search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டனம்"

    • ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • நாடாளுமன்றத்தில் டிசம்பர் 16ம் தேதியன்று தாக்கல் செய்யயுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் விபரீத மசோதாவை அறிமுக நிலையிலேயே தடுத்திட வேண்டும் என்று சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ (எம்.எல்)லிபரேசன் கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக இடதுசாரி கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நாடாளுமன்ற ஜனநாயகத்தை நட்டாற்றில் தள்ளும் வகையிலும் கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகையிலும் மாநில உரிமைகளை மண் மேடாக்கும் வகையிலும், "ஒரே நாடு; ஒரே தேர்தல்" என்பதற்கான சட்ட முன்வரைவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தச் சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் டிசம்பர் 16ம் தேதியன்று தாக்கல் செய்யயுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    முன்னதாக டிசம்பர் 16ஆம் தேதி நிகழ்ச்சி நிரவில் இந்த மசோதா இடம்பெற்றிருந்த நிலையில், எதிர்கட்சிகளின் கடுமையான ஆட்சேபனையால் திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை. ஆனால், அதேசமயம் இந்த கூட்டத் தொடரிலேயே இம்மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த சட்ட முன்வரையை அறிமுக நிலையிலேயே அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருசேர எதிர்க்க வேண்டியது அவசியமாகும்.

    நடைமுறை சாத்தியமில்லாத இந்த ஜனநாயக விரோத சட்ட மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு மூர்க்கம் காட்டுகிறது. இந்தச் சட்டமுன்வரைவு நிறைவேற்றப்பட வேண்டுமானால் அரசியல் சட்டத்தில் ஆறு திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.

    இந்த அரசியல் சட்டத்திருத்தங்களை செய்யவேண்டுமானால் நாடாளுமன்றத்தின் இரு, அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம். ஆனால், இரு அவைகளிலும் பாஜக-வுக்கோ அதன் கூட்டணி கட்சிகளுக்கோ அத்தகைய பெரும்பான்மை இல்லை. இது நன்றாகத் தெரிந்தும் கொடுங்கோன்மையை கோலோச்சச் செய்யும் இந்த சட்டமுன்வரைவை கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது. அனைத்திலும் ஒற்றைத் தன்மையை திணிக்கத் துடிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக வகையறாவின் அராஜகத்தின் ஒரு பகுதியே இந்த மசோதாவாகும்.

    2029-ஆம் ஆண்டு முதல் ஒரே நாடு ; ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு கொக்கரிக்கிறது. அப்படியாளாய், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பல மாநில அரசுகளைக் கலைக்க வேண்டியிருக்கும். மாநிலச் சட்டப்பேரவைகளில் எந்தக் ஒரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ பெரும்பான்மை கிடைக்கவில்லையெனில் குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் ஒன்றிய அரசே அந்த மாநில நிர்வாகத்தைக் கைப்பற்றும் நிலை ஏற்படும். ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் அனைத்து சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறுமானால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் என பல்வேறு சவால்கள் குறுக்கிடும் நிலை ஏற்படும்.

    அவசரகோலத்தில் அள்ளித் தெளிப்பது போல இந்தச் சட்டமுன்வரைவை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சியை துவக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

    சர்வதேச ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ள அதானியை கைது செய்து விசாரிக்க வேண்டுமென நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரலெழுப்பி வரும் நிலையில், அதானியை பாதுகாக்கவும்.

    இப்பிரச்சனையை திசை திருப்பும் நோக்கோடும் ஒன்றிய பாஜக அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்யவுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், இந்தியாவின் மகத்தான பன்முகத்தன்மையையும் சிதைக்கும் மத்திய மோடி அரசின் நடவடிக்கைகளை சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ (எம்பாய்) லிபரசேன் ஆகிய கட்சிகள் வன்மையாக கண்டிப்பதோடு, ஒரே நாடு, ஒரே நேர்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும் ஒன்றிணைந்து வலுவான கண்டனக் குரலெழுப்பிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் நெசவுத் தொழில் தலைநிமிர்ந்து நிற்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
    • குடிசைத் தொழில்போல் தறிகளை இயக்கி அந்த வருமானத்தில் எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்கள்.

    நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க திமுக அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகத்தில் நெசவாளர்களின் நிலைமை அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது. கைத்தறி மற்றும் நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம் என்று பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்த ஸ்டாலினின் திமுக ஆட்சியில் தாறுமாறாக நூல் விலை உயர்ந்ததுடன், விலையில்லா சீருடை, விலையில்லா வேட்டி, சேலை போன்ற திட்டங்களுக்கான பணிகளை முழுமையாக தமிழக நெசவாளர்களுக்கு வழங்காதது போன்ற நிகழ்வுகளால், முதலாளிகளாக சொந்தத் தொழில் செய்து வந்த நெசவாளர்கள், தங்களது தறிகளை பழைய இரும்புக் கடைகளுக்கு விற்றுவிட்டு வேறு தொழில்களுக்கு பணியாட்களாக இடம் மாறி தங்களது வாழ்க்கையை மிகுந்த சிரமத்துடன் நடத்தி வருகின்றனர்.

    குறிப்பாக, சேலம், நாமக்கல், ஈரோடு போன்ற பகுதிகளில் தயாரிக்கப்படும் சேலை ரகங்களைப் போன்றே, வெளி மாநிலங்களில் இருந்து போலியாக தரமற்ற சேலைகள் தயாரிக்கப்பட்டு குறைந்த விலைக்கு சந்தையில் விற்பனை செய்யப்படுவதால், உள்ளூர் நெசவாளர்கள் தயாரிக்கும் சேலைகளுக்கு நியாயமான விலை கிடைக்காமல், ஜவுளி தேக்கமடைந்துள்ளன.

    பல்லாயிரக்கணக்கான தறிகள் இரவு பகலாக இயங்கி வந்த நிலையில், இன்று மூன்றில் ஒரு பங்கு தறிகள் மட்டுமே இயங்குகின்றன. இதனால் வாரம் முழுவதும் வேலை செய்து வாரக் கூலி பெற்று தினசரி வாழ்க்கையை நடத்தி வந்த நெசவுத் தொழிலாளர்கள், இன்று குறைந்த நாட்களே பணிபுரிந்து மாதக் கூலி பெறுகின்றனர்.

    இதனால், தினசரி செலவுக்கு நெசவுக் கூலியை மட்டுமே நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சரியான சம்பளம் இன்றி, தங்களுக்குத் தெரிந்த நெசவுத் தொழிலை விட்டு, வேறு வேலைகளைத் தேடி அலையும் அவல நிலை அதிகரித்துள்ளது.

    நெசவாளர்களில் பலர், தாங்கள் வாழும் வீடுகளிலேயே ஓரிரு தறிகள் வைத்து குடிசைத் தொழில்போல் தறிகளை இயக்கி அந்த வருமானத்தில் எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்கள்.

    இந்நிலையில், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், தமிழகம் முழுவதும் குடிசைத் தொழில்போல ஓரிரு தறிகளை வைத்து நெசவுத் தொழில் செய்து வரும் நெசவாளர்கள் வீட்டில், உள்ளாட்சித் துறை அலுவலர்கள், தறிகள் உள்ள இடங்களைக் கணக்கீடு செய்து அப்பகுதிகளுக்கு வணிக ரீதியில் தொழில் வரி விதிக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.

    குறிப்பாக, சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இது போன்ற குடிசைத் தொழில் செய்துவரும் நெசவாளர்களின் வீடுகளில் உள்ள தறிக் கூடங்களின் அளவை மாநகராட்சி ஊழியர்கள் அளவீடு செய்து வருவதாகவும்; சதுர அடிக்கு 27 ரூபாய் தொழில் வரி விதிக்க உத்தேசித்துள்ளதாகவும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் தெரிவித்த செய்தி, நெசவாளர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று செய்திகள் வருகின்றன.

    அம்மா ஆட்சியில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களி வாழ்வாதாரம் பாதிப்படையக்கூடாது என்று, 200 யூனிட் மற்றும் 750 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கியது அம்மாவின் அரசு. நெசவாளர்களுக்கு 10 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித் தரப்பட்டன.

    மேலும், பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளில், 10 சதவிகிதம் வீடுகள் நெசவாளர்களுக்கு ஒதுக்கப்படும் என அறிவித்து, பிப்ரவரி 2018 முதல் கைத்தறி நெசவாளர்களுக்கு தலா ரூ. 2.10 லட்சம் வீதம் மானியத்துடன் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

    ஆனால், கடந்த 42 மாதகால விடியா திமுக ஆட்சியில் இதுவரை நெசவாளர்களுக்கு எந்தத் திட்டத்தின் கீழும் வீடுகள் கட்டித் தரப்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நெசவாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தள்ளுபடி மானியத்தை உடனடியாக வழங்குமாறு ஏற்கெனவே நான் வலியுறுத்தி இருந்தேன்.

    ஆனால், இந்த அரசு இதுவரை மொத்த மானியத் தொகையில் வெறும் 10 சதவீதம் மட்டுமே நெசவாளர்களுக்கு வழங்கி உள்ளதாகவும், மீதமுள்ள 90 சதவீதத்தை இதுவரை விடுவிக்கவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    அம்மாவின் அரசில் விலையில்லா வேட்டி, சேலை, பள்ளி மாணவர்களுக்கான சீருடை போன்றவை முழுமையாக தமிழக நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்த விடியா திமுக ஆட்சியில் வெளி மாநிலங்களுக்கு அதிக அளவு பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழக நெசவாளர்களுக்கு குறித்த நேரத்தில் தரமான நூல்கள் வழங்கப்படுவதுமில்லை.

    பட்டுத் தறி நெசவு செய்பவர்களுக்கு, அம்மா ஆட்சிக் காலத்தில் எத்தனை தறி வைத்துள்ளனரோ, அத்தனை தறிகள் மூலம் நெய்யும் பட்டுப் புடவைகளுக்கும் முழுமையாக ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. தறிக்கேற்றவாறு முழுமையாக ஆர்டர்கள் வழங்கப்பட்டது. ஆனால், விடியா திமுக ஆட்சியில் கோ-ஆப்டெக்ஸ் ஆர்டரே தருவதில்லை.

    நெசவாளர்கள் வைத்திருக்கும் அனைத்து ததிகளிலும் நெய்த பட்டுப் புடவைகளுக்கான ஊக்கத் தொகையும் வழங்குவதில்லை என்று பட்டு நெசவாளர்கள் வேதனையுடன் தெரிவித்து உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, தொடர்ந்து பட்டு நெசவாளர்கள் நெய்த பட்டுப் புடவைகள் அனைத்திற்கும் ஊக்கத் தொகை வழங்குமாறு வலியுறுத்துகிறேன்.

    அம்மாவின் அரசு மேற்கொண்ட பல்வேறு திட்டங்களினால், தமிழகத்தில் நெசவுத் தொழில் காக்கப்பட்டது. ஆனால் இன்று. குடிசைத் தொழில்போல் வீடுகளிலேயே ஓரிரு தறிகள் வைத்து நெசவுத் தொழில் செய்துவரும் நெசவாளர்களின் தலையில் இடி விழுந்தது போல், தறிக் கூடங்களை அளவெடுத்து தொழில் வரி விதிக்க முனைந்துள்ள ஸ்டாலினின் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த அரசு, நெசவாளர்களாகிய தங்களுக்கு உதவி செய்யாவிடினும், உபத்திரம் செய்யாமல் இருந்தால் போதும் என்று மிகுந்த மன வேதனையுடன் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். எனவே, உடனடியாக தமிழகமெங்கும் இதுபோன்ற தறிகள் உள்ள பகுதிகளை கணக்கீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும்; நூலுக்கான வரிகளை முழுமையாக நீக்கவும்; கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் தயாரிக்கப்படும் ஜவுளிகளுக்கு வரி விதிப்பில் விலக்கு பெற்று, மீண்டும் தமிழகத்தில் நெசவுத் தொழில் தலைநிமிர்ந்து நிற்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • அமித்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கனடா குற்றம் சாட்டியது.
    • தற்போது பிரதமர் மோடி மீதும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒட்டாவா:

    கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

    இதை இந்தியா திட்ட வட்டமாக மறுத்தது. இவ் விவகாரத்தால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று கனடா தெரிவித்தது. அதன்பின் இந்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கனடா குற்றம் சாட்டியது.

    இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி மீதும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொல்லும் சதி செயல் குறித்து இந்தியப் பிரதமர் மோடிக்கும் தெரியும் என்று கனடா ஊடகமான தி குளோப் அண்ட் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

    பெயர் தெரிவிக்காத கனடா மூத்த தேசிய பாது காப்பு அதிகாரியை மேற் கோள் காட்டிவெளியிடப் பட்ட அந்த செய்தியில், இந்த சதித்திட்டத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளி விவகார அமைச்சர் ஆகியோரும் இருந்தனர் என்றும் தெரிவித்துள்ளது.


    இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறிய தாவது:-

    நாங்கள் பொதுவாக ஊடக அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. இருப்பினும் கனடா அரசாங்கம் ஆதாரம் இல்லா மல் ஒரு செய்தித்தாளில் கூறப்படும் இது போன்ற கேலிக்குரிய அறிக்கைகளை நிராகரிக்க வேண்டும்.

    இதுபோன்ற அவதூறு பிரச்சாரங்கள் ஏற்கனவே சிதைந்து விட்ட இரு நாட்டு உறவுகளை மேலும் சேதப்படுத்துகின்றன என்றார்.

    • ஆசிரியர் ரமணியின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
    • கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    ஆசிரியை ரமணி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணியின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.

    ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஆசிரியர் ரமணியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க. அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
    • தச்சுத் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    திருவேற்காடு நகராட்சிப் பகுதியில் பன்னெடுங்காலமாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு எந்தவித மாற்று ஏற்பாடுகளையும் செய்து தராமலும், முன்னறிவிப்பு இல்லாமலும் குடியிருப்புகளை அகற்றி பொதுமக்களை வெளியேற்றத் துடிக்கும் தி.மு.க. அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

    எனவே, ஆக்கிரமிப்பு எனும் பெயரில் குடியிருப்புகளை அகற்றி பொதுமக்களை அகதிகளாக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, அரசு நிர்வாகத்தின் நடவடிக்கையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் தச்சுத் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பிற்போக்கு சிந்தனைகள் வெளிவருவது மிகவும் துரதிஷ்டவசமானது.
    • முதிர்ச்சியான அரசியல் போக்கு இல்லை.

    கோவையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஈஷா குறித்து உண்மைக்கு புறம்பான அவதூறு கருத்துக்களை தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசனுக்கு ஈஷா அறக்கட்டளை கண்டனங்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    'பெண்களுக்கான அழகுல ஒண்ணு கூந்தல் அழகு' என்று முத்தரசன் கூறியிருக்கிறார். ஒரு கம்யூனிச சித்தாந்த அரசியல் தலைவரிடம் இருந்து இப்படியான பிற்போக்கு சிந்தனைகள் வெளிவருவது மிகவும் துரதிஷ்டவசமானது.

    பெண்களின் அழகு கூந்தலில் இல்லை. குடும்பம், சமுதாயம், சித்தாந்தம், மதம் உள்ளிட்ட காரணிகளின் கட்டாயங்கள் ஏதும் இல்லாமல், அவர்களின் வாழ்க்கையை சுயமாக அவர்களின் விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுப்பதில் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    உண்மை என்ன என்பதை நேரடியாகவோ அல்லது ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தகவல்கள், அரசின் நேரடி கள ஆய்வு அறிக்கைகள் என பொதுவெளியில் எளிதில் கிடைக்கும் அரசு ஆவணங்களை கூட தேடி படிக்காமல், உண்மையை அறிந்து கொள்ளும் விருப்பமும் இல்லாமல், ஏதோவொரு கட்டாய நிர்பந்தத்தின் பேரில், யாரோ சிலர் எழுதிக் கொடுத்த அவதூறுகளை முத்தரசன் ஊடகங்களுக்கு முன் படித்து காட்டியது முதிர்ச்சியான அரசியல் போக்கு இல்லை. ஒரு தேசிய கட்சியின் மாநில செயலாளரே இப்படி செய்வது வருத்தத்திற்கு உரியது.

    2022-ம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்ட வருவாய்த்துறை மற்றும் வனத்துறையின் கூட்டு ஆய்வு அறிக்கையில், "ஈஷா யோக மையத்தின் எல்லைகளை அளவீடு மேற்கொண்டதில் அவர்கள் காப்புக்காடு (வனப்பகுதி) பகுதியில் எந்தவிதமான ஆக்கிரமிப்போ, அத்துமீறல்களோ செய்யவில்லை என நில அளவையிலான அடிப்படையில் தெரிய வருகிறது" என்று கூறப்பட்டு உள்ளது.

    பழங்குடியினருக்கு சொந்தமானது என்று கூறப்படும் 44.3 ஏக்கர் அளவிலான நிலங்கள் எதனையும் ஈஷா அறக்கட்டளை ஆக்கிரமிக்கவில்லை என்பதை வருவாய்த்துறை ஆவணங்களும், ஆர்.டி.ஐ. தகவல்களும் தெளிவாக கூறுகின்றன.

    ஈஷாவில் பல்வேறு நிலைகளில் இருக்ககூடிய நூற்றுக்கணக்கான பெண்களிடம், காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஈஷா பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவே கூறியுள்ளனர். இதனை காவல்துறையும் அதன் அறிக்கையில் பதிவு செய்துள்ளது.

    சமீபத்தில் உச்சநீதிமன்றம், இரு பெண் துறவிகள் குறித்த வழக்கில் இருவரும் அவர்களின் சுய விருப்பத்தின் பேரில் தான் ஈஷாவில் இருப்பதாக மிகத்தெளிவான தீர்ப்பினை அளித்துள்ளது. மேலும் ஒரு அமைப்பை இழிப்படுத்துவதற்காக மனுக்களை பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியது.

    ஈஷாவின் நற்பணிகளால் தினமும் பல்லாயிரகணக்கான விளிம்பு நிலை மக்கள், பழங்குடியின மற்றும் பட்டியலின மக்கள் பயன்பெற்று வருகின்றனர். சாதி, மத, இன பேதங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் யாதும் இன்றி பல கோடி மக்களுக்கு இந்த மண்ணின் ஆன்மீகத்தை அதன் தூய வடிவில் ஈஷா அறக்கட்டளை வழங்கி வருகிறது.

    ஆகவே உண்மைக்கு புறம்பான, பொய்யான அவதூறு கருத்துக்களை முத்தரசன் பரப்ப வேண்டாம் என ஈஷா அறக்கட்டளை கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சர்வதேச கருத்தரங்கம் தொடர்பான ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம்.
    • எம்.பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    சர்வதேச கருத்தரங்கம் தொடர்பான ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் இடம்பெற்றிருப்பதற்கு மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எம்.பி., சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    வந்தே பாரத்துக்கு காவிநிறம் அடிப்பவர்கள் அதை இயக்கும் மின்சாரத்தில் எப்படி கைவைக்க முடியாதோ, அப்படித்தான் வள்ளுவருக்கு காவியடிப்பவர்கள் வள்ளுவத்தில் கைவைக்க முடியாது.

    மின் ஆற்றலைவிட வலிமையானது வெறுப்பு அரசியலுக்கு எதிராக வள்ளுவம் பேசும் அறத்தின் ஆற்றல்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அமரன் படத்தில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக காட்சிப்படுத்தியிருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
    • திரையரங்குகளை முற்றுகையிட போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்தனர்.

    சென்னையில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமரன் படத்தில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக காட்சிப்படுத்தியிருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதனால், திரையரங்குகளை முற்றுகையிட போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்த நிலையில் காவல்துறை போலீஸ் பாதுகாப்பு போட்பபட்டுள்ளது.

    சென்னை ராயப்பேட்டை வெஸ்ட் கோஸ்ட் சாலையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கத்தில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டு ஓடிக்கொண்டுள்ளது.

    இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள உட்லாண்ட்ஸ் திரையரங்கம், சத்யம் சினிமாஸ் திரையரங்கிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல், அமரன் திரைப்படத்தின் தயாரிப்பாளராக நடிகர் கமல்ஹானின் ஈசிஆர் இல்லத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • CRPF வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் அவமதிப்பதாக உள்ளது.
    • தியாகத்தை முற்றிலும் கவுரவிக்காமல் கொச்சைப்படுத்துவது போன்று உணர்த்துகிறது.

    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளிவந்து திரையரங்குகளில் வெற்றி நடைப்போட்டு வருகிறது.

    இந்நிலையில், அமரன் படத்திற்கும், படக் குழுவினருக்கும் தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுதம் ஏந்திய போலீஸ் படை நலன் மற்றும் மறுவாழ்வு சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தை தலைமை இடமாக கொண்ட இந்த சங்கம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அமரன் படத்தில் குறிப்பிட்ட ஒரு காட்சிகளை பார்த்து CRPF வீரர்கள் வேதனை, அதிர்ச்சியும், ஆவேசம் ஆகியவற்றால் மூழ்கியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் அதிகாரியை கொலை செய்ய நடத்தப்படும் தாக்குதல் காட்சிகளில் எவ்வித எதிர்வினையும் வழங்காமல் CRPF வீரர்கள் படுகொலை செய்யப்படுவது மிகவும் இழிவானதாக இருக்கிறது.


    CRPF வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் அவமதிப்பதாகவும், அவர்களின் புகழ்மிக்க பணிகளை மரியாதை இன்றி சிதைக்கின்றதாகவும் உணர்த்துகிறது.

    படைப்பு, சுதந்திரம் என்ற பெயரில் கற்பனை கொண்டு உருவாக்கி எம்மீது இழிவு கூறும் ஒரு காட்சியை உருவாக்கி மண்ணின் மைந்தர்கள், நாங்கள் ரத்தத்தை சிந்தி நாட்டை காக்கும் போது அதை கேலியாக படம் பிடிப்பது நியாயமா?

    நம் 44 RR வீரர்கள் சண்டையிட்டு வீர மரணம் அடைவதை காட்டி அதே நேரத்தில் CRPF வீரர்கள் எந்த எதிர்ப்புமின்றி கொல்லப்படுவதாக காட்டுவது அவர்கள் தியாகத்தை முற்றிலும் கவுரவிக்காமல் கொச்சைப்படுத்துவது போன்று உணர்த்துகிறது.

    நாட்டின் பல்வேறு மூளைகளில் இருந்து எந்த பாதுகாப்பும், சலுகைகள் இன்றி போராடி உயிர் தியாகம் செய்த எண்ணற்ற CRPF வீரர்களின் தியாகத்தை இந்த ஒரு காட்சி முற்றிலுமாக அழிக்கக் கூடியதாக உள்ளது.

    இந்த படத்தில் பொதுமக்களின் மனதில் CRPF வீரர்களின் மதிப்பை சிதைக்கும் வகையில் உள்ளதால் TN CAPF WARA அமைப்பு தனது கடும் கண்டனத்தை 'அமரன்' படக் குழுவிற்கு தெரிவிக்கிறது.

    எங்கள் வீரர்களின் தியாகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்"

    இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சர்ச்சையான கருத்துக்களை பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார்.
    • பல முறை சிந்தித்து கருத்துக்களை வெளியிட வேண்டும்.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    சமீபத்தில் விவசாயிகள் போராட்டம் மற்றும் ரத்து செய்யப்பட்ட 3 பண்ணை சட்டங்கள் தொடர்பாக கங்கனா ரணாவத் தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கள் நாடு முழுவதும் அவருக்கு எதிராக எதிர்ப்பை கிளப்பிய நிலையில் தனது கருத்துக்களை அவர் திரும்ப பெற்றுக் கொண்டார்.

    நேற்று மகாத்மா காந்தியின் பிறந்தநாள் மற்றும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டன.

    இந்த நிலையில் தேசப்பிதா மகாத்மா காந்தி என்று எழுதப்பட்ட காந்தியின் சிலை அருகே நின்றபடி நடிகை கங்கனா ரணாவத் ஒரு வீடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

    அதில் இந்திய நாட்டில் தேசப்பிதாக்கள் இல்லை. அனைவரும் மகன்கள் தான். மகாத்மா காந்தியும், லால்பகதூர் சாஸ்திரியும் பாரத தாயின் ஆசி பெற்ற மகன்கள்... என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் மகாத்மா காந்தியின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பான முறையில் முன்னெடுத்து வருவதாகவும் அவர் வாழ்த்து தெரி வித்துள்ளார்.

    தேசப்பிதா மகாத்மா காந்தி தொடர்பான கங்கனா ரணாவத்தின் இந்த சர்ச்சையான விமர்சனம் பல்வேறு தரப்பினர் மத்தியில் எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க.விலும் நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளன.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுப்ரியா ஸ்ரீநேட் கருத்து தெரிவிக்கையில், மகாத்மா காந்தியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடிகை கங்கனா ரணாவத் தேசப்பிதா காந்தி மீது கேலியான விமர்சனத்தை வைத்துள்ளார்.

    மேலும் பா.ஜ.க.வில் கோட்சேயின் வழித்தோன்றல்கள் இது போன்று காந்திக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பது வழக்கம் என்றாலும் கோட்சேயின் பக்தர்களை பிரதமர் நரேந்திர மோடி எந்த வகையில் மன்னிக்கப் போகிறார்.

    மகாத்மா காந்தி தான் நாட்டின் தந்தை நாம் எல்லோரும் அவரது பிள்ளைகள் என்ற உயர்ந்த எண்ணத்தோடு ஒவ்வொரு இந்தியர்களும் மகாத்மா காந்திக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறார்கள் என்றும் சுப்ரியா ஸ்ரீநேட் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவர் மனோரஞ்சன் காலியாவும் கங்கனா ரணாவத்தின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றியுள்ளார்.

    மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நடிகை கங்கனா ரணாவத் கூறிய சர்ச்சை கருத்து பதிவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள மனோரஞ்சன் காலியா நடிகை கங்கனாவின் அரசியல் பயணம் மிகக் குறுகியது.

    சர்ச்சை கருத்துக்களை அடிக்கடி கூறி பரபரப்பு ஏற்படுத்துவதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார் என்றும் தனது சமூக வலைதள பக்கத்தில் மனோ ரஞ்சன் காலியா தெரிவித்துள்ளார்.

    மேலும் அரசியல் அவரது முழு நேர துறை அல்ல, அரசியல் வாதிகள் பொறுப்புடனும், எச்சரிக்கையுடனும் பேச கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு முறை அல்ல பல முறை சிந்தித்து கருத்துக்களை வெளியிட வேண்டும்.

    ஆனால் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சையான கருத்துக்களை பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார் அவரது செயல்பாடுகள் பா.ஜ.க.வுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

    கங்கனா ரணாவத்தின் மகாத்மா காந்தி தொடர்பான சர்ச்சை பதிவிற்கு காங்கிரஸ் மட்டுமின்றி பா.ஜ.க. தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட கங்கனா ரணாவத் தற்போது நடிகை மட்டுமல்ல, பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவரது கருத்துக்கள் இருக்க வேண்டும் என்பதை அவர் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • சுவாமிநாராயண் கோவிலில் மர்மநபர்கள் சிலர் புகுந்து சேதப்படுத்தி உள்ளனர்.
    • சாலைகள், பலகைகளில் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நியூயார்க்கில் மெல்வில்லே பகுதியில் சுவாமிநாராயண் கோவில் உள்ளது. இக்கோவில், அமெரிக்காவில் மிகப்பெரிய இந்து கோவில் மற்றும் உலகின் 2-வது மிகப்பெரிய கோவில் என சிறப்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில் சுவாமிநாராயண் கோவிலில் மர்மநபர்கள் சிலர் புகுந்து சேதப்படுத்தி உள்ளனர். கோவிலுக்கு வெளியே உள்ள சாலைகள், பலகைகளில் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.


    இதற்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தூதரகம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'இது போன்ற செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.

    தாக்குதல் நடத்தியவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம். சமீப காலமாக இந்து கோவில்கள் மீது நடந்து வரும் தாக்குதல் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

    • கோயம்புத்தூர் மக்கள் பாசத்தில் மட்டுமல்ல ரோசத்திலும் அதிகமானவர்கள் தான்!
    • இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டிலும் கோவையிலும் மக்கள் பாஜக-வை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்!

    கோவை கொடிசியாவில் நேற்று முன்தினம் தொழில் முனைவோர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் நிர்மலா சீதாராமனிடம், ஜிஎஸ்டி வரிகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

    இதையடுத்து, ஜி.எஸ்.டி. குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா சீனிவாசன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    இதற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் செயல்பட்டாளர் சுந்தரராஜன், கேரள காங்கிரசார் மற்றும் பலர் கண்டனங்களை தெரிவித்தனர்.

    இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அதிகார மமதையில் ஆளும் பாசிச பாஜக அரசு!

    மத்திய நிதி அமைச்சர் பங்குபெற்ற கூட்டத்தில் பேசிய அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் எந்தவிதத்திலும் தவறாக பேசவில்லை.

    தங்கள் தொழிலில் சந்திக்கும் சில பிரச்சினைகளை கோரிக்கையாக முன் வைத்தார்.

    அதற்காக அவரை அழைத்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்களையே கேவலப்படுத்தும் செயல்!

    அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருப்பது பாசிசத்தின் உச்சம்!

    கோயம்புத்தூர் மக்கள் பாசத்தில் மட்டுமல்ல ரோசத்திலும் அதிகமானவர்கள் தான்!

    இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டிலும் கோவையிலும் மக்கள் பாஜக-வை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்!

    இந்த செயலால் இன்னுமொரு நூறாண்டு ஆனாலும் பாஜக இதற்காக வருந்தும்!

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×