search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tourists"

    • 1982 ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதியை தேசிய சுற்றுலா தினமாக அறிவித்தது.
    • இந்த ஆண்டு சுற்றுலா தினத்தின் கருப்பொருள் இதை வலியுறுத்துகிறது.

    தேசிய சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 அன்று கொண்டாடப்படுகிறது. இந்திய சுற்றுலா அமைச்சகம், 1982 ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதியை தேசிய சுற்றுலா தினமாக அறிவித்தது.

    இந்த தினத்தின் நோக்கம், இந்தியாவின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதும், நாட்டின் பல சுற்றுலாத் தலங்களுக்கு உலகளாவிய அங்கீகாரத்தை வழங்குவதும் ஆகும்.

    வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியா வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, பார்க்க மிகவும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் மற்றும் சுவைக்க பலவித உணவுகள் உள்ளன. ஒவ்வொரு சுற்றுலாத் தளமும் தனித்துவமான வரலாற்றைக் கொண்டிருக்கின்றன.

    இந்த ஆண்டு சுற்றுலா தினத்தின் கருப்பொருள் 'உள்ளடக்கிய வளர்ச்சிகான சுற்றுலா'(Tourism for Inclusive Growth). சுற்றுலாவின் மூலம் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, சமூத்தின் அனைத்து பிரிவினருக்கும் நாட்டின் சுற்றுலா கட்டமைப்பை கிடைக்கச்செய்வது உள்ளிட்ட குறிக்கோள்களை இந்த ஆண்திற்கான கருப்பொருள் உள்ளடக்கியுள்ளது.

    • பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
    • ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் பனியின் தாக்கமும், பகலில் வெயிலின் தாக்கமும் இருந்து வந்தது. சில நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில் இன்று காலை திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை, திருமூர்த்திமலை உள்பட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

    திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். குளிக்க தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் குளிரின் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது.
    • சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் மலைப்பாதையில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    ஏற்காடு:

    தமிழகத்தில் கடந்த 13-ந் தேதி முதல் பொங்கல் தொடர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    ஏற்காடு வந்துள்ள சுற்றுலா பயணிகள் இங்கு உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் குகை கோவில் உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்தனர். குறிப்பாக ஏற்காடு வந்துள்ள இவர்கள் படகு இல்லத்தில் நீண்ட நேரம் காத்திருந்து இயற்கை காட்சிகளை ரசித்தவாறு படகு பயணம் செய்தனர். ஏற்காட்டில் தற்போது பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் குளிரின் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது.


    குளிர் அதிகமாக இருந்தாலும் அதையும் பொருட்படுத்தாமல் படகு பயணம் செய்தனர். கிளியூர் நீர்வீழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் சாலையோரங்களில் உள்ள கடைகளில் வியாபாரம் களை கட்டி உள்ளது. சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் மலைப்பாதையில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    • காலை 8 மணிக்கு பதில் 2 மணி நேரம் முன்னதாக இன்று காலை 6 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
    • காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கன்னியாகுமரி:

    சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப்பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது.

    கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி முதல் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசனும் தொடங்கி உள்ளது. இதனால் தினமும் கன்னியாகுமரிக்கு ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்களும் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர். இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகை, உழவர் திருநாள், மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் காணும் பொங்கல் போன்ற தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

    இதனால் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமானோர் திரண்டனர். ஆனால் மழைமேகம் திரண்டு இருந்ததன் காரணமாக சூரியன் உதயமான காட்சி தெளிவாகத் தெரியவில்லை. தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

    கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட அதிகாலை 5 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத் துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி காலை 8 மணிக்கு பதில் 2 மணி நேரம் முன்னதாக இன்று காலை 6 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் சுமார் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்து கண்ணாடி பாலம் வழியாக திருவள்ளுவர் சிலைக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, கலங்கரை விளக்கம், விவேகானந்தபுரத்தில் உள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் போன்றவற்றிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் தொடர் விடுமுறையயொட்டி இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • குறிஞ்சி மலர்களில் 255-க்கும் மேற்பட்டவை உலகம் முழுவதும் உள்ளது.
    • நீல நிறத்தில் இருப்பதால் நீலக்குறிஞ்சி மலர்கள் என கருதுகின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீலக்குறிஞ்சி, கருங்குறிஞ்சி பூக்கள் பூக்கும். மேலும் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் சிறுகுறிஞ்சி என 20-க்கும் மேற்பட்ட குறிஞ்சி இனங்கள் உள்ளன. இந்த குறிஞ்சியின் பெயரில் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலும் உள்ளது. இதில் முருக பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த குறிஞ்சி மலர்கள் கடல் மட்டத்தில் இருந்து 1200 முதல் 2500 மீட்டர் உயரத்தில் மட்டுமே வளரும் தன்மை உடையவை.

    இந்நிலையில் ஆண்டுதோறும் பூக்கும் ஸ்ட்ரோ பிலாந்தஸ் கார்டி போலீயோ வகை குறிஞ்சி மலர்கள் தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் பூத்துக் குலுங்குகின்றன. டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை பூக்கும் நீலம் மற்றும் வெள்ளை வண்ணங்களிலான குறிஞ்சி மலர்கள் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் உள்ளது. இந்த அபூர்வ மலர் பூத்திருப்பதை கண்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

    குறிஞ்சி மலர்களில் 255-க்கும் மேற்பட்டவை உலகம் முழுவதும் உள்ளது. அதில் தற்போது வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் மலைப்பகுதி முழுவதும் பூத்துக் குலுங்குகின்றன. நீல நிறத்தில் இருப்பதால் நீலக்குறிஞ்சி மலர்கள் என கருதுகின்றனர். ஆனால் நீல குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். தற்போது பூத்துள்ள மலர்கள் அந்த வகையை சேர்ந்தது இல்லை என தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர். 

    • சபாத் என்னும் சிறப்பு வழிபாடு வார வெள்ளிக்கிழமைகளில் நடத்துவார்கள்.
    • காவல் துறை சோதனைச் சாவடி செயல்படாமல் உள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நிலவும் தட்பவெப்பநிலை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் இங்குள்ள வட்டகானல் பகுதியில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இஸ்ரேலிய நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருகை தருவார்கள்.

    இங்கு நிலவும் இதமான கால நிலையை ரசிக்கவும், ஓய்வெடுக்கவும் வருகை புரியும் இவர்கள் மொத்தமாக கூடி சபாத் என்னும் சிறப்பு வழிபாடு வார வெள்ளிக்கிழமைகளில் நடத்துவார்கள்.

    இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இங்கு வார வழிபாட்டில் கூடும் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளை தாக்க திட்டமிட்டிருந்ததும், மேலும் கொடைக்கானல் மலைப்பகுதிகளுக்கும் அச்சுறுத்தல் இருந்தாலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வட்டக்கானல் பகுதியில் சோதனைச் சாவடி அமைத்து துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணிநேரமும் கண்காணித்து வந்தனர்.

    கடந்த சில மாதங்களாக இஸ்ரேலில் போர் நடைபெற்றதால் அந்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாமல் இருந்தது. தற்போது கொடைக்கானல் வட்ட கானல் பகுதிக்கு இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    ஆனால் வழக்கமாக இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காவல் துறை சோதனைச் சாவடி செயல்படாமல் உள்ளது. மேலும் கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்து பயன்பாடற்ற நிலையில் உள்ளது.

    இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையை கருத்தில் கொண்டு போலீசார் சோதனைச் சாவடி மற்றும் கண்காணிப்பு கேமராக்களை செயல்பாட்டிற்கு கொண்டு வரவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    • எவரெஸ்ட் சிகரத்தின் அடித்தள முகாம் அமைந்திருக்கும் திங்ரி பகுதியிலும் நிலஅதிர்வு ஏற்பட்டது.
    • வேறு சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    பீஜிங்:

    சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில், நேபாள எல்லையையொட்டி ரிக்டர் 6.8 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக உலகின் மிக உயரமான சிகரமாக விளங்கும் எவரெஸ்ட் சிகரத்தின் அடித்தள முகாம் அமைந்திருக்கும் திங்ரி பகுதியிலும் நிலஅதிர்வு ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் திங்ரி முகாமில் இருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் ஆகியோருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும், அனைவரும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே சமயம், திங்ரியில் அமைந்துள்ள சீன அறிவியல் அகாடமியின் வளிமண்டல மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிலையத்தில் நிலநடுக்கத்தால் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டதாகவும், அதுதவிர வேறு சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நிலநடுக்கத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எவரெஸ்ட் சிகரத்தில் ஏற சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

    • ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் தாயகம் அசாம்
    • சுற்றுலாப் பயணிகளின் ஜீப்பை நோக்கி மற்றொரு காண்டாமிருகம் ஆக்ரோஷமாக வருவதைக் காண்கிறோம்.

    ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் தாயகமான அசாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்கா இயற்கை ஆர்வலர்களுக்கு விருப்பமான இடமாகும்.

    இங்கு ஜீப் வண்டி சஃபாரி சவாரி மூலம் பார்வையாளர்களுக்கு ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் மற்றும் பிற விலங்குகளைப் பார்க்கும் வாய்ப்பை கிடைக்கிறது. வழக்கான இந்த சஃபாரி ஒரு தாய் மற்றும் அவரது மகளுக்கு கொடுங்கனவாக மாறியுள்ளது.

    இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவில், ஆக்ரோஷத்துடன் காண்டாமிருகங்கள் வந்துகொண்டிருக்கின்றன. பார்வையாளர்களை ஏற்றிக்கொண்டு மூன்று ஜீப் வண்டிகள் அங்கு வருகிறது.

    அதில் ஒரு ஜீப் வலதுபுறம் திரும்பும்போது உள்ளே ஒரு தாய் தனது மகளுடன்  சேர்ந்து தரையில் விழுகிறார்.  தாய் உதவி கேட்டு கூப்பாடுபோடத் தொடங்கினார்.

    அந்த நேரத்தில், சுற்றுலாப் பயணிகளின் ஜீப்பை நோக்கி மற்றொரு காண்டாமிருகம் ஆக்ரோஷமாக வருவதைக் காண்கிறோம்.

    பதறியடித்த தாய் சுதாரித்துக்கொண்டு மகளுடன் வேகமாக ஓடி ஜீப்பில் ஏறி ஆக்ரோஷத்துடன் நெருங்கிய காண்டாமிருகத்திடம் இருந்து அதிஷ்டவசமாக உயிர்தப்பினார். மற்றொரு ஜீப்பில் இருந்த சுற்றுலாப்பயணி இந்த பயங்கர சம்பவத்தை கேமராவில் படம்பிடித்துள்ளார். இந்த இந்த சம்பவம் காசிரங்கா தேசிய பூங்காவின் பகோரி மலைத்தொடரில் நடந்துள்ளது.

    • சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
    • குளிர்ந்த காற்றுடன் இதமான சூழ்நிலை நிலவியது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றால அருவி களில் இன்று விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் கூட்டம் மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

    சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இன்று அதிகாலை முதலே குற்றாலம் மெயின் அருவியில் புனித நீராடி குற்றால நாதர் கோவிலில் வழிபட்டனர்.

    மேலும் ஐந்தருவி, பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் மிதமாக விழுவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

    குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்றுடன் இதமான சூழ்நிலை நிலவியது.

    • ஓட்டல் ஊழியர்கள் அவர்கள் 4 பேரையும் கடுமையாக தாக்கினர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    கொடைக்கானல்:

    மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ரவிக்குமார் மகன் ஜஸ்வந்த்குமார் (வயது28). இவர் சகோதரி ஜெஸி (27), இவரது கணவர் திலிப் (29), இவர்களது உறவினர் மாலன் (22) ஆகிய 4 பேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர்.

    மூஞ்சிக்கல் அருகே உள்ள தனியார் ஓட்டலில் உணவு வாங்கி சாப்பிட்டனர். அந்த உணவு பொருட்களில் துர்நாற்றம் வீசியதால் வேறு உணவு மாற்றி கொடுக்கும்படி ஜஸ்வந்த்குமார் தெரிவித்தார். ஆனால் கடை ஊழியர்கள் அதனை மாற்றித்தர மறுத்ததுடன் அவர்களுடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து உணவு பொருட்களை ஜஸ்வந்த்குமார் தனது செல்போனில் வீடியோவாக படம் எடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அவர்கள் 4 பேரையும் கடுமையாக தாக்கினர்.

    படம் எடுத்த செல்போன்களை வாங்கி உடைத்ததுடன் சுற்றுலா பயணிகளையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயம் அடைந்த அவர்கள் காரில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முயன்றபோது வழிவிடாமல் காரையும் அடித்து நொறுக்கினர். ஒரு வழியாக அவர்கள் 4 பேரும் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தனர்.

    பின்னர் தங்களுக்கு நேர்ந்த விஷயம் குறித்து அவர்கள் பேசிய வீடியோ சமூக வலைதலங்களில் வேகமாக பரவியது. சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வரும் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கே இந்த நிலை என்றால் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை எவ்வாறு மதிப்பார்கள்? எனவே போலீசார் இப்பிரச்சனையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    மேலும் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்ல முயன்றபோது அங்கும் தங்களை தாக்க ஓட்டல் ஊழியர்கள் வந்ததால் நாங்கள் மதுரைக்கு செல்வதாக தெரிவித்தனர். இச்சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் ஓட்டலில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது ஊழியர்களே சுற்றுலா பயணிகளை தாக்கியது உறுதியானது. மேலும் பெண் என்றும் பாராமல் சுற்றுலா பயணிகளை கடுமையாக தாக்கியது தெரியவந்ததால் ஓட்டல் ஊழியர்களான முகமதுஅலி (32), தர்வீஸ் முகைதீன் (35), அர்சத் (27), அரவிந்த் (27), சர்தார் (34), ஆஷிப்ரகுமான் (38) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    புகாருக்கு உள்ளான ஓட்டல் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. கேரள சுற்றுலா பயணிகளை இதேபோல் ஒரு அறையில் அடைத்து வைத்து தாக்கியதாக புகார் உள்ளது. மேலும் தரமற்ற உணவுகள் வழங்கி வருவதால் மற்ற ஓட்டல் நிறுவனங்களுக்கும் அவப்பெயர் ஏற்படுவதால் இதன்மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
    • போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.

    இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தபடகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதன் மூலம் கடந்த ஒரே ஆண்டில் 20 லட்சத்து 13 ஆயிரத்து 211 பேர் படகில் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டுள்ளனர்.

    அதேவேளையில் கடந்த 2023-ம் ஆண்டு 19 லட்சத்து 4 ஆயிரத்து 221 சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் பயணம் செய்துள்ளனர். இதனை ஒப்பிட்டு பார்க்கும் போது 2024-ம் ஆண்டு 1 லட்சத்து 8 ஆயிரத்து 990 பேர் அதிகமாகும்.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தை கடந்த ஆண்டு மாதம் வாரியாக பார்வையிட்ட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

    ஜனவரி 2 லட்சத்து 34 ஆயிரத்து 106 பேர், பிப்ரவரி 1 லட்சத்து 58 ஆயிரத்து 802 பேர், மார்ச் 1 லட்சத்து 61 ஆயிரத்து 80 பேர், ஏப்ரல் 1 லட்சத்து 42 ஆயிரத்து 867 பேர், மே 1 லட்சத்து 80 ஆயிரத்து 318 பேர், ஜூன் 1 லட்சத்து 49 ஆயிரத்து 472 பேர் படகில் பயணம் செய்து பார்வையிட்டுள்ளனர்.

    ஜூலை 1 லட்சத்து 22 ஆயிரத்து 974 பேர், ஆகஸ்ட் 1 லட்சத்து 40 ஆயிரத்து 710 பேர், செப்டம்பர் 1 லட்சத்து 51 ஆயிரத்து 803 பேர், அக்டோபர் 1 லட்சத்து 69 ஆயிரத்து 489 பேர், நவம்பர் 2 லட்சத்து 9 ஆயிரம் பேர், கடந்த டிசம்பர் 1 லட்சத்து 93 ஆயிரத்து 942 பேர் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வந்துள்ளனர்.

    இதில் கடந்த ஆண்டில் ஜனவரி மாதம் மட்டும் அதிக அளவு அதாவது 2 லட்சத்து 34 ஆயிரத்து 106 சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை படகில் பயணம் செய்து பார்வையிட்டு வந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 1½ வருடங்களாக திருவள்ளுவர் சிலையில் கண்ணாடி பாலப்பணிகள் நடைபெற்று வந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    • மெயின் அருவி பகுதியில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
    • சேதம் அடைந்த பாதுகாப்பு கம்பிகள் அனைத்தும் மீண்டும் அமைப்பதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு மேல் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மிதமான மழை பெய்தது.

    இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து மிதமான மழை பெய்ததன் காரணமாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில் இரவிலும் வனப்பகுதியில் மழை பெய்ததால் மெயின் அருவியில் தண்ணீர் பாதுகாப்பு வளைவைத் தாண்டி ஆர்ப்பரித்து கொட்டியது.

    இதனால் பாதுகாப்பு கருதி இன்று காலையில் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மெயின் அருவியில் குளிப்பதற்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

    மேலும் இன்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் மிதமான சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மெயின் அருவி பகுதியில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    பழைய குற்றால அருவி பகுதியை சுற்றி சேதம் அடைந்த பாதுகாப்பு கம்பிகள் அனைத்தும் மீண்டும் அமைப்பதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

    ×