search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுத்தை"

    • வனத்துறையினரின் உதவியுடன் சிறுத்தையை பிடிக்க கிராம மக்கள் முயற்சி செய்தனர்.
    • தப்பி ஓடமுயன்ற சிறுத்தையின் வாலை ஆனந்த என்ற நபர் பிடித்தார்.

    கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுற்றித் திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடிக்க முயன்றனர். அப்போது ஆனந்த என்ற நபர் துணிச்சலுடன் செயல்பட்டு தப்பி ஓட முயன்ற சிறுத்தையின் வாலை பிடித்து தடுத்து நிறுத்தினார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    சில நாட்களாக அந்த கிராமத்தில் சிறுத்தை உலா வந்து கொண்டிருந்ததால் கிராம மக்கள் அச்சத்தில் உறைந்தனர். கிராம மக்கள் எவ்வளவோ முயன்றும் சிறுத்தையை பிடிக்க முடியவில்லை. இதனையடுத்து வனத்துறையினரின் உதவியுடன் சிறுத்தையை பிடிக்க கிராம மக்கள் முயற்சி செய்தனர்.

    அப்போது தப்பி ஓடமுயன்ற சிறுத்தையின் வாலை ஆனந்த என்ற நபர் பிடித்தார். உடனடியாக வலை வீசி வனத்துறையினர் சிறுத்தையை பிடித்தனர். பின்னர் பிடிபட்ட சிறுத்தையை காட்டிற்குள் வனத்துறையினர் விட்டனர்.

    கர்நாடகாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறுத்தை தாக்கி 52 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 2-3 வயதுடைய சிறுத்தை ஒன்று, குஜராத்தில் ஒற்றுமை சிலைக்கு அருகில் உள்ள கெவாடியா வனப் பகுதிக்குள் நுழைந்தது
    • சிறுத்தை திடீரென அடைப்புக்குள் நுழைந்ததில் மான்கள் பீதியடைந்தன

    குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலை அமைந்துள்ளது. அதை சுற்றி உள்ள ஜங்கிள் சபாரி பகுதிக்குள் கடந்த புத்தாண்டு தினத்தன்று சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது.

    அந்த சிறுத்தை பிளாக்பக் எனப்படும் கரும்புலி வகை மான் ஒன்றை வேட்டையாடி கொன்றுள்ளது. ஒரு பிளாக்பக் மான் இறந்த அதிர்ச்சியிலேயே மற்ற 7 மான்களும் இறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது.

    2-3 வயதுடைய சிறுத்தை ஒன்று, குஜராத்தில் ஒற்றுமை சிலைக்கு அருகில் உள்ள கெவாடியா வனப் பகுதிக்குள் அமைந்துள்ள சூல்பனேஷ்வர் வனவிலங்கு சரணாலய ஜங்கிள் சஃபாரி பூங்காவின் வேலியிடப்பட்ட எல்லைகளைத் தாண்டி வந்துள்ளது. அங்கு பிளக்பக் மான்கள் இருந்த அடைப்புக்குள் நுழைந்து ஒரு மானை வேட்டையாடி உள்ளது.

     

    வனத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, எட்டு சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் தகனம் செய்யப்பட்டன.

    வனத்துறை துணைப் பாதுகாவலர் (டிசிஎஃப்) அக்னீஸ்வர் வியாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுத்தை திடீரென அடைப்புக்குள் நுழைந்ததில் மான்கள் பீதியடைந்தன. பணியில் இருந்த காவலர்கள் அதை விரட்ட முயற்சித்த போதிலும், சிறுத்தை ஒரு கரும்புலியைக் கொன்றது, அதே நேரம் குழப்பம் மற்றும் அதிர்ச்சி மற்ற 7 மான்களின் மரணத்திற்கு வழிவகுத்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

     

    ஒற்றுமை சிலை அருகே உள்ள சூல்பனேஷ்வர் வனவிலங்கு சரணாலயம் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது, அங்கு பல சிறுத்தைகள் உள்ளன. இருப்பினும் சஃபாரி பூங்காவிற்குள் சிறுத்தை நுழைவது இதுவே முதல் முறை.

    ஜங்கிள் சஃபாரியில் 400க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், நுழைவாயில் மற்றும் அடைப்புக்கு அருகில் உள்ள கேமராக்கள் சிறுத்தை நுழைவதை காட்டுகிறது. சிறுத்தை முழுவதுமாக ஜங்கிள் சஃபாரியை விட்டு வெளியேறிவிட்டதா என்பது இன்னும் உறுதியாக தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

    • கூண்டின் முன்பு ஒரு ஆட்டை உயிருடன் கட்டி வைத்து காண்கணித்து வந்தனர்.
    • சிறுத்தையை வனத்துறையினர் பிடித்த சம்பவத்தால், அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேனிக்கோட்டையில் உள்ள அடிமைசாமிபுரத்தில் சிறுத்தை நடமாடுவதாக வனத்துறையினர் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிறுத்தை பிடிக்க வனத்துறையினர் அந்த பகுதியில் ஒரு கூண்டை வைத்தனர். அந்த கூண்டின் முன்பு ஒரு ஆட்டை உயிருடன் கட்டி வைத்து காண்கணித்து வந்தனர்.

    கூண்டின் முன்பு இருந்த ஆட்டை கடிப்பதற்காக வந்த சிறுத்தை கூண்டுக்குள் லவகமாக சிக்கியது. கூண்டிற்குள் சிக்கிய அந்த சிறுத்தை சுமார் 12 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை என்பது தெரியவந்தது. கடந்த சில தினங்களாக தேன்கனிக்கோட்டை பகுதியை அச்சத்தில் உறைய வைத்திருந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்த சம்பவத்தால், அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.

    • வனத்துறையினர் ஆய்வு செய்து சிறுத்தையின் காலடி தடத்தை பதிவு கண்டுபிடித்தனர்.
    • கடந்த 9-ந் தேதி இரவு அதியமான் நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே உள்ளது ஜாகீர் வெங்கடாபுரம். இதன் அருகில் உள்ள குல்நகர், அதியமான்நகர், பாஞ்சாலியூர், கொண்டே பள்ளி, பையனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

    இதையடுத்து கிருஷ்ணகிரி வனச்சரகர் முனியப்பன், வனவர் சிவக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர், அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, அதியமான் நகரில் உள்ள வெற்றிச்செல்வன் என்பவரது வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது சிறுத்தை ஒன்று சுற்றி திரிவது பதிவாகி இருந்தது.

    இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறையினர் ஆய்வு செய்து சிறுத்தையின் காலடி தடத்தை பதிவு கண்டுபிடித்தனர்.

    இதுகுறித்து வனச்சரக அலுவலர் முனியப்பன் கூறியதாவது:

    கடந்த 9-ந் தேதி இரவு அதியமான் நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இரவு முழுவதும் பட்டாசுக்கள் வெடித்தும், சத்தம் எழுப்பியவாறு சிறுத்தை தேடும் பணி நடந்தது. காலையில் சிறுத்தையின் காலடித்தடம் உறுதி செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களாக சிறுத்தை யாரும் கண்ணிலும் தென்படவில்லை. அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களிலும் பதிவாகவில்லை. பட்டாசு வெடித்தால், அங்கிருந்து இடம் பெயர்ந்து இருக்கலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். விழிப்புடன் இருந்து, சிறுத்தை நடமாட்டம் கண்டறிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து சிறுத்தையை பிடிப்பதற்காக கிருஷ்ணகிரி முழுவதும் தேடும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் அப்பகுதியிலும், சமூக வலைதளத்திலும் வேகமாக பரவியது. மேலும், ஜாகீர் வெங்கடாபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் படிக்க கூடிய மாணவ, மாணவிகள் பள்ளி நேரத்தில் வகுப்பறைவிட்டு வெளியே செல்வதற்கு ஆசிரியர்கள் தடை விதித்துள்ளனர். காலை, மாலையில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக சென்றுவர ஏதுவாக உரிய நடவடிக்கைகளை பள்ளியின் ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த சில ஆண்டுகளாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. எனவே, வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்திட வேண்டும். மேலும் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • சிறுத்தை மூச்சு திணறுவது போன்று வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • வீடியோ வைரலான நிலையில், சிலர் கிராம மக்களின் தைரியத்தை பாராட்டினர்.

    அடர்ந்த வனப்பகுதிகள், மலையடிவார கிராமங்களுக்குள் அவ்வப்போது கரடி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் புகுந்து பொது மக்களை அச்சுறுத்தும். இதனால் பீதியடையும் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிப்பார்கள். அதுபோல உத்தரபிரதேசம் மாநிலம் மகராஜ்கஞ் மாவட்டத்தில் உள்ள லால்பூர் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்துள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் தாங்களே சிறுத்தையை பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி கிராம மக்கள், இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சிறுத்தையை மடக்கி பிடித்தனர். அப்போது ஒரு இளைஞர் வெறும் கைகளால் சிறுத்தையின் கழுத்தை நெரித்தார். இதனால் சிறுத்தை மூச்சு திணறுவது போன்று வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் சிறுத்தையை கையில் வைத்திருந்த சில இளைஞர்கள் அதன் கழுத்தை நெரிப்பதும், கால்களை பிடித்து இழுப்பதும் போன்ற காட்சிகள் அதில் உள்ளன. இந்த வீடியோ வைரலான நிலையில், சிலர் கிராம மக்களின் தைரியத்தை பாராட்டினர். அதே நேரம் சிலர், சிறுத்தையின் கழுத்தை நெரித்த இளைஞர்களை விமர்சித்து பதிவிட்டனர்.

    • சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அங்கு பதிவாகி இருந்த கால் தடத்தை ஆய்வு செய்தனர்.
    • கல்குவாரி பகுதியை கடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்பட்டு வருகிறோம்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சூசைபுரம், தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், ஒசூர் பகுதியில் கடந்த 2 வருடங்களாக அங்கு உள்ள கல்குவாரியில் பதுங்கி உள்ள சிறுத்தை ஆடு, மாடு, காவல் நாய்களையும் தாக்கி கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வந்தனர். தொடர்ந்து ஆடு மற்றும் நாய்களை வேட்டையாடிய சிறுத்தை அங்கு உள்ள கல்குவாரியில் சென்று பதுங்கி கொள்வதும் வாடிக்கையாகி விட்டது.

    இந்நிலையில் தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசப்பா (42) விவசாயி. 4 மாடுகள், 5 ஆடுகள் வளர்த்து வருகிறார். வழக்கம் போல் வீட்டின் முன் உள்ள கொட்டகையில் கட்டி வைத்து விட்டு தூங்க சென்றுவிட்டார். காலை வந்து பார்த்த போது தனது ஆடு ஒன்று பாதி உடலை தின்ற நிலையில் இறந்து கிடந்து.

    இது பற்றி உடனடியாக தாளவாடி வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அங்கு பதிவாகி இருந்த கால் தடத்தை ஆய்வு செய்தனர். இதில் கல்குவாரியில் இருந்து வந்த சிறுத்தை ஆட்டை கடித்துக் கொன்றது தெரியவந்தது.

    இது குறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த 2 வருடமாக இங்கு உள்ள கல்குவாரியில் பதுங்கி இருக்கும் சிறுத்தை அவ்வபோது வெளியே வந்து நாங்கள் வளர்த்து வரும் ஆடு, மாடு, நாய்களை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.

    இதனால் கல்குவாரி பகுதியை கடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்பட்டு வருகிறோம். இதுவரை 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளை சிறுத்தை கொன்றுள்ளது. தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்றனர். 

    • சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
    • மழை காலம் தொடங்கியுள்ளதால் விலங்குகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, காட்டு எருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்பொழுது சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. திம்பம் மலைபாதை பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை ரோட்டை கடப்பதும், சாலையோரம் நடமாடுவதும் தொடர் கதையாகி வருகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.

    சத்தியமங்கலம் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் பண்ணாரி அம்மன்கோவில் அருகே அடர்ந்த வனப்பகுதியில் திடீரென சிறுத்தை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சில வாகன ஓட்டிகள் சிறுத்தையை தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது:- பண்ணாரி அருகே வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும், இந்த பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம், தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் விலங்குகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும்.

    இதனால் வாகன ஓட்டிகள் வனவிலங்குகளுக்கு எந்தவொரு தொந்தரவு செய்யாமல் செல்ல வேண்டும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சிறுத்தையை "வா.. வா" என்று விளையாட்டாக அழைத்து வீடியோ எடுத்துள்ளனர்.
    • திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை இவர்களை தாக்கியுள்ளது.

    மத்திய பிரதேசத்தில் சிறுத்தையை "வா.. வா.." என்று அழைத்து இளைஞர்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுத்தை உண்மையிலேயே பாய்ந்து வந்து கடித்ததில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

    உதவி சப்-இன்ஸ்பெக்டர் நிதின் சம்தாரியா, ஆகாஷ் குஷ்வாஹா (23) மற்றும் நந்தினி சிங் (25) ஆகியோர் ஷாதோல் மாவட்டத்தில் உள்ள கோபாரு மற்றும் ஜெய்த்பூர் காடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து சுமார் 50-60 பேர் சுற்றுலாவிற்கு வந்திருந்தனர்.

    காட்டிற்குள் இருந்த புதருக்குள் மறைந்திருந்த சிறுத்தையை "வா.. வா" என்று இவர்கள் விளையாட்டாக அழைத்து வீடியோ எடுத்துள்ளனர். அந்த சமயத்தில் திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை இவர்களை தாக்கியுள்ளது.

    பின்னர் சிறுத்தை அங்கிருந்து தப்பி வனப்பகுதிக்குள் ஓடியது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இளைஞர்களை சிறுத்தை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    • 12 பேர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.
    • சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தம்பதி ஹினில்அன்சாரி-நசீரான்கதூம். இவர்களது மகள் அப்சார்கதூம் (வயது 4). இவர்கள் வால்பாறை ஊசிமலைமட்டம் எஸ்டேட் பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் அவர்கள் தேயிலை தோட்டத்துக்கு சென்றபோது அங்கு வந்த ஒரு சிறுத்தை குழந்தை அப்சார்கதூமை தாக்கி கொன்றது. தகவலறிந்த வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.

    மேலும், சிறுத்தையை கண்காணிக்க 6 இடங்களில் கண்காணிப்பு காமிராவையும் பொருத்தி உள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து கூறிய வனத்துறை அதிகாரிகள், "வால்பாறை தேயிலைத்தோட்டத்தில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ள 6 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தி உள்ளோம். கண்காணிப்பு காமிராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவான உடன் அந்த பகுதியில் கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சிறுத்தையின் கால் தடம் மற்றும் புதர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

    வால்பாறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அருகிலுள்ள நீர்நிலைகளுக்கு குழந்தைகளை அழைத்து செல்லக்கூடாது. வீட்டில் இருந்து வெகுதொலைவில் தனியாக விளையாட அனுமதிக்க வேண்டாம். மேலும் குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் புதர்கள் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    இதுதவிர இறைச்சி மற்றும் உணவுக்கழிவுகளை எப்படி பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது என்பது குறித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சிறுத்தையை பிடிக்கும்வரை சம்பவம் நிகழ்ந்த தேயிலை தோட்டப்பகுதியில் தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டாமென சம்பந்தப்பட்ட எஸ்டேட் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது" என்றனர்.

    • முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    கோவை மாவட்டம் வால்பாறையில் 4 வயது சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    ஊசிமலை மட்டம் எஸ்டேட் பகுதியில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளியின் 4 வயது மகள் அப்சராவை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் பரபப்பை ஏற்படுத்தியது.

    சிறுமியின் குடும்பத்திற்கு முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

    மேலும், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கவும், இரவில் வெளியே வர வேண்டாம் எனவும் வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    • பேருந்தின் ஜன்னல் மீது எதிர்பாராதவிதமாக சிறுத்தை பாய்ந்ததால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா தேசிய பூங்காவில் சஃபாரி சென்று கொண்டிருந்த இருந்த பேருந்தின் ஜன்னல் மீது எதிர்பாராதவிதமாக சிறுத்தை பாய்ந்ததால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேருந்து ஜன்னலில் சிறுத்தை தலையை விட்டு பார்க்கிறது. இதனைப் பார்த்த அச்சமடைந்த சுற்றுலாப் பயணிகள் கூச்சலிட்டு அலறத் தொடங்கினர்.

    கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஷ்வர் காந்த்ரே கடந்த ஜூன் மாதம் பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில் சிறுத்தை சஃபாரியை தொடங்கி வைத்தார். இதனால் உயிரியல் பூங்காவிற்கு வரும் மக்கள் வனவிலங்குகளை மிக அருகில் பார்த்து மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

    • சிறுத்தை நடமாட்டத்தால் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
    • கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், கூண்டு வைத்து பிடிக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் ஓலக்கடை எதிரே தனியாருக்கு சொந்தமான கியாஸ் பங்க் உள்ளது. இது அடர்ந்த காட்டுப்பகுதியாகும். அங்கு தாராபுரத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் வந்துள்ளார்.

    அப்போது காட்டுப்பகுதியில் சிறுத்தை ஒன்று வேகமாக பாய்ந்து சென்றுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவக்குமார் உடனே தாராபுரம் போலீசாருக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு காங்கயம் வனச்சரக அலுவலர் மவுனிகா தலைமையில் வனவர் ஷேக்உமர், வனக்காவலர் குணசேகரன், வனக்காப்பாளர் பூரணி ஆகியோர் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிறுத்தை வந்ததற்கான தடயங்கள் ஏதாவது உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தனர்.

    மேலும் இந்தப் பகுதியின் அருகே ரங்கம்பாளையம், கருவேலம்பள்ளம், ஆச்சியூர், மங்களம் பாளையம் பிரிவு, கோனேரிப்பட்டி, துலுக்கனூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் அதிக அளவில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. சிறுத்தை நடமாட்டத்தால் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள்-பொது மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

    ஏற்கனவே ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கிய சிறுத்தை இதுவரை பிடிபடாத நிலையில் அங்குள்ள சிறுத்தை தான் இங்கு வந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே தாராபுரத்தில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், கூண்டு வைத்து பிடிக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.

    ×