என் மலர்
நீங்கள் தேடியது "ticket"
- இதுவரை இல்லாத அளவிற்கு 2023-ம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் மெட்ரோ ரெயிலில் பயணித்துள்ளார்கள்.
- வாட்ஸ்அப் டிக்கெட் மூலமாக மற்றும் பேடிஎம் ஆப் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்ட எட்டு ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2023-ம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் மெட்ரோ ரெயிலில் பயணித்துள்ளார்கள்.
கடந்த 2022-ம் ஆண்டில் 6.09 கோடி பேர் பயணித்துள்ளார்கள். 2022-ம் ஆண்டை விட 2023-ம் ஆண்டில் 3.01 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளார்கள். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட், மற்றும் போன்பே போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் பேடிஎம் ஆப் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தான் அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் இயங்குகின்றன.
- பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.5 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை:
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
விரைவு பஸ்கள் பெரும்பாலும் 'அல்ட்ரா டீலக்ஸ்' வகையை சார்ந்தது. 2 இருக்கைகள் கொண்டதாக இவை உள்ளன. இதனால் கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
தற்போது கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தான் அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் இயங்குகின்றன.
இதனால் டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட பஸ்களின் கட்டணத்தை விட சற்று குறைவாக நிர்ணயிக்கப்பட வேண்டும். மாறாக கூடுதலாக வசூலிப்பதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.5 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை-சேலம் இடையே ரூ.300-ல் இருந்து ரூ.310 ஆகவும், சேலம்-நெல்லை இடையே ரூ.425-ல் இருந்து ரூ.430, நெல்லை-ஓசூர் கட்டணம் ரூ.590-ல் இருந்து ரூ.600 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டம் ரூ.580, ரூ.590 ஆக இருந்த இடங்களுக்கு ரூ.600 ஆகவும் தூரத்தை பொறுத்து ரூ.30 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. சில்லறை பிரச்சினையை காரணம் காட்டி கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் கூறுகையில், "ஏற்கனவே உள்ள பஸ் கட்டணத்தில் ஒரு சில இடங்களுக்கு சற்று குறைவாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதனை சரி செய்யும் வகையில் அந்த வழித்தடத்தில் மட்டும் சிறிய அளவில் கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரசு பஸ்களுக்கு கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை. ஏற்கனவே உள்ளபடி தான் வசூலிக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து பஸ்கள் செயல்பட தொடங்கிய நிலையில் பஸ் கட்டண அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டது. அதில் சில இடங்களில் தவறு நடந்துள்ளது" என்றார்.
- தக்கல் டிக்கெட்டுகளை எடுப்பதற்காக ரெயில் நிலையங்களில் பல மணி நேரம் பலரும் காத்து இருந்து வருகிறார்கள்.
- அனந்தபுரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மே மாதத்தில் பெரும்பாலான நாட்களுக்கான டிக்கெட் நிரம்பிவிட்டன.
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் முக்கியமான ரெயில்களில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் ஒன்றாகும்.
கன்னியாகுமரியிலிருந்து 740 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சென்னைக்கு இந்த ரெயில் 12.30 மணி நேரத்தில் சென்றடையும். தினமும் கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலையில் 6.30 மணிக்கு சென்னை எக்மோர் ரெயில் நிலையத்தை சென்றடையும்.
இதேபோல் சென்னை எக்மோர் ரெயில் நிலையத்திலிருந்து மாலை 5.20 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மறுநாள் காலையில் 5.35 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை வந்து அடையும். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள், ஏசி பெட்டிகள், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இந்த ரெயிலில் இணைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி வருபவர்களும் கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்பவர்களும் பெரும்பாலும் அதிகமானோர் இந்த ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள். எனவே முன்பதிவு தொடங்கிய உடனே இந்த ரெயிலில் டிக்கெட்டுகள் நிரம்பிவிடும். தக்கல் டிக்கெட்டை பொறுத்தமட்டில் ரெயில் பயணத்தின் முந்தைய நாள் முன்பதிவு செய்யப்படும். தக்கல் டிக்கெட்டுகளை எடுப்பதற்காக ரெயில் நிலையங்களில் பல மணி நேரம் பலரும் காத்து இருந்து வருகிறார்கள். இதில் பெரும்பாலானோருக்கு டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளது.
ஆன்லைன் மூலமாகவும் தக்கல் டிக்கெட் எடுப்பதற்கு பலரும் முயற்சி மேற்கொண்டும் ஒரு சிலருக்கு மட்டுமே டிக்கெட் கிடைக்கிறது. டிக்கெட் கிடைக்காதவர்கள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்து வருகிறார்கள். தினமும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
பண்டிகை காலங்கள் கோடை விடுமுறை தினங்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கால் வைக்க முடியாத அளவிற்கு கூட்டம் நிரம்பி வழியும். கோடை விடுமுறையான மே மாதத்தில் முன்பதிவு செய்வதற்கு தற்பொழுது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பலரும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் முன்பதிவு செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.
அனைத்து ரெயில்களிலும் மே மாதத்திற்கான முன்பதிவு தற்பொழுது நடைபெற்று வருகிறது. அனைத்து ரெயில்களிலும் டிக்கெட் எடுப்பதற்கு பொதுமக்கள் போட்டி போட்டு வருகிறார்கள். அனந்தபுரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மே மாதத்தில் பெரும்பாலான நாட்களுக்கான டிக்கெட் நிரம்பிவிட்டன.
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மே 2-ந்தேதி வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் நிலை உள்ளது. ஆனால் இன்றைய நிலவரப்படி மே 22-ந்தேதி வரை முன்பதிவு செய்ய ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு இருக்க வேண்டும்.
மே 2-ந்தேதிக்கு பிறகு முன்பதிவு செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் ரெயில் பயணிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ரெயில்வே நிர்வாகமும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மே 2-ந்தேதிக்கு பிறகு ஏன் முன்பதிவு செய்ய முடியவில்லை என்ற விவரத்தை முறையாக தெரிவிக்கவில்லை.
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை மாற்றப்பட இருப்பதால் முன்பதிவு வசதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது இருக்கும் ஸ்லீப்பர் பெட்டிகளை குறைத்து ஏசி பெட்டிகளை அதிகரிக்கவும் தென்னக ரெயில்வே முயற்சி மேற்கொண்டு வருவதாலும் முன்பதிவு செய்யப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
பயணிகள் எந்த ஒரு குழப்பமும் இன்றி இருக்கும் வகையில் தென்னக ரெயில்வே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மே 2-ந்தேதிக்கு பிறகு ஏன் முன்பதிவு செய்யப்பட வில்லை என்ற முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் ரெயில் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆதார் கார்டு இல்லாவிட்டால் 10 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றார்.
- அவரையும் தலைமுடியை கெட்டியாக பிடித்து இழுத்து, பஸ் கம்பியில் அடித்தார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் எல்.பி. நகரில், அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கண்டக்டர் கங்காதரன் பயணிகளிடம் டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தார்.
தில்சுக் நகர் செல்வதற்காக, அந்த பஸ்சில் இளம் பெண் ஒருவர் ஏறினார்.
கண்டக்டர் கங்காதரனிடம், அந்த பெண் இலவச பயண டிக்கெட் கேட்டார்.
உடனே கண்டக்டர், ஆதார் அட்டையை காண்பிக்கும்படி கேட்டார்.
இதைக் கேட்டதுமே அந்த பெண்ணுக்கு கோபம் வந்துவிட்டது. யாரை பார்த்து ஆதார் அட்டை கேட்கிறாய்? என்று கேள்வி கேட்டு, கண்டக்டரை சரமாரியாக திட்டினார்.
இதனால், திடுக்கிட்ட கண்டக்டர், அடையாள அட்டை இல்லாமல், பஸ்சில் பயணிக்க முடியாது, ஆதார் கார்டு இல்லாவிட்டால் 10 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் கண்டக்டரை எட்டி உதைத்து தாக்க தொடங்கினார். அப்போதுதான் அந்த பெண், குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.
பிறகு, அந்த பெண், திடீரென ரூ.500 நோட்டை கண்டக்டரிடம் தந்து டிக்கெட் கேட்டார்.
500 ரூபாய்க்கு சில்லறை இல்லை என்று கண்டக்டர் கூறினார்.
இதைக் கேட்டதும், அந்த பெண்ணுக்கு மீண்டும் கோபம் அதிகமாகிவிட்டது. அதனால், கண்டக்டரை எட்டி காலால் உதைத்தார். பிறகு, அவரது முகத்திலேயே எச்சிலை துப்பினார்.
சினிமாவில் வரும் சண்டை காட்சி போல கண்டக்டரை காலால் உதைத்து புரட்டி எடுத்தார்.
இதனை பார்த்து, பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ந்து போனார்கள் யாருமே அந்த பெண்ணிடம் நெருங்கவில்லை. ஒரு பெண் இதனை தடுக்க அருகில் வந்தார்.
அவரையும் தலைமுடியை கெட்டியாக பிடித்து இழுத்து, பஸ் கம்பியில் அடித்தார்.
பஸ்சை அருகில் உள்ள போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இது குறித்து கண்டக்டர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போதையில் கண்டக்டர் மற்றும் பெண்ணை தாக்கியது தொடர்பாக இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேண்ட் சட்டை அணிந்து இளம்பெண் பஸ்சில் கண்டக்டரை தாக்கும் காட்சிகளை பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர் .
அது தெலுங்கானாவில் தற்போது வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- டிக்கெட் பையில் ரூ.20 ஆயிரம் ரொக்கம் இருந்ததாக தகவல்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரி சென்ற அரசுப் பேருந்தில், நடத்துனரின் டிக்கெட் பை கொள்ளையடிக்கப்பட்டது.
பின்னர், நடத்துனர் அளித்த புகாரின் பேரில் கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
டிக்கெட் பையில் ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.38 ஆயிரம் மதிப்பிலான டிக்கெட் இருந்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
- கவுண்டரில் வடமாநிலத்தினை சேர்ந்த பணியாளர்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர்.
- டிக்கெட் முன்பதிவு செய்யவந்தவர்கள் கூறிய விபரங்களை புரிந்து கொள்ள முடியமால் அந்த பணியாளர் பரிதவித்து உள்ளனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் ரெயில் நிலையம் மதுரை ரெயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் தரும் ரெயில்வே நிலையங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மக்கள் மட்டுமின்றி தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி என 4 மாவட்ட மக்கள் கோவில்பட்டி ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ரெயில் பயணிகள் கட்டணத்தில் அதிகளவில் கோவில்பட்டி ரெயில்வே நிலையம் வருமானத்தினை ஈட்டி வருகிறது.
இவ்வாறு அதிகமாக மக்கள் வரும் ரெயில்வே நிலையத்தில் முன்பதிவு செய்ய மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற ஒரு கவுண்டர் தான் செயல்பட்டு வருகிறது. இதனை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க அந்த ஒரே ஒரு கவுண்டரில் வடமாநிலத்தினை சேர்ந்த பணியாளர்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல வடமாநிலத்தினை சேர்ந்த பணியாளர் கவுண்டரில் இருந்துள்ளார். அவருக்கு தமிழ், ஆங்கிலம் எதுவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்தி மட்டும் தெரிந்து இருந்ததால் டிக்கெட் எடுக்க வந்தவர்கள், தட்கல் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யவந்தவர்கள் கூறிய விபரங்களை புரிந்து கொள்ள முடியமால் அந்த பணியாளர் பரிதவித்து உள்ளனர்.
மேலும் இந்தியில் பேசினால் மட்டும் தான் விரைந்து தன்னால் டிக்கெட் கொடுக்க முடியும். இல்லை என்றால் மெதுவாக தான் தருவேன் என்று கூறியுள்ளார். இதனால் தட்கலில் முன்பதிவு செய்ய வந்தவர்கள் பரிதவித்துள்ளனர். மேலும் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க வந்தவர்களும் சிரமம் அடைந்துள்ளனர்.
30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை டிக்கெட் எடுக்க நேரமானதால் ஆத்திரமடைந்த பயணிகள் அங்குள்ள ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்தும் ரெயில்வே நிலைய போலீசார் மற்றும் கிழக்கு காவல்நிலைய போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இது குறித்து நிலைய மேலாளரிடம் புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் நிலைய மேலாளர் அலுவலகம் சென்று புகார் கொடுக்க சென்ற போது அங்கு பணியில் இருந்த ஊழியர் அலட்சியமாக பதில் கூறியதால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இருதரப்பினையும் சமதானப்படுத்தி புகார் அளிக்குமாறு கூறினர். அடுத்தடுத்து நடைபெற்ற இந்த பிரச்சினையினால் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இது குறித்து கோவில்பட்டி ராகவேந்திரா சேவை அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் கூறியதாவது:-
கோவில்பட்டி ரெயில் நிலைய டிக்கெட் கவுண்டர், முன்பதிவு கவுண்டர் என இருந்தாலும் ஒரு ஒரு கவுண்டர் தான் செயல்படுகிறது. அந்த கவுண்டரிலும் தமிழ், ஆங்கிலம் தெரியாத நபர்களை பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இந்தி மட்டும் அவர்களுக்கு தெரிவதால், தமிழ், ஆங்கிலத்தில் பேசினால் புரியவில்லை என்று கூறி டிக்கெட் தர மறுக்கின்றனர். அப்படியே தந்தாலும் நீண்ட நேரம் காக்க வைத்து டிக்கெட் வழங்கி வருகின்றனர். குறிப்பாக தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. திருநெல்வேலிக்கு டிக்கெட் கேட்டால் திண்டுக்கலுக்கு டிக்கெட் வழங்கிவிடுகின்றனர். இதனால் சரியான நேரத்தில் டிக்கெட் எடுக்க முடியாத நிலை இருப்பதால் ரெயில் பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே தமிழ் அல்லது ஆங்கிலம் தெரிந்த ஊழியரை பணியில் அமர்த்த வேண்டும். இல்லையென்றால் தமிழ் தெரிந்த பணியாளரை உதவிக்கு அமர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வந்தே பாரத் ரெயிலின் டிக்கெட், இப்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலின் டிக்கெட் விலைக்கு இணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
- ரெயில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
சென்னை-பெங்களூர்- மைசூர் வழித்தடத்தில் ரெயில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் 2-வது வந்தே பாரத் ரெயிலை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. இப்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் சென்னையில் இருந்து காலையில் புறப்பட்டு மதியம் மைசூரை அடையும். ஆனால், இப்போது அறிமுகப்ப டுத்தப்படும் வந்தே பாரத் ரெயில் காலையில் மைசூரில் இருந்து கிளம்பி, மதியம் சென்னை வந்தடையும். இந்த வந்தே பாரத் ரெயிலின் டிக்கெட், இப்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலின் டிக்கெட் விலைக்கு இணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மைசூரில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் இந்த வந்தே பாரத் ரெயில் மாண்டியா, எஸ்எம்விடி பெங்களூர், கிருஷ்ணராஜபுரம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மைசூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரெயில் காலை 7.45 மணிக்கு பெங்களூர் வரும். மதியம் 12.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறு மார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில், இரவு 9.25 மணிக்கு பெங்களூர் சென்றடையும். இரவு 11.20 மணிக்கு மைசூர் செல்லும்.
சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே ஏற்கனவே ஒரு வந்தே பாரத் இயக்கப்படும் நிலையில், இப்போது 2-வது வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி வருகிற 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த ரெயில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ரெயில் தொடங்கப் பட்ட பிறகு சென்னையில் இருந்து பெங்களூருக்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் வந்தே பாரத் ரெயில் சேவை கிடைக்கும். இதன் மூலம் பயணிகள் சென்னையில் இருந்து 4.25 மணி நேரத்தில் பெங்களூர் செல்லலாம்.
- ரீ-ரிலீஸ் படங்கள் ரசிகர்களுக்கு வரப் பிரசாதமாக அமைகிறது.
- ஃப்லிக்ஸ் (iFLICKS) என்ற புதிய தளத்தை உருவாக்கியுள்ளது தினத்தந்தி.
படங்களை திரையரங்குகளில் பார்ப்பதே ஒரு சுகம். மனிதன் எத்தகைய சூழ்நிலையில் இருந்தாலும் அவனை மூன்று மணி நேரம் கவலைகளை மறக்கச் செய்து , அவன் மீண்டும் இயங்குவதற்கான உத்வேகத்தை சினிமா தருகிறது எனலாம். ஒருவன் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என்றாலும், நண்பர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்றாலும், தன் காதலியுடன் நேரம் செலவிட வேண்டும் என்றாலும் அவன் திரையரங்கத்திற்கே செல்கிறான். காதல், குடும்பம், நட்பு என மூன்றிலும் பொதுவாக இருக்கும் ஒன்று சினிமா. அதிலும் திரையரங்கம்.
தற்போது வெளியாகும் படங்கள் எல்லாம் ஒரு மாத இடைவெளிக்கு பின் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதனால் மக்கள் சிலரிடம் படங்களை திரையரங்குகளில் சென்று பார்க்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. முன்னணி நடிகர்களின் படத்திற்கு மட்டும் திரையரங்களில் பார்க்கும் பழக்கம் சமீபத்தில் உருவாகியுள்ளது. இதனால் சாதாரண படங்களும், குறைந்த பட்ஜட் படங்களும் மக்கள் பார்வைக்கு வருவதற்கு முன்னரே காணாமல் போய்விடுகிறது.
என்னதான் படங்கள் ஓடிடியில் வெளியானாலும் அதனை திரையரங்கில் மக்களுடன் மக்களாக அமர்ந்து பார்க்கும் அனுபவத்தை தருவதில்லை. சமீபத்தில் பல தமிழ்ப் படங்கள் ரீ - ரிலீஸ் செய்யப்படுகிறது. தனுஷ் நடிப்பில் வெளியான 3 , மயக்கம் என்ன, யாரடி நீ மோகினி. கமல் நடித்த வேட்டையாடு விளையாடு, விருமாண்டி. விக்ரம் நடித்த அந்நியன், சாமி. ஜீவா நடிப்பில் வெளிவந்த சிவா மனசுல சக்தி. சூர்யா நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டபோது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திரைபடம் எல்லாம் 10 - 15 வருடங்களுக்கு முன்னால் வந்த திரைபடமாக் இருந்தாலும், ஓடிடி தளங்களில் இருந்தாலும் கூட மக்கள் திரையரங்குகளில் வந்து பார்க்க விரும்புகின்றனர்.
படங்கள் வெளியான போது திரையரங்கிற்கு சென்று பார்க்க முடியாமல் போனதால், அப்பொழுது சிறு வயதில் இருந்த காரணத்தினாலும், இம்மாதிரி ரீ-ரிலீஸ் படங்கள் ரசிகர்களுக்கு வரப் பிரசாதமாக அமைகிறது.
அதனை ஊக்குவிக்கும் வகையில் ஐஃப்லிக்ஸ் (iFLICKS) என்ற புதிய தளத்தை உருவாக்கியுள்ளது தினத்தந்தி. இத்தளத்தில் உங்கள் ஊரில் உள்ள திரையரங்குகளைப் பற்றியும், அத்திரையரங்குகளில் என்ன படங்கள் வெளியாகியுள்ளது என்பது பற்றிய தகவல்கள் இருக்கும்.
மேலும், சமீபத்தில் வெளியான படங்களைப் பற்றியும் அதன் நடிகர்கள், படக்குழுவினர் பற்றிய தகவல்களும், படத்தின் விமர்சனங்களையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது நாம் பட டிக்கெட்டுகளை பெறுவதற்கு கார்ப்பரேட் தளங்களை உபயோகித்து வருகிறோம். அதில் பெரும்பான்மையாக மாலில் உள்ள தியேட்டர்களும், பிரபலமான தியேட்டர்களும் மட்டும் தான் காண்பிக்கப்படுகிறது.
ஆனால், ஐபில்க்ஸ் தளத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் என்ன படம், எத்தனை மணிக்கு திரையிடப்படும் என்ற தகவல்களை அறிந்துகொள்ள முடியும். பெரிய திரையரங்குகள் முதல், சாதாரண திரையரங்குகள் வரை இதில் பட்டியலிடப்படும். விரைவில் சினிமா டிக்கெட்டுகளை புக்-செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
- அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 1068 பேருந்துகளிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
- ஜி பே, கிரெடிட்/டெபிட் கார்ட், ஃபோன் பே மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம் என போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் வசதிக்காக யு.பி.ஐ. மற்றும் கார்டுகள் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி அமலுக்கு வந்தது.
யு.பி.ஐ. முறையை பயன்படுத்தி சென்னை மாநகர பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளும் வகையில், புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டன. இதன் காரணமாக பயணிகள் பயணச்சீட்டு பெறுவதற்கு யு.பி.ஐ. மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம்.
இந்நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதியை 328 ஏசி பேருந்துகள் உட்பட 1068 பேருந்துகளிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது.
விரைவு பேருந்துகளில் ஜி பே, கிரெடிட்/டெபிட் கார்ட், ஃபோன் பே மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம் என போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2022ம் ஆண்டில் பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்கில் சினிமா டிக்கெட்டுகள் மூலமாக 2,751.4 கோடி வருவாய்.
- 2023ம் ஆண்டில் பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்கில் சினிமா டிக்கெட்டுகள் மூலமாக ₹3,279.9 கோடி வருவாய்.
கடந்த 2022 ஆம் ஆண்டில் பி.வி.ஆர் ஐநாக்ஸ் (PVR Inox) திரையரங்கில் விற்பனை செய்த உணவுப்பொருட்கள், குளிர்பானங்களிலிருந்து 1,618 கோடி வருவாய் ஈட்டியது.
இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டில் பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்கில் விற்பனை செய்த உணவுப்பொருட்கள், குளிர்பானங்களிலிருந்து மட்டும் ₹1,958.4 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளன. இது கடந்த ஆண்டு பெறப்பட்ட வருவாயை விட இது 21%அதிகம் ஆகும்.
2022 ஆம் ஆண்டு பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்கில் சினிமா டிக்கெட்டுகள் மூலமாக 2,751.4 கோடி வருவாய் வந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு ₹3,279.9 கோடியாக வருவாய் அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டு வருவாயை விட 19 % அதிகமாகும்.
- கூகுள் பே, போன் பே போன்றவற்றில் மூலம் பணம் செலுத்தி பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.
- நடத்துனர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது குறிப்பிட்ட பேருந்துகளில் அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் பே, போன் பே போன்றவற்றில் மூலம் பணம் செலுத்தி பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.
இந்நிலையில், பயணிகளிடம் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடத்துனர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "அரசு பேருந்துகளில், ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமான மின்னணு பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை மூலம் பயணிகளுக்குப் பயண சீட்டு வழங்கும் நடத்துனர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வேட்டி கட்டிய அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அந்த மாலுக்கு வந்துள்ளார்.
- இது கலாச்சார தீண்டாமை என்ற கருத்துக்களும் முன்வைக்கப்டுகின்றன.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வேட்டி கட்டிக்கொண்டு வந்ததால் முதியவர் ஒருவர் ஷாப்பிங் மாலில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள GT மாலில் நேற்று இரவு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி கண்டனங்களை குவித்து வருகிறது.
வேட்டி கட்டிய அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அந்த மாலுக்கு வந்துள்ளார். மாலுக்குள் நுழையும் போது வேட்டி கட்டியவர்களுக்கு அனுமதி இல்லை,பேன்ட் மாற்றிக்கொண்டு வந்தால் அனுமாகிக்கிறோம் என மால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
முதியவரிடம் ப்ரீ புக்கிங் செய்யப்பட்ட பட டிக்கெட் இருந்தும், வேட்டியை அனுமதிக்கக்கூடாது என்பது தங்களது மாலின் கொள்கைகளில் ஒன்று என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இந்தியாவின் பாரம்பரிய உடையான வேட்டியையே உள்ளே அனுமதிக்காத மால் நிர்வாகத்தை கிழித்தெடுத்து வருகின்றனர். மேலும் இது கலாச்சார தீண்டாமை என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. இதற்கிடையில் இந்த வீடியோ சர்ச்சையான நிலையில் மால் நிர்வாகம் முதியவருக்கு சால்வை அணிவித்து சமாதானப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.