search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாஜ்மஹால்"

    • தாஜ்மஹாலில் நீர் கசிவு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • தாஜ்மஹால் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் விமர்சனம்

    உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலக அதிசயமான தாஜ்மஹாலை பார்ப்பதற்கு உலகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் வருகை தருகின்றனர்.

    ஆக்ராவில் நமையில் பெய்த கனமழையால் தாஜ்மஹாலில் நீர் கசிவு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் தாஜ்மகாலின் மேற்கூரையில் செடி வளர்ந்திருக்கும் புகைப்படத்தை சுற்றுலா பயனை ஒருவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.

    இதனையடுத்து, உலக அதிசயமான தாஜ்மஹால் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த தொல்லியல்துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் படேல், "கடந்த ஆகஸ்ட் மாதமே தூணில் வளர்ந்திருந்த செடிகள் அகற்றப்பட்டது. இந்த செடி 15 நாட்களுக்கு முன்பு உருவாகியுள்ளது. இது விரைவில் நீக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
    • இடி-மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும், இன்று முழுவதும் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    மாநிலங்களில் பெய்த பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை காரணமாக சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    மேலும், காதலர்களின் நினைவுச்சின்னமாக கருதப்படும் தாஜ்மஹாலில் உள்ள ஷாஜகானின் கல்லறை நீரால் சூழப்பட்டுள்ளது. ஆக்ராவில் கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

    இந்த நிலையில் டெல்லிக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இடி-மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும், இன்று முழுவதும் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. உத்தரபிரதேசத்தின் மொராதா பாத்தில் கனமழை, காற்றின் காரணமாக கரும்பு மற்றும் நெல் பயிர்கள் அழிந்தன. உத்தரகாண்ட் மாநிலம் தனக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக மலையில் இருந்து கற்கள், மணல் விழுந்தது. இதனால் அந்த நெடுஞ்சாலை மூடப்பட்டது.

    • பாஜக ஆட்சியில் உலக அதிசயமான தாஜ்மஹால் சர்ச்சைக்குரிய இடமாக மாறியுள்ளது.
    • தாஜ்மஹாலில் சிவன் கோவிலுக்கான அடையாளங்கள் இருந்ததாக வலதுசாரி அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன

    தனது மனைவி மும்தாஜின் நினைவாக முகலாய மன்னர் ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் காதலின் நினைவு சின்னமாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது.

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் பாஜக ஆட்சியில் சர்ச்சைக்குரிய இடமாக மாறியுள்ளது.

    தாஜ்மகால் முன்பு ஒரு இந்து கோவிலாக இருந்தது என்றும் அங்கு சிவன் கோவிலுக்கான அடையாளங்கள் இருந்தன என்று இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகின்றன.

    தேஜோ மஹால் என்று முன்பு அழைக்கப்பட்ட இக்கோயில் முகலாய ஆட்சியில் தாஜ்மஹால் என மாற்றம் செய்யப்பட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    தற்போது கன்வார் யாத்திரை நடைபெற்று வரும் நிலையில், மீனு ரத்தோர் எனும் பெண் ஒருவர் 'கன்வார்' ஒன்றை தோளில் சுமந்துகொண்டு தாஜ்மஹாலில் அத்துமீறி நுழைய முயன்றார். அப்போது அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

    தன்னை அகில பாரத இந்து மகா சபாவின் மாவட்டத் தலைவர் என கூறிக்கொண்ட அவர், "தாஜ்மஹால முன்பு தேஜோ மஹால் எனும் சிவன் கோவிலாக இருந்தது என்றும் சிவபெருமான் தன் கனவில் வந்து அவரது கோவிலில் கங்கை நதியின் புனித நீரை தெளிக்க சொன்னார். ஆனால் போலீசார் என்னை தடுத்துவிட்டனர்" என்று தெரிவித்தார்.

    • ‘இளவரசரை போல் உணர்ந்தேன்’ என்ற தலைப்பில் ராபின்சன் பகிர்ந்துள்ள வீடியோ 35 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    சமூக வலைதளமான டிக்-டாக் மூலம் உலக அளவில் பிரபலமானவர்களில் ஜெர்மனியை சேர்ந்த நோயல் ராபின்சனும் ஒருவர் ஆவார். சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ராபின்சன் மும்பையில் பரபரப்பான பகுதியில் போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவருடன் நடனம் ஆடிய வீடியோ வலைதளங்களில் வைரலாகி இருந்தது.

    இந்நிலையில் அவர் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் முன்பு நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ராபின்சன் மெருன் நிற குர்தா அணிந்து இந்தி பாடலுக்கு நடனம் ஆடும் காட்சிகள் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    'இளவரசரை போல் உணர்ந்தேன்' என்ற தலைப்பில் ராபின்சன் பகிர்ந்துள்ள இந்த வீடியோ 35 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • மாசடைவதிலிருந்து தாஜ்மகாலை பாதுகாக்கும் தொலைநோக்குத் திட்டம்.
    • விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

    டெல்லியில் அபாய அளவை கடந்து காற்று மாசு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் காற்று மாசுவால் சூழ்ந்து காணப்படுகிறது.

    காற்று மாசுவை கட்டுப்படுத்த டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசத்தில் மாசுவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதேபோல், டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த வாகனக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படுகிறது. கட்டுப்பாட்டை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஆக்ராவில் அதிகரித்து வரும் காற்று மாசை குறைக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் இன்று வந்தது.

    அப்போது, தாஜ்மகால் வழக்கில், மாசடைவதிலிருந்து தாஜ்மகாலை பாதுகாக்கும் தொலைநோக்குத் திட்டத்தை இரண்டு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு மற்றும் இந்திய தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தாய் உயிரிழந்த நாள் முதல் அம்ருதீன் ஷேக் தாவூத் அவரது நினைவலைகளால் தத்தளித்து வந்தார்.
    • இறந்த தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகனின் செயல் இப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் . இவரது மனைவி ஜெய்லானி பீவி. இவர்களுக்கு 4 மகள், 1 மகன் உள்ளனர். இவர் சென்னையில் ஹார்டு வேர்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார். குழந்தைகள் சிறு வயதாக இருக்கும் போதே அப்துல் காதர் இறந்து விட்டார்.

    இதையடுத்து ஜெய்லானி பீவி கடையை நிர்வகித்ததோடு இல்லாமல் குழந்தைகள் அனைவரையும் நல்லப்படியாக படிக்க வைத்தார். அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்து வாழ்வில் நல்ல நிலைக்கு உயர்த்தினார்.

    அவரது ஒரே மகனான அம்ருதீன் ஷேக் தாவூத் பட்டப்படிப்பு முடித்து கொண்டு சென்னையில் தொழிலபதிராக உள்ளார். அவர் உயர்ந்த நிலையை அடைய ஜெய்லானி பீவி செய்த தியாகம் ஏராளம். கஷ்டப்பட்டு பிள்ளைகளை அவர் வளர்க்கபட்டபாட்டை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

    இதனால் ஜெய்லானி பீவியின் மீது மகன் அம்ருதீன் ஷேக் தாவூத் மற்றும் மகள்கள் அனைவரும் மிகவும் பாசமாக இருந்தனர். மேலும் அரும்பாடு பட்டு வளர்த்து ஆளாக்கிய காரணத்தினால் அம்ருதீன் தனது தாயின் வழிகாட்டுதலின்படியும் அவரிடம் அனுமதி பெற்றே எந்த ஒரு காரியத்தையும் செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு தனது 72 வயதில் ஜெய்லானி பீவி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். தாய் உயிரிழந்த நாள் முதல் அம்ருதீன் ஷேக் தாவூத் அவரது நினைவலைகளால் தத்தளித்து வந்தார். தாயின் மறைவு அவரை மிகவும் வாட்டியது. அப்போது இறந்த தாய்க்கு நினைவு இல்லத்தை கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார்.

    அதன் அடிப்படையில் திருச்சியில் உள்ள கட்டிட வடிவமைப்பாளர் ஒருவரை தொடர்பு கொண்டு நினைவுச்சின்னத்தை சொந்த ஊரான அம்மையப்பன் கிராமத்திலேயே தாஜ்மஹால் வடிவில் கட்டலாம் என்று யோசனை தெரிவித்தார்.

    தொடர்ந்து நினைவு இல்லம் கட்டுமான பணிகள் தொடங்கி வேகமெடுத்தன. ராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்கள் வரவழைக்கப்பட்டு ஏராளமான தொழிலாளர்களுடன் பணிகள் தொடங்கின. கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடங்கிய பணி முடிவடைந்தது. ரூ.5 கோடி செலவில் தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லம் தயாரானது. நினைவு இல்லத்தின் உள்ளே ஜெய்லானி பீவியின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நினைவு இல்லத்தின் திறப்பு விழா கடந்த 2-ம் தேதி நடைபெற்று பொது மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. இந்த நினைவு இல்லத்தை எம்மதத்தினரும் வந்து பார்த்துவிட்டு செல்லலாம். 5 வேளை தொழுகை நடத்துபவர்கள் இங்கு தொழுகை நடத்திக் கொள்ளலாம். அதேபோன்று மதரஸா பள்ளியும் இங்கே இயங்கி வருகிறது. இதில் தற்போது 10 மாணவ- மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

    மேலும் ஜெய்லானி பீவி அமாவாசைக்கு அடுத்த நாள் உயிரிழந்ததால் அமாவாசை தோறும் 1000 பேருக்கு அம்ருதீன் ஷேக் தாவூது தனது கையால் பிரியாணி சமைத்து அன்னதானம் வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து அமாவாசைக்கு முதல் நாளே அம்மையப்பன் வந்து தனது கையால் பிரியாணி தயார் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார்.

    இறந்த தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகனின் செயல் இப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் உலக அதிசயத்தில் ஒன்றாக இடம்பிடித்தாலும் தனது தாய்க்காக மகன் கட்டிய தாஜ்மஹால் இவ்வுலகில் காலம் காலமாக பேசப்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நினைவு இல்லத்தை ஏராளமானோர் பார்த்து செல்லும் போது இன்னும் தன்னுடன் தாய் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாக அம்ருதீன் ஷேக் தாவூத் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    • நிலுவையில் உள்ள நிலுவைத்தொகையும் அடிப்படையில் அரசு கட்டிடங்கள் மற்றும் மதவழிபாட்டு தலங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
    • சட்ட விதிகளை பின்பற்றி சில இடங்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஆக்ரா:

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் ஆக்ராவில் உள்ளது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் முறையாக சொத்து வரி மற்றும் குடிநீர் செலுத்தவில்லை என கூறி ஆக்ரா மாநகராட்சி சார்பில் இந்திய தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கடந்த 2021-2022 மற்றும் 2022-2023-ம் நிதியாண்டில் குடிநீர் வரியாக ரூ.1.9 கோடியும், சொத்து வரியாக ரூ.1.5 லட்சமும் செலுத்துமாறு நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் நிலுவையில் உள்ள வரிபாக்கிகளை 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தொல்லியல்துறை கண்காணிப்பு அதிகாரி ராஜ்குமார் பட்டேல் கூறுகையில், நினைவு சின்னங்களுக்கு சொத்துவரி பொருந்தாது. மேலும் அங்கு தண்ணீரை வணிக ரீதியாக பயன்படுத்தாததால் நாங்கள் அதற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. வளாகத்திற்குள் பசுமையை பராமரிக்க மட்டுமே தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இந்த நோட்டீஸ் தவறுதலாக அனுப்பப்பட்டிருக்கலாம். இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்படும் என்றார்.

    இதுதொடர்பாக நகராட்சி கமிஷனர் நிகில் பன்டே கூறுகையில், மாநிலம் தழுவிய புவியியல் அடிப்படையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

    நிலுவையில் உள்ள நிலுவைத்தொகையும் அடிப்படையில் அரசு கட்டிடங்கள் மற்றும் மதவழிபாட்டு தலங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சட்ட விதிகளை பின்பற்றி சில இடங்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. தொல்லியல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட வழக்கில் அவர்களிடம் இருந்து பெறப்படும் பதிலின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    உதவி நகராடசி ஆணையரும், தாஜ்கஞ்ச் மண்டலத்தின் பொறுப்பாளருமான சரிதாசிங் கூறுகையில், செயற்கை கோள் படங்கள் மேப்பின் மூலம் தனியார் நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனறார்.

    • 2021-2022-ம் ஆண்டில் மொத்தம் 30 லட்சத்து 29 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலை பார்வையிட்டுள்ளனர்.
    • டெல்லியில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற செங்கோட்டை மற்றும் குதுப் மினார் உள்நாட்டு சுற்றுலா பயணிகளால் அதிகம் பார்வையிடப்பட்ட நினைவு சின்னங்களாக உள்ளன.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் மத்திய அரசால் பாதுகாக்கப்படும் கட்டணம் வசூலிக்கும் நினைவுச் சின்னங்கள் ஏராளமாக உள்ளன. இதில் ஆக்ராவில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற தாஜ்மஹாலும் ஒன்று. இந்த நிலையில் உலக சுற்றுலா தினத்தையொட்டி மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் 'இந்திய சுற்றுலா புள்ளிவிவரங்கள் 2022' என்கிற பெயரில் 280 பக்கங்கள் கொண்ட அறிக்கையை துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் வெளியிட்டார்.

    அதில் 2021-2022-ம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளால் அதிகம் பார்வையிடப்பட்ட நினைவுச் சின்னங்களில் தாஜ்மஹால் முதல் இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2021-2022-ம் ஆண்டில் மொத்தம் 30 லட்சத்து 29 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலை பார்வையிட்டுள்ளனர். அதை தொடர்ந்து, டெல்லியில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற செங்கோட்டை மற்றும் குதுப் மினார் உள்நாட்டு சுற்றுலா பயணிகளால் அதிகம் பார்வையிடப்பட்ட நினைவு சின்னங்களாக உள்ளன.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×