என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilaga Vettri Kazhagam"

    • 2026-ம் ஆண்டு தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும்.
    • எல்லோரும் தி.மு.க.-வை தான் போட்டியாக நினைக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.

    இந்த கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், 2026-ம் ஆண்டு தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டே இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே. ஒன்று த.வெ.க. இன்னொன்று தி.மு.க. என்று கூறினார்.

    இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம் த.வெ.க. தலைவர் விஜய் கூறியிருப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, எல்லோரும் தி.மு.க.-வை தான் போட்டியாக நினைக்கிறார்கள். நிச்சயமாக தி.மு.க.வுக்கு போட்டியாக யாரும் இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போட்டியாக வேறு எந்த தலைவரும் களத்தில் இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரியும் என்று கூறினார்.

    • அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், மின்சார வாரிய ஊழியர்கள் என தொழிலாளர்கள் பக்கமும் கண்டிப்பாக துணையாக இருப்போம்.
    • தமிழ்நாட்டை எல்லா வகையிலும் பாதுகாக்க வேண்டியது எங்களுடைய உரிமை, கடமை, கொள்கை எல்லாமே.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    "த.வெ.க. அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமரும்போது பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்வோம்.

    சட்டம்-ஒழுங்கை முறையாக Strict-ஆக வைத்திருப்போம். கல்வி, சுகாதாரம், மருத்துவம் என அனைத்திலும் கவனம் செலுத்துவோம். அதுவும் எல்லாருக்கும் எளிமையாக கிடைக்கப்படுவதுதான் எங்கள் குறிக்கோள்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், மின்சார வாரிய ஊழியர்கள் என தொழிலாளர்கள் பக்கமும் கண்டிப்பாக துணையாக இருப்போம். நாம் எப்போதும் உழைப்பவர்கள் பக்கம்தான் நிற்போம்.

    நம் தமிழ்நாடு விவசாய பூமி. இயற்கை வளங்கள் நிறைந்த மண். விவசாயத்திற்கும் இயற்கை வளங்களுக்கும் எதிராக கொண்டுவரும் எந்த ஒரு திட்டத்தையும் நடவடிக்கையும் கொண்டுவருவதை எங்களால் ஏற்க முடியாது.

    எங்கள் மண்ணை, மக்களை பாதிக்கும் விஷயங்களை செயல்படுத்தாதீர்கள் அதை நாங்கள் எதிர்க்கவே செய்வோம். தமிழ்நாட்டை எல்லா வகையிலும் பாதுகாக்க வேண்டியது எங்களுடைய உரிமை, கடமை, கொள்கை எல்லாமே.

    அரசியலின் அடிப்படை பலம் சமரசமற்ற கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்கள் தான். இதுதான் பெரியாரின் சமூக நீதி, காமராஜரின் நேர்மையான நிர்வாகம், அம்பேத்கரின் சம நீதி மற்றும் சம வாய்ப்பு, வேலு நாச்சியாரின் சமூக உள்ளடக்கம் மற்றும் சமூக நல்லிணக்கம், நீர்வளத்திற்காகப் போராடிய அஞ்சலை அம்மாள் ஆகியோரை கட்சியின் சித்தாந்தம் மற்றும் கொள்கைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய சுதந்திரப் போராட்ட வீர மங்கைகளை கட்சியின் கொள்கை தலைவர்களாக அறிவித்த முதல் அரசியல் கட்சி என்று தெரிவிப்பதை பெருமையுடன் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எம் மக்களுக்கான அரசியலையும் அந்த வெற்றியையும் யாராலும் தடுக்க முடியாது.
    • அடுத்த வருடம் தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய சுதந்திரப் போராட்ட வீர மங்கைகளை கட்சியின் கொள்கை தலைவர்களாக அறிவித்த முதல் அரசியல் கட்சி தமிழக வெற்றிக்கழகம் என்று தெரிவிப்பதை பெருமையுடன் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

    இப்படி ஒரு ஆழமான நம்பிக்கையுடன் வரும் 2026-ல் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தை கொண்டு வந்து மக்கள் சக்தியின் உதவியுடன் மக்கள் விரும்பும் ஒரு நல்லரசை அமைப்பதில் உறுதியாக இருப்பதால், அதை தடுப்பதற்கு என்று ஒரு சிலர் பகல் கனவு காண்பார்கள் இல்லையா?

    அவர்களுக்கு சொல்லிக்கொள்வது ஒன்றுதான். காற்று, மழை, வெயில், இயற்கையை யாரால் கட்டுப்படுத்த முடியும். யாரால் தடுக்க முடியும். எல்லாம் கடவுளால் உருவாக்கப்பட்டது. அப்படித்தான் எம் மக்களுக்கான அரசியலையும் யாராலும் தடுக்க முடியாது.

    அரசியல் சூறாவளியும், தேர்தல் சுனாமியையும் தடுப்பார் எவர். அப்படிதான் எம் மக்களுக்கான அரசியலையும் அந்த வெற்றியையும் யாராலும் தடுக்க முடியாது. அப்படி தடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவு ஒரு நாளும் மெய்ப்படாது.

    வில்லியம் பிளேக்-ன் சில வார்த்தைகள். யார் வேண்டுமானாலும் வருவாங்க.. யார் வேண்டுமானாலும் போவாங்க.. ஆனால் நான் முன்னோக்கி போய்க்கொண்டே இருப்பேன்.

    ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

    கருதி இடத்தான் செயின்

    என்ற குறளுக்கேற்ப, ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலை செய்தால் பூவுலகம் முழுவதையும் வேண்டினாலும் அது கைவசப்படும் என்ற திருக்குறளுடன் என் நன்றி உரையை நிறைவு செய்கிறேன்.

    பார்த்துக்கொண்டே இருங்கள். அடுத்த வருடம் இதுவரை தமிழ்நாடு சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே. ஒன்று TVK ஒன்று DMK. நம்பிக்கையாக இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்," என்று கூறினார்.

    • பொதுக்குழு தீர்மானங்கள் தேர்தல் கமிஷனுக்கு கட்சி சார்பில் அனுப்பப்பட இருக்கிறது.
    • கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஒரு மாவட்டத்திற்கு 15 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் நடக்கிறது.

    பொதுக்குழு கூட்டம் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றுவது பற்றி கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துடன் கட்சி தலைவர் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

    மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள், கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருக்கிறது.

    பின்னர் பொதுக்குழு தீர்மானங்கள் தேர்தல் கமிஷனுக்கு கட்சி சார்பில் அனுப்பப்பட இருக்கிறது.

    கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஒரு மாவட்டத்திற்கு 15 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கூட்ட அழைப்பு மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் மூலம் நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

    ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் மாவட்ட செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 15 பேர் பங்கேற்க இருக்கின்றனர். அதன்படி கூட்டத்தில் சுமார் 2,500 பேர் பங்கேற்க இருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கட்சி தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்து வருகிறார்.

    ஏற்கனவே 114 மாவட்ட செயலாளர்களை 6 கட்டங்களாக கட்சித் தலைவர் விஜய் அறிவித்து உள்ளார்.

    விரைவில் மீதி உள்ள மாவட்டங்களுக்கும் மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட இருக்கின்றனர்.

    2026 சட்டமன்ற தேர்தல் வெற்றியை இலக்காக கொண்டு செயல்பட்டு வரும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் தமிழக பிரதான அரசியல் கட்சிகளின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் கூட்டணி, அடுத்தக் கட்ட நடவடிக்கை மற்றும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி கட்சி தலைவர் விஜய் பேச இருக்கிறார்.

    தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாகி வரும் விஜய் அறிவிப்புகள் தொண்டர்களிடையே மேலும் உற்சாகத்தை அதிகரித்து வருகிறது.

    • தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஏற்கனவே 5 கட்டங்களாக இதுவரை 95 மாவட்டங்களுக்கு, மாவட்ட செயலாளர்களை நியமித்து உள்ளார்.
    • நான் உங்களை நம்பி தான் அரசியலுக்கு வந்துள்ளேன். நீங்கள் அனைவரும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

    சென்னை:

    நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந்தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-ம் ஆண்டு விழாவை கடந்த மாதம் 26-ந்தேதி மாமல்லபுரத்தில் மிகவும் பிரமாண்டமாக நடத்தினார். இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சி ரீதியாக 121 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி 121 மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டமிடப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. சிறிய தொகுதி என்றால் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரும், பெரிய தொகுதி என்றால் ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரும் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் பெரிய தொகுதிகள் அதிகமாக இருக்கும் நிலையில் மாவட்டங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஏற்கனவே 5 கட்டங்களாக இதுவரை 95 மாவட்டங்களுக்கு, மாவட்ட செயலாளர்களை நியமித்து உள்ளார். அவர்களை வரவழைத்து மாவட்ட செயலாளர்களாக நியமித்ததற்கான சான்றிதழை விஜய் நேரில் வழங்கியதுடன், கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார். இதையடுத்து மீதமுள்ள மாவட்ட செயலாளர்களை நியமிப்பதற்கான பணிகள் கடந்த சில நாட்களாகவே நடந்து வந்தது. இதற்காக மாவட்ட செயலாளர்களின் பட்டியலை பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தயாரித்து வந்தார். அந்த மாவட்ட செயலாளர்களின் விவரங்கள், கட்சியில் அவர் எப்படி செயல்பட்டு வருகிறார், மாவட்டத்தில் அவருக்கு செல்வாக்கு எப்படி உள்ளது என்பதை அலசி ஆராய்ந்து இந்த பட்டியலை தயாரித்தார்.

    பின்னர் மாவட்ட செயலாளர்களின் பட்டியலை கட்சி தலைவர் விஜய்யிடம் வழங்கினார். பின்னர் விஜய்யும், புஸ்சி ஆனந்தும் அந்த பட்டியலில் உள்ளவர்களின் பின்னணியை மீண்டும் சரி பார்த்தனர். எவ்வளவு நாள் தங்களுடன் உள்ளனர். மாவட்டத்தில் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பது பற்றி பரிசீலனை செய்தனர்.

    இதையடுத்து அவர்களில் 19 மாவட்ட செயலாளர்களின் பட்டியலை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று வெளியிட்டார். இதற்கான நிகழ்ச்சி சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்ததுடன், அவர்களை தனித்தனியே நேரில் அழைத்து பேசினார். மாவட்ட செயலாளர் பதவிக்கான நியமன சான்றிதழை அவர்களிடம் வழங்கி கட்சியில் எப்படி செயல்பட வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    'நான் உங்களை நம்பி தான் அரசியலுக்கு வந்துள்ளேன். நீங்கள் அனைவரும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைவது போல, நானும் அதைப்பார்த்து மகிழ்ச்சி அடைவேன். மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க செல்வந்தர்கள் பலரும் முயன்றனர். ஆனால் உங்களின் உழைப்பை நம்பி உங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி தந்துள்ளேன்.

    எனவே மக்களுக்கு நல்லது செய்வதற்காக இந்த பதவியை பயன்படுத்த வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் பண பேரம் உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபடக்கூடாது' என்று அவர்களிடம் விஜய் அறிவுறுத்தினார்.

    சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு மொத்தம் 19 மாவட்ட செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டு உள்ளனர். இவற்றில் பெரிய தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டு உள்ளார். சிறிய தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு சபரிநாதன், சேப்பாக்கம் தொகுதிக்கு திலீப்குமார், பல்லாவரம் தொகுதிக்கு குமார், தாம்பரம் தொகுதிக்கு சரத்குமார், திரு.வி.க.நகர் தொகுதிக்கு பல்லவி, ஆர்.கே.நகர் தொகுதிக்கு வேலு, மாதவரம் தொகுதிக்கு எம்.எல்.பிரபு ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பல்லவி பெண் மாவட்ட செயலாளர் ஆவார். பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய 2 தொகுதிகளுக்கும் மன்மதன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    மேலும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பெரம்பலூர், ராஜபாளையம், உசிலம்பட்டி, பூந்தமல்லி உள்ளிட்ட தொகுதிகளுக்கும் இன்று மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 19 மாவட்ட செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள மாவட்ட செயலாளர்கள் அடுத்தடுத்து நியமிக்கப்பட உள்ளனர்.

    • தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகமும் தேர்தலை சந்திக்க தீவிரம் காட்டி வருகிறது.
    • தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 120-லிருந்து 140 ஆக அதிகரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது.

    தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகமும் தேர்தலை சந்திக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான முன்னெடுப்புகளை தமிழக வெற்றிக்கழகம் மேற்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 120-லிருந்து 140 ஆக அதிகரிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே த.வெ.க.வில் 95 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் மேலும் 19 மாவட்ட செயலாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர்.

    • நானும் அவருடன் பல சமயங்களில் சண்டையிட்டு இருக்கிறேன்.
    • அவரை நான் உண்மையிலேயே மனதார வாழ்த்துகிறேன்.

    நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கினார். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியினர், சினிமா உலக பிரமுகர்கள் உள்ளிட்டோர் தங்களது கருத்துகள், விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அருண்பாண்டியன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கு இடையில் பிரச்சினைகள் இருந்தன. நானும் அவருடன் பல சமயங்களில் சண்டையிட்டு இருக்கிறேன். ஆனால் இந்த விஷயத்தில் அவரது அரசியல் பிரவேசம் என்னை மிகவும் கவர்ந்தது. எல்லோரும் தாங்கள் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது இதைச் செய்யமாட்டார்கள். நான் அவரைப் பாராட்டுகிறேன்.

    அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை நான் உண்மையிலேயே மனதார வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அருண்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • கட்சி கொடி, சின்னம், தேர்வு செய்யும் பணிகளிலும் விஜய் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.
    • கூட்டத்தில் கட்சிக்கு புதிதாக 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

    சென்னை:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கடந்த 2-ந் தேதி அரசியல் கட்சி தொடங்கினார்.

    இதையடுத்து கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சி கொடி, சின்னம், தேர்வு செய்யும் பணிகளிலும் விஜய் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.

    சில தினங்களுக்கு முன்பு சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கட்சிக்கு புதிதாக 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

    இதற்காக சிறப்பு செயலி உருவாக்கப்பட்டு அடுத்த வாரம் முதல் செயல்பட உள்ளது. தற்போது அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வருகிறது. புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் மாவட்ட, மாநகர், நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி வார்டு வாரியாக நடைபெற உள்ளது.

    கட்சியின் உள் கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் கட்சி பதவிகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. முதலில் மகளிர் அணிக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    அதிகமான உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகளுக்கு கட்சி பதவிகளில் முன்னுரிமை வழங்கப்பட இருக்கிறது. புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக மாவட்ட சட்டமன்ற வாரியாக புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    இந்த பணிகள் தொடர்பாக தமிழகம், புதுச்சேரி நிர்வாகிகளை விஜய் உத்தரவின் பேரில் புஸ்சி ஆனந்த் அடிக்கடி தொடர்பு கொண்டு உறுப்பினர் சேர்க்கை பணியை வேகப்படுத்தி வருகிறார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படும் நிலையில் உறுப்பினர்கள் சேர்க்கைகளில் கட்சி தொண்டர்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    சிறப்பு செயலி மூலம் புதிய உறுப்பினர்களாக சேர விரும்புபவர்களின் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், செல்போன் நம்பர் ஆகியவை இணைக்கப்பட உள்ளது.

    • பொது மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் இயக்கத்தின் மூலம் செய்து வந்தார் புஸ்சி ஆனந்த்.
    • விஜய் அடிக்கடி புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    சென்னை:

    விஜய் ரசிகர் மன்றத்தில் 24 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் புஸ்சி ஆனந்த். இவர் புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

    விஜய் மக்கள் இயக்கத்தில் அகில இந்திய பொதுச்செயலாளராக விஜய் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்கள் இயக்க பணிகளை தீவிரப்படுத்தினார். மக்கள் இயக்கத்தின் மூலம் நடைபெற்ற அன்னதானம், பொது மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் இயக்கத்தின் மூலம் செய்து வந்தார்.

    தற்போது 'தமிழக வெற்றிக் கழகம்' என விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் கட்சியின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். விஜய் அடிக்கடி புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதையொட்டி புதுச்சேரியில் தனது வாக்காளர் அட்டை முகவரியை வைத்திருந்த புஸ்சி ஆனந்த் கட்சி பணிகளுக்காக தற்போது தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் முகவரிக்கு மாற்றியுள்ளார்.

    • முடிவில்லா மகிழ்ச்சி, தொடர் வெற்றிகளையும் பெற விழைகிறேன் என பினராயி விஜயன் கூறியுள்ளார்.
    • தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இதே போல், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அன்புத்தோழர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகள். நமது அரசிலமைப்பின் கூறான ஜனநாயகம் மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களைப் பாதுகாப்பதில் உங்களின் உறுதியான நிலைப்பாடு ஊக்கமளிக்கிறது. முடிவில்லா மகிழ்ச்சி, தொடர் வெற்றிகளையும் பெற விழைகிறேன் என கூறியுள்ளார்.

    மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.

    இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் எக்ஸ் தள பக்கத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கியுள்ளது.
    • தேர்தல் முடிவு வெளியான பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். கட்சியின் கொள்கைகளை அறிக்கை வாயிலாக வெளியிட்டிருந்தார்.

    2026-ம் ஆண்டு சட்ட சபை தேர்தல்தான் கட்சியின் இலக்கு என அறிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்துக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு செயலி மூலம் நடந்து வருகிறது. இதுவரை புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கியுள்ளது.


    விஜய் தற்போது 'தி கோட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படத்துக்காக கடந்த சில நாட்களாக மயிலாப்பூரில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் விஜய் டப்பிங் பேசி முடித்துள்ளார்.

    இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ந் தேதி வெளியாக உள்ளது. தேர்தல் முடிவு வெளியான பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட உள்ளது.

    அடுத்த மாதம் (ஜூன்) 22-ந் தேதி விஜய் பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அன்று கட்சியின் மாநாட்டை மதுரையில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
    • மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துகள்.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. இத்தேர்வில் மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

    அதே போல் இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தேர்வில் பெற்று பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துகள்.

    அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறைசார்ந்த வெற்றிகளைக்குவித்து வருங்காலச் சமூகத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம்வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

    விரைவில் நாம் சந்திப்போம்!

    இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

    கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பரிசுகளையும் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×