த்தவர்களை தாங்கிய பூமி. புலவர்கள் மட்டுமல்ல தமிழ் புரவலர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் பல்கலைக்கழகத்தின் விதைகளை விதைத்தது வள்ளல் அழகப்பர் எங்களுக்கு கிடைத்த வரம்.
இந்த பல்கலைக்கழகம் வளாகத்தில் வளர்தமிழ் நூலகத்தை நிறுவ முடிந்தது என் குடும்பத்தாருக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. இந்த நூலகத்தில் கொள்ளளவு மிக மிக அதிகம். இன்னும் விரிவுபடுத்தலாம்.
எங்களுக்கு யானை பசி. முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு அரசே இங்கே இருக்கிறது. இந்த நூலகம் யானை பசிக்கு தமிழ் அன்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கைப்பிடி சோறு தர வேண்டும். தமிழ்நாடு அரசு ஒரு பெரிய பிடிச்சோறு தரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அது இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தான் உள்ளது.
- வரி செலுத்துவது நமது கடமை என்று முழுவதுமாக நம்புகிறேன்.
மதுரையில் நடந்த வருமான வரித்துறையின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது:
என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கு ரொம்ப நன்றி.
அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ள யாரை சென்று பார்க்க வேண்டும். எப்படி பார்க்க வேண்டும் என்பது கஷ்டமாக இருக்கும்.
நாம் எளிமையாக தெரிந்து கொள்ள, எல்லோருக்கும் புரியும் அளவிற்கு இணையதளத்தை ஆரம்பித்து வங்கி கணக்கு எப்படி ஆரம்பிப்பது, சிக்கல்கள் என்ன? என்று குழந்தைகளுக்கு புரிவதுபோல் கார்ட்டூன் வடிவத்தில் கொடுத்து இருப்பது சுவாரசியமாக இருந்தது.
பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அது இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தான் உள்ளது. நிறைய பேருக்கு அது புரிவது கடினமாக உள்ளது. இது தமிழிலும் இருந்தால் புரிந்துகொள்ள சுலபமாக இருக்கும்.
உங்களின் இந்த முயற்சி எல்லோரும் எளிமையாக போய் சேர வேண்டும் என்பதற்கான முயற்சி தான். இதை நான் வரவேற்கிறேன். ஆனால் அது தமிழிலும் இருந்தால் இன்னும் எளிமையாக எல்லோருக்கும் போய்ச்சேரும்.
திடீரென்று ஏதாவது பிரச்சனை வரும்போது தான் அது என்ன பிரச்சனை என்று ஒரு படபடப்பில் அதை தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பே அது பற்றிய விளக்கமும் தெளிவும் நமக்கு புரியும் மொழியில் இருந்தால் நாம் இன்னும் தெளிவாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.
இல்லையென்றால் அதற்கும் ஒருவரை சார்ந்து தான் இருக்க வேண்டியது இருக்கும். அது நிகழ்ந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
இந்த முயற்சி ரொம்ப அற்புதமானது. வரி செலுத்துவது மிகவும் முக்கியம். அவசியம்.
நம்முடைய உரிமைக்காக நமது அரசிடம் எப்படி கோரிக்கை வைக்கிறோமோ அதே போல் வரி செலுத்துவது நமது கடமை என்று முழுவதுமாக நம்புகிறேன்.
அதனால் இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன். மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்து வரி எல்லாம் கட்டுகிறோம். ஏதாவது benifit இருந்தால் நன்றாக இருக்கும். அதையும் யோசித்து பாருங்கள்.
நன்றாக சம்பாதிக்கும்போது வரி கட்டி இருப்போம். ஒரு காலத்திற்கு மேல் வருமானம் இல்லாமல் போய் நிலைமை சரியில்லாமல் போனால் நல்ல tax payer ஆக ஒரு சிட்டிசனாக வரி கட்டி இருந்தால் அவருக்கு என்று சில benefits இருக்கலாமே என்று தோன்றுகிறது. இதையும் நீங்கள் consider செய்ய வேண்டும்.
ஷூட்டிங் நடுவில் வந்துள்ளேன். இங்கிருந்து திருச்சிக்கு செல்ல வேண்டும். எல்லாரையும் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி. நன்றி. தமிழ்த்தாய் வாழ்த்து பாடி ஆரம்பித்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.