என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN"

    • ஈரப்பதம் சுழற்சி பெரும்பாலும் வடக்கு வங்காள விரிகுடாவை சுற்றியே குவிந்துள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது. பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே உள்ளது. மேற்கு கடற்கரை பகுதிகளில் பருவமழை தீவிரமடையும் பகுதிகளில் இருந்து வறண்ட காற்றின் வருகையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகலில் வெப்பநிலை ஒரு டிகிரி உயரக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    வறண்ட மேற்கு திசை காற்று வீசி வருவதால் சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் கிழக்கு கடற்கரை முழுவதும் அடுத்த ஒரு வாரத்திற்கு வெப்பநிலை உயரும் மேற்கு பகுதியில் வளிமண்டலத்தில் ஈரப்பதம் குறைந்து உள்ளதே இதற்கு காரணம். ஈரப்பதம் சுழற்சி பெரும்பாலும் வடக்கு வங்காள விரிகுடாவை சுற்றியே குவிந்துள்ளது.

    சென்னை மண்டல வானிலையும் பெரும்பாலும் வறண்டதாகவே உள்ளது என்று இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்தார்.

    ஆகஸ்ட் 1-ந் தேதிக்குள் வானிலையில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வடமேற்கு பகுதிகள் கடல் காற்றுடன் ஒன்றிணைந்து வெப்ப சலனத்தை தூண்டும் என்பதால் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    • மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
    • சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக பெய்து வரும் நிலையில் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.

    இந்தநிலையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.

    நாளை (7-ந் தேதி) டெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் வாலாஜா, ஆத்தூரில் (சேலம்) அதிகபட்சமாக 13 செ.மீ. மழை பெய்துள்ளது. செங்கம், காட்பாடி, கலவை பகுதியில் லேசான மழை பதிவாகி உள்ளது.

    • முல்லைப்பெரியாறு அணை நமது சொத்து.
    • முல்லைப்பெரியாறு பாசன உழவர்களின் நலனைக் காக்க தமிழக அரசு வாதிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வயநாடு நிலச்சரிவால் முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் கூறினாலும் கூட, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராக செய்யப்படும் பரப்புரைகளுக்கு கேரள அரசின் மறைமுக ஆதரவு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

    முல்லைப்பெரியாறு அணை நமது சொத்து; அதன் நீரை பயன்படுத்திக் கொள்வதும், அணையை வலுப்படுத்தி அதன் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதும் நமது உரிமை. இதில் தமிழ்நாடு அரசு எத்தகைய சமரசத்தையும் செய்து கொள்ளக்கூடாது.

    அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைப்பது, அணை அமைந்துள்ள நிலத்தின் குத்தகை ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வது ஆகியவை தொடர்பான இரு வழக்குகளிலும் மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, முல்லைப்பெரியாறு பாசன உழவர்களின் நலனைக் காக்க தமிழக அரசு வாதிட வேண்டும்.

    இன்னொருபுறம், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை இப்போதுள்ள 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். பேபி அணையை வலுப்படுத்துவதன் மூலமாகவே இதை சாத்தியமாக்க முடியும். ஆனால், அதற்குத் தடையாக உள்ள மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதி மறுக்கிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கிலும் சாதகமான தீர்ப்பைப் பெற்று அணையை வலுப்படுத்தும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தரமான கல்வியில் ஒரு அளவுகோலை அமைக்கிறது.
    • நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் போன்ற முதன்மை திட்டங்களால் நமது மாணவர்கள் உயர்கல்வியில் புதிய உச்சங்களை தொடுவார்கள்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிக்கிறது.

    ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலிலும் நமது மாநிலம் மற்ற மாநிலங்களை விட மிகவும் உயர்ந்து நிற்கிறது. தரமான கல்வியில் ஒரு அளவுகோலை அமைக்கிறது.

    சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலிலும் தமிழ்நாட்டை சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளன.

    நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் போன்ற முதன்மை திட்டங்களால் நமது மாணவர்கள் உயர்கல்வியில் புதிய உச்சங்களை தொடுவார்கள்.

    இவ்வாறு அதில் பெருமிதத்துடன் குறிப்பிட்டு உள்ளார்.

    • நாளை புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    கேரள கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், திருவண்ணாமலை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் நாளை அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி, மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் மட்டும் 89 லட்சத்து 3 ஆயிரத்து 310 பயனாளிகள் இருக்கிறார்கள்.
    • 89.27 சதவீதம் பெற்று கேரளா முதல் இடத்தில் உள்ளது.

    சென்னை:

    கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் கடந்த 2005-ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 13.13 கோடி பயனாளிகள் உள்ளனர்.

    தமிழகத்தில் மட்டும் 89 லட்சத்து 3 ஆயிரத்து 310 பயனாளிகள் இருக்கிறார்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் பங்கேற்பை எளிதாக்க குழந்தைகள் காப்பகத்திற்கான ஏற்பாடு, இருப்பிடம் அருகிலேயே பணி என்பது உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

    எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தரவு தளம், கடந்த நிதி ஆண்டில் (2023-24) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பெண்களின் பங்கேற்பு தொடர்பாக மாநிலங்கள் வாரியான விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில், 89.27 சதவீதம் பெற்று கேரளா முதல் இடத்தில் உள்ளது.

    87.39 சதவீதம் பெற்று புதுச்சேரி 2-ம் இடத்திலும், 86.66 சதவீதம் பெற்று தமிழகம் 3-ம் இடத்திலும் உள்ளது. மிகவும் குறைவாக ஜம்மு காஷ்மீர் 32.16 சதவீத பங்களிப்பு மட்டுமே கொடுத்திருக்கிறது. கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்கள் மட்டுமே 70 சதவீதத்துக்கு அதிகமான பெண்களின் பங்கேற்பினை தந்திருக்கின்றன. 50 முதல் 70 சதவீத பங்களிப்பினை 16 மாநிலங்களும், 50 சதவீதத்துக்கு குறைவான பங்களிப்பினை 14 மாநிலங்களும் வழங்கியிருக்கின்றன.

    • சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
    • அதிகமாக மழை பெய்தால் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும் மழை நீர் தேங்கும்.

    திருச்சி:

    திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளோம்.

    * திருச்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் முன்னேற்பாட்டு பணிகள் தயாராக உள்ளது.

    * சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

    * அனைத்து பகுதிகளிலும் ஆகாய தாமரையை அகற்றி விட்டோம்.

    * சென்னை மாநகராட்சியில் புதிதாக ரூ.22 கோடி மதிப்பில் எந்திரம் வாங்கி உள்ளோம். அந்த எந்திரத்தை பயன்படுத்தி அனைத்து வாய்க்காலிலும் தூர்வாரப்பட்டு வருகிறது.

    * எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கக்கூடிய அளவிற்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    * சென்னை மட்டுமல்லாது எல்லா மாநகராட்சிகளிலும் வாய்க்காலை சுத்தப்படுத்த அறிவுறுத்தி உள்ளோம்.

    * மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் அனைத்து இடங்களிலும் முடிந்து விட்டது.

    * 20 செ.மீ., 25 செ.மீ. மழை பெய்தால் எந்த வடிகாலுக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது.

    * அதிகமாக மழை பெய்தால் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும் மழை நீர் தேங்கும். அங்கு மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. தண்ணீர் தேங்கினால் மோட்டார் வைத்து உடனே அகற்றப்படும்.

    * எல்லா சுரங்கப்பாதைகளையும் சுத்தம் செய்து விட்டோம் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நங்கிளி கொண்டான் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வருவதற்கான கட்டணம் ரூ.60 முதல் ரூ.400 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒரே நாளில் திரும்பி வர ரூ.85 முதல் ரூ.555 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மேலும் 3 சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க உள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் நங்கிளி கொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி ஆகிய 3 இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட உள்ளது.

    நங்கிளி கொண்டான் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வருவதற்கான கட்டணம் ரூ.60 முதல் ரூ.400 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.95 முதல் ரூ.600 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒரு முறை சென்று வர ரூ.55 முதல் ரூ.370 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் திரும்பி வர ரூ.85 முதல் ரூ.555 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    • சிறந்த போக்குவரத்து அமைப்பு, வேலைவாய்ப்பு பரிமாற்ற செயல்பாடுகள் இவற்றை மையப்படுத்தி இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
    • தொழில் முனைவோரின் கருத்துக்களின் அடிப்படையில் தரவரிசை தீர்மானிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    எளிதாக தொழில் தொடங்கும் தரவரிசையில் கேரளா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.

    தொழில் துறைக்கு உகந்த சூழலை உருவாக்கியுள்ள மாநிலத்தை தர வரிசைப்படுத்தும் பட்டியலை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    வணிகத்தை மையமாக கொண்ட 2 வகை சீர்திருத்தங்கள் மற்றும் ஏழு வகை குடிமக்களை மையப்படுத்திய சீர்திருத்தங்களில் இந்தியாவிலேயே கேரளா முன்னணியில் உள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு இடம் பெறவில்லை.

    பரந்த அளவிலான தொழில்கள் செழிக்க ஏதுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதன் வாயிலாக வியாபாரத்தை எளிதாக்குவதில் கேரளா பெரும் முன்னேற்றமும் கண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    டெல்லியில் நடைபெற்ற தொழில்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இதற்கான விருதை மத்திய மந்திரி பியூஸ்கோயலிடம் இருந்து கேரள தொழில் துறை மந்திரி ராஜீவ் பெற்றுள்ளார்.

    இந்த விருதில் ஆந்திரா 2-வது இடத்தையும், குஜராத் 3-வது இடம், ராஜஸ்தான் 4-வது இடம், 5-வது இடத்தில் திரிபுரா, 6-வது இடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது.

    தொழில் துறை மற்றும் குடிமக்கள் சேவை சீர்திருத்தங்கள், பயன்பாட்டு அனுமதி வழங்குதல், வரி செலுத்தும் சீர்திருத்தங்கள், ஆன்லைன் ஒற்றை சாரள முறை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் சான்றிதழ் வினியோகம் செயல்முறையை எளிமைப்படுத்துதல், வருவாய்த் துறை வாரியாக வழங்கப்படும் சான்றிதழ்கள், சிறந்த பொது வினியோக அமைப்பு, உணவு வழங்கல் துறையின் செயல்பாடு, சிறந்த போக்குவரத்து அமைப்பு, வேலைவாய்ப்பு பரிமாற்ற செயல்பாடுகள் இவற்றை மையப்படுத்தி இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    தொழில் முனைவோரின் கருத்துக்களின் அடிப்படையில் தரவரிசை தீர்மானிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கூட்டணியில் மீண்டும் மாற்றம் வராது என்பது எங்களுடைய எண்ணம்.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டை அரசியலாக்க முயல்கின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று 5 புதிய பஸ் சேவைக்கான தொடக்க விழா நடைபெற்றது. தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு கொடியசைத்து வைத்து புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம். ஒரே நாளில் ஒரு உத்தரவு போட்டு நானும், முதலமைச்சரும் டாஸ்மாக் மதுக்கடையை மூடி விடலாம். மதுக்கடைகள் தொடர்ந்து செயல்படுவதில் முதலமைச்சருக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை.

    மதுக்கடைகள் என்றைக்காவது ஒருநாள் மூடப்பட வேண்டும் என்பதுதான் முதலமைச்சருடைய எண்ணம். ஆனால் உடனடியாக இதை செய்தால் என்ன நிலைமை வெளியில் ஏற்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

    எனவே அப்படிப்பட்ட ஒரு கடுமையான சூழ்நிலையை மிக நிதானமாக அணுகி கொண்டு போக வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாக, முதலமைச்சரின் நோக்கமாக இருக்கிறது. எனவே நிச்சயமாக ஒரு கால கட்டத்தில் மக்களை அதில் இருந்து கொண்டுவரும்போது மதுக்கடைகளை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கேள்வி:- விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டுக்கு முன்பு மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படுமா?

    பதில்:- இங்கு இருக்கின்ற நிலைமைகளை ஆலோசித்து, இங்கு இருக்கின்ற சூழ்நிலைகளை பார்த்து அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொருத்தவரை அவர்கள், அவர்களுடைய கொள்கை ரீதியான முடிவுக்காக ஒரு மாநாடு நடத்துகிறார்கள். அதில் எந்த தவறும் நாம் சொல்ல முடியாது. அவர்கள் அரசாங்கத்தை எதிர்த்து செய்கிறார்கள், முதலமைச்சரை எதிர்த்து செய்கிறார்கள் என்பது கிடையாது.

    அதை அவர்களின் கொள்கையாக மக்களுக்கு எடுத்து செல்கிறார்கள். மக்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது, இந்த உணர்வுகளை மக்களுக்கு வெளிப்படுத்தி அவர்களை அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்து கொண்டு வந்து விட்டால் அரசாங்கம் அதை செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

    கேள்வி:- விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்ததற்கு அ.தி.மு.க.வினர் சந்தோஷப்படுகிறார்கள். கூட்டணியில் மாற்றம் ஏற்படும், தங்கள் தலைமையில் மெகா கூட்டணி அமையும், பொறுத்திருந்து பாருங்கள் என்று பேச ஆரம்பித்து விட்டார்களே?

    பதில்:- கல்யாணத்துக்கு அழைப்பு கொடுக்கிறார்கள். எல்லோரும் ஒன்றாக இருக்கிறார்கள் என்று அர்த்தமா? எதிரிக்கு கூட கொடுக்கிறார்கள்.

    கேள்வி:- கூட்டணியில் மீண்டும் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறார்களே?

    பதில்:- கூட்டணியில் மீண்டும் மாற்றம் வராது என்பது எங்களுடைய எண்ணம். அது எங்களுக்கு தெரிகிறது. ஒரு அழைப்பு கொடுத்தவுடன் இவ்வளவு ஆட்டம் போடுகிறார்கள். அது ஏன் என்பது எங்களுக்கு தெரியவில்லை.

    கேள்வி:- ஆளும் கட்சி கூட்டணியில் இருந்து கொண்டு எதிர்க்கட்சிக்கு அழைப்பு கொடுத்தது எந்த விதத்தில் நியாயம் என்று நினைக்கிறீகள்?

    பதில்:- அதை தப்பு என்று சொல்ல முடியாது. ஒரு பொதுவான நிகழ்வுக்காக, ஒரு திட்டத்துக்காக அழைக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் வந்து கலந்து கொள்ளலாம் என்று அவர்கள் பொதுவாகத்தான் அழைத்திருக்கிறார்கள். அது தப்பு கிடையாதே? அப்படி ஒரு அழைப்பு கொடுப்பதில் நாம் எப்படி தவறு கண்டு பிடிக்க முடியும்.

    கேள்வி:- மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்துவது வெட்கக்கேடான விஷயம் என்று கூறி உள்ளாரே?

    பதில்:- மாநாட்டுக்கு அ.தி.மு.க.வினரைத்தானே கூப்பிட்டு இருக்கிறார். தமிழக அரசே மதுக்கடையை ஏற்று நடத்துகிறது என்று அ.தி.மு.க.வினரிடம் சொல்வதற்காக இருக்கலாம். இது எப்போது நடந்தது தெரியும் தானே?

    கேள்வி:- முதலமைச்சர் இல்லாத நேரத்தில் தான் இதுபோன்ற அழைப்பையெல்லாம் அ.தி.மு.க.வுக்கு கொடுக்கிறார்களே?

    பதில்:- அப்படி இல்லை. முதலமைச்சர் உலகத்தில் எங்கிருந்தாலும் தமிழ்நாட்டை தினம்தோறும் கவனித்துக்கொண்டு இருக்கிறார். அவர் கோப்புகளை அங்கிருந்தே பார்த்து கையெழுத்து போட்டு அதுபற்றியெல்லாம் சொன்னார். அதனால் தூரமாக இருக்கிறார் என்று நாம் நம்பிக்கொண்டு எதையும் செய்துகொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. திருமாவளவன் அவரது கட்சியின் கொள்கைக்காக தெளிவாக செய்கிறார். அதில் குற்றம் கண்டுபிடிப்பது தவறு. அதை அரசிய ஆக்குவதற்கு மற்றவர்கள் முயற்சி எடுக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.

    கேள்வி:- வெளிநாட்டு மதுபான பார் அனுமதி தொடர்ந்து வழங்கப்படுகிறதே?

    பதில்:- வெளிநாட்டு மதுபான பார்களுக்கு நிறைய அனுமதி கொடுக்கவில்லை. எங்கெல்லாம் பிரச்சனைகள் இருக்கிறதோ அந்த இடத்தில் தான் கொடுக்கிறோம். வெளிநாட்டு மதுபான பார்களுக்கு நிறைய அனுமதி கொடுக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. டாஸ்மாக் கடையை அப்படியே வைத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்பதும் எங்கள் நோக்கம் அல்ல.

    டாஸ்மாக் கடைகளை மூடும்போது வேறு விதமான ஒரு இடத்துக்கு அவர்கள் போய் தவறாக பிரச்சனையாகி விடக்கூடாது என்பதை மனதில் வைத்து தான் அதற்கு அடிப்படையாக சில மாற்றங்களை செய்து அவர்களை ஒழுங்குபடுத்தி நம்முடைய இடத்துக்கு கொண்டு வந்து விட்டு அப்புறம் படிப்படியாக செய்ய வேண்டும். அந்த நோக்கத்தை நிச்சயமாக எல்லோரும் புரிந்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால் சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது கொடுக்கக்கூடாது என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாஸ்போர்ட் விண்ணப்பித்து பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • அதிக பாஸ்போர்ட் வினியோகிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளா முதல் இடத்தில் உள்ளது.

    சென்னை:

    ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு செல்வதற்கு பாஸ்போர்ட் அவசியம் ஆகும். பாஸ்போர்ட் இல்லாமல் செல்பவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படுகிறார்கள். வேலை, படிப்பு மற்றும் சுற்றுலா என பல்வேறு தேவைகளுக்காக இந்தியர்கள் நமது நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு பறந்து வருகிறார்கள்.

    இதனால் பாஸ்போர்ட் விண்ணப்பித்து பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில், கடந்த 2023-ம் ஆண்டு மட்டும் 3 கோடியே 8 லட்சத்து 93 ஆயிரத்து 577 பெண்கள், 5 கோடியே 73 லட்சத்து 77 ஆயிரத்து 716 ஆண்கள் என மொத்தம் 8 கோடியே 82 லட்சத்து 71 ஆயிரத்து 293 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    அதிக பாஸ்போர்ட் வினியோகிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளா முதல் இடத்தில் உள்ளது. அங்கு 42 லட்சத்து 17 ஆயிரத்து 661 பெண்கள், 56 லட்சத்து 75 ஆயிரத்து 179 ஆண்கள் என 98 லட்சத்து 92 ஆயிரத்து 840 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 40 லட்சத்து 75 ஆயிரத்து 512 பெண்கள், 57 லட்சத்து 35 ஆயிரத்து 854 ஆண்கள் என 98 லட்சத்து 11 ஆயிரத்து 366 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 17 லட்சத்து 27 ஆயிரத்து 89 பெண்கள், 70 லட்சத்து 58 ஆயிரத்து 703 ஆண்கள் என 87 லட்சத்து 85 ஆயிரத்து 792 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

    அதிக பாஸ்போர்ட் வினியோகிக்கப்பட்ட பட்டியலில் தமிழகம் 4-ம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 28 லட்சத்து 7 ஆயிரத்து 509 பெண்கள், 55 லட்சத்து 47 ஆயிரத்து 383 ஆண்கள் என 83 லட்சத்து 54 ஆயிரத்து 892 பேர் பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார்கள்.

    • 9 நாட்கள் காலாண்டு விடுமுறைக்கு பிறகு, தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
    • மாணவர்களுக்கான 2-ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்களை விரைந்து வழங்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள், முதல் பருவத்தேர்வுகள் கடந்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையில் நடைபெற்றது. அதன்பிறகு, மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை தொடங்கியது.

    அதன்படி, 9 நாட்கள் காலாண்டு விடுமுறைக்கு பிறகு, தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. காலாண்டு விடுமுறை முடிந்து உற்சாகமாக மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.

    விரைவில் பருவமழை தொடங்க இருப்பதால் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், மாணவர்களுக்கான 2-ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்களை விரைந்து வழங்கவும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×