என் மலர்
நீங்கள் தேடியது "கருவாடு"
- உணவில், கருவாடுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு.
- உள்ளூர் சந்தை மட்டுமின்றி வெளியூர்களுக்கும் ஏற்றுமதியாகிறது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்டுள்ள பகுதியாக திகழ்கிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் தொழில் மீன்பிடி தொழில் உள்ளது. சுமார் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலாளர்களாக உள்ளனர். இந்த பகுதியில் கிடைக்கும் இறால்மீன், நண்டு, கனவாய் உள்ளிட்ட பல்வேறு வகையாக மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் அன்னிய செலாவணியும் அதிக அளவில் கிடைக்கிறது. ஆனால் மீன்களை காய வைத்து கருவாடு ஆக்கினால் அதன் சுவையே தனித்தன்மை கொண்டது.
தமிழர்களின் உணவில், கருவாடுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. ஆனால் ஏனோ, மீனை உணவில் சேர்த்து கொள்ளும் அளவுக்கு கருவாடை சேர்த்து கொள்வதில்லை. ஒருவேளை அதன் வாடை காரணமாகவும் இருக்கலாம் என்ற கருத்தும், அல்லது அதன் சுவை சிலருக்கு பிடிக்காமல் இருப்பதும் காரணமாக கூறப்படுகிறது. எனினும், நிறைய மருத்துவ குணங்களை இந்த கருவாடுகள் ஒளித்து வைத்து இருக்கிறது.
கோடை வெயில் கொளுத்தும் நிலையில் பாம்பனில் மீன்களைக் கருவாடாக்கும் பணியில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
அரியவகை மீன்கள் கிடைக்கும் பாம்பன் பகுதியில் விற்பனைக்குப் போக மிஞ்சும் மீன்கள் மற்றும் கருவாட்டுக்கு நல்ல சுவையுள்ள மீன்களைத் தேர்ந்தெடுத்து கருவாடாக்கி வெளி மாவட்டம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இங்கு தயார் செய்யப்படும் கருவாடு உள்ளூர் சந்தைகள் மட்டுமில்லாமல் வெளியூர்களுக்கும் அதிகளவில் ஏற்றுமதியாகிறது. மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீன்களைக் கருவாடாக்கும் பணி பாம்பனில் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய நிலையில் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாகக் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியதால் டன் கணக்கிலான மீன்களைக் கருவாடாக காய வைக்கும் பணியில் மீனவ பெண்கள் பாம்பன் பாலத்தின் கீழ் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், மருத்துவ குணம் கொண்டுள்ள நெத்திலி, திருக்கை, சாவாளை, வாழை, நகரை, கட்டா, மாசி, கனவாய், பால்சுறா போன்ற மீன்களை அதிகளவில் கருவாடாக்கி வருகின்றனர். தற்போது மீன் வரத்தினை பொறுத்து விலை இருக்கும் நிலையில், தடைக்காலம் என்பதால் கருவாடு விலை அதிகரித்துள்ளது.
அசைவ உணவுகளிலேயே, அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு இந்த கருவாடுதான். 80-85 சதவீதம் வரை புரதம் இந்த கருவாடில் உள்ளது. கருவாட்டினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.
கருவாடுகளில் ஆண்டி ஆக்ஸிடன்ட் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக காணப்படுவதால், இருமல் மற்றும் சளி உள்ளவர்களுக்கு கருவாட்டு குழம்பு சிறந்த மருந்தாகும். உடல் நலம் குன்றியவர்கள் கருவாட்டுக் குழம்பினை எடுத்துக் கொண்டால், உடல் நலம் தேறுவார்கள் என்பது நம்பிக்கையுடன் கூடிய மருத்துவ முறையாக இன்றும் கருதப்படுகிறது.
சளித் தொல்லை, இருமல் பிரச்சினை உள்ளவர்கள் கருவாட்டுச்சாறு எடுத்துக்கொள்வது சிறந்த மருந்தாக இருக்கும் என்று கருத்து நிலவுகிறது. கருவாடு சாப்பிடுவதால் பூச்சிகளை அகற்றும். பித்தம், வாத, கப நோய்களைக் கட்டுப்படுத்தும் தன்மை இந்த கருவாடுக்கு உண்டு. மாதவிலக்கு பலவீனம், சீரமைப்பிற்கும், உடல் தேற்றத்திற்கும் இந்த சுறா கருவாடு உதவுகிறது. கருவாடு எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்துகிறது.
கொடுவா கருவாடு வாங்கி குழம்பு வைத்தால், அதுவே பலருக்கு மருந்தாகிவிடும். காரணம், கொடுவாமீனை விட கொடுவா கருவாடில்தான் சத்துக்கள் அதிகம் உள்ளது. 100 கிராம் கொடுவா மீன், நமக்கு 79 கலோரி ஆற்றலை தருகிறது என்றால், 100கிராம் கொடுவா கருவாடு, 266 கலோரி ஆற்றலை நமக்கு தருகிறதாம்.
அதாவது, கொடுவாமீனுடன் ஒப்பிடும்போது, புரதச்சத்து 4 மடங்கும், தாதுப்புக்களின் செறிவு 10 மடங்கும், இரும்புச் சத்து 5 மடங்கும், சுண்ணாம்புச்சத்து 2 மடங்கும் அதிகமாக இருக்கிறதாம்.
இந்த கருவாடை சாப்பிட்டால், உடல்பலவீனம் மறைந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். ரத்த சோகை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வு இந்த கருவாடு. அதுபோலவே, கெளுத்தி மீனைவிட, உப்பங்கெளுத்தி கருவாட்டில்தான் சத்து அதிகம்.
சீலா மீனைவிட, சீலா கருவாட்டில்தான் சத்து அதிகம். இறால் கருவாடை அடிக்கடி உணவில் பயன்படுத்தினால், ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது. வாய்வுப் பிடிப்பு, பசிமந்தம், மூட்டுவலி, அரிப்பு, வயிறு உப்புசம் போன்றவற்றிலிருந்தும் விடுபடலாம். இன்னும் ஏராளமான கருவாடுகள் இருக்கின்றன. ஆனால், எல்லா கருவாடுமே நன்மை தரக்கூடியதுதான்.
- 13 வகையான மீன்களை மக்கள் அதிகளவில சமைத்து உண்கின்றனர்.
- பிடிக்கப்படும் மீன்களில் ஒரு பகுதி இங்கேயே கருவாடாக உலர்த்தப்பட்டு வருகிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் விசைப்படகுகள், பைபர் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
இங்கு பல வகையான மீன்கள் பிடிக்கப்பட்டாலும் கெளுத்தி, நெத்திலி, கிழங்கான், பொறுவாய்,குத்து வாய், வாழை, வெள்ளுருட்டான், கவலை, சுறா உள்ளிட்ட 13 வகையான மீன்களை மக்கள் அதிக அளவில சமைத்து உண்கின்றனர்.
அதேசமயம் இந்த வகை மீன்களை கருவாடாக உண்பதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்த வகையான மீன்களை கருவாடாக வாங்கி சமைத்து உண்பதை மக்கள் பெரிதும் விரும்பி வருகின்றனர்.
இதுகுறித்து பழையார் கருவாடு வியாபாரி பொன்னையா கூறுகையில், பழையார் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த பருவ மழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாலும், கடற்கரை பகுதிகளில் போதுமான மீன் வரத்து இல்லாததாலும், கருவாடு தேவைக்கான மீன்வரத்து குறைந்து காணப்படுகிறது.
தற்போது இங்கு மீன்களை வாங்கி உப்புகள் தெளித்து பதப்படுத்தி கருவாடுகளை காய வைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் பழையாறு கிராமத்தில் உள்ள கருவாடுகளை வாங்கி செல்வது வழக்கம். அதாவது நெத்திலி,பாறை, சுறா, திருக்கை ,காரை ஆகிய மீன்களின் கருவாடுகள் பதப்படுத்தப்பட்டு அவற்றை நன்கு காய வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பிடிக்கப்படும் மீன்களில் ஒரு பகுதி இங்கேயே கருவாடாக உலர்த்தப்பட்டு தினந்தோறும் பல்லடம், ஒட்டன்சத்திரம்,திருச்சி, வேலூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களுக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்து வருகிறோம்.
ஒரு நாளைக்கு இந்த துறைமுகத்தில் இருந்து 2 டன் மற்றும் அதற்கு மேலான கருவாடுகள் வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச்சென்று விற்கப்படுவது வழக்கம்.
அதன்படி கருவாடுகள் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கபட்டு வந்த நிலையில் தற்போது மீன் வரத்து குறைவின் காரணமாக கருவாடு உற்பத்தி குறைந்துள்ளது.
மேலும் பழையார் துறைமுகத்தில் கருவாடு உலர்தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- கருவாடு வாங்க மக்கள் குவிந்தனர்.
- பல்வேறு வகையான கருவாடுகளை குவியல் குவியலாக வைத்து வியாபாரிகள் விற்பனை செய்வார்கள்.
கடலூர்:
கடலூர் அருகே காராமணிக்குப்பத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை கருவாடு சந்தை நடந்து வருகிறது. அங்கு பல்வேறு வகையான கருவாடுகளை குவியல் குவியலாக வைத்து வியாபாரிகள் விற்பனை செய்வார்கள். இன்று நடந்த கருவாடு சந்தையில் அதனை வாங்க பொதுமக்கள் கூடினர்.