search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாமல்லபுரம்"

    • கைவினைக் கலைஞர்கள் கைத்திறன் போட்டியை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
    • வெற்றி பெரும் மாணவ, மாணவியருக்கு, தலா 2,000 ரூபாய் ரொக்க பரிசு.

    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் பூம்புகார் நிறுவனமானது, மாமல்லபுரம் அரசு கட்டிட, சிற்பக்கலைக் கல்லுாரி மாணவர்களிடம், அடுத்த தலைமுறை கைவினைக் கலைஞர்கள் கைத்திறன் போட்டியை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

    இந்த போட்டியில் வெற்றி பெரும் மாணவ, மாணவியருக்கு, தலா 2,000 ரூபாய் ரொக்க பரிசு மற்றும் வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் ஆகியவை வழங்குவது வழக்கம்.


    2023-2024-ம் ஆண்டிற்கான போட்டியாக ஓவியம், கற்சிற்பம், மரச்சிற்பம், சுதைச்சிற்பம், உலோக சிற்பம் ஆகிய பிரிவுகளில், 40 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


    இதில் 25 பேர் கலைத் திறனாளியாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் ராமன், பூம்புகார் நிறுவன மாமல்லபுரம் மேலாளர் வேலு ஆகியோர் போட்டிகளின் செயல்பாட்டை கண்காணித்தனர்.

    • இன்று காலை 9 மணியில் இருந்து மின்சார சேவை வழங்கப்பட்டது.
    • பக்கிங்காம் கால்வாய்க்கு வெள்ளப்பெருக்கு அபாயம்.

    மாமல்லபுரம்:

    ஃபெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் இருந்தே காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. நேற்று இரவு வீசிய பலத்த சூறாவளி காற்றில் கடற்கரை கோயில் வடபகுதி கடற்கரை ஓரம் உள்ள கூறை உணவகம் ஒன்று சரிந்து விழுந்தது அதிஷ்டவசமாக ஊழியர்கள் அங்கு தங்காததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

    பூஞ்சேரி, பொதுப்பணித்துறை சாலை, கடற்கரை சாலை, ஐந்துரதம், வெண்புருஷம், தேவநேரி, தனியார் விடுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தது.


    தகவலறிந்த தீயணைப்பு படை, பேரிடர் மீட்பு படை, பேரூராட்சி ஊழியர்கள் சம்ப இடத்திற்கு சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.

    அண்ணாநகர், சூளைமேடு, எடையூர், வடக்கு மாமல்லபுரம், பகுதி குடியிருப்புகள் அருகே மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் உள்ள சிற்பக் கூடங்களுக்குள் மழைநீர் புகுந்தது.

    இன்று காலை காற்றும், மழையும் இன்றி இயல்பு நிலை திரும்பி உள்ளதால், வழக்கம் போல் ஓ.எம்.ஆர், இ.சி.ஆர் பகுதிகளில் வாகனங்கள் சென்று வருகிறது. தாம்பரம், செங்கல்பட்டு, திருவான்மியூர் பகுதிகளில் இருந்து மாமல்லபுரத்திற்கு சென்னை மாநகர, அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூராக மரங்கள் விழுந்து உள்ளதால் பாண்டிச்சேரி வழியாக சென்னை வரும் வாகனங்கள் தற்போது குறைந்த அளவில் இயக்கப்படுவதால் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இன்று காலை 9 மணியில் இருந்து மின்சார சேவை வழங்கப்பட்டது. மாமல்லபுரம் நகர வீதிகளில் மரங்கள் ஒடிந்து விழுந்து குப்பைக் காடாக கிடந்த பகுதிகளை பேரூராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். காலையில் குடிநீர் தடை வராமல் இருக்க ஜெனரேட்டர் வைத்து குடிநீர் மோட்டார்கள் இயக்கப்பட்டது.

    சென்னை, புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய்க்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை நின்று வெயில் அடிக்க துவங்கியதால் விடுமுறை நாளான இன்று மாமல்லபுரத்திற்கு வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஃபெங்கல் புயல் இன்று பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது.
    • திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் துணை மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி நிறுத்தம்

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

    தற்போது திருச்சிக்கு 370 கி.மீ வடக்கிலும், நாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே 210 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து கிழக்கே 180 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

    ஃபெங்கல் புயல் இன்று பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால் முன்னெச்சரிக்கையாக அப்பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது

    புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் துணை மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 3 துணை மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

    • செம்மொழி சிற்ப பூங்காவை பராமரித்து பிரபலமாக்க அறிவுறுத்தினார்.
    • கோயில் வளாகத்தில் 3டி அனிமேஷன் திட்டப்பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது பயணிகள் தங்கும் அறைகள், நீச்சல் குளம், கழிப்பறைகள், கட்டிடங்கள், சமையல் கூடம் மற்றும் வளாகத்தில் உள்ள செம்மொழி சிற்ப பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டார். பூங்காவை பராமரித்து பிரபலமாக்க அறிவுறுத்தினார். 

    பின்னர், மாமல்லபுரத்தில் பழைய சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி, பேருந்து நிலையம் அருகே மரகத பூங்காவில், ரூ.8 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் விளக்குகள் மூலம் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணி மற்றும் 5கோடி மதிப்பீட்டில் தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் 3டி அனிமேஷன் திட்டப்பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    முன்னதாக, திருவிடந்தையில் நித்தியகல்யாண பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் 223 ஏக்கரில் "ஆன்மீக கலாச்சார பூங்கா" அமைய உள்ள இடத்தையும் ஆய்வு செய்தார். 

    ஆய்வின்போது, சுற்றுலா வளர்ச்சிக் கழக இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், செங்கல்பட்டு கலெக்டர் அருண் ராஜ், சப்-கலெக்டர் நாராயண சர்மா, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேசன், காஞ்சிபுரம் திமுக மாவட்ட பொருளாளர் விசுவநாதன், பேரூராட்சி கவுன்சிலர் மோகன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
    • இந்த போட்டியில் 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு, சர்வதேச புரோ பீச் வாலிபால் போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    இன்று (21ம் தேதி) தொடங்கி வரும் 24ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் இந்த போட்டிகள் நடைபெற உள்ளது.

    4 நாட்கள் நடக்கும் இத்தொடரில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்

    இது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ஏக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "சர்வதேச புரோ பீச் வாலிபால் தொடர் போட்டிகளை மாமல்லபுரத்தில் துவங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மதிப்புமிக்க போட்டியில் 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மேலும் இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் இந்தியா சார்பில் பங்கேற்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது.

    இதில், SDAT மூலம் பயிற்சி பெற்ற 2 பெண் வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். இந்த உற்சாகமான நிகழ்வில் தங்கள் முத்திரையை பதித்து, அனைத்து வீரர்களும் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, சிறந்த வெற்றியை பெறுவார்கள் என்றும் நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • மாமல்லபுரத்தில் காரில் வந்தவர்கள் காரை நோ பார்க்கிங்கில் நிறுத்த முயன்றதாக தெரிகிறது.
    • சம்பவத்தை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

    அக்டோபர் 20 ஆம் தேதி மாமல்லபுரம் ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் நோ பார்க்கிங் வழியாக கார் ஒன்று செல்ல முயன்றது.அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி ஏழுமலை (வயது 45) என்பவர் காரை ஐந்துரத வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறு கூறினார். அதை மீறி காரில் வந்தவர்கள் காரை நோ பார்க்கிங்கில் நிறுத்த முயன்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் ஏழுமலை அவர்களை திட்டியதாக கூறப்படுகிறது.

    உடனே காரில் இருந்து இறங்கிய 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் "ஏய் யாரை பார்த்து திட்டுகிறாய்" என ஆவேசமடைந்து, நடுரோட்டிலேயே ஏழுமலையை சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர்களுடன் வந்த ஆண்களும் சேர்ந்து அவரை கடுமையாக தாக்கினர். இந்த கைகலப்பு சம்பவத்தால் அந்த பகுதியே பரபரப்பானது.

    பின்னர் அவ்வழியாக சென்றவர்கள் 4 பேரையும் சமாதானம் செய்து காவலாளி ஏழுமலையை அவர்களின் பிடியிலிருந்து காப்பாற்றினர். பின்னர் 2 பெண்கள் உள்ளிட்ட 4 சுற்றுலா பயணிகளும் காரில் சென்றுவிட்டனர். இந்த தாக்குதலில் முகத்தில் காயமடைந்த ஏழுமலை ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இச்சம்பவத்தை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    காவலாளி ஏழுமலைக்கு அங்குள்ள வியாபாரிகள் நாள் ஒன்றுக்கு ரூ.500 ஊதியம் என்ற தினக்கூலி அடிப்படையில் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் அவரை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐந்துரதம் வணிக வளாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.

    இதனையடுத்து காவலாளியை தாக்கியது தொடர்பாக முடிச்சூரை சேர்ந்த பிரபு இன்பதாஸ் (41), சண்முகப்பிரியா (38), கீர்த்தனா (29) உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், இன்று திருப்போரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதனையடுத்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்

    • நோவா உலக சாதனைக்காக 1,000 மண் ஓடுகளை தொடர்ச்சியாக உடைத்து நொறுக்கினார்.
    • கல்லூரி நுழைவிடத்தில் 10 வரிசைகளில் 10 ஓடுகள் வீதம், வரிசைக்கு 100 ஓடுகள் என 1,000 ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தைச் சேர்ந்த பஞ்சாட்சரம் (வயது 47) குங்பூ தற்காப்புக்கலை வீரரான இவர், செவன்த் டான் பிளாக் பெல்ட் உள்ளிட்டவை பெற்றுள்ளார்.

    நீண்டகாலமாக உள்ளூர் மற்றும் வெளியூர்களில் தனியாகவும், பள்ளிகளுக்கும் குங்பூ பயிற்சியாளராக இருந்து வருகிறார். பெண்கள், வாலிபர்கள், சிறுவர், சிறுமியர் ஆகியோருக்கு குங்பூ பயிற்சி அளித்து வருகிறார்.


    இவர் நோவா உலக சாதனைக்காக 1,000 மண் ஓடுகளை தொடர்ச்சியாக உடைத்து நொறுக்கினார். மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி நுழைவிடத்தில் 10 வரிசைகளில் 10 ஓடுகள் வீதம், வரிசைக்கு 100 ஓடுகள் என 1,000 ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டது. அவைகளை உடைத்து சாதனை செய்தார்.


    முன்னதாக நோவா வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் குழுவினர் அவருக்கு மருத்துவ பரிசோதனை, ஓடுகளில் சோதனை உள்ளிட்ட உலக சாதனை நடைமுறைகளை செய்தனர். பின்னர் அவரை ஓடுகளை உடைக்க அனுமதித்தனர். 10 நிமிடங்களில் அனைத்து ஓடுகளையும் உடைத்து நோவா உலக சாதனை வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.

    • பல்லவர்கள் காலத்தில் பாறைக்குன்றில் வடிவமைக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவில் துர்கா சிற்பத்துடன் உள்ளது.
    • மாசிமாதத்தில் இந்த கோவில் 3 அடி உயரத்திற்கு கடல் நீரால் சூழப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால புராதன சின்னங்களில் கடற்கரை கோவில் முக்கியத்துவம் வாய்ந்த உலக பாரம்பரிய நினைவு சின்னமாக உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கடல் நீர் கோவில் வரை உட்புகுந்து அரிக்க தொடங்கியதால், கோவிலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்ட தொல்பொருள்துறை இந்த கோவிலின் தென்புறம் முதல் வடபுறம் வரை கடந்த 1984-ம் ஆண்டு கடற்கரையில் பாறைகளை குவித்து பாதுகாப்பு அரண் அமைத்து கடல் நீர் உட்புகாமல் இருக்க பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில் கடற்கரை கோவிலின் வடக்கு புறப்பகுதியில் பல்லவர்கள் காலத்தில் பாறைக்குன்றில் வடிவமைக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவில் துர்கா சிற்பத்துடன் உள்ளது.

    மாசிமகத்தன்று கடற்கரையில் குவியும் பழங்குடி இருளர் இனமக்கள் அப்போது காலநிலை மாறி, கடல் நீரால் சூழப்பட்டு இருக்கும் இந்த மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவிலில் முழங்கால் கடல் நீரில் நடந்து சென்று அங்கு உள்ள துர்கா சிற்பத்திற்கு பூஜை செய்து வணங்குவர். குறிப்பாக மாசிமாதத்தில் இந்த கோவில் 3 அடி உயரத்திற்கு கடல் நீரால் சூழப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடற்கரை கோவிலுக்கு கற்கள் குவித்து பாதுகாப்பு தடுப்பு அரண் அமைக்கப்பட்டபோது, இந்த மகிஷாசுரமர்த்தினி குடைவரை சிற்பத்தை சேர்த்து பாதுகாப்பு கற்கள் அமைக்காமல் வெளியே அப்படியே விட்டுவிட்டனர். தற்போது இந்த கோவிலை குறிப்பிட்ட சில மாதங்கள் கடல்நீர் சூழ்வதும், குறிப்பிட்ட சில மாதங்கள் கடல் உள்வாங்குவதும் நடைபெறும். தற்போது கடல் உள்வாங்கியதன் மூலம் மகிஷாசுரமர்த்தினி கோவில் முழுமையாக வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது.

    பல்லவர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்டு, முற்றுபெறாத துர்கா சிற்பத்துடன் உள்ள புராதன சின்னமான மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவிலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மத்திய கலாசார துறையின் கீழ் உள்ள இந்திய தொல்பொருள் துறை நிர்வாகம் கடற்கரை கோவிலை பாதுகாப்பு அரணாக கற்கள் கொட்டி பாதுகாக்கப்படுவதுபோல் மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவிலையும் கற்கள் கொட்டி பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் தொல்பொருள் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடற்கரை கோவிலை கண்டு ரசித்தார்.
    • பாரம்பரிய நினைவுச் சின்னங்களை கண்டு ரசித்தார்.

    மாமல்லபுரம்:

    அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தின் கவர்னரான மிசெல்லே லுஜன் கிரிஷாம், அந்நாட்டு அரசு உயரதிகாரிகள் குழுவினருடன், உயர்கல்வி, வர்த்தகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைக்காக இந்தியா வந்துள்ளார்.

    இந்த நிலையில், அரசுத்துறை குழுவினர் மற்றும் அவரது கணவர் ஆகியோருடன் மாமல்லபுரம் வந்தார். அங்குள்ள கடற்கரை கோவிலை கண்டு ரசித்தார்.

    பல்லவர்கள், சைவ, வைணவ வழிபாட்டிற்காக, இந்த கோயிலை உருவாக்கியதும், இதுதவிர 6 கோவில்கள் கடலில் மூழ்கியது. பல்லவர்களின் துறைமுகமாக விளங்கியது, பழங்காலத்தில் பக்தர்கள் வழிபட்டு வந்த இந்த கோயில் தற்போது பாரம்பரிய நினைவுச் சின்னமாக தொல்லியல்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருவது உள்ளிட்ட பல்லவர் காலத்து வரலாற்று தகவல்களை, சுற்றுலாத்துறை அங்கிகாரம் பெற்ற வழிகாட்டி மதன் என்பவர் அவரிடம் விளக்கினார்.

    அவற்றைக் கேட்டு வியந்த அவர் தன் மொபைல் போனில் கணவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். சுற்றுலாப் பயணிகள் சிலரும் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    • சங்குகள் ஆழ்கடல் பாறை இடுக்குகளில் பல ஆண்டுகளாக வாழும்.
    • மீனவர்கள் இவ்வகை சங்கு வருவதை அறிந்து படகில் சென்று பிடிக்கிறார்கள்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கடலில் பாசி படர்ந்த பாறைகளுக்கு இடையிலும், மணல் மேடு பகுதியிலும் தற்போது "முள்சங்கு" எனப்படும், மருத்துவ குணமுடைய விலை உயர்ந்த சங்கு வகைகள் மீனவர்களின் தூண்டில் மற்றும் சிறிய வலைகளில் சிக்கி வருகிறது.

    இவ்வகை சங்குகளின் சதைகள் மருத்துவ குணமுடையது என்பதால் ஒரு சங்கு ரூ.20ஆயிரம் முதல் ரூ.25ஆயிரம் வரை வெளிநாட்டு மருந்து கம்பெனிகளுக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் கூறுகையில், 'இந்த வகை சங்குகள் ஆழ்கடல் பாறை இடுக்குகளில் பல ஆண்டுகளாக வாழும்.

    தற்போது கடல் வெப்பம், கடலின் சீற்றம், அலையின் திசை மாற்றம் உள்ளிட்ட இயற்கை காலநிலை மாற்றத்தால் கடற்கரை ஓரம் இழுத்து வரப்பட்டு, இப்பகுதியில் கரையோரம் உள்ள பாறை இடுக்குகளில் வாழ்கிறது.

    மீனவர்கள் இவ்வகை சங்கு வருவதை அறிந்து படகில் சென்று பிடிக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு நல்ல வருவாயும் கிடைக்கிறது' என்றனர்.

    • குடியிருப்பவர்களை இடத்தை காலி செய்யுமாறு அதிகாரிகள் கூறி வந்தனர்.
    • 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு குப்பம் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இங்குள்ள துலுகானத்தம்மன் கோவில் அருகே உள்ள 40 வீடுகள் மற்றும் இறால் பண்ணை ஆகியவை இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நெம்மேலி ஆள வந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அங்கு குடியிருப்பவர்களை இடத்தை காலி செய்யுமாறு அதிகாரிகள் கூறி வந்தனர். ஆனால் மீனவ கிராமமக்கள் இடத்தை காலி செய்ய வில்லை. இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை காஞ்சீபுரம் உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன் தலைமையில் செயல் அலுவலர் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் சூலேரிக்காடு குப்பம் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். அவர்களை அப்பகுதி பெண்கள், குழந்தைகள் என 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர்.

    மேலும் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தும் அதன் முன்பு அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மீனவ கிராம மக்களின் போராட்டத்தால் வீடுகளை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்குள்ள இறால் பண்ணைக்கு சென்று இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று மட்டும் போர்டு வைத்து சீல் வைத்தனர்.

    மேலும் அங்கு பூட்டி இருந்த வீடு ஒன்றுக்கும் சீல்வைத்து நோட்டீஸ் ஒட்டினர். அப்பகுதி மக்கள் அங்குள்ள துலுக்கானத்தம் கோவில் வளாகத்தில் திரண்டு உள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. ரவி அபிராம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • உயர் அதிகாரிகள் ஏ.கே.47 ரக துப்பாக்கியை ஆய்வு செய்தனர்.
    • கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணுமின் நிலையத்தில் மத்திய தொழல் பாதுகாப்பு படையினர் ஷிப்டு முறையில் ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இங்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாதுகாப்பு படைவீரர் ரவி கிரண் (வயது37) பணியாற்றி வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் ரவிகிரண் அணுமின்நிலையத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை பணி முடிந்து அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருக்கும் நகரியத்திற்கு செல்ல உடன் பணியாற்றும் மற்ற வீரர்களுடன் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அனைவரும் தங்களது துப்பாக்கியை வைத்து இருந்தனர்.

    சதுரங்கபட்டினம் "டச்சு கோட்டை" அருகில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது பஸ் குலுங்கியது.

    அந்த நேரத்தில் ரவிகிரண் கையில் இருந்த ஏ.கே.47 துப்பாக்கி திடீரென வெடித்தது. இதில் துப்பாக்கி குண்டுகள் ரவிகிரணின் கழுத்தில் பாய்ந்து தலைவழியாக வெளியே வந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ரவி கிரண் உயிரிழந்தார். இதனை கண்டு உடன் பயணம் செய்த மற்ற பாதுகாப்பு படை வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கல்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ரவிகிரணின் உடலை கைப்பற்றி கல்பாக்கம் அணுசக்தி துறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுபற்றி அறிந்ததும் அணுமின் நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் ரவிகிரண் வைத்து இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியை ஆய்வு செய்தனர். அப்போது அதில் இருந்த குண்டுகள் அகற்றப்படாமல் இருந்தது தெரிந்தது.

    வழக்கமாக பாதுகாப்பு பணியின் போது மட்டுமே துப்பாக்கியில் குண்டுகள் லோடு செய்து தயார் நிலையில் வைக்கப்படும். பணி முடிந்ததும் பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை அகற்றி அதனை தங்களது பாதுகாப்பு இடுப்பு பெல்ட்டில் உள்ள சிறிய பையில் வைத்து விடுவார்கள்.

    ஆனால் ரவி கிரணிடம் இருந்த துப்பாக்கியில் குண்டுகள் அகற்றப்படாமல் அப்படியே இருந்து உள்ளது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை எதற்காக எடுக்காமல் இருந்தார்? மறந்து விட்டாரா? என்று தெரியவில்லை.

    எனவே வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கிய போது ரவிகிரணிடம் இருந்து துப்பாக்கி தவறுதலாக வெடித்து குண்டு பாய்ந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்வதற்கு திட்டமிட்டு துப்பாக்கியில் இருந்த குண்டை அகற்றாமல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் மற்றும் சதுரங்கபட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     இது தொடர்பாக அவருடன் பணியில் இருந்த மற்றும் பஸ்சில் பயணம் செய்த வீரர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் ரவிகிரணின் நடவடிக்கைகள் எப்படி இருந்தது என்பது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இறந்து போன ரவிகிரண் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் கர்நாடகாவில் இருந்து கல்பாக்கத்திற்கு பணிமாறுதல் ஆகி வந்து உள்ளார். அவருக்கு அனுசா என்ற மனைவியும், ஷாஸ்வினி, ரித்திகா என்ற 2 மகள்களும் உள்ளனர்.

    அணுமின் நிலைய மத்திய பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×