search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN By polls"

    நான்கு தொகுதி இடைத்தேர்தலில் நயவஞ்சக நரி சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என அதிமுக சார்பில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
    சென்னை:

    அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இதுதொடர்பாக அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அறிக்கை மூலம் வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நல்லதை எந்நாளும் போற்றி அல்லதை அறவே அகற்றுகின்ற அரசியல் ஞானம் மிகுந்த அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களுக்கு பணிவார்ந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறோம். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில், இவ்வரசு பல்வேறு சாதனைகள் செய்து வருகிறது.

    ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்ற பேரறிஞர் அண்ணா அவர்கள் காட்டிய அன்புப்பாதையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் வழியில் ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்ற நல்ல நோக்கத்திற்காக செயல்படும் இந்த அரசு மெருகோடு, மிடுக்கோடு தொடர்ந்து நடைபெற, வருகின்ற மே 19 அன்று நடைபெறும் நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், உங்களின் பொன்னான ஆதரவை ‘இரட்டை இலை’ சின்னத்தில் வழங்கி, கழக வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்து, அதன் மூலம் நயவஞ்சக நரி சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்த நல்லாட்சியின் மீது தமிழக மக்கள் கொண்டிருக்கும் பற்றினையும், பாசத்தினையும் உறுதிபட இந்நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென, வாக்காளப் பெருமக்களாகிய உங்களையெல்லாம் அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் இருவரும் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தில் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சூலூர் தொகுதியில் திண்ணையில் அமர்ந்து மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    கோவை:

    கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே 2 நாட்கள் பிரசாரம் செய்தார்.

    இந்நிலையில் நாளை மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில் இன்று இறுதி கட்ட பிரசாரத்தை மு.க. ஸ்டாலின் மேற்கொண்டார்.

    இன்று காலை 8 மணியளவில் மு.க.ஸ்டாலின் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுல்தான்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட அப்பநாயக்கன் பட்டிக்கு சென்றார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    அப்போது பொதுமக்கள் மு.க. ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பின்னர் மக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனர். வெற்றி பெற்றதும் அனைத்து குறைகளையும் சரி செய்து தருவதாக உறுதியளித்தார்.

    தொடர்ந்து ஏ.டி.காலனி பகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள வீட்டின் முன்பு உள்ள திண்ணையில் அமர்ந்து கலந்துரையாடினார்.

    அப்போது பெண் ஒருவர் மு.க. ஸ்டாலினுக்கு டீ கொடுத்தார். அதனை வாங்கி குடித்த மு.க. ஸ்டாலின் மக்களிடம் தொடர்ந்து கலந்துரையாடி பொதுக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    தொடர்ந்து இன்று மாலை 6.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் சூலூர் தொகுதிக்குட்பட்ட முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சி குரும்பபாளையம், வங்கி அருகில் வேன் பிரசாரம் செய்கிறார். 7 மணிக்கு கரவழி மாதப்பூரிலும், இரவு 8 மணிக்கு இருகூரிலும் வேன் பிரசாரம் செய்கிறார்.
    உப்பு போட்ட வீட்டுக்கு துரோகம் நினைத்தவர் டி.டி.வி.தினகரன் என்று ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகை விந்தியா கூறினார்.
    தூத்துக்குடி:

    ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் காமராஜ், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் முன்னிலையில் நடிகை விந்தியா நேற்று மாலையில் தாளமுத்துநகர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசும் போது கூறியதாவது;-

    ஒட்டப்பிடாரம் வீர பாண்டிய கட்டபொம்மன் முதல் பாரதி வரை வீரர்களை தந்த பூமி. அங்கு ஏழைகளுக்காக நடந்து வரும் அ.தி.மு.க. வேட்பாளர் தான் வெற்றி பெற வேண்டும். ஊழல்வாதிகள் அல்ல. தி.மு.க. நம் நாட்டை இத்தாலிகாரர்களிடம் ஒப்படைக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு தோல்வியை தர வேண்டும். ஊழல்களின் மொத்த உருவம் தி.மு.க. தான்.

    உப்பு போட்ட வீட்டுக்கு துரோகம் நினைத்தவர் டி.டி.வி.தினகரன். இந்த தேர்தல் ஒரு தேர்தல் அல்ல. யுத்தம். இதில் மக்களின் ஆட்சி, ஏழைகளின் ஆட்சி வெற்றி பெற வேண்டும். மக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    டி.டி.வி. தினகரன் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செய்தித் தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் தமிழக தேர்தல் அதிகாரியிடம் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:-

    முதலமைச்சரை ஒருமையில் பேசியும், உண்மைக்கு மாறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பியும்,  பல்வேறு விவகாரங்கள் தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சித்தும், அவசர கால ஊர்திகளுக்கு வழிவிடாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி டி.டி.வி. தினகரன் செயல்படுகிறார்.



    டி.டி.வி. தினகரன் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படியும், இந்திய தண்டனைச் சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுத்து, அவர் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் செய்வதறகு தடை விதித்து உத்தரவு பிறக்க வேண்டும்.

    இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. 
    ஒட்டப்பிடாரம் தொகுதியில் 2-ம் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
    தூத்துக்குடி:

    ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று 2-ம் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வந்தார்.

    விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர். பின்பு மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை அருகே உள்ள ராமச்சந்திராபுரத்திற்கு சென்றார். அங்கு அவர் அனைத்து வீதிகளிலும் நடந்தே சென்று ஆதரவு திரட்டினார்.

    அப்போது மு.க.ஸ்டாலினுக்கு பல பெண்கள் சால்வை கொடுத்து வரவேற்றனர். அங்கிருந்த ஓவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து தி.மு.க.வுக்கு வாக்களிக்குமாறு கேட்டு ஓட்டுவேட்டையில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது பொதுமக்கள் கொடுத்த பதனீரை மு.க.ஸ்டாலின் அருந்தினார்.

    பின்னர் மு.க.ஸ்டாலின் காமராஜ்நகர் மற்றும் கூட்டாம்புளி பகுதிகளிலும் வீதிவீதியாக நடந்து சென்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது காமராஜ்நகர் பகுதி மக்கள், “தங்களது பகுதியில் தண்ணீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். மெயின் ரோடு சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர்.

    பிரசாரத்தின் போது மு.க.ஸ்டாலின் பதனீர் அருந்திய காட்சி.

    அவர்களிடம் மு.க. ஸ்டாலின், “தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்யுங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து பணிகளும் செய்து தரப்படும்” என்று உறுதியளித்தார்.

    மு.க.ஸ்டாலின் இன்று மாலை வல்லநாடு, தெய்வச்செயல்புரம், அக்கநாயக்கன்பட்டி, பரிவல்லிக்கோட்டை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் 19-ம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அங்கு பிரசாரம் செய்தார்.

    அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான நாதுராம் கோட்சே இந்துதான் என குறிப்பிட்டார்.

    இந்நிலையில் கமலின் பேச்சுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அவரது வீட்டின் முன் சில இந்து அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தலாம் என்று வந்த தகவலை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
    மு.க.ஸ்டாலினுக்கு வேண்டியது எல்லாம் முதல்-அமைச்சர் என்ற பதவிதான் என்றும் மக்களை பற்றி அவர் சிந்திக்கவில்லை என்றும் தேர்தல் பிரசாரத்தில் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
    சூலூர்:

    சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வி.பி.கந்தசாமியை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சூலூர், நீலாம்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை ஜெயலலிதா வழிநடத்தினார். தற்போது அவர் இல்லையே என்ற ஏக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாதையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறந்த முறையில் மக்களுக்காக சேவை செய்து வருகிறார் என்றால் அது மிகையாகாது.

    தொலைநோக்கு பார்வையுடன் மக்களுக்காக நான் என்று ஜெயலலிதா பயணித்ததுபோல, மக்களை பற்றி சிந்தித்து சிறந்த முறையில் ஆட்சி செய்து வருகிறார்.

    விவசாயிகளுக்காக அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். அதற்காக ரூ.250 கோடி ஒதுக்கி 2021-ம் ஆண்டுக்குள் முடிக்கவும் நடவடிக்கை எடுத்து உள்ளார். இந்த திட்டம் கனவு திட்டமாக அமைந்து விடும் என்று கூறுகிறார்கள். இப்படிதான் வீராணம் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று கூறினார்கள். எம்.ஜி.ஆர். அந்த திட்டத்தை நிறைவேற்றினார். அதுபோன்றுதான் அத்திக்கடவு-அவினாசி திட்டமும்.

    விவசாயிகளுக்காக உழைக்கும் இயக்கம் அ.தி.மு.க. விவசாயிகளுக்கு ஒன்று என்றால் முதலில் கொதித்து எழும் ஆட்சிதான் இது. ஜெயலலிதா கொண்டு வந்துள்ள திட்டத்தை கூறினால் நேரம் போதாது. பெண்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தார். மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்க வேண்டும் என்று விலையில்லா மடிக்கணினி திட்டத்தை கொண்டு வந்தார். அதுபோன்றுதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பல திட்டங்களை கொண்டு வந்து உள்ளார். பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமும், ஒரு கோடி ஏழை-எளிய தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    அதற்குள் தேர்தலை சந்திக்க கூடிய நிலை வந்து விட்டது. தேர்தல் முடிந்ததும் ரூ.2 ஆயிரம் கொடுக்க இருக்கிறார்.

    மக்களை பற்றி சிந்திக்கிறவர்கள்தான் ஆட்சியில் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டும் என்றால் தற்போது நடைபெறும் 4 இடைத்தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றி தற்போது உறுதி செய்யப்பட்டு விட்டது. கண்டிப்பாக 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். பதவி சுகம் அனுபவித்தவர்கள்தான் தற்போது தேர்தலை உருவாக்கி இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து இருக்கிறார்கள். ஸ்டாலின் சொன்ன கனவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

    மு.க.ஸ்டாலினுக்கு வேண்டியது எல்லாம் முதல்-அமைச்சர் என்ற பதவிதான். மக்களை பற்றி அவர் சிந்திக்கவில்லை. காற்றாலையையும் காசாக்க முடியும் என்று ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தது அவர்கள்தான். அராஜக ஆட்சியை நடத்தியவர்களும் அவர்கள்தான். இந்த தேர்தல் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஸ்டாலின் கூறுகிறார். 23-ந் தேதி அன்று எங்கள் ஆட்சி வரும் என்று அவர் சொல்கிறார். அவரால் எப்போதுமே ஆட்சிக்கு வர முடியாது.

    அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு இல்லை. சிறந்த முறையில் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சி தொடர வேண்டும் என்றால் நீங்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்த வி.பி.கந்தசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரசாரத்தின்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வேட்பாளர் வி.பி.கந்தசாமி, ஒன்றிய செயலாளர் மாதப்பூர்பாலு, அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் தோப்பு க.அசோகன், நகர செயலாளர் கார்த்திகைவேலன், சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    நிலக்கரி, 2-ஜி ஸ்பெக்ட்ரம் என பஞ்ச பூதங்களில் ஊழல் செய்த ஆட்சி தி.மு.க தான் என்று தேர்தல் பிரசாரத்தில் நடிகை விந்தியா பேசினார்.
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக முனியாண்டி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகை விந்தியா தேர்தல் பிரசாரம் செய்தார்.

    ஏழைகளின் வாழ்வில் இருளைப் போக்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கினார். பரதன் ஆண்டாலும் அது ராம ராஜ்யமாகத்தான் இருந்தது. அபோல தற்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தை ஆட்சி செய்தாலும் அது ஜெயலலிதா ஆட்சியாகத்தான் உள்ளது. நமது கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற நடப்பது இந்த தேர்தல்.

    சேது சமுத்திர திட்டம், நிலக்கரி, 2-ஜி ஸ்பெக்ட்ரம் என பஞ்ச பூதங்களில் ஊழல் செய்த ஆட்சி தி.மு.க. ஆட்சி. தேர்தல் வந்தால் மட்டும் இந்துக்கள் மீது தி.மு.க.வினருக்கு திடீர் பாசம் வந்துவிடும்.

    கிராமந்தோறும் கிராம சபை கூட்டங்கள் நடத்துவது, சாலையோர கடைகளில் டீ குடிப்பது, சைக்கிள் ஓட்டுவது என பல்வேறு வகைகளில் மக்களை ஏமாற்றுவார்கள். ஆட்சிக்கு வந்ததும் மக்களை கண்டுகொள்ள மாட்டார்கள்.

    தற்போது நடைபெற்ற தேர்தலில் தோற்று விடுவோம் என்று தி.மு.க.வுக்கு பயம் வந்து விட்டது. அதனால்தான் வாக்கு எந்திரத்தில் கோளாறு என மக்களை குழப்புகிறார்கள். ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று நினைக்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. அவருக்கு ஏமாற்றமே தேர்தல் பரிசாக மிஞ்சும்.

    எந்த கேள்வி கேட்டாலும் தினகரன் சிரித்துக் கொண்டே பதில் கூறுகிறார். ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் தேர்தல் கமி‌ஷனுக்கே பணம் கொடுப்பவர் தினகரன். ஆர்.கே.நகர் மக்கள் இப்போதும் 20 ரூபாய் நோட்டுக்களை வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் தங்களது அன்பை வாக்குகளாக மாற்றி வேட்பாளர் முனியாண்டியை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.
    அ.தி.மு.க. அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் தி.மு.க. வழக்கு போட்டு தடுத்து வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
    விருதுநகர்:

    ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக மோகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 15 நாட்களுக்கு மேலாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    சொக்கநாதபுரம், மகாராஜபுரம், ஒட்டநத்தம், வடமலாபுரம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்தி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் ஏழை மக்களுக்காக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    ஒட்டப்பிடாரம் தொகுதியில் நாங்கள் பிரசாரம் செய்யும் இடமெல்லாம் வெயிலையும் பொருட்படுத்தாமல் இரட்டை இலை சின்னத்தை காட்டி உற்சாகப்படுத்தி வரவேற்கின்றனர். அவர்களது உற்சாகம் அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துகிறது.

    வேட்பாளர் மோகன் உங்களுக்காக ஓடோடி உழைக்கக்கூடியவர். அவரை நீங்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஒட்டப்பிடாரம் தொகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் 106 கோடி ரூபாய் செலவில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. திட்டப்பணிகள் முடிந்ததும் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் கிடைக்கும்.

    அ.தி.மு.க. அரசின் திட்டங்களை தி.மு.க. வழக்கு போட்டு தடுத்து வருகிறது. தி.மு.க.வுக்கு ஏழைகளை பற்றிய சிந்தனையே இல்லை. தி.மு.க.வில் கருணாநிதி குடும்பத்தினரே உயர் பதவியில் இருக்க முடியும்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.

    அமைச்சர்களுடன் சந்திர பிரபா எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் சென்று வாக்கு சேகரித்தனர்.
    தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்றும் யார் காலிலும் விழுந்து கூட்டணி அமைக்க மாட்டோம் என்றும் சூலூர் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான பேசினார்.
    சூலூர்:

    சூலூர் தொகுதி இருகூரில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

    நாங்கள் தேர்தல்களில் எத்தனை முறை நின்றாலும் தனித்தே போட்டியிடுவோம். அது தோற்றாலும் சரி. ஜெயித்தாலும் சரி. யார் காலிலும் விழுந்து கூட்டணி அமைக்க மாட்டோம். நாங்கள் கட்டும் வேட்டியில் கூட கறை இருக்கக்கூடாது என்று நினைக்கிறோம். தற்போது ஆளும் கட்சிக்காரர்கள் ஆட்சியின் அதிகாரத்தையும் வலிமையையும் உணராதவர்கள். மற்றவருக்கு பயந்து கொண்டு அடிமை ஆட்சி நடத்துபவர்கள். மத்தியிலே ஆளுகின்ற ஆட்சியாளர்கள் சொல்வதைக்கேட்டுக்கொண்டு தேவையில்லாத பல திட்டங்களை மக்கள் மீது திணிக்கிறார்கள்.

    நீட் தேர்வு என்ற திட்டத்தை கொண்டு வந்து கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மாணவர்களை மருத்துவ படிப்பு படிக்க விடாமல் தடுக்கின்றனர். அதிக மதிப்பெண் எடுப்பவர்கள் நீட் தேர்வில் தோல்வியடைந்தால் மருத்துவராக முடியாது. தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுப்பவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மருத்துவராகலாம். இது போன்ற ஒரு கேவலமான நிலைக்கு கல்வியின் தரத்தை கொண்டு செல்கிறார்கள்.

    அவ்வாறு நீட் தேர்வில் மருத்துவம் படித்து வெற்றி பெற்று மருத்துவம் படிப்பவர்கள் எந்த நாட்டில் அதிக சம்பளம் கொடுக்கிறார்களோ அந்த நாட்டுக்கு சென்று விடுகிறார்கள். அதனால் நம் நாட்டில் மருத்துவத்துறையின் முன்னேற்றமும் பாதிக்கப்படுகிறது. ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைக்காமல் போய்விடுகிறது.

    தாய் மொழியான தமிழ் மொழியை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறார்கள். இதை நாங்கள் சொன்னால் இனவெறியர்கள் என்று கூறுகிறார்கள். போக்குவரத்து துறையில் நஷ்டம் என்கிறார்கள் அது குறித்து கேட்டால் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் கொடுக்கிறோம் என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள்.

    இலவச பஸ் பாஸ் கொடுப்பதற்கு பதிலாக இலவச கல்வியை கொடுத்தால் படிக்கும் மாணவர்கள் பயன்பெறுவார்கள். போக்குவரத்து துறையும் நஷ்டம் இல்லாமல் இருக்கும். மத்திய அரசு மாநில அரசின் மீது அதிக வரிகளை போட்டு மொத்தமாக எடுத்து சென்று விடுகிறது. ஆனால் மாநிலத்தில் கஜா புயல் போன்ற இயற்கை அசம்பாவிதங்கள் நடக்கும்போது அதற்கான நஷ்டஈடு கேட்டால் அதை தராமல் நாம் கையேந்திக் கொண்டு நிற்கக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. மத்திய அரசுக்கு இணையாக ஒவ்வொரு மாநில அரசு உருவாக்க வேண்டும். நமக்கென்று தனித்தனி சட்டங்கள் பிறப்பித்துக் கொள்ள வேண்டும்.

    கல்வித்துறையில் வ.உ.சி., தீரன் சின்னமலை போன்றவர்கள் குறித்து நாம் படிக்க வேண்டும். வடநாட்டு அக்கால மன்னர்கள் தலைவர் குறித்து படித்து நமக்கு என்ன பயன். படிக்காத காமராஜர் கூட எப்போதும் மத்திய அரசுக்கு அடிபணியாமல் மன உறுதியோடு இருந்தார். ஆனால் தற்போது ஆளும் மாநில அரசானது மத்திய அரசுக்கு அடிபணிந்து உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு 60 வயதில் ஓய்வூதியம் தருவோம். விவசாயத்தை அழியாமல் காப்போம். சாக்கடையில் கழிவுகளை அள்ளுவதற்கு கூட மனிதர்கள் தான் பயன்படுத்தப்படுகிறார்கள். அதை அகற்றும் எந்திரத்தை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதான் வளர்ச்சியா?.

    இவ்வாறு சீமான் பேசினார்.
    எத்தனை பெட்டிகள் எடுத்து சென்றாலும் மக்கள் நீதி மய்யம் வெல்லும் என்று சூலூர் தொகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.
    சூலூர்:

    சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமியை ஆதரித்து அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். சூலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது-

    சாராய கங்கை பெருகி ஓடும் இந்த நாட்டில் ஜீவநதிகள் வற்றிப்போய் கிடக்கின்றன. தற்போதைய ஆட்சியாளர்கள் நாடாள தகுதியற்றவர்கள்.

    தவறுகளையும் பித்தலாட்டங்களையும் செய்பவர்கள். அவர்களை குறைசொல்வதை விட்டு விட்டு மக்களுக்கு என்ன செய்ய போகிறோம் என்பதை சொல்கிறோம். மற்ற கட்சிகளை பற்றி சொல்ல நிறைய இருந்தாலும், நாங்கள் உங்களுக்கு என்ன செய்ய போகிறோம் என்பதை சொல்கிறோம்.

    குடிநீர் பற்றாகுறை தீர்க்க முடியாத பிரச்சனையல்ல. நேர்மையான அரசியல் நடந்தால் வீடு தேடி குடிநீர் கிடைக்கும். அதற்கான நேரத்தையும், வாய்ப்பையும் எங்களுக்கு கொடுக்க வேண்டும் . 3 துறைகள் குழி தோண்டிக்கொண்டே இருக்கின்றன.

    அவர்களுக்குள் கருத்துகளை பரிமாறிக்கொள்வதில்லை என்பது தெரிகிறது . இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.எங்களை தூக்கி பிடிப்பவர்கள் கட்சிக்காரர்கள் மட்டுமல்ல. மக்களும் தான். தண்ணீர் பிரச்சனை தீர்க்க முடியும் என நல்ல நீர்நிலை ஆய்வாளர்கள், அறிவாளர்கள் சொல்கின்றனர் .

    டாஸ்மாக் கடைகளை மூடி பூரண மது விலக்கை கொண்டு வர முடியுமா? என மக்கள் கேட்கின்றனர். உலகத்தில் ஒரே நாளில் மது விலக்கை கொண்டு வந்தால் கோட்டையில் இருப்பவர்கள் சாராயம் காய்ச்ச போய்விடுவார்கள். மது விலக்கை மெது மெதுவாக கொண்டு வர முடியும். மக்களிடம் பொய் சொல்ல விரும்பவில்லை.

    ஒருவர் குழியை தோண்டுவார். ஒருவர் மூடுவார். இப்படி பள்ளத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அதை சமப்படுத்த வேண்டிய நேரம் இது.

    சாராயம், போனஸ் கொடுத்து அழைத்து வரும் கூட்டத்திற்கு எங்கள் பெண்கள் போக மாட்டார்கள். விண்வெளியானாலும், விவசாயமானலும் பெண்களுக்கு சம உரிமை கொடுப்போம்.

    எத்தனை பெட்டிகள் எடுத்து சென்றாலும் மக்கள் நீதி மய்யம் வெல்லும். அதனை நம்பி தைரியமாக மாற்றத்திற்கான விதையை தூவுங்கள். நேர்மை என்ற ஒரு வரியே மக்கள் நீதி மய்யம் என்று மார் தட்டி சொல்வோம்.

    உங்கள் ஊரில் என்ன பிரச்சனை. அதனையே நாங்கள் தேர்தல் அறிக்கையாக கொடுக்கிறோம். மக்களின் மனதை அறிந்தே தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு தான் தீர்வுகளை கொடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசியதாவது-

    அநீதியை அழிக்க தொடங்கப்பட்ட கட்சிதான் மக்கள் நீதி மய்யம். எங்களுக்கு அலங்காரங்களுக்கு நேரம் இல்லை. மக்கள் பணி மட்டுமே எங்கள் நோக்கம். எங்களை கவிழ்ப்பதற்காக எத்தனை பண பெட்டிகள் கைமாறினாலும் எங்களை தடுக்க முடியாது.

    மக்கள் நீதி மய்யத்தை தூக்கி பிடிப்பவர்கள் இளைஞர்களும், பெண்களும் தான். நேர்மையாக இருந்தால் எதுவும் சாத்தியமே. அந்த நேர்மை எங்களிடம் உள்ளது.

    எனவே மாற்றத்தை உருவாக்க மக்கள் முன் வர வேண்டும். கோட்டையில் இருப்பவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு அநியாயத்தை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற மன நிலையில் உள்ளனர். அவர்களுக்கு மக்கள் பணி செய்வதில் ஆர்வம் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.
    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மகத்தான வெற்றியை பெறுவார்கள் என்றும் இந்தியா முழுவதும் மோடி அணி தோற்கும் என்றும் வைகோ பேசினார்.
    தூத்துக்குடி:

    ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் வல்லநாட்டில் திரண்டு இருந்த மக்களிடம் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது. விவசாயிகளின் கடன்கள் தீர்க்கப்படவில்லை. கல்வி கடன்கள் நீக்கப்படவில்லை. பயிர் காப்பீடு கிடைக்கவில்லை. குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்த அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை சரிசெய்யாமல் உள்ளாட்சி நிர்வாகம் முடங்கி கிடக்கிறது.

    இளைஞர்கள் 80 லட்சம் பேர் வேலையின்றி தவிக்கிறார்கள். காரணம் இங்குள்ள அரசு ஊழல் அரசாக இருக்கிறது. இவர்களின் அணுகுமுறையால் தமிழகத்துக்கு வர வேண்டிய பல தொழிற்சாலைகள் மற்ற மாநிலங்களுக்கு சென்று விட்டன. இதனால் இருக்கின்ற நகைகளை அடமானம் வைத்து படிக்கவைத்த பிள்ளைகளுக்கு வேலை கிடைக்காததால் தாய்மார்கள் கஷ்டப்படுகிறார்கள்.

    தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற உடன், 5 பவுன் வரை வங்கியில் தங்க நகை கடன் பெற்றவர்களுக்கு அவர்களின் கடன் தொகையை தள்ளுபடி செய்து, தங்க நகைகளை பெற்று கொடுப்பதாக அறிவித்து உள்ளார்.

    இந்தியாவில் மற்ற மாநிலங்களில் ஏற்படும் பிரச்சனை குறித்து கேட்டறிய செல்லும் பிரதமர் மோடி, தமிழகத்தில் கஜா புயலால் உயிர் இழந்தவர்களுக்கு ஒரு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசு, ஸ்டெர்லைட் பிரச்சனைக்காக போராடிய மக்கள் மீது போலீசை ஏவி, இனி யாரும் போராடக்கூடாது என்று 13 பேரை சுட்டுக் கொலை செய்தது. அந்த ரத்தத்துளிகளை நினைவுபடுத்தி கேட்கிறேன். அந்த செயலுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். தண்டனை கொடுக்கும் நீதிபதிகள் நீங்கள்.

    தமிழகத்துக்கு வருகிற கேடுகளை இந்த அரசால் தடுக்க முடிகிறதா? நியூட்ரினோ திட்டத்தை கொண்டு வந்து தேனி மாவட்டத்தை பாழ்படுத்த துடிக்கிறார்கள். முல்லைப்பெரியாறு அணையில் புதிய அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசுக்கு மன்னிப்பு கிடையாது. இதனை தடுக்கக்கூடிய, எதிர்க்கக்கூடிய துணிச்சல் இந்த அ.தி.மு.க. அரசுக்கு இல்லை. இதனால் பாதிக்கப்படுவது தமிழகம் தான். இந்த அரசை தூக்கி எறிய வேண்டும்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மகத்தான வெற்றியை பெறுவார்கள். இந்தியா முழுவதும் மோடி அணி தோற்கும். நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. அமோக வெற்றி பெறும். அதேபோல் ஒட்டப்பிடாரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத்தொடர்ந்து அவர் தெய்வச்செயல்புரம், மேலதட்டப்பாறை, புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், ஓசநூத்து ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
    ×