என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theppathruvizha"

    • சோழவந்தான் அருகே ஏடகநாத சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது.
    • பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏழவார் குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தன்று தெப்பத்திருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி சுவாமி-அம்பாள் கோவிலில் இருந்து காலை தெப்பத்திற்கு வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை யில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜையும், சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

    இரவு 9.30 மணிக்கு ஏலவார் குழலி-ஏடகநாத சுவாமி பிரியாவிடையுடன் பக்தர்கள் புடை சூழ அதிர்வேட்டுகள் முழங்க தெப்பம் மற்றும் ஊர் முழுவதும் உலா வந்து கோவிலை வந்தடைந்தனர். அப்போது "ஓம் நமச்சிவாயா" என்று பக்தர்கள் மனமுருக கோஷம் எழுப்பினர். அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் சரவணன், அறங்காவலர் சேவுகன் செட்டியார், விழாக்குழு தலைவர் நடராஜன், பொருளாளர் மோகன், ராமச்சந்திரன், முத்தழகு, ஏடக தேவகுமார், மற்றும் திருவேடகம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • காளையார் கோவில் தெப்பத்திருவிழா நடந்தது.
    • வைகாசி விசாக தெப்பத் திருவிழா இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் சொர்ண காளீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோயிலில் கடந்த 26 -ந் தேதி வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப் பட்ட தேரில் ஸ்வர்ணவல்லிஅம்மன் சமேத சொர்ண காளீஸ்வரர் எழுந்தருளினர். விழாவின் முக்கிய நிகழ்வான வைகாசி விசாக தெப்பத் திருவிழா இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ கண்காணிப் பாளர் பால சரவணன், மற்றும் ஸ்தானிகர் காளீஸ்வர குழுக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • 108 திவ்ய தேச வைணவ தலங்களுள் 17-வது தலம்.
    • தேரோட்டம் நாளை 22-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

    திட்டச்சேரி:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே திருக்கண்ணபுரம் கிராமத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு பெற்ற இக்கோவில், 108 திவ்ய தேச வைணவ தலங்களுள் 17-வது தலமாக போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசிமக திருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிமக திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 29-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது. விழாவின் 4-வது நாளான நேற்று முன்தினம் காலை பெருமாள் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இரவு பெருமாள் ஓலை சப்பரத்துடன் கூடிய தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

    இந்த கருட சேவை நிகழ்ச்சியில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை 22-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. 24-ந் தேதி (சனிக்கிழமை) சவுரிராஜ பெருமாள் புறப்பட்டு திருமருகல் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வந்து அங்குள்ள வரதராஜபெருமாளுடன் சேர்ந்து 2 பெருமாள்களும் தீர்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், அன்று மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    29-ந் தேதி இரவு 10 மணிக்கு சவுரிராஜ பெருமாள் கோவில் முன் அமைந்துள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தில் பங்களாதெப்பம் என்ற தெப்பத்திருவிழா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    • ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் நடைபெறும்.
    • 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாகத் திகழும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் தெப்பத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா இன்று காலை நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக அதிகாலையில் உற்சவர் சன்னதியில் வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார்.

    அங்கு தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் தெப்ப திருவிழாவிற்கான கொடியேற்றம் மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது.

    இதையொட்டி கொடிக்கம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தர்ப்பை புல், மா இலை, சந்தனம், குங்குமம் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.

    விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    வருகிற பிப்ரவரி 6-ந்தேதி தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும். அதனைத்தொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய சட்டத்தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி ரத வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ந்தேதி காலையில் ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ள தெப்பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருக்கும் மிதவை தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளுவார். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்து அருள்பாலிப்பார்.

    • மூன்று முறை தெப்பத்தை சுற்றி வந்து சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
    • சூரசம்கார லீலை நடைபெற்று வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தெப்ப திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், பச்சைக்குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

    விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று தெப்பம் முட்டுத்தள்ளுதல் மற்றும் தெப்பத் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.


    முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷே கங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினார்.

    அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்ப மிதவையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து தெப்ப மிதவையை இழுத்தனர். மூன்று முறை தெப்பத்தை சுற்றி வந்து சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    இதே போல இன்று இரவில் மின்னொளியிலும் சுவாமிகள் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி சன்னதி தெருவில் சூரசம்கார லீலை நடைபெற்று வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச் செல்வன், பொம்மதேவன் ராமையா மற்றும் கோவில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் பணி யாளர்கள் செய்துள்ளனர். 

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா வருடந்தோறும் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா தொடங்கிய நாளில் இருந்தே தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் சித்திரை வீதிகளில் பஞ்சமூர்த்திகளுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    கடந்த 10-ந்தேதி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடந்தது. 11-ம் நாளான நேற்று தங்கப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.


    அதனைத்தொடர்ந்து கோவிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி, காமராஜர் சாலை வழியாக சிந்தாமணியில் உள்ள கதிர் அறுப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு கதிர் அறுப்பு திருவிழா நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    அதிகாலை 5 மணிக்கு வெள்ளி அவுதா தொட்டில், வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி, பிரியா விடையுடன் சுந்தரேசுவரர் ஆகியோர் எழுந்தருளினர். பின்னர் கோவிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி, விளக்குத்தூண், கீழவாசல், காமராஜர் சாலை வழியாக மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு சென்றடைந்தனர்.


    அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் காலை 10.40 மணியளவில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் தெப்பக்குளத்தின் வெளிப்புறமாக நின்று வடம் பிடித்து தெப்பத்தை இழுத்தனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரவும் தெப்பத்தில் சுவாமி-அம்மாள் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளனர். தெப்பத்திரு விழாவை முன்னிட்டு மாரியம்மன் தெப்பக்குளம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    இன்று இரவு நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தை தெப்பத்திரு விழாவை முன்னிட்டு சுவாமி-அம்பாள் தெப்பக்குளத்தில் எழுந்தருளியதால் மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டிருந்தது. இதனால் கோவிலுக்கு வந்த வடமாநில பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். 

    ×