search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திசையன்விளை"

    • வீட்டு வேலை முடிந்து வந்த ரெத்னம் தனது மகனை காணாதது குறித்து அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சண்முகபுரத்தை சேர்ந்தவர் ஜேக்கப். இவரது மனைவி ரெத்னம். இவர்களுக்கு ஜெனிபர் (வயது 14) என்ற மகளும், சிவராஜ்(12) என்ற மகளும் உள்ளனர்.

    ஜேக்கப் சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ரெத்னம் திசையன்விளையில் ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் சிவராஜ் சண்முகபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். ஜெனிபரும் அதே பள்ளியில் படித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு ரெத்னம் வீட்டு வேலைக்கு சென்று விட்டார். மதியம் பள்ளி முடிந்து சிவராஜ் வீட்டுக்கு வந்துள்ளார். தொடர்ந்து அவர் புத்தகப்பையை வைத்து விட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

    அவர் மாலையில் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் வீட்டு வேலை முடிந்து வந்த ரெத்னம் தனது மகனை காணாதது குறித்து அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார்.

    தொடர்ந்து திசையன்விளை போலீசில் புகார் அளிக்கவே, போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஊருக்கு அருகே உள்ள நந்தன் குளத்தில் சிவராஜின் சைக்கிளும், அதன்மீது அவரது சட்டையும் இருந்தது.

    இதனால் அவர் குளத்தில் குளிக்க சென்ற இடத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகம் அடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக திசையன்விளை தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று குளத்தில் தேடிய நிலையில், நள்ளிரவில் சிவராஜ் பிணமாக மீட்கப்பட்டார்.

    இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • கைப்பற்றப்பட்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் வேதமாணிக்கம். இவரது மனைவி செல்வராணி (வயது 57). இவர் சம்பவத்தன்று திசையன்விளை பொம்மிநகர் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற திசையன்விளை இன்ஸ்பெக்டர் சீதா லெட்சுமி தலைமையிலான போலீசார் செல்வராணியை சோதனை செய்தனர்.

    அப்போது அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சா மற்றும் விற்ற பணம் ரூ.500-ஐ பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    கைதான செல்வராணி மீது கஞ்சா வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசாரால் அடிக்கடி கைதாகி உள்ள செல்வராணி, தற்போது போலீசில் சிக்காமல் இருப்பதற்காக தனது இருப்பிடத்தை தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகருக்கு மாற்றிவிட்டார்.

    அங்கிருந்து அவ்வப்போது திசையன் விளைக்கு வந்து கஞ்சா சப்ளை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • கோவில் கொடைவிழாவில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
    • முக்கிய கொலையாளிகளான விபின், ராஜ்குமார், வருண்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கக்கன் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன்கள் மகேஷ்வரன்(வயது 41), மதியழகன் (39), மதிராஜா (40). இவர்கள் டிரைவர்களாக வேலை பார்த்து வந்தனர். இதில் மதியழகன், மதிராஜா ஆகியோருக்கு தலா 3 மகள்கள் உள்ளனர்.

    நேற்று கக்கன் நகர் அருகே ஓடைக்கரையில் சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா நடைபெற்றது. இதில் முருகன் தனது மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். நேற்று நள்ளிரவில் கோவிலில் கரகாட்ட நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது சாமிக்கு பூஜை நடைபெற்றதால் கரகாட்ட நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் முருகன் குடும்பத்தினருக்கும், கக்கன் நகரை சேர்ந்த முருகேஷ்வரியின் குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இந்த வாக்குவாதம் முற்றியதில் முருகேஷ்வரியின் மகன்கள் உள்பட சிலர் சேர்ந்து முருகனின் மகன்களான மதியழகன், மதிராஜா ஆகியோரை ஆடுகளை பலியிடுவதற்காக கொண்டு வந்திருந்த கத்தியால் சரமாரி குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். மேலும் இதனை தடுக்க வந்த மகேஷ்வரனுக்கும் கத்தி குத்து விழுந்தது.

    கைது செய்யப்பட்ட ராஜ்குமார், வருண்குமார், விபின்.

    கைது செய்யப்பட்ட ராஜ்குமார், வருண்குமார், விபின்.

    பின்னர் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) சுந்தரவதனம் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    தொடர்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மகேஷ்வரனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொலை செய்யப்பட்ட 2 பேர் உடலும் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தடயவியல் நிபுணர் ஆனந்தி சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரித்தார். கோவில் கொடைவிழாவில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அதில் கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதுகுறித்த விபரம் வருமாறு:-

    முருகன் குடும்பத்தினர் வசிக்கும் அதே தெருவில் முருகேஷ்வரியின் குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். முருகேஷ்வரியின் மகன்களான வருண்குமார்(27), ராஜ்குமார்(28), விபின்(27) ஆகியோரும் அந்த தெருவிலேயே வசித்து வருகின்றனர். இவர்கள் 3 பேருக்கும் மது குடிக்கும் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவில் கோவில் கொடைவிழாவையொட்டி 3 பேரும் போதையில் அங்கு வந்துள்ளனர்.

    அப்போது கரகாட்ட நிகழ்ச்சியின்போது முருகனின் 3 மகன்களுக்கும், முருகேஷ்வரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே போதையில் இருந்த முருகேஷ்வரியின் மகன்கள் 3 பேரும் சேர்ந்து பதிலுக்கு தட்டிக்கேட்டு தகராறில் ஈடுபட்டபோது இந்த கொலை சம்பவம் நடந்தது விசாரணையில் தெரியவந்தது.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட 8 பேர் மீது பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சாட்டினர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே முக்கிய கொலையாளிகளான விபின், ராஜ்குமார், வருண்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய மேலும் 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
    • புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை மெயின் பஜாரில் அற்புத விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் அன்னை மூகாம்பிகை ஆலயம் தனியாக உள்ளது.

    நேற்று மாலையில் 6.40 மணிக்கு கோவில் பூசாரி முகேஷ் பட்டர் மூகாம்பிகைக்கு அலங்காரம் செய்து முடித்துவிட்டு பூஜைக்கு தயாராகி கொண்டிருந்தார்.

    அங்கு தனது மருமகளின் பிரசவம் நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்று வேண்டி அதே பகுதியை சேர்ந்த முத்து ஆச்சாரி தனது மனைவியுடன் அங்கு வந்திருந்தார். அப்போது மூகாம்பிகை கல்சிலையில் அம்மன் கண்களில் இருந்து ஒருவிதமான ஒளி வருவதை அவரது மனைவி பார்த்துள்ளார்.

    இதை அருகில் இருந்த தனது கணவரிடம் கூறினார். அவரும் அதை பார்த்து வியந்துள்ளார். உடனே அவர் அங்கிருந்த பூசாரியை அழைத்து அம்மனின் கண்கள் திறந்திருப்பது போல் காட்சியளித்ததை பார்க்குமாறு கூறினார்.

    உடனே அங்கிருந்த பக்தர்களும் திரண்டு வந்து பார்த்து வியந்தனர். இதனை ஏராளமானோர் புகைப் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதால் சுமார் 1 மணி நேரத்தில் காட்டுத்தீ போன்று தகவல் பரவி ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்களை நீண்ட வரிசையில் நிறுத்தி வரிசையாக பார்த்து செல்வதற்கு போலீசார் அனுமதித்தனர்.

    இந்த அதிசயத்தை காண இரவு 10.30 மணி அளவிலும் கடுமையான கூட்டம் அலைமோதியது. வந்திருந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பழம், லட்டு பிரசாதமாக தங்கையா கணேசன் வழங்கினார். அதன்பின்னர் கோவில் நடையை அடைக்க போலீசார் உத்தரவிட்டனர். இதனால் இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

    அதன்பின்பும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் அம்மனை காணவந்தனர். ஆனால் கோவில் நடை அடைக்கப்பட்டதால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இந்நிலையில் இன்று காலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் அப்போது அம்மனின் கண்கள் வழக்கம் போல் இயல்பாகவே காட்சியளித்தது. அங்கு அம்மனுக்கு ஏற்றி வைத்திருந்த விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.

    • திசையன்விளை செக்கடி தெருவில் ஸ்ரீதேவி அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது.
    • அம்மன் கண்களில் வெள்ளை நிறத்தில் ஒளி வீசியதாக கூறப்படுகிறது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை செக்கடி தெருவில் ஸ்ரீதேவி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 21 நாட்களுக்கு முன்பு வருஷாபிஷேக விழா நடந்தது. அதன்பின்னர் தினமும் காலையில் கோவிலில் பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கோவில் பூசாரியான தர்மராஜ், கோவில் நடையை திறந்து பூஜை செய்தார். அப்போது அம்மன் கண்களில் இருந்து வெள்ளை நிறத்தில் ஒளி வீசியதாக கூறப்படுகிறது. அதை அங்கு சுவாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் பார்த்து வியந்துள்ளனர். இந்த தகவல் பக்கத்தில் வசிப்பவர்களுக்கும் காட்டுத்தீ போல் பரவியது.

    உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு வந்து வியப்புடன் பார்த்து வணங்கி சென்றனர். சிலர் தங்கள் செல்போனில் படம் பிடித்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதைப்பார்த்து அக்கம் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்களும் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் நடை மதியம் 1 மணிக்கு அடைக்கப்பட்டது.

     இந்த அதிசய நிகழ்வு குறித்து கோவில் பூசாரி தர்மராஜ் கூறியதாவது:-

    தினமும் காலை 9 மணிக்கு கோவில் நடையை திறந்து பூஜை செய்வேன். அதன்படி நேற்றும் காலையில் வந்து அபிஷேகம், அலங்காரம் மற்றும் நெய்வேத்தியம் உள்ளிட்டவற்றை செய்தேன். அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அம்மனே வந்து நேரடியாக என்னை சந்தித்தது போல் உணர்ந்தேன். அம்மன் கண்ணை திறந்து என்னை பார்த்தது போல் இருந்தது.

    அம்மனுடைய இடது கண் மனிதர்களின் கண் போல் 2 புறமும் வெள்ளையாகவும், நடுவில் கருவிழியும் இருப்பது போல் இருந்தது.

    என்னை பார்த்து அம்பாள் கேள்வி கேட்பது போல் உணர்ந்தேன். அந்த நேரம் தரிசனம் செய்ய வந்த ஒருவர் வந்தார். அவரை அம்மனை பார்க்க சொன்னேன். உடனே அம்மனை பார்த்த அந்த பக்தர், வலது கண் மனித கண் போல் காட்சியளிப்பதாக தெரிவித்தார். இது உண்மைதானா என்பது குறித்து சந்தேகம் அடைந்து அக்கம்பக்கத்தில் இருந்த அனைவரையும் அழைத்து காண்பித்தேன்.

    என்னுடைய 50-வது வயதில் நான் தற்போது பூஜை செய்து வருகிறேன். வீடுகளில், கோவில்களில் பூஜை செய்துள்ளேன். ஆனால் இதுவரை இப்படி ஒரு அதிசய நிகழ்வை கண்டதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த ஆகஸ்ட் மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் இந்த ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார்.
    • டாக்டர்களோ, நர்சுகளோ இரவு நேர பணியில் இருப்பதில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியாற்றும் வகையில் பல்வேறு வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் ராதாபுரம் அருகே உள்ள பாப்பாங்குளத்தை சேர்ந்த ராஜ் என்பவரது மனைவி சுபத்ரா தேவி (வயது24) என்பவர் நேற்று முன்தினம் இரவில் பிரசவ வலி ஏற்பட்டு பிரசவத்திற்காக திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார்.

    அப்போது அங்கு டாக்டர்கள், நர்சுகள் இரவு பணியில் இல்லை. இதனால் குடும்பத்தினர் செய்வதறியாமல் திகைத்த நிலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பிரசவ வலியால் துடித்த சுபத்ரா தேவிக்கு தானாகவே அழகான பெண் குழந்தை பிறந்தது.

    அதன் பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சுபத்ரா தேவி மற்றும் குழந்தை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    சுமார் 1 மணி நேரமாக பிரசவ வலியால் கர்ப்பிணி பெண் துடித்த நிலையில் டாக்டர்கள் இல்லாததால் உறவினர்கள் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை அப்பகுதி மக்கள் திசையன்விளை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவர்கள் நுழைவு வாயில் கதவை இழுத்து பூட்டினர். டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட யாரையும் ஆஸ்பத்திரிக்குள் அவர்கள் அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்த நிலையில் தகவல் அறிந்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரிய ராஜ்குமார், உதய லட்சுமி ஆகியோர் வந்து பொது மக்களை சமாதானம் செய்தனர்.

    ஆனாலும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை. தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் தலைமையில் குழுவினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்களிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் இந்த ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இல்லாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். அதன் பின்னர் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என்று பெயர் பலகை மட்டும் பெரிதாக வைத்துள்ளீர்கள். ஆனால் டாக்டர்களோ, நர்சுகளோ இரவு நேர பணியில் இருப்பதில்லை.

    மேலும் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற வந்தாலும் கூட, அருகில் உள்ள சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கோ அல்லது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கோ தான் சிகிச்சை பெறுவதற்கு அனுப்பி வைக்கிறீர்கள். எனவே 24 மணி நேரமும் டாக்டர்கள், நர்சுகள் பணியில் இருக்க வேண்டும் என்று அவர்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.

    இதையடுத்து ஜனவரி மாதத்திற்குள் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருப்பார்கள். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் உறுதி அளித்தார்.

    இதையடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திசையன்விளையில் அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி 4 நாட்கள் நடைபெற்றது.
    • பெண்கள் பிரிவில் முதல் பரிசு தொகையை ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் வழங்கினார்.

    திசையன்விளை:

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திசையன்விளையில் அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி 4 நாட்கள் நடைபெற்றது.

    முதல்பரிசு

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் பெண்கள் இறுதி ஆட்டத்தில் வடக்கு ெரயில்வே மற்றும் சென்ட்ரல் ெரயில்வே அணிகள் மோதின.

    இதில் 39-26 என்ற புள்ளிக்கணக்கில் வடக்கு ெரயில்வே அணி வெற்றி பெற்று முதல் பரிசு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பையை தட்டி சென்றது. 2-வது இடம் பிடித்த சென்ட்ரல் ரெயில்வே அணி ரூ. 1 லட்சம் மற்றும் கோப்பையும், 3-வது இடம் பிடித்த சவுத் சென்ட்ரல் அணிக்கும், 4-வது இடம் பிடித்த கிழக்கு ரெயில்வே அணிக்கும் தலா ரூ. 75 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையும் கிடைத்தது.

    சபாநாயகர் அப்பாவு

    ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும், கிரீன் ஆர்மி அணியும் மோதின. இதில் தமிழ் தலைவாஸ் அணி 41:30 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று முதல் பரிசு ரூ.2 லட்சம் மற்றும் கோப்பையை தட்டி சென்றது. 2-வது இடம் பிடித்த கிரீன் ஆர்மி அணிக்கு ரூ.1½ லட்சம் மற்றும் கோப்பையும் 3-வது இடம் பிடித்த சென்னை வருமானவரித்துறை அணிக்கும், 4-வது இடம் பிடித்த பெங்களூர் பரோடா வங்கி அணிக்கும் தலா ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையும் கிடைத்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகை மற்றும் வெற்றி கோப்பைகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

    வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசு கோப்பைகளை வி.எஸ்.ஆர். சுபாஷ் மற்றும் வி.எஸ்.ஆர்.சுரேஷ் ஆகியோர் வழங்கினார். ஆண்கள் பிரிவில் முதல் பரிசை நாங்குநேரி யூனியன் தலைவர் சவுமியா ஆரோக்கிய எட்வின், 2-வது பரிசை ராதாபுரம் யூனியன் துணைத் தலைவர் இளையபெருமாள், 3-வது பரிசை மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் நம்பி, 4-வது பரிசை அப்புவிளை பஞ்சாயத்து தலைவர் சாந்தாமகேஸ்வரன் மற்றும் மயோபதி குழும தலைவர் டாக்டர் ராமசாமி ஆகியோர் வழங்கினர்.

    பரிசளிப்பு

    பெண்கள் பிரிவில் முதல் பரிசு தொகையை ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் வழங்கினார். 2-ம் பரிசு தொகையை ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எஸ்தாக் டென்னிசன், 3-வது பரிசு தொகையை உறுமங்குளம் பொன் இசக்கி பாண்டியன், நவலடி சரவணகுமார், கஸ்தூரிரங்கபுரம் பாலன் ஆகியோரும், 4-வது பரிசு தொகையை ராதாபுரம் கூட்டுறவு சங்க தலைவர் அரவிந்தன், சிதம்பராபுரம் பேபி முருகன், உதயத்தூர் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி மணிகண்டன் ஆகியோர் வழங்கினர்.

    பரிசளிப்பு விழாவில் பாளையங்கோட்டை யூனியன் தலைவர் தங்கபாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவ அய்யப்பன், கனகராஜ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், களக்காடு ஒன்றிய செயலாளர் பி.சி.ராஜன், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின், கல்லிடைக்குறிச்சி நகர செயலாளர் இசக்கி பாண்டியன், மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் முரளி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டத்தில் நடைபெறும் மிகச்சிறப்பு வாய்ந்த விளையாட்டு கபடி போட்டி.
    • தமிழக இளைஞர்கள் தற்போது மிக ஆர்வமாக கலந்து கொண்டு வருகின்றனர் என கூறி கொண்ட விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை கூறினார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளைளில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ஆண், பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டியினை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், மாவட்ட திட்டக்குழு தலைவரும், நெல்லை மாவட்ட அமைச்சூர் கபடி கழக சேர்மனுமான வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தொடங்கி வைத்தார்.

    40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியினை தொடங்கி வைத்து பேசும் போது, தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டத்தில் நடைபெறும் மிகச்சிறப்பு வாய்ந்த விளையாட்டு கபடி போட்டி. இப்போட்டியில் தமிழக இளைஞர்கள் தற்போது மிக ஆர்வமாக கலந்து கொண்டு வருகின்றனர் என கூறி கொண்ட விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை கூறினார்.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எஸ்த்தாக் கெனிஷ்டன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர். ரமேஷ், ஊராட்சிமன்ற தலைவர் அருள், தக்காளி குமார், முன்னாள் திசையன்விளை நகர தலைவர் ராஜன், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை போரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், ஒன்றிய தொண்டரணி சங்கர், குமார், எழில் ஜோசப், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வி.எஸ்.ஆர். பள்ளி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் நீட் நுழைவுத்தேர்வு எழுதினர்.
    • அஸ்வந்த் 557 மதிப்பெண்களும், முத்துராமன் 512 மதிப்பெண்களும் பெற்றனர்.

    திசையன்விளை:

    மருத்துவ கல்விக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 7-ந்தேதி நடந்தது. இந்த தேர்வினை திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். இதில் அனைத்து மாணவர்களும் வெற்றிபெற்றனர்.

    மாணவர்கள் அஸ்வந்த் 557 மதிப்பெண்களும், முத்துராமன் 512 மதிப்பெண்களும், அனிஷ் 487 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனர். இவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் படிப்பதற்கு இடம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

    சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், பள்ளி முதல்வர் பாத்திமா எலிசபெத் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

    • ஈனமுத்துக்கும், சுடலைக்கும் தோட்டத்தில் ஆடு, மாடுகள் மேய்ப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
    • ஈனமுத்துவை அடித்து உதைத்து ரத்தக்காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள அழகப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஈனமுத்து(வயது 40). அதே ஊரில் நடுத்தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் சுடலை(28). இவர்களுக்குள் தோட்டத்தில் ஆடு, மாடுகள் மேய்ப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று 2 தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    அப்போது ஈனமுத்துவை அழகப்பபுரம் நடுத்தெருவை சேர்ந்த கருப்பன், அவரது மனைவி பார்வதி, சுடலை, அவரது மனைவி சுப்புலெட்சுமி, பானு ஆகியோர் சேர்ந்து அடித்து உதைத்து ரத்தக்காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக ஈனமுத்து திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இதேபோல் சுடலை தன்னை ஈனமுத்து, கருப்பன், மகேஷ் ஆகியோர் தாக்கி காயப்படுத்தியதாக புகார் அளித்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பிரிய ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து 2 தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    • திசையன்விளை புளியடி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் பழ வியாபாரி. இவர் இன்று காலை திசையன்விளை பஸ் நிலையம் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
    • பஜார் பகுதியில் உள்ள ஒரு வங்கி அருகே சென்றபோது அவரது பின்னால் வந்த அரசு பஸ் மொபெட் மீது எதிர்பாராதவிதமாக மோதியததில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    திசையன்விளை:

    திசையன்விளை புளியடி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 58). பழ வியாபாரி. இவர் இன்று காலை திசையன்விளை பஸ் நிலையம் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    பஸ்சில் சிக்கினார்

    அங்கு பஜார் பகுதியில் உள்ள ஒரு வங்கி அருகே சென்றபோது அவரது பின்னால் வந்த அரசு பஸ் மொபெட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. அதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது தலைமீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது.

    இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து திசையன்விளை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பலியான ராஜேந்திரன் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரான நாங்குநேரி அருகே உள்ள இலங்குளத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த ராஜேந்திரனின் மனைவி பிச்சைக்கனி தூத்துக்குடி மாவட்டம் படுக்கப்பத்து பிச்சுவிளை அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    • திசையன்விளை பகுதியில் மழை சரியாக பெய்யாததால் இங்குள்ள குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.
    • கோடை வெயிலால் ஆழ்துளை கிணறு மூலம் கிடைத்த தண்ணீரும் வற்றிவிட்டது.

    திசையன்விளை:

    திசையன்விளை பகுதியில் பருவகால மழை சரியாக பெய்யாததால் இங்குள்ள முதலாளிகுளம், எருமைகுளம், செங்குளம், குருவி சுட்டான்குளம், சுகாதியாகுளம் உள்பட அனைத்து குளங்களும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

    இதுவரை பெய்த மழையால் ஒரு அடி ஆழம் கூட நனையவில்லை. இப்பகுதியில் சென்ற ஆண்டும் கால மழை சரியாக பெய்யவில்லை. விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பாற்ற 400 முதல் 600 அடி ஆழம் வரை ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதில் கிடைத்த தண்ணீரில் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வந்தனர்.

    கோடை வெயிலால் ஆழ்துளை கிணறு மூலம் கிடைத்த தண்ணீரும் வற்றிவிட்டது. இதனால் தென்னை மற்றும் முருங்கை விவசாயிகள் தண்ணீரின்றி அவதிபட்டனர். இந்த ஆண்டாவது நல்ல மழை பெய்யும் பயிர்களை காப்பாற்றிவிடலாம் என நம்பிக்கையில் இருந்தனர்.

    இந்த ஆண்டும் இதுவரை மழை சரியாக பெய்யாததால் சென்ற ஆண்டு நிலைதான் இந்த ஆண்டும் ஏற்பட்டுவிடுமோ என்று கவலை அடைந்துள்ளனர். இப்பகுதியில் கடந்த 4 நாட்களாக மழை இல்லை இன்று காலையிலும் வெயில் அடிக்கிறது.

    ×