என் மலர்
நீங்கள் தேடியது "TASMAC"
- இதுதான் திமுக அரசு கடைபிடிக்கும் ‘திராவிட மாடல்’ மதச்சார்பின்மையா? என்ற கேள்வியும் எழுகிறது.
- இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அரசாணை வெளியிட வேண்டும்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவில் உள்ள சமணர்களின் திருவிழாவான மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுக்கடைகளையும், இறைச்சிக் கடைகளையும் மூட உத்தரவிடும் தமிழ்நாடு அரசு, அவர்களைவிடவும் பெரும்பான்மை சமயத்தினராக தமிழ்நாட்டில் வாழ்கின்ற கிறித்துவப் பெருமக்களின் கோரிக்கைக்கு சிறிதும் மதிப்பளிக்காது, அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது.
மகாவீரர் ஜெயந்திக்காக வெகுசன மக்களின் உணவு உரிமையான இறைச்சிக்கடைகளை மூடும் திமுக அரசு, புனித வெள்ளிக்காக உயிரைக் குடிக்கும் மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம் இருக்க முடியும்? அரசின் வருமானம் ஒருநாள் தடைபடுவதைத் தவிர, மதுக்கடைகளை மூடுவதால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படப்போகிறது? எல்லோருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டிய தமிழ்நாடு அரசு, குறிப்பிட்ட மக்களின் சமய உணர்வுகளுக்கு ஆதரவாகவும், குறிப்பிட்ட சமய மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் செயல்படுவது சிறிதும் அறமற்றச்செயலாகும். இதுதான் திமுக அரசு கடைபிடிக்கும் 'திராவிட மாடல்' மதச்சார்பின்மையா? என்ற கேள்வியும் எழுகிறது.
ஆகவே, திமுக அரசு கிறித்துவப் பெருமக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி நாளன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டுமென்றும், அதனை இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அரசாணை வெளியிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.
- வழக்கத்திற்கு மாறாக டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை குறைந்துள்ளதாக தெரிகிறது.
- கோடையில் ஏப்ரல் முதல் ஜூலை வரை பீர் விற்பனை நன்றாகவே இருக்கும்.
சென்னை:
தமிழகத்தில் அரசு டாஸ்மாக் நிறுவனம் மூலம் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 4,777 கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் சராசரியாக தினமும் 1.60 லட்சம் மது பெட்டிகள் விற்பனையாகின்றன. அதில் 85 லட்சம் பெட்டிகள் பீர் பாட்டில்கள் ஆகும். கோடை காலம் என்றாலே பீர் விற்பனை அதிகமாக இருக்கும். மதுபிரியர்கள் குளிர்ச்சியான பீர் கேட்பதால், அனைத்து கடைகளிலும் குளிர்சாதன பெட்டியில் போதிய அளவு பீர் பாட்டில்கள் இருப்பு வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வழக்கத்திற்கு மாறாக டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை குறைந்துள்ளதாக தெரிகிறது. அதாவது முந்தைய ஆண்டுடன் ஏப்ரல் முதல் வாரத்தில் ஒப்பிடும்போது சுமார் 12 சதவீதம் அளவுக்கு தமிழகம் முழுவதும் பீர் விற்பனை குறைந்து விட்டது என்றும், குறிப்பாக சேலம், நாமக்கல், நாகப்பட்டினம், திருப்பூர், தஞ்சை ஆகிய மண்டலங்களில் மட்டும் 24 சதவீதம் அளவிற்கு பீர் விற்பனை குறைந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் அவர்கள், விற்பனையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், கோடையில் ஏப்ரல் முதல் ஜூலை வரை பீர் விற்பனை நன்றாகவே இருக்கும். மழை பெய்யும் நாட்களில் விற்பனை சரியும் என்றனர்.
மேலும் பீர் விற்பனையை அதிகரிக்கும் விதமாக ஏற்கனவே டாஸ்மாக் நிறுவனம், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மது தயாரிக்கும் நிறுவனத்தின் 'பிளாக் பஸ்டர்' என்ற பீர் பாட்டிலை அறிமுகம் செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மத்திய பிரதேச மாநிலத்தின் 'பிளாக் போர்ட்' மற்றும் 'உட்பெக்கர்' ஆகிய இரண்டு வகை பீர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அது தவிர மேலும் ஒரு வகை பீர் அறிமுகம் செய்யவும் டாஸ்மாக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
- தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
- டாஸ்மாக் நிறுவன அமலாக்கத்துறை சோதனை வழக்குகளை முதலில் உயர்நீதிமன்றம் விசாரித்து முடிக்கட்டும்.
டெல்லி:
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை கேட்டும், இந்த சோதனை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கிற்கு மத்திய அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. இந்த பதில் மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.
இதற்கிடையே அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரிக்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும் டாஸ்மாக் நிறுவன அமலாக்கத்துறை சோதனை வழக்குகளை முதலில் உயர்நீதிமன்றம் விசாரித்து முடிக்கட்டும். அதன் அடிப்படையில் விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து, அமலாக்கத்துறை சோதனை வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரிய மனுக்களை திரும்ப பெறுகிறோம் என தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதை அடுத்து திரும்பப் பெற அனுமதி வழங்கப்பட்டது.
- டாஸ்மாக் முறைகேடு என்ற புகாரில் ஒன்றுமில்லை என நீதிமன்றத்தில் நிரூபிப்போம்.
- இலங்கை சென்ற பிரதமர் மோடி மீனவர் பிரச்சனை குறித்து பேசவேயில்லை.
சென்னை:
டாஸ்மாக் வழக்கை வேறுமாநிலத்தில் விசாரிக்க பயமா என தி.மு.க. அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருந்தார். இதற்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
* டாஸ்மாக் தொடர்புடைய வழக்கு விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மனுத்தாக்கல் செய்யவில்லை.
* டாஸ்மாக் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்குமாறு தான் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தோம்.
* ஜெயலலிதா ஊழல் வழக்கைதான் வேறு மாநிலத்தில் விசாரிக்க அவர்கள் கோரினர்.
* டாஸ்மாக் வழக்குகளை பார்த்து தி.மு.க. அரசு பயப்படவில்லை. மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.
* டாஸ்மாக் முறைகேடு என்ற புகாரில் ஒன்றுமில்லை என நீதிமன்றத்தில் நிரூபிப்போம்.
* இலங்கை சென்ற பிரதமர் மோடி மீனவர் பிரச்சனை குறித்து பேசவேயில்லை.
* முதலமைச்சர் கடிதம் மூலமாக வலியுறுத்தியும் மீனவர் பிரச்சனை குறித்து பிரதமர் பேசவில்லை.
* தமிழ்நாட்டு மீனவர்கள் மீது மத்திய பா.ஜ.க. அரசுக்கு அக்கறையில்லை என்றார்.
- டாஸ்மாக் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும்.
- நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க. தான். நாட்டு மக்களை தி.மு.க. ஏமாற்றுகிறது.
சென்னை:
தமிழக சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* எதிர்க்கட்சி என்ற முறையில் டாஸ்மாக் ஊழல் குறித்து பேச அனுமதி கேட்டும் அனுமதி மறுக்கிறார்கள்.
* டாஸ்மாக் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது.
* டாஸ்மாக் விவகாரத்தில் தி.மு.க. அரசு தவறு செய்துள்ளது நிரூபணம் ஆகி உள்ளது.
* டாஸ்மாக் வழக்கை வேறு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றம் சென்றது ஏன்?
* நமது மாநிலத்தில் வழக்கு நடந்ததால், தி.மு.க. செய்த தவறு ஊடகங்களில் வெளியாகும் என அச்சம்.
* தமிழ்நாட்டில் உள்ள உயர்நீதிமன்றம் நேர்மையான உயர்நீதிமன்றம் என அனைவருக்கும் தெரியும்.
* டாஸ்மாக் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும்.
* அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் யாருக்கும் அஞ்சுபவர்கள் அல்ல.
* கச்சத்தீவை யாருடைய ஆட்சியில் தாரை வார்த்தீர்கள்? எதை மறைக்க பார்க்கிறீர்கள்?
* மீனவர்களுக்கு நன்மை செய்வது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முதலமைச்சர் முயற்சி.
* இந்த 9 மாதத்தில் எந்த அறிவிப்பை திட்டமாக செயல்படுத்த முடியும்?
* 16 ஆண்டுகாலம் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த போது தி.மு.க. என்ன செய்தது?
* தூம்பை பிடித்து வாலை பிடித்த கதையாக தி.மு.க. செயல்பட்டு வருகிறது.
* நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க. தான். நாட்டு மக்களை தி.மு.க. ஏமாற்றுகிறது.
* தமிழ்நாட்டிற்கு தி.மு.க. அரசு செய்த துரோகம் பற்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும் என்றார்.
- எடப்பாடி பழனிசாமி பேசியவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
- சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர் நலன் குறித்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதனிடையே, டாஸ்மாக் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கேட்டார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் துரைமுருகன், டாஸ்மாக் விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறது, அதனால் அது பற்றி சபையில் பேச முடியாது. நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதை பற்றி சபையில் பேச விதிப்படி அனுமதியில்லை என்றார்.
நீதிமன்றத்தில் உள்ள விவகாரம் குறித்து இங்கு விவாதிக்க அனுமதி கிடையாது என்று கூறி சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோருடன் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே டாஸ்மாக் விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி, நான் எது குறித்து பேசினாலும் அவை குறிப்பில் இருந்து நீக்கினால் நான் என்ன பேசுவது? என்று கூறினார். இதனை தொடர்ந்து சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது, சட்டசபையில் அதிக சப்தம் எழுப்பிய தருமபுரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிந்தசாமியின் பெயரை சொல்லி சபாநாயகர் அப்பாவு கண்டித்தார். அதனை தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர் சபையில் இருந்து வெளியேறினர்.
இதனை தொடர்ந்து, அ.தி.மு.க. உறுப்பினர்களை ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
இதனிடையே, சட்டசபையில் பேச தனக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என சபாநாயகர் மீது வேல்முருகன் குற்றச்சாட்டியுள்ளார்.
முன்னதாக, சட்டசபைக்கு வந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டையில் 'யார் அந்த தியாகி' என்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.
- மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
- வழக்கை திங்கட்கிழமை பட்டியலிட ஒப்புதல் அளித்தார்.TASMAC
புதுடெல்லி:
தமிழகத்தில் டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வேறு ஒரு ஐகோர்ட்டுக்கு மாற்றக் கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் முறையிடப்பட்டு உள்ளது. தமிழக அரசு அரசியல் சாசன பிரிவு 139-ன் கீழ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் விவகாரத்தை எழுப்பியுள்ளது.
எனவே இந்த வழக்கை விரைந்து வரும் திங்கட்கிழமை பட்டியலிடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, இந்த வழக்கை வருகிற திங்கட்கிழமை பட்டியலிட ஒப்புதல் அளித்தார்.
- இறுதிக்கட்ட விசாரணை வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெறும்.
- வழக்கை வேறு அமர்வு விசாரணைக்கு மாற்ற கோரிக்கை விடுத்தார்.
சென்னை:
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சுமார் 60 மணி நேரம் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும், இந்த சோதனையின் அடிப்படையில் மேல் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரியும் தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை முதலில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் விசாரித்து, மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று வாய்மொழியாக அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக 2 நீதிபதிகளும் கூறினர். இதனால், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தபோது, மூத்த வக்கீல் கே.எம்.விஜயன் ஆஜராகி, டாஸ்மாக் துறையை கவனித்து வரும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வக்கீலாக கே.ராஜா உள்ளார். இவர் நீதிபதி கே.ராஜசேகரின் இளைய சகோதரர் என்பதால், இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றலாம்' என்றார்.
ஆனால், இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை. வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெறும் என்று அறிவித்தனர்.
இந்த நிலையில், ஐகோர்ட்டு தலைமை நீதி பதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு இன்று காலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு வக்கீல் ஆஜராகி, ''டாஸ்மாக் துறையை கவனித்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வக்கீலாக, நீதிபதி கே.ராஜசேகரின் தம்பி உள்ளதால், இந்த வழக்கை வேறு அமர்வு விசாரணைக்கு மாற்ற வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்க மறுத்த நீதி பதிகள், 'இதுகுறித்து சம்பந்தப்பட்ட நீதிபதிகளிடம் முறையிடலாம்' என்று கூறினர்.
- அமலாக்கத் துறை சார்பில் புதிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
- மனுவில், டாஸ்மாக் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பான தகவல்கள் இடம்பெற்று இருந்தன.
சென்னை:
சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின்னர் மதுபான கொள்முதல் நடவடிக்கைகளில் ரூ.1000 கோடி வரை முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை, அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி அடிப்படை கட்டமைப்புக்கு விரோதமானது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்ட விரோதமானதாக அறிவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக உள்துறை செயலாளர், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும். எந்த வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்த விவரங்களையும் அமலாக்கத்துறை தெரிவிக்க உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அறிவித்தனர். இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றும் படியும் பரிந்துரைத்தனர்.
அதே நேரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை தொடர்பாக குறிப்பிட்டு கோரிக்கை வைக்காமல், பொத்தாம் பொதுவாக உள்ளதால் அதை திருத்தம் செய்து புதிய மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.
அதன்படி டாஸ்மாக் நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்ட டாஸ்மாக் நிறுவனமும், தமிழக அரசும் இணைந்து திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்து உள்ளன. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது அமலாக்கத்துறை சார்பில் புதிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'தமிழக அரசின் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. ஆரம்ப கட்டத்திலே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடாது. அமலாக்கத்துறையின் சட்டப்பூர்வமான விசாரணையை திசை திருப்பும் வகையில் இந்த வழக்குகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ளது. தமிழக அரசுக்கு அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு ஆணையத்திடம் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.
ஆனால் அங்கு எந்தவிதமான வழக்கும் தொடராமல் நேரடியாக உயர்நீதிமன்றத்தை நாடியது தவறானது. கடந்த காலங்களில் டாஸ்மாக் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ததன் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை இந்த சோதனையை நடத்தியதாகவும் அதன் அடிப்படையிலேயே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழக அரசு குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது" என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த பதில் மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை 8ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், 7 ந்தேதி பதில் மனுக்களை தாக்கல் செய்து ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த வழக்கு 8 மற்றும் 9-ந்தேதிகளில் விசாரிக்கப்படும். அனைத்து தரப்பும் தவறாமல் வாதங்களை முன் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
- பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நள்ளிரவில் பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
- கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம், முக்கிய கடை வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
ஈரோடு:
சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது சோதனையில் ரூ.1000 கோடி வரை ஊழல் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஈரோடு மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நள்ளிரவில் பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
அந்தப் போஸ்டரில் ஆயிரம் ரூபாய் கொடுப்பதுபோல் கொடுத்து ஆயிரம் கோடி அமுக்கிய அந்த தியாகி யார்? பாட்டிலுக்கு 10 ரூபாய், விற்பனையில் ஆயிரம் கோடி ஊழல், உரிமம் பெறாத பார் மூலம் 40 ஆயிரம் கோடி ஊழல் போன்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.
கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம், முக்கிய கடை வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதேபோல் பவானி, பெருந்துறை, கவுந்தப்பாடி, சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தது. இதனைப் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
- கடந்த 20-ந்தேதி நடந்த விசாரணையின்போது, இந்த வழக்கிற்கு அமலாக்கத்துறை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
- டாஸ்மாக் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கைகளையும் அமலாக்கத்துறை எடுக்கக்கூடாது என்று தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர்.
சோதனை முடிவில் பார் உரிமம் வழங்கியது, மதுபானங்கள் கொள்முதல் செய்தது உள்ளிட்டவற்றில் 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில், மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை மற்றும், அப்போது ஆவணங்களை பறிமுதல் செய்ததையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி எம்.எஸ். ரமேஷ் மற்றும் நீதிபதி என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
கடந்த 20-ந்தேதி நடந்த விசாரணையின்போது, இந்த வழக்கிற்கு அமலாக்கத்துறை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
அதில், என்ன குற்றச்சாட்டு? அதற்கான முகாந்திரம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற வேண்டும் என்று தெரிவித்து வழக்கை 25-ந்தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தனர்.
அதுவரை டாஸ்மாக் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கைகளையும் அமலாக்கத்துறை எடுக்கக்கூடாது என்று தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு அறிவித்துள்ளது.
எனவே இந்த வழக்கு இனி வேறொரு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை விசாரித்து ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் நீதிபதிகள் விலகல் முடிவை எடுத்துள்ளனர்.
- அமலாக்கத் துறையினருக்கு உயர்நிதீமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனங்கள் மற்றும் மது விற்பனை நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், இது தொடர்பாக கூடுதல் தகவல்களை வழங்கவும் அமலாக்கத் துறையினருக்கு உயர்நிதீமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'டாஸ்மாக்' நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸமாக் தலைமை அலுவலகம் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள் அடிப்படையில் டாஸ்மாக் தலைமை அலுவலம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மதுபானங்கள் ரூ. 10 முதல் ரூ. 30 வரை கூடுதலாக வசூல் செய்தது.
டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது ஆலைகளுடன் நேரடி தொடர்பு இருந்தது, கொள்முதல் விலையை குறைத்து காட்டியது. பணியிட மாற்றம், பார் உரிமம் உள்ளிட்டவைகளை பெற லஞ்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுபோல பல முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்பு உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
அந்த மனுக்களில், மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை மற்றும், அப்போது ஆவணங்களை பறிமுதல் செய்ததையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதில், தமிழ்நாட்டில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை கோரி தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணக்கு வந்தது. இந்த மனுவை நீதிபதி எம்.எஸ். ரமேஷ் மற்றும் நீதிபதி என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
அப்போது டாஸ்மாக் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் அமலாக்கத்துறையிடம், "எதற்காக சோதனை நடத்தப்பட்டகிறது என அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தீர்களா? இரவு நேரத்திலும் சோதனையா?" என்று கேட்டனர். அதற்கு, "இரவில் சோதனை நடக்கவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அரசு ஊழியர்கள் யாரையும் நாங்கள் சிறைபிடிக்கவில்லை; யாரையும் துன்புறுத்தவில்லை" என்று அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறும் போது, "எந்த அதிகாரி தவறு செய்துள்ளார் என்று தெரியாமல் எப்படி அனைத்து அதிகாரிகளையும் நீங்கள் தடுத்து வைக்க முடியும்? அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருந்தாலும், அதை செயல்படுத்திய விதம் தவறு. அமலாக்கத்துறை சோதனை நடத்த காரணமான வழக்குகள், விவரங்கள் உள்ளிட்டவைகளை பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும்" என்று அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.
பின்னர் இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வரும் 25ம் தேதி வரை அமலாக்கத்துறைக்கு தடைவிதித்த நீதிபதிகள், அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.
முன்னதாக "சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டப்பிரிவு 17-ன் படி அமலாக்கத்துறை சோதனை அதிகாரம் குறித்து விளக்கியுள்ளது. சோதனை நடத்துவதாக இருந்தால் அதற்குரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். குற்றம் மூலம் பணம் ஈட்டப்பட்டு, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு சந்தேகப்படுவதற்கான காரணங்கள் இருக்க வேண்டும்" என்று டாஸ்மாக் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், "சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எந்த அதிகாரிக்கும் எதிராக ஆதாரம் இல்லை. அமலாக்கத்துறை பிரிவு 17ன் படி எல்லா இடங்களிலும், ஆதாரங்கள் இல்லாமல் விசாரணை நடத்த முடியுமா? 60 மணி நேரம் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோரை சட்டவிரோதமாக அமலாக்கத்துறையினர் சிறை பிடித்து வைத்துள்ளனர்" என்றும் டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.