என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thanthai Periyar"

    • அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கக்கோரி சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
    • சீமான் தரப்பு வழக்கறிஞர், முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக கூறினார்

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த ஜனவரி மாதம் வடலூரில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.

    இது தொடர்பாக சீமான் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடலூர், கோவை, சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கக்கோரி சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ஒரு சம்பவத்துக்காக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு மாறாக தனக்கெதிராக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டுமென டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டதாகவும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு விசாரணை அதிகாரியை நியமித்து தனக்கெதிரான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்தெந்த காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த முதல் தகவல் அறிக்கைகள் எங்கே என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த சீமான் தரப்பு வழக்கறிஞர், முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    இதனையடுத்து, எந்த விவரங்களும் இல்லாமல் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் மீது எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    • ஆயுதமோ, அணுகுண்டோ இல்லாமல், அகிம்சை என்னும் அறவழியை பின்பற்றி இந்திய சுதந்திரத்தை வாங்கி தந்த பெருமை அண்ணல் காந்தியடிகளுக்கே உரியது என்றெல்லாம் பெருமை கொள்வார் கண்ணதாசன்.
    • பகுத்தறிவு பகலவனாக திகழ்ந்திட்ட தந்தை பெரியாரிடம் தனி மதிப்புக் கொண்டிருந்தார் கண்ணதாசன்.

    இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே நமது கவியரசர் கண்ணதாசன் 1927-ம் ஆண்டிலேயே சிறுகூடல் பட்டியிலே பிறந்திட்டார். சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டின் போது கண்ணதாசனுக்கு வயது இருபது. எனவே சுதந்திரப்போராட்ட வரலாறுகளை எல்லாம் நன்கறிந்தவர். சிறுகூடல் பட்டியிலே இருந்த `பாரதமாதா' வாசகசாலைதான் கண்ணதாசனுக்கு அறிவை வளர்த்தது. சிந்தனையை ஊட்டியது என்பதே உண்மையாகும்.

    அண்ணல் காந்தியடிகளை பற்றி எழுதப்பட்ட புத்தகங்களை விரும்பி தேர்ந்தெடுத்து படிப்பார். ஏடுகளில் காந்தியடிகளை பற்றி வருகிற செய்திகளை எல்லாம் படித்து உள்வாங்கிக் கொள்வார். எவ்வித ஆயுதமோ, அணுகுண்டோ இல்லாமல், அகிம்சை என்னும் அறவழியை பின்பற்றி இந்திய சுதந்திரத்தை வாங்கி தந்த பெருமை அண்ணல் காந்தியடிகளுக்கே உரியது என்றெல்லாம் பெருமை கொள்வார் கண்ணதாசன்.

    அப்படிப்பட்ட காந்தியடிகளை பற்றி பல மேடைகளில் கண்ணதாசன் உதாரணம் காட்டி அவரது அருமை பெருமைகளை பேசுவதுண்டு. கட்டுரைகளை எழுதியதும் உண்டு. ஆனால் ஒரே ஒரு கவிதை மட்டுமே கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ள 6-ம் தொகுதியிலே காந்தியடிகளைப்பற்றி `தீபம் போதும்' என்ற தலைப்பிலே வெளியாகி உள்ளது. அதை அப்படியே வாசகர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    காட்டினுள் தேடித் தேடிக்

    கற்பகத் தருவைக் காண்போம்...!

    வீட்டினிள் தேடித் தேடி

    விளக்கையோர் இடத்திற் கண்டோம்...!

    ஏட்டினுள் தேடித் தேடி

    இணையிலாக் கவிதை கண்டோம்

    நாட்டினுள் தேடுகின்றோம்

    நாயக! நின்னைக்காணோம்...!

    நாற்பது கோடிக் கென்று

    நடுங்கிய தடியை ஊன்றி

    ஏற்பதை ஏற்று வாழ

    இருப்பினும் தொடர்ந்து சென்று

    நூற்பது முதலாய் நன்மை

    நுவல்வது வரையிற் சொல்லி

    வேற்படை திரட்டி வென்றாய்

    வீரனே நின்னைக் காணோம்...

    காந்தியின் பெயரைக் கண்டோம்

    காலடிச் சுவடைக் கண்டோம்

    காந்தமென் றொன்றைக் கண்டோம்

    தனியறம் தழைக்க கண்டோம்

    மாந்தருள் நின்னைப் போல

    மற்றொரு வைரம் காணோம்...

    ஏந்திய தீபம் நின்சொல்

    இன்னொளி போதும் தேவா...

    என்று காந்தியை பற்றிய கவிதையை நிறைவு செய்திருக்கிறார் கண்ணதாசன்.

    சாந்தமாய் திகழ்ந்து சரித்திரம் படைத்திட்ட ஒரு மகத்தான மாமனிதரை எங்கெல்லாமோ தேடிப்பார்க்கிறோம். அப்படி ஒரு மனிதர் எங்கள் கண்களுக்கு இதுவரை தென்படவில்லை என்று காந்திக்கு புகழாரம் சூட்டுவதோடு, கொள்கையிலும், மனதைரியத்திலும் ஒரு வைரம் போலே ஒளிவீசி வாழ்ந்து மறைந்தார் என்று வர்ணித்து எழுதுகிறார் கண்ணதாசன்.

    `ராஜாஜி பற்றி கண்ணதாசன்'

    முதறிஞர் ராஜாஜி மீதும் பெரும் மதிப்பு கொண்டிருந்தார் கண்ணதாசன். கட்சி ரீதியாக அவரோடு கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும், அவருடைய வயதின் மூப்புக்கருதியும், அவருடைய இலக்கிய ஞானம் கருதியும் ராஜாஜி மீது தனி மரியாதை வைத்திருந்தார் கண்ணதாசன்.

    `சக்கரவர்த்தி திருமகன்' என்ற ராமாயணம் பற்றிய நூலில் ராஜாஜி ரத்தின சுருக்கமாக எழுதி வெளியிட்டதை எப்போதும் பெருமையுடன் கண்ணதாசன் கூறி மகிழ்ந்திடுவார். அதேபோல மகாபாரதத்திலும் ராஜாஜிக்கு நல்ல புலமை உண்டு. ராஜாஜியின் சில புத்தகங்கள், திரைப்படங்களாக வடிவம் பெற்றுள்ளதையும் கண்ணதாசன் அடிக்கடி குறிப்பிடுவார்.

    'திக்கற்ற பார்வதி' என்ற ராஜாஜியின் நாவல் திரைப்படமாக வந்து வெற்றி பெற்றதையும் கண்ணதாசன் குறிப்பிடத் தவறுவதில்லை. ஆனால் ராஜாஜி முதல்வராக இருந்த போது கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்தவர்களில் கண்ணதாசனும் ஒருவர். ராஜாஜி எப்பொழுதுமே மேல்தட்டு மக்களின் பக்கமே இருப்பார் என்பதிலும் கண்ணதாசனுக்கு ராஜாஜியின் மீது கடும் கோபம் இருந்தது.

    ஆனால் ஒரு கவிஞன் என்று வரும் போது, பொது மனிதனாக இருந்து எல்லோரையும் சமமாக பாவிப்பதே கவிஞருடைய கொள்கை என்பதில் இரண்டு கருத்துக்களுக்கு இடமில்லை. அப்படிப்பட்ட சமநோக்கில் தான் ராஜாஜியின் குணநலன் குறித்தும், அவருடைய ஒழுக்கமான பொது வாழ்க்கை குறித்தும், மதி நுட்பம் குறித்தும் கவிதையில் மிக சிறப்பான பாராட்டுக்களை வழங்கியுள்ளார் கண்ணதாசன்...

    தலை சிறந்த தமிழர்களான பேராசிரியர் கல்கியும், கல்கி சதாசிவமும், தமிழ் அறிஞர் டி.கே.சி.யும் ராஜாஜியின் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். கல்கியின் எழுத்துகளில் மனதை பறிகொடுத்தவர் கண்ணதாசன். எனவே அந்த வகையிலும் ராஜாஜியின் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார் கண்ணதாசன். 'தேசத்தை ஈர்த்த தமிழன்' என்ற தலைப்பிலே கண்ணதாசன் எழுதிய கவிதையை பார்ப்போம்.

    ஊராண்டு நாடாண்டு

    உயர்வான மேதைகளின்

    உள்ளத்தை ஆண்ட மனிதன்...

    உடலாண்டு மனம் ஆண்டு

    ஒரு தொன்னூற் றைந்தாண்டு

    உலகத்தில் வாழ்ந்த அறிஞன்

    சீராண்டு வேதாந்த

    சித்தாந்த மெஞ்ஞானம்

    சேர்த்தாண்ட ஞான முனிவன்

    தெளிவோடு பலவாண்டு

    தென்னாட்டு மாந்தர்க்கு

    தெய்வத்தை சொன்ன கலைஞன்

    என்று முதல் கவிதையிலேயே முத்திரைபதிக்கிறார் கண்ணதாசன். ராஜாஜியின் தேசத் தொண்டினை மட்டுமல்ல தெய்வீகத் தொண்டினையும் பாராட்டி மகிழ்ந்தார் கண்ணதாசன்.

    ஊராட்சி என்றாலும்

    நகராட்சி என்றாலும்

    ஒழுக்கத்தை வேண்டும் ஒருவன்

    ஒரு போதும் தன் கட்சி

    நிருவாக தலையீட்டை

    ஒப்புக் கொள்ளாத தலைவன்

    சீரான அரசாட்சி

    சிலகாலம் செய்தாலும்

    திறமாக செய்த புனிதன்

    தென்னாட்டு மாந்தர்தம்

    திறமைக்குச் சான்றாகி

    தேசத்தை ஈர்த்த தமிழன்

    தேராத நூலில்லை

    தெளியாத பொருளில்லை

    சென்றோடி விட்டதெனவோ...

    என்று அடுத்த கவிதையில்... ராஜாஜியின் குண நலன்களை பாராட்டி மகிழ்கிறார் கண்ணதாசன்

    வாழ்வாங்கு வாழ்வாரைத்

    தெய்வத்துள் வைக்குமொரு

    வையத்துள் வாழும் மனிதா- இந்த

    வையத்துள் ராஜாஜி

    வாழ்வுக்குச் சான்றாக

    வாழ்வொன்று எங்கும் உளதா...?

    மாபார தத்தினிலும்

    ராமாயணத்திலும்

    மனதார மூழ்கி நீந்தி

    மனநீதி பொய்யாது

    மறைநீதி அகலாது

    வாழ்வார்க்கு ஆத்ம சாந்தி

    பூபாரம் ஏற்றானை

    புகழ்பாரம் கொண்டானை

    பொழுதென்றும் வாழ்த்து மனமே

    என்று பாடி ராஜாஜியை போல பொய்யாத மானிடர்கள் வருக தினமே என்று கவிதையை நிறைவு செய்கிறார் கண்ணதாசன்...

    பெரியார் பற்றி கண்ணதாசன்

    பகுத்தறிவு பகலவனாக திகழ்ந்திட்ட தந்தை பெரியாரிடம் தனி மதிப்புக் கொண்டிருந்தார் கண்ணதாசன். ஆரம்ப காலங்களில் நாத்திகராகவும், பகுத்தறிவு வாதியாகவும் இருந்தவர் தான் கண்ணதாசன்... அப்போதெல்லாம் பெரியாரின் கொள்கை பற்றி பேசாத நாளில்லை. தி.மு.க.வில் இணைந்து, பின்னர் அங்கிருந்து வெளியேறிய பின்னும் பெரியாரை பற்றி எந்த விமர்சனமும் செய்ததில்லை. பெரியார் மட்டும் இல்லையெனில் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்வில் இப்படி ஓர் விழிப்புணர்வு வந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதே கண்ணதாசனின் கருத்தாகும். "ஈரோட்டு விடிவெள்ளி" என தலைப்பிட்டு

    தங்க வண்ண மேனியும், புன்னகை

    தாங்கும் இன்ப வதனமும், கண்களில்

    பொங்கும் வீரப்புலிப் பார்வையும்

    புவனம் யாவையும் தன் வயமாக்கிடும்

    எங்கள் தந்தை ஈரோட்டு அண்ணல்

    என்று புகழாரம் சூட்டி மகிழ்கிறார் கண்ணதாசன்.

    'மேடை ஏறி நின்றிடில் ஓர்எழில்

    மெய் சிலிர்க்க பேசிடில் ஓர் எழில்

    தாடை தாங்கும் தாடி அசைந்திடில்

    தனிப்பெரும் எழில்! கருநிறத் தமிழ்

    ஆசை காற்றில் அசைந்திடில் ஓர்எழில்

    ஈடிலாத நம் ஈவெரா' என்று

    பெரியாரின் தோற்றப் பொலிவை வர்ணித்து மகிழ்கிறார் கண்ணதாசன்.

    'தூங்கினோர் தமை தட்டி எழுப்பியும்

    சோம்பல் நெஞ்சினை சுறுசுறுப்பாக்கியும்

    பாங்கு காட்டியும், பண்பை ஊட்டியும்

    பாதை மாறிய வேதனை கூறியும்

    தீங்கு நீங்கிட தினவு கொண்டெழு

    தீரனே என வீரம் ஊட்டிய வேந்தர்'

    என்றும்...

    எனது தாயகம்! எனது தோழர்கள்

    எனது தாய்மொழி! எனது சோதரர்

    என்பதே நினைவான உள்ளமாம்

    இழையும் மூச்சிலும் இந்த வெள்ளமாம்

    என்றும் பெரியாருக்கு புகழ்மாலை சூட்டுகிறார் கண்ணதாசன்.

    ஊன்றி வரும் தடிசற்று நடுங்கக் கூடும்

    உள்ளத்தின் உரத்தினிலே நடுக்கமில்லை

    தோன்றி வரும் வடிவினிலே நடுக்கள் தோன்றும்

    துவலாத கொள்கையிலே நடுக்கமில்லை

    வான் தவழும் வெண்மேகத் தாடி ஆடும்

    வளமான சிந்தனைக்கோர் ஆட்டமில்லை.

    ஆன்றவிந்த பெரியார்க்கும் பெரியார் எங்கள்

    ஐயாவுக்கிணை அவரே! மாற்றோர் இல்லை.

    சாதியெனும் நாகத்தை தாக்கி தாக்கி

    சாகடித்த பெருமை அவர் தடிக்கே உண்டு

    நாதியிலார் நாதி பெற நாப்படைத்தார்

    நாற்பத்து ஐங்கோடி மக்களுக்கும்

    பேதமிலா வாழ்வு தரப் பிறந்து வந்தார்.

    பிறப்பினிலே பெரியாராய்தான் பிறந்தார்.

    ஆக்காத நூலில்லை; ஆய்ந்து தோய்ந்து

    அளிக்காத கருத்தில்லை; அழுத்தமாக

    தாக்காத பழமையில்லை, தந்தை நெஞ்சில்

    தழைக்காத உவமையில்லை, தமிழ் நிலத்தில்

    நீக்காத களையில்லை, நினைத்துச் சொல்லி

    நிலைக்காத பொருளில்லை, நீதி கூடக்

    காக்காத உலகத்தை பெரியார் காத்தார்'

    என்று பெரியாரின் 85-வது ஆண்டு பிறந்த நாளின் கொண்டாட்டத்தின் போது எழுதியிருக்கிறார் கண்ணதாசன். இப்படிப்பட்ட பெருமைகளுக்குரிய பெரியார் மறைந்த போது...

    சரித்திரம் இறந்த செய்தி

    தலைவனின் மரணச் செய்தி

    விரித்ததோர் புத்தகத்தின்

    வீழ்ச்சியைக் கூறும் செய்தி

    மரித்தது பெரியாரல்ல..

    மாபெரும் தமிழர் வாழ்வு...

    இறக்கவே மாட்டார் என்று

    இயற்கையே நம்பும் வண்ணம்

    சிறக்கவே வாழ்ந்த வீரன்

    சென்றதை நம்புவேனா

    மறக்கவா முடியும் அந்த

    மன்னனை, அவன் எண்ணத்தை'... என்று

    பெரியாரின் பெருமையை வரிசைப்படுத்தி அஞ்சலி செலுத்துகிறார் கண்ணதாசன்...

    அடுத்த வாரம் சந்திப்போம்...

    • ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்.

    தான் வாழ்ந்த காலம் மட்டுமல்லாது, இறந்து பல ஆண்டுகளாகியும் பல்வேறு தரப்பால் உச்சரிக்கப்படும் பெயராக தந்தை பெரியார் உள்ளது. தந்தை பெரியார் என்ற பெயருடன் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமியின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் தந்தை பெரியாருக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

    இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியதாவது:-

    மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்.

    மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்: சமூகச் சீர்திருத்தவாதி. பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில். அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு. சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்.

    இவ்வாறு விஜய் கூறினார். 



    • தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினம் இன்று.
    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் உள்ளிட்டோரும் பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    சென்னை:

    பகுத்தறிவு பகலவன் பெரியாரின் 51-வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தார்.

    பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கும் அவர் மலர் தூவி வணங்கினார். இதில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மு.பெ.சாமிநாதன், தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு, எம்.எல்.ஏ.க்கள் ஜெ.கருணாநிதி, மயிலை த.வேலு மற்றும் ப.ரங்கநாதன், மாதவரம் சுதர்சனம், தாயகம் கவி, மேயர் பிரியா, சேப்பாக்கம் மதன்மோகன், புழல் நாராயணன், உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • தந்தை பெரியார் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினத்தையொட்டி அவரது திருஉருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதனைத்தொடர்ந்து தந்தை பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    பெரியார் திடலில் பெரியார் பகுத்தறிவு எணினி (டிஜிட்டல்) நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    • பெரியார் திடலுக்கு வந்தது எனது தாய் வீட்டிற்கு வந்ததை போன்றது.
    • 90 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக சுற்றி சுழன்று கொண்டிருக்கிறார் ஆசிரியர் வீரமணி.

    சென்னை:

    பெரியார் பகுத்தறிவு நூலகம் ஆய்வு மைய பொன்விழா வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்றது.

    விழாவிற்கு வந்த அனைவரையும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்றார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்று நூலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவருக்கு கி.வீரமணி, பெரியாரின் கைத்தடி மாதிரியை நினைவுபரிசாக வழங்கினார்.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    என்ன பேசுவது என்று புரியாமல் நான் விழித்துக் கொண்டிருக்கிறேன். காரணம் ஆசிரியர் கி.வீரமணி எனக்கு அளித்திருக்கக் கூடிய அந்த பரிசை வாங்குகிறபோது என்னையே நான் மறந்திருக்கிறேன்.

    வாழ்க்கையில் எத்தனையோ பரிசுகளை நான் பெற்றிருக்கலாம். ஆனால் இந்தப் பரிசுக்கு எதுவும் ஈடாகாது என்பதை நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன். போதும்... எனக்கு இது போதும்.

    திராவிட மாடல் என்றால் என்ன? என்று கேலி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த கைத்தடி ஒன்றே போதும். தாய் வீட்டுக்கு வந்திருக்கிறேன். தாய் வீட்டுக்கு வருகிற போதெல்லாம், நான் உணர்ச்சி எழுச்சியை தொடர்ந்து பெறுவது உண்டு. அதை பெற்று உங்கள் முன்னால் நிற்கிறேன்.

    ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட தமிழினம் ஒற்றுமை பெறவும், சுயமரியாதை உணர்வு பெற்று மேலெழுந்து நிற்கவும், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு பல்வேறு தியாகங்களை புரிந்து நம்முடைய இனத்துக்காக அயராது உழைத்திருக்கக் கூடிய ஈரோடு சிங்கம், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் மறைந்த நாளில் அவரது கருத்துக்களை அவரது எண்ணங்களை அவரது போராட்டங்களை அவரது தியாகங்களை அவரது வாழ்க்கை வரலாற்றை நம்முடைய இளைய தலைமுறைக்கு எடுத்து சொல்கிற வகையில், டிஜிட்டல் நூலகமாக ஆய்வு மையமாக இன்றைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    தந்தை பெரியார் தனது பயணத்தை முடித்துக் கொண்டார். நாம் தொடர்வோம் என்று கலைஞர் சொன்னார். தந்தை பெரியாரின் தொண்டர்களாகிய நாம் அந்த பயணத்தை தொடங்கி இந்த முன்னெடுப்பை செய்திருக்கிறோம்.

    அவர் வாழ்ந்த காலத்தில் அவர் பேசிய முற்போக்கு கருத்துக்களுக்காக மானுட சமுதாயத்தோட விடுதலைக்கான கருத்துக்களுக்காக பழமைவாதிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பை அவர் சந்தித்தார்.

    ஊருக்குள் வர தடை, பேசத் தடை, கோவிலுக்குள் நுழைய தடை, எழுத தடை, பத்திரிகை நடத்த தடை, போராட்டம் நடத்த தடை, அத்தனை தடைகளையும் உடைத்து அவர் நம்மை வீதிகளில் மட்டும் நுழைய விடவில்லை. இந்த மண்ணுலகில் வாழக்கூடிய அத்தனை பேர்களின் மனதிலேயும் அவர் நுழைந்திருக்கிறார். அதுதான் தந்தை பெரியார்.

    பெரியார் மறைந்து 50 ஆண்டுகளுக்கு பிறகும், இன்றைக்கு அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். புகழ்ந்து கொண்டிருக்கிறோம். வரலாற்றை எடுத்துச் சொல்லி கொண்டிருக்கிறோம். அவரை இன்றைக்கு நினைவுப்படுத்தி அந்த உணர்வுகளை இன்றைக்கு நாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதுதான் தந்தை பெரியாரின் தனித்தன்மை.

    தந்தை பெரியாரின் கருத்துக்களை இன்றைக்கு வரைக்கும் எல்லா மக்களிடத்திலும் கொண்டு சேர்த்து என்றென்றும் வாழ்கிறார் என்ற நிலையை உருவாக்கி இருக்கக்கூடியவர் நம்முடைய ஆசிரியர் கி.வீரமணி.

    பெரியார் தொடங்கிய இயக்கத்தை பெரியார் கொள்கைகளை இந்த திராவிட பேரியக்கத்தை காத்து வருபவர்தான் நம்முடைய ஆசிரியர். இந்த 90 வயதிலும், ஆசிரியர் கி.வீரமணி சுற்றி சுற்றி வருகிற இந்த பயணத்தை எல்லாம் பார்க்கிறபோது, நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் ஆச்சரியப்படுகிற அளவுக்கு சொன்னாலும் தந்தை பெரியாரிடம் அவர் கற்றிருக்கக்கூடிய பாடத்தையும் இன்றைக்கு வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்.

    இன்னும் பல ஆண்டு காலம் நீங்கள் வாழ்ந்து எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு நீங்கள் ஊக்கத்தை தந்திட வேண்டும்.

    தி.மு.க. தலைவராக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பெரியாரின் தொண்டராக நான் கேட்டுக் கொள்கிறேன். பெரியாரின் தொண்டராக வாழ்த்துகிறேன்.

    இன்றைக்கு தந்தை பெரியாரை உலக மயமாக்கி, உலகத்தினுடைய பொது சொத்தாக கொண்டு சேர்த்திருக்கிறோம். இந்த நூலகத்தை சிறப்புற உருவாக்கி தந்திருக்கக்கூடிய கி.வீரமணிக்கும், அன்பு ராஜிக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    1974-ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது இதே திடலுக்கு வந்து பகுத்தறிவு நூலகம், ஆய்வு மையத்தை அன்றைக்கு திறந்து வைத்தார்.

    இப்போது அவரது மகனாக இருக்கக்கூடிய ஸ்டாலின் முதலமைச்சராக வந்து இந்த ஆய்வு மையத்தை தொடங்கி வைத்துள்ளேன்.

    அண்மையிலே வைக்கம் விழாவை சிறப்பாக நடத்தினோம். என்னை கி.வீரமணி மனதார பாராட்டினார். இன்னும் நீங்கள் என்னை பாராட்ட வேண்டும். வாழ்த்த வேண்டும் அதற்காக நான் காத்திருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே.சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ், ஆ.ராசா எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் அன்புராஜ் கலந்து கொண்டனர். 

    • சாதிய ஆதிக்க சக்திகளுக்கு சமாதி கட்டிய நபராக திகழ்ந்தவர் தந்தை பெரியார்.
    • மீண்டும் பெரியாரின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.

    சென்னை:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சாதிய ஆதிக்க சக்திகளுக்கு சமாதி கட்டிய நபராக திகழ்ந்தவர் தந்தை பெரியார். சாதிய ஆதிக்கத்திற்கு எதிராக தனது வாழ்நாள் முழுவதும் போராட்டம் நடத்தியவர். பகுத்தறிவு சிந்தனையை பரப்பி பெண்ணடிமை கூடாது என மறுத்தவர்.

    பெரியாரின் வழிவந்த திராவிடர் இயக்கங்கள் தான் அரை நூற்றாண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது. ஆனாலும் தமிழகத்தில் சாதிய ஆணவ கொலைகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. சாதிய கொலைகள் அதிக அளவில் நடைபெறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. சாதிய உணர்வுகளும் சாதிய அணிசேர்க்கையும் கொடி கட்டி பறக்கின்ற மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தலித்துகள் மீதான தாக்குதலும் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது.அன்றாடம் தலித் மக்களுக்கு கொடுமைகளை இழைக்கின்ற மாநிலமாக தமிழகம் உள்ளது.

    பெரியாரின் கொள்கைகளை திராவிட கட்சிகள் முழுமையாக பின்பற்றவில்லை. அவரது கருத்தில் இருந்து திராவிட கட்சிகள் நழுவி விட்டனர். மீண்டும் பெரியாரின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் கூறினார்.

    • சமூகநீதியை பெற்றுத் தருவதற்காக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்காதவை.
    • பல்வேறு உரிமைகளை பெற்று வாழ்க்கையில் முன்னேறியிருப்பதை நன்றியுள்ள தமிழக மக்கள் எவரும் மறக்க மாட்டார்கள்.

    தனது வாழ்நாள் முழுவதும் ஓய்வறியா உழைப்பை அளித்த தந்தை பெரியாரை, தமிழ்நாடு அரசியலின் தற்குறி சீமான் கொச்சைப்படுத்தி பேசி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் எனவும், தமிழ்நாடு மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்றும் காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழக மக்களுக்கு பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி பெற்றுத் தர தனது வாழ்நாள் முழுவதும் ஓய்வறியா உழைப்பை அளித்த தந்தை பெரியாரை, தமிழக அரசியலின் தற்குறி சீமான் கொச்சைப்படுத்தி பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். தந்தை பெரியார் பேசியதாக அவர் கூறுவதற்கு விடுதலை நாளேடு உள்ளிட்ட எதையாவது ஒரு ஆதாரத்தை அவர் காட்ட முடியுமா ? இத்தகைய அவதூறு கருத்துகளை பேசுகிற சீமானை தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.

    தமிழக மக்களுக்கு காலம் காலமாக மறுக்கப்பட்ட சமூகநீதியை பெற்றுத் தருவதற்காக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்காதவை. அத்தகைய போராட்டங்களின் விளைவாகவே பல்வேறு உரிமைகளை பெற்று வாழ்க்கையில் முன்னேறியிருப்பதை நன்றியுள்ள தமிழக மக்கள் எவரும் மறக்க மாட்டார்கள்.

    அரசியலில் எந்தவொரு குறிக்கோளும் இல்லாமல் மலிவான, சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி ஊடக வெளிச்சம் பெற்று வருகிற சீமானை தமிழக மக்கள் என்றைக்குமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நடைமுறை சாத்தியமே இல்லாத கருத்துகளை கூறி, இளைஞர்களை தவறாக வழிநடத்துகிற சீமானின் அரசியலுக்கு முடிவுகட்டுகிற காலம் நெருங்கி விட்டது. எத்தனை தேர்தலில் அவர் போட்டியிட்டாலும் ஒரே ஒரு நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. தேர்தல் களத்தில் தோற்பதற்காகவே இந்தியாவில் ஒரு கட்சியை யார் நடத்துகிறார்கள் என்று தேடிப் பார்த்தால் அது சீமான் நடத்துகிற கட்சியாகத் தான் இருக்க முடியும்.

    வாய்க்கு வந்தபடி அவர் உளறுவதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டுவதனாலேயே தொடர்ந்து உளறிக் கொண்டிருக்கிறார். இதன்மூலம், தமிழகத்தின் சிறந்த நகைச்சுவை நடிகராக சீமான் மாறிவிட்டார். அவரை யாரும் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. எத்தனை ஆயிரம் பேர் ஒன்று சேர்ந்து வந்தாலும் தந்தை பெரியாரின் புகழை எள் முனையளவு கூட இவர் போன்றவர்களால் சிதைக்க முடியாது. எனவே, சீமானின் அருவருக்கத்தக்க பேச்சை தமிழக மக்கள் கடந்த காலங்களைப் போல, தொடர்ந்து நிராகரிப்பார்கள்.

    • சீமான் மீது நடவடிக்கை எடுக்குமாறு திமுக சட்டத்துறை துணை செயலாளர் மருது கணேஷ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
    • சீமான் மீது திராவிடர் விடுதலை கழகம் சார்பிலும் சென்னை ஆணையர் அலவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

    தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

    சீமான் மீது நடவடிக்கை எடுக்குமாறு திமுக சட்டத்துறை துணை செயலாளர் மருது கணேஷ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    இதேபோல் சீமான் மீது திராவிடர் விடுதலை கழகம் சார்பிலும் சென்னை ஆணையர் அலவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், தந்தை பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பொது இடத்தில் அமைதியை சீர் குளைக்கும் விதமாக பேசுவது, கலவரத்தை தூண்டும் விதமாக பேசுவது என 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • தனது அநாகரீகமான பேச்சுக்கு சீமான் மன்னிப்புக்கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
    • தந்தை பெரியார், தமிழ்நாடு கண்ட நவீன சீர்திருத்தங்கள் பலவற்றிற்கும் முன்னோடியாக அமைந்தவர்.

    தந்தை பெரியார் குறித்த சீமானின் அவதூறு கருத்துகளை வன்மையாகக் கண்டிப்பதுடன், தனது அநாகரீகச் செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிறந்த சிந்தனையாளர் தந்தை பெரியார் குறித்து, இழிவான ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுக்களை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

    தனது அநாகரீகமான பேச்சுக்கு சீமான் மன்னிப்புக்கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

    சுயமரியாதை, சமத்துவம், பெண் விடுதலை, சமூக நீதி, சாதி ஒழிப்பு என பல்வேறு தளங்களிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செலுத்தியிருக்கும் தந்தை பெரியார், தமிழ்நாடு கண்ட நவீன சீர்திருத்தங்கள் பலவற்றிற்கும் முன்னோடியாக அமைந்தவர்.

    அவருடைய சிந்தனையால் ஆத்திரமடைந்த பிற்போக்கு சக்திகளும், சங் பரிவார வெறுப்பரசியல் கூட்டமும் அவருடைய சிலையை சேதப்படுத்துவது, அவதூறுகளின் மூலம் இழிவுபடுத்துவது என்று தரம் தாழ்ந்து செயல்பட்டு பரவலான கண்டனத்திற்கு ஆளாகி வந்தனர்.

    தற்போது அதே பாதையில், மிக மோசமான அவதூறுகளை வெளிப்படுத்தியிருகிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். தந்தை பெரியாரின் வாழ்க்கையும், அவருடைய பேச்சுக்களும் வரலாற்று ஏடுகளில் பதிவானவை.

    ஆய்வாளர்கள், சிந்தனையாளர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டும், ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டும் வரக்கூடியவை. அவருடைய கருத்துக்களின் தொகுப்பு இந்தியாவில் நிலவும் சாதிப் படிநிலைச் சுரண்டலுக்கு எதிரானவை என்பதுடன், சமுதாயத்தில் நிலவும் ஏற்றதாழ்வுகளை ஒழித்து, முற்போக்குத் திசையில் பயணிக்க உதவக்கூடியவை.

    அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரோடு உடன்பட்டும், முரண்பட்டும் பயணித்துள்ள பொதுவுடைமை இயக்கமோ அல்லது வேறு பல இயக்கங்களோ கருத்துக்களை விமர்சித்துள்ளோமே அன்றி ஒரு போதும் அவதூறு, இழிவான தாக்குதல்களை செய்ததில்லை.

    ஆனால், பெரியாரை வெறுக்கும் பிற்போக்கு சக்திகள், அவர் பேசியதாக பல்வேறு பொய்களை இட்டுக்கட்டியும், அல்லது குறிப்பிட்ட கருத்துக்கள் பேசப்பட்ட பின்னணியை மறைத்தும், திரித்தும் அவதூறுகளை முன்வைக்கின்றனர்.

    அதன் மூலம் பெரியாரின் கருத்துக்களை முற்றாக வீழ்த்துவதுடன் தமிழ்நாட்டை பின் நோக்கி இழுத்துச் செல்ல முடியும் என நினைக்கிறார்கள். இதுவரை சங்பரிவாரத்தால் செய்யப்பட்டு வந்த அவதூறுகளை இப்போது சீமானும் முன்னெடுத்திருப்பது கண்டனத்திற்குரியது.

    சீமான் வெளியிட்டிருக்கும் அவதூறு கருத்துக்களை சி.பி.ஐ(எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தனது அநாகரீகச் செயலுக்காக சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
    • சீமான் மீது போலீசார் இதுவரை 60 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுச்சேரியில் பேட்டியளிக்கும் போது, தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

    இதற்கு திராவிட கழகத்தினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    சர்ச்சை பேச்சு தொடர்பாக சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் சீமான் மீது போலீசார் இதுவரை 60 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு இன்றைக்கு விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதி, " பெரியார் பற்றி சீமான் கூறும் கருத்துக்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கக்கூடிய வகையில் உள்ளது.

    அதனால் சீமான் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை அண்ணா நகர் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • சீமான் மீது சேலம் சூரமங்கலம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • சமூக நீதிப் பேரவை என்ற அமைப்பு சார்பில் அளித்த புகாரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தந்தை பெரியார் குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.

    இதனால், தந்தை பெரியார் ஆதரவாளர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    இருப்பினும், சீமான் தொடர்ந்து தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

    இந்நிலையில், தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசிய புகாரில், நாம் தழிமர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, சீமான் மீது சேலம் சூரமங்கலம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சமூக நீதிப் பேரவை என்ற அமைப்பு சார்பில் அளித்த புகாரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ×