search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்டுக்கல்"

    • செங்கல் சூளைகளுக்கான செம்மண் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார்.
    • அரசியல் காரணங்களுக்காக இந்த சோதனை நடத்தப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 49). இவர் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். மேலும் செங்கல் சூளைகளுக்கான செம்மண் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 18-ந் தேதி காலை மதுரையை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 15 பேர் 6 கார்களில் செந்தில்குமார் வீட்டில் சோதனை நடத்துவதற்காக வந்தனர். வீட்டின் பிரதான நுழைவு வாயிலை பூட்டிய அதிகாரிகள் வீட்டில் இருந்தவர்கள் வெளியேறவும், உள்ளே நுழையும் வெளி நபர்களையும் சோதனையிட்டனர்.

    இந்த வீட்டின் அருகில் இருந்த அலுவலகம், விருந்தினர் ஓய்வு இல்லம் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி கனியாவதி ஆகிய குடும்பத்தினர் மட்டும் வீட்டில் இருந்தனர்.

    கடந்த 4 நாட்களாக நடந்த சோதனை இன்று அதிகாலை நிறைவு பெற்றது. சோதனையின் போது செந்தில் குமாரின் பங்களா அருகில் ஒரு பாழடைந்த வீடு இருந்தது குறித்து அதிகாரிகள் கேட்டனர். அதில் பழைய பொருட்கள் இருப்பதாக அவர் கூறினார். அந்த அறையின் சாவியை கேட்டபோது, அது தொலைந்து போய் விட்டதாக தெரிவித்தார். இதனால் கடப்பாறையை எடுத்து வரச்சொல்லி அந்த அறையை உடைத்து பார்த்தனர். அப்போது அந்த வீட்டுக்குள் சொத்து தொடர்பாக முக்கிய ஆவணங்கள் இருந்தது தெரிய வந்தது. மேலும் கணக்கில் வராத நகைகள் மற்றும் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரிய வரவே அதனையும் கைப்பற்றினர்.

    செந்தில்குமாரின் உறவினர்களான குழந்தைவேல் மற்றும் இவரது தம்பி முருகன் ஆகியோர் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் நகைக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் இவர்களுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கும் இயங்கி வருகிறது. இந்நிலையில் செந்தில்குமாரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட அதே நேரத்தில் குழந்தைவேல், முருகன் ஆகியோருக்கு சொந்தமான நகைக்கடை, பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறையால் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் 6 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர். குழந்தைவேல் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடுமலைப்பேட்டை ரோட்டில் 4 ஏக்கர் பரப்பளவில் புதிய வீட்டு மனை ஒன்றை உருவாக்கினார். இதற்காக 1000 கிடாய்களை வெட்டி மாபெரும் விருந்து வழங்கப்பட்டது. அப்போது இருந்தே இவருக்கு போட்டியாக தொழில் நடத்தி வருபவர்கள் இவர் மீது அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன் பேரில்தான் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

    இது தவிர பைனான்ஸ் அதிபர் செந்தில்குமார் பா.ஜ.க. மாநில நிர்வாகிக்கு நெருக்கமானவர். இதனால் அரசியல் காரணங்களுக்காக இந்த சோதனை நடத்தப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 4 நாட்களாக ஒட்டன்சத்திரம் மற்றும் சத்திரப்பட்டியில் நடந்த வருமான வரித்துறை சோதனை முடிவுக்கு வந்துள்ளதால் அதன் பிறகு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த பரபரப்பு அதிகரித்துள்ளது.

    • தீவிர சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 1 லட்சம்.
    • காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50,000.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று (12-ந்தேதி) இரவு 9.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் தாடிக்கொம்பு, பாலதிருப்பதி நகரைச் சேர்ந்த மணிமுருகன் (வயது 30), மாரியம்மாள் (வயது 50), தேனி மாவட்டம் சீலம்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த சுருளி (வயது 50), சுப்புலட்சுமி (வயது 45), திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த ராஜசேகர் (வயது 36), கோபிகா (வயது 6) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.


    மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த தீ விபத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • திருமணமான ஒரே வருடத்தில் தீபக் பாண்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    • புரோட்டா சாப்பிட்டு நெஞ்சு வலி வந்து கபடி வீரர் உயிரிழந்ததால் அவரது நண்பர்களும் கிராமத்தினரும் அதிர்ச்சியடைந்தனர்.

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரத்தைச் சேர்ந்தவர் தீபக் பாண்டி (வயது 28). இவர் கபடி விளையாட்டு வீரர். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் புரோட்டா வாங்கி வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டார். பின்னர் தீபக் பாண்டி வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே மயங்கி விழுந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் வாடிப்பட்டி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளிதும் பலனின்றி பரிதாபமாக தீபக் பாண்டி இறந்தார். திருமணமான ஒரே வருடத்தில் தீபக் பாண்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. புரோட்டா சாப்பிட்டு நெஞ்சு வலி வந்து கபடி வீரர் உயிரிழந்ததால் அவரது நண்பர்களும் கிராமத்தினரும் அதிர்ச்சியடைந்தனர்.

    • பேராசிரியர் ரங்கநாதன் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வகையில் மாணவர்களிடம் பேசி வந்துள்ளார்.
    • மாணவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பல்கலை துணைவேந்தர் விசாரணை மேற்கொண்டார்.

    திண்டுக்கல் காந்தி கிராம நிகர்நிலை பல்கலைகழக மாணவர்களிடம் சமஸ்கிருதம் படிக்க சொல்வதாகவும், திராவிடம் குறித்து இழிவாக பேசுவதாகவும் பேராசிரியர் ரங்கநாதன் மீது மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

    சுகாதார ஆய்வாளருக்கான பயிற்சி வழங்கும் பேராசிரியர் ரங்கநாதன் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வகையில் மாணவர்களிடம் பேசி வந்துள்ளார் என்றும் அவர் ஒரு வாட்சப் குழுவை ஆரம்பித்து மாணவர்களை அதில் சேர்த்து பாஜகவுக்கு ஆதரவான பதிவுகளை பகிர்ந்து வருவதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

    மாணவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பல்கலை துணைவேந்தர் விசாரணை மேற்கொண்டார். அதில் புகாரில் உண்மை இருந்ததால் பேராசிரியர் ரங்கநாதனை ஆறு மாதம் விருப்ப ஓய்வில் செல்ல துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார்.

    • குரங்குகள் சேதப்படுத்தியதற்காக புதிய வீடு எவ்வாறு கட்டித்தர முடியும் என தெரிவித்துள்ளனர்.
    • மக்கள் நத்தம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி கணவாய்பட்டியை சேர்ந்தவர் சதீஸ்பாண்டியன் (36). இவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குரங்குகள் புகுந்து வீட்டில் இருந்த பொருட்களையும், வீட்டையும் சேதப்படுத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புதிய வீடு கட்டித் தருமாறு சதீஸ்பாண்டியன் புகார் அளித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை. மேலும் குரங்குகள் சேதப்படுத்தியதற்காக புதிய வீடு எவ்வாறு கட்டித்தர முடியும் என தெரிவித்துள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த சதீஸ்பாண்டியன் இன்று காலை மங்கம்மாள் சாலை பகுதியில் உள்ள உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறினார். இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் அவரை கீழே இறங்குமாறு சத்தம் போட்டனர். ஆனால் தனது வீடு சேதம் அடைந்து விட்டது. அதற்கு புதிய வீடு கட்டித்தர வேண்டும் என்று கோஷமிட்டபடி உச்சி பகுதிக்கு ஏறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நத்தம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி மற்றும் போலீசார் மைக் மூலம் அவரை கீழே இறங்கும்படி அறிவுறுத்தினர். ஆனால் அதனை அவர் கேட்கவில்லை. அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அவர் கீழே வர சம்மதித்தார். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சதீஸ்குமார் பத்திரமாக கீழே இறக்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

    • அரை நிர்வாண கோலத்தில் போதை ஆசாமி சாலையின் டிவைடரின் மேல் யோகாசனம் செய்துள்ளார்.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல் மாவட்டம் காட்டாஸ்பத்திரி பகுதியில் சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் அமர்ந்து மதுபோதையில் யோகாசனம் செய்த நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ட்ரவுசர் மட்டும் அணிந்து அரை நிர்வாண கோலத்தில் போதை ஆசாமி சாலையின் நடுவே உள்ள டிவைடரில் ஏறி அமர்ந்து யோகாசனம் செய்துள்ளார்.

    இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    • இரவு நேரத்தில் இரும்புக் கட்டிலின் போல்டு கழன்று விழுந்துள்ளது.
    • உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள சாணார்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோபிக்கண்ணன் (வயது 35). இவர் வீட்டிலேயே துணிகள் தைத்துக் கொடுக்கும் டெய்லர் வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி யோகேஸ்வரி (32). நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் கார்த்திக் (10) அங்குள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று இரவு யோகேஸ்வரி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் கோபிக்கண்ணன் மற்றும் அவரது மகன் மட்டும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    மாடியில் இவர்கள் வசித்து வரும் நிலையில் கீழ் வீட்டில் யோகேஸ்வரியின் சகோதரர் வசித்து வருகிறார். கட்டிலில் கோபிக்கண்ணன் போதையில் தூங்கிக் கொண்டிருந்தார்.


    அப்போது இரவு நேரத்தில் இரும்புக் கட்டிலின் போல்டு கழன்று விழுந்துள்ளது. இதனால் அவரது தலை கட்டிலின் இடுக்கில் மாட்டிக் கொண்டது.

    அதிலிருந்து விடுபட முயன்ற கோபிக்கண்ணன் தவறி கீழே படுத்திருந்த தனது மகன் கார்த்திக் மீது விழுந்தார். இதில் தந்தை மகன் 2 பேரும் மூச்சுத்திணறி இறந்து விட்டனர்.

    காலையில் பள்ளிக்கு செல்வதற்காக கார்த்திக் கீழே வராததால் அவரது மாமா எழுப்புவதற்காக சென்றுள்ளார். அப்போது தந்தை, மகன் 2 பேரும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர்கள் பொன் குணசேகர், ராஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜூஸ் தொழிற்சாலை அருகே சென்றபோது எதிரே வந்த கண்டெய்னர் லாரி பைக் மீது பயங்கரமாக மோதியது.
    • விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக குற்றம்சாட்டி அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அசோக்நகரை சேர்ந்தவர் தினகரன் (வயது20). இவர் வேலம்பட்டியை சேர்ந்த பாலாஜி (19) மற்றும் ஒரு நண்பருடன் மோட்டார் சைக்கிளில் நத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தார். கோபால்பட்டியை அடுத்த ஜூஸ் தொழிற்சாலை அருகே சென்றபோது எதிரே வந்த கண்டெய்னர் லாரி பைக் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பாலாஜி மற்றும் அவருடன் வந்த நண்பர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்த தினகரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதும் சிகிச்சை பலனின்றி தினகரன் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பொன்குணசேகர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 3 பேரும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் ஜூஸ் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் லாரிகள் அதிவேகமாக வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக குற்றம்சாட்டி அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சம்பவம் குறித்து அறிந்தும் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    • கைது செய்யப்பட்ட மற்ற 3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    • ஒவ்வொரு இடமாக தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை ரிச்சர்டு சச்சின் போலீசாரிடம் எடுத்து கொடுத்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்தவர் முகமதுஇர்பான் (வயது24). இவரை கடந்த மாதம் 28ந் தேதி திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.

    இதனை தடுக்க வந்த முகமது இர்பானின் நண்பருக்கும் வெட்டுக்காயம் விழுந்தது. படுகாயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக 5 தனிப்படை அமைத்து நகர் வடக்கு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

    இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் அவரது தலைமையிலான போலீசார் திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியான எடிசன் சக்கரவர்த்தி (25), ரிச்சர்டு சச்சின்(26), பிரவின் லாரன்ஸ் (28), மார்ட்டின் நித்தீஷ் (28) ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தனர்.

    திண்டுக்கல்லை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான பட்டறை சரவணன் படுகொ லைக்கு பழிக்குப்பழியாக முகமதுஇர்பானை வெட்டிக்கொன்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து கைது செய்யப்பட்ட மற்ற 3 பேரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முகமது இர்பானின் முகத்தை கொடூரமாக வெட்டி கொன்றது ரிச்சர்டு சச்சின் என தெரிய வரவே அவரை போலீசார் அழைத்துச் சென்று கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் எங்கே உள்ளது என விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

    இதனையடுத்து அந்த ஆயுதங்களை திண்டுக்கல் சிலுவத்தூர் ரோட்டில் உள்ள மாலப்பட்டி ரோட்டில் மயானத்தில் பதுக்கி வைத்திருப்பதாக ரிச்சர்டு சச்சின் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன், ஏட்டுகள் அருண்பிரசாத், ஆரோக்கியம் ஆகியோர் ரிச்சர்டு சச்சினை மாலப்பட்டி சுடுகாட்டுக்கு அழைத்து சென்றனர். அப்போது ஒவ்வொரு இடமாக தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை ரிச்சர்டு சச்சின் போலீசாரிடம் எடுத்து கொடுத்தார்.

    திடீரென ஒரு அரிவாளால் அங்கிருந்த ஏட்டு அருண்பிரசாத்தை வெட்டிவிட்டு ரிச்சர்டு சச்சின் தப்பி ஓட முயன்றார். இதனால் அருண்பிரசாத் சத்தம்போடவே இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தனது துப்பாக்கியால் ரிச்சர்டு சச்சினின் வலது காலில் முழங்காலுக்கு கீழே சுட்டார். இதில் வலியால் அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை போலீசார் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த ஏட்டு அருண்பிரசாத்துக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே துப்பாக்கி சூடு நடந்த இடத்தை மாவட்ட எஸ்.பி.பிரதீப் தலைமையிலான போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மேலும் குற்றவாளிகள் தப்பி செல்லும்போது கை, கால்களில் முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடும் சம்பவமும் நடந்து வருகிறது. அதன்வரிசையில் திண்டுக்கல்லில் கைதான ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் ரவுடிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ரிச்சர்டு சச்சின் மீது ஏற்கனவே திண்டுக்கல் நகர், மேற்கு போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோ விலில் கூட்டு கொள்ளை முயற்சி, திண்டுக்கல் முகமது இர்பான் கொலை என பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 300 அடி நீளத்திற்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • நில அதிர்வு ஏற்பட்டதாக எந்த தரவுகளும் இல்லை வானியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    கொடைக்கானலில் இருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் உள்ள கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் சுமார் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேல்மலையில் உள்ள கீழ் கிளாவரை கிராமத்திற்கு கடந்த சில நாட்களாக செருப்பன் ஓடையில் இருந்து குழாய் மூலம் நீர் வராததால், கிராம மக்கள் சிலர் வனப்பகுதிக்குள் சென்று பார்த்தபோது நிலம் பிளவடைந்துள்ளது தெரிய வந்தது.

    இப்பகுதியில் எவ்வித கட்டுமான பணிகளோ, சுரங்க பணிகளோ நடைபெறவில்லை. அப்படி இருக்கையில் இந்த பிளவு எப்படி உருவானது என்று கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இந்த பகுதி கேரளாவை ஒட்டியுள்ள பகுதி என்பதால், வயநாட்டில் ஏற்பட்டதை போன்ற நிலச்சரிவு இங்கும் ஏற்படுமோ? என்றும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    இப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக எந்த தரவுகளும் இல்லை வானியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    • குற்ற வழக்குகளில் மோப்ப நாய் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    • லீமா என்ற நாய் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்தது.

    திண்டுக்கல்:

    சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் போலீ சாரின் விசாரணையை கடந்து பலரது பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்கள் நடை பெறும்போது தற்போது சி.சி.டி.வி. காட்சிகளை முதன்மையாக கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் பணி நடத்தப்படுகிறது.

    அதனைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளின் தடயங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதன்மூலம் ஏற்கனவே குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் இதில் சம்மந்தப்பட்டுள்ளனரா என்று விசாரணை நடத்தப்படும்.

    இதனையடுத்து மோப்பநாய் சோதனை நடைபெறும். போலீசார் மூலம் நன்கு பயிற்சி பெற்ற துப்பறியும் நாய் குற்ற சம்பவங்கள் நடந்த இடத்தில் இருந்து குற்றவாளிகள் தப்பி சென்ற வழித்தடத்தை சுட்டிக்காட்டும்.

    மேலும் அவர்கள் ஏதேனும் பொருட்களை விட்டு சென்றிருந்தாலும் அதனையும் அடையாளம் காட்டும். அந்த வகையில் குற்ற வழக்குகளில் மோப்ப நாய் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் துப்பறியும் பிரிவில் லீமா என்ற நாய் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்தது. பிறந்து 45 நாட்களில் பணிக்கு அமர்த்தப்பட்ட லீமா கடந்த 8 ஆண்டுகளாக வெடிகுண்டு கண்டுபிடிப்பதிலும், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சிறப்பாக பணிபுரிந்து வந்தது. இந்நிலையில் இன்றுடன் லீமா பணி ஓய்வு பெற்றது.

    திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் லீமாவுக்கு பணி நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் கலந்து கொண்டு ஓய்வு பெற்ற லீமாவுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், டி.எஸ்.பிக்கள் ஜோசப் நிக்சன், சிவக்குமார், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் காளீஸ்வரன், துப்பறியும் நாய் பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் லீமாவுக்கு பிடித்த உணவுகளை கொடுத்து கண்ணீர் மல்க விைட கொடுத்தனர்.

    காவல்துறையில் ஒரு அதிகாரி பணி நிறைவு பெற்றுச் செல்வதுபோல லீமாவுக்கு மரியாதை செலுத்தப்பட்டது என்றும் தமிழகத்திலேயே இதுபோன்ற சம்பவம் முதன்முறையாக நடத்தப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

    • திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலசங்கம் கண்டனம்.
    • குறிப்பிட்ட பட காட்சிகளை நீக்க கோரிக்கை.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத் தலைவர் தனராஜ் தலைமை வகித்து பேசும்போது.

    தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2-திரைப்படத்தில் நடிகர் மனோபாலா நடிக்கும் ஒருசில காட்சிகளில் இ-சேவை மைய ஆபரேட்டர்கள் ரூ.300 கொடுத்தால் தான் ஆதார் தொடர்பான சேவைகள் செய்ய முடியும் என்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்த காட்சிகள் மூலம் இ-சேவை மைய ஆபரேட்டர்களை பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் இ-சேவை மைய தொழில் மீதும், ஆபரேட்டர்கள் மீதும் பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்படும் வகையில் காட்சிகள் இருப்பதால் குறிப்பிட்ட அந்த காட்சியை மட்டும் இந்தியன்-2 திரைப்படத்தில் இருந்து நீக்க தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தகவல் தொழில் நுட்பதுறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கர் படக்குழுவினருக்கும், திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் வேண்டுகோள் வைக்கிறோம்.

    தவறும் பட்சத்தில் திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலசங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ரஞ்சித், நவீன், மாவட்ட பொருளாளர் சுதாகர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×