search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் டாஸ்மாக் கடையை நடத்துவதில் முதலமைச்சருக்கு துளி அளவும் விருப்பமில்லை- அமைச்சர் முத்துசாமி
    X

    தமிழகத்தில் டாஸ்மாக் கடையை நடத்துவதில் முதலமைச்சருக்கு துளி அளவும் விருப்பமில்லை- அமைச்சர் முத்துசாமி

    • கூட்டணியில் மீண்டும் மாற்றம் வராது என்பது எங்களுடைய எண்ணம்.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டை அரசியலாக்க முயல்கின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று 5 புதிய பஸ் சேவைக்கான தொடக்க விழா நடைபெற்றது. தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு கொடியசைத்து வைத்து புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம். ஒரே நாளில் ஒரு உத்தரவு போட்டு நானும், முதலமைச்சரும் டாஸ்மாக் மதுக்கடையை மூடி விடலாம். மதுக்கடைகள் தொடர்ந்து செயல்படுவதில் முதலமைச்சருக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை.

    மதுக்கடைகள் என்றைக்காவது ஒருநாள் மூடப்பட வேண்டும் என்பதுதான் முதலமைச்சருடைய எண்ணம். ஆனால் உடனடியாக இதை செய்தால் என்ன நிலைமை வெளியில் ஏற்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

    எனவே அப்படிப்பட்ட ஒரு கடுமையான சூழ்நிலையை மிக நிதானமாக அணுகி கொண்டு போக வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாக, முதலமைச்சரின் நோக்கமாக இருக்கிறது. எனவே நிச்சயமாக ஒரு கால கட்டத்தில் மக்களை அதில் இருந்து கொண்டுவரும்போது மதுக்கடைகளை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கேள்வி:- விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டுக்கு முன்பு மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படுமா?

    பதில்:- இங்கு இருக்கின்ற நிலைமைகளை ஆலோசித்து, இங்கு இருக்கின்ற சூழ்நிலைகளை பார்த்து அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொருத்தவரை அவர்கள், அவர்களுடைய கொள்கை ரீதியான முடிவுக்காக ஒரு மாநாடு நடத்துகிறார்கள். அதில் எந்த தவறும் நாம் சொல்ல முடியாது. அவர்கள் அரசாங்கத்தை எதிர்த்து செய்கிறார்கள், முதலமைச்சரை எதிர்த்து செய்கிறார்கள் என்பது கிடையாது.

    அதை அவர்களின் கொள்கையாக மக்களுக்கு எடுத்து செல்கிறார்கள். மக்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது, இந்த உணர்வுகளை மக்களுக்கு வெளிப்படுத்தி அவர்களை அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்து கொண்டு வந்து விட்டால் அரசாங்கம் அதை செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

    கேள்வி:- விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்ததற்கு அ.தி.மு.க.வினர் சந்தோஷப்படுகிறார்கள். கூட்டணியில் மாற்றம் ஏற்படும், தங்கள் தலைமையில் மெகா கூட்டணி அமையும், பொறுத்திருந்து பாருங்கள் என்று பேச ஆரம்பித்து விட்டார்களே?

    பதில்:- கல்யாணத்துக்கு அழைப்பு கொடுக்கிறார்கள். எல்லோரும் ஒன்றாக இருக்கிறார்கள் என்று அர்த்தமா? எதிரிக்கு கூட கொடுக்கிறார்கள்.

    கேள்வி:- கூட்டணியில் மீண்டும் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறார்களே?

    பதில்:- கூட்டணியில் மீண்டும் மாற்றம் வராது என்பது எங்களுடைய எண்ணம். அது எங்களுக்கு தெரிகிறது. ஒரு அழைப்பு கொடுத்தவுடன் இவ்வளவு ஆட்டம் போடுகிறார்கள். அது ஏன் என்பது எங்களுக்கு தெரியவில்லை.

    கேள்வி:- ஆளும் கட்சி கூட்டணியில் இருந்து கொண்டு எதிர்க்கட்சிக்கு அழைப்பு கொடுத்தது எந்த விதத்தில் நியாயம் என்று நினைக்கிறீகள்?

    பதில்:- அதை தப்பு என்று சொல்ல முடியாது. ஒரு பொதுவான நிகழ்வுக்காக, ஒரு திட்டத்துக்காக அழைக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் வந்து கலந்து கொள்ளலாம் என்று அவர்கள் பொதுவாகத்தான் அழைத்திருக்கிறார்கள். அது தப்பு கிடையாதே? அப்படி ஒரு அழைப்பு கொடுப்பதில் நாம் எப்படி தவறு கண்டு பிடிக்க முடியும்.

    கேள்வி:- மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்துவது வெட்கக்கேடான விஷயம் என்று கூறி உள்ளாரே?

    பதில்:- மாநாட்டுக்கு அ.தி.மு.க.வினரைத்தானே கூப்பிட்டு இருக்கிறார். தமிழக அரசே மதுக்கடையை ஏற்று நடத்துகிறது என்று அ.தி.மு.க.வினரிடம் சொல்வதற்காக இருக்கலாம். இது எப்போது நடந்தது தெரியும் தானே?

    கேள்வி:- முதலமைச்சர் இல்லாத நேரத்தில் தான் இதுபோன்ற அழைப்பையெல்லாம் அ.தி.மு.க.வுக்கு கொடுக்கிறார்களே?

    பதில்:- அப்படி இல்லை. முதலமைச்சர் உலகத்தில் எங்கிருந்தாலும் தமிழ்நாட்டை தினம்தோறும் கவனித்துக்கொண்டு இருக்கிறார். அவர் கோப்புகளை அங்கிருந்தே பார்த்து கையெழுத்து போட்டு அதுபற்றியெல்லாம் சொன்னார். அதனால் தூரமாக இருக்கிறார் என்று நாம் நம்பிக்கொண்டு எதையும் செய்துகொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. திருமாவளவன் அவரது கட்சியின் கொள்கைக்காக தெளிவாக செய்கிறார். அதில் குற்றம் கண்டுபிடிப்பது தவறு. அதை அரசிய ஆக்குவதற்கு மற்றவர்கள் முயற்சி எடுக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.

    கேள்வி:- வெளிநாட்டு மதுபான பார் அனுமதி தொடர்ந்து வழங்கப்படுகிறதே?

    பதில்:- வெளிநாட்டு மதுபான பார்களுக்கு நிறைய அனுமதி கொடுக்கவில்லை. எங்கெல்லாம் பிரச்சனைகள் இருக்கிறதோ அந்த இடத்தில் தான் கொடுக்கிறோம். வெளிநாட்டு மதுபான பார்களுக்கு நிறைய அனுமதி கொடுக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. டாஸ்மாக் கடையை அப்படியே வைத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்பதும் எங்கள் நோக்கம் அல்ல.

    டாஸ்மாக் கடைகளை மூடும்போது வேறு விதமான ஒரு இடத்துக்கு அவர்கள் போய் தவறாக பிரச்சனையாகி விடக்கூடாது என்பதை மனதில் வைத்து தான் அதற்கு அடிப்படையாக சில மாற்றங்களை செய்து அவர்களை ஒழுங்குபடுத்தி நம்முடைய இடத்துக்கு கொண்டு வந்து விட்டு அப்புறம் படிப்படியாக செய்ய வேண்டும். அந்த நோக்கத்தை நிச்சயமாக எல்லோரும் புரிந்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால் சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது கொடுக்கக்கூடாது என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×