என் மலர்
நீங்கள் தேடியது "வாழைகள்"
- இன்னும் ஓரிரு வாரங்களில் குலைதள்ளும் தருவாயில் இருந்தது
- சேதம் அடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக இரவு மற்றும் பகல் நேரங்களில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது.
காரமடை அடுத்த புங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையன். இவர் தோட்டத்தில் வாழை மரங்களை பயிரிட்டு இருந்தார். இந்த நிலையில் அங்கு நேற்று சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் அங்கு நின்ற 350 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன. இதேபோல் சிறுமுகை, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளிலும் 1500-க்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்து உள்ளன.
இன்னும் ஓரிரு வாரங்களில் குலைதள்ளும் தருவாயில் இருந்த வாழை மரங்கள் காற்றில் முறிந்து சேதம் அடைந்தது விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே அரசு அதிகாரிகள் உடனடியாக களஆய்வு நடத்தி, சேதம் அடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது
- வாழை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குடிமங்கலம் :
குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் காய்கறி பயிர்கள் சாகுபடியும் செய்யப்படுகிறது. கரும்பு, வாழை உள்ளிட்ட ஆண்டுப் பயிர்கள் சாகுபடி படிப்படியாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு கூலியாட்கள் பற்றாக்குறை, போதிய விலை இல்லாமை, வருமானம் பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. ஆனாலும் தண்ணீர் பற்றாக்குறை முக்கிய காரணமாக உள்ள நிலையில் தற்போது சொட்டு நீர் பாசனத்தில் வாழை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வாழை சாகுபடியை பொறுத்தவரை நடவு முதல் அறுவடை வரை ஓராண்டு காலத்தில் பருவ மழை, காற்று, கோடை என எல்லா பருவங்களையும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. பருவ மழை போதுமான அளவில் பெய்யாத ஆண்டுகளில் கடும் வறட்சியை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. அது போன்ற சூழலிலும் வறட்சியால் பயிர் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் பலத்த காற்று வீசும் போது வாழை மரங்கள் தான் முதலில் பாதிக்கப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாவதுடன் கடும் பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை உள்ளது. இதனால் தான் பல விவசாயிகள் வாழை சாகுபடியை கைவிட்டு காய்கறி உள்ளிட்ட மாற்றுப்பயிர்களுக்கு மாறிவிட்டனர்.
தற்போது நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடன் வாழை சாகுபடியில் ஈடுபடும் போது இழப்பை தவிர்க்க முடியும். அந்த வகையில் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் வாழை சாகுபடி மேற்கொள்ளும் போது கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. அதுபோல காற்றிலிருந்து வாழை மரங்களை பாதுகாக்க புதிய யுத்திகளை பயன்படுத்துகிறோம். அதன்படி ஒவ்வொரு மரத்துக்கும் ஊன்று கோல்கள் கொடுத்து பாதுகாப்பதற்கு பதிலாக குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஊன்றுகோல்கள் அமைத்து மற்ற வாழைகள் எல்லாம் பிளாஸ்டிக் கயிறுகள் மூலம் எதிரெதிரான திசைகளில் ஒன்றுடன் ஒன்று இணைத்து கட்டி விடுகிறோம். இவ்வாறு கட்டுவதால் எந்தத்திசையிலிருந்து காற்று பலமாக வீசினாலும் வாழைகளுக்கு ஏதும் ஏற்படுவதில்லை. செலவும் குறைகிறது. இதன் காரணமாக வாழை சாகுபடி லாபகரமானதாக உள்ளது.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
+2
- ஈரோடு மாநகர் பகுதியில் 9 மணி அளவில் காற்றின் வேகம் அதிக அளவில் இருந்தது.
- பெருந்துறை பகுதியில் நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் வெயில் நிறைவடைந்ததும் வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரி வெயில் பதிவாகி வந்தது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. அனல் காற்றுடன், புழுக்கமும் நிலவியதால் வாகன ஓட்டிகள், வீட்டில் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்தனர். முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. ஈரோடு மாநகர் பகுதியில் 9 மணி அளவில் காற்றின் வேகம் அதிக அளவில் இருந்தது.
அப்போது இடி மின்னல் பயங்கரமாக இருந்தது. பின்னர் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. பலத்த காற்றால் விளம்பர பேனர்கள் பறந்து சென்றன. இதேப்போல் மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருந்துறையில் 45 மி.மீ மழை பெய்தது. பவானி, சென்னிமலை, அம்மாபேட்டை போன்ற பகுதிகளிலும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
ஈரோட்டில் இருந்து பவானி லட்சுமி நகர் வரை காற்று கடுமையாக வீசியதால் அந்த சமயம் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவதில் கடும் அவதி அடைந்தனர். சென்னி மலையில் இரவு 10 மணி முதல் தொடர்ந்து ஒரு மணி நேரம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
பெருந்துறை பகுதியில் நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் பெருந்துறை அடுத்த வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்த குழந்தைசாமி, கந்தசாமி ஆகியோருக்கு சொந்தமான ரூ.10 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதமடைந்தது. இதே போல் அதே பகுதியில் சின்னப்பன் என்பவர் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு உள்ளார். நேற்று வீசிய சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 15 வீடுகளின் மேல் இருந்த ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுகள் பறந்து சென்றன. மேற்கூரைகள் அனைத்தும் தூக்கி வீசப்பட்டு காட்சி அளிக்கிறது. இதேப்போல் பவானி, அம்மாபேட்டை, அந்தியூர் பகுதிகளிலும் இரவு ஒரு மணி நேரம் இடி , மின்னலுடன் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சூறாவளி காற்றுடன் மண்ணும் வாரி இறைத்து வந்ததால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். எனினும் இந்த எதிர்பாராத மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
பெருந்துறை - 45, பவானி - 31.60, அம்மாபேட்டை - 30, சென்னிமலை - 25.60, ஈரோடு-2.
- பல ஆயிரம் ஏக்கர்களில் வாழை விவசாயம் பிரதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது.
- கடந்த 2 தினங்களாக பலத்த சூறைக்காற்று வீசியது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள இரும்பறை, இலுப்பநத்தம் ஊராட்சி களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர்களில் வாழை விவசாயம் பிரதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக நேந்திரன், கதளி, பூவன், ரஸ்தாலி, ரோபஸ்டா உள்ளிட்ட பல்வேறு வகை வாழை இனங்களை பயிரிட்டு விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சிட்டே பாளையம், இரும்பறை, அம்மன் புதூர், பால்காரன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களாக பலத்த சூறைக்காற்று வீசியது.
இதன் காரணமாக இரும்பறை, இலுப்பநத்தம் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப் பட்டிருந்த சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து நாசமடைந்துள்ளன.
சூறாவளிக்காற்றால் சேதமடைந்த வாழைகள் அறுவடைக்கு தயாராக இருந்தவையாகும். இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மோதூர் பகுதியை சேர்ந்த விவசாயி கந்தசாமி கூறியதாவது:-
விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து 2 லட்ச ரூபாய் செலவு செய்து 2000 வாழைகளை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தேன். கடந்த 2தினங்களாக வீசிய சூறாவளி காற்றால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்து விட்டது. இதனால் தாங்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளோம் எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து தங்களது வாழ்வாதாரத்தை காக்க உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த அவரை மொச்சை பயிர்களை மான்கள் கூட்டம் சேதப்ப டுத்தியது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே வெள்ளியங்காடு அடுத்துள்ளது ஆதிமதையனூர் கிராமம். இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதி மக்கள் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்த கிராமம் அடர்ந்த வனத்தையொட்டி இருப்பதால் அடிக்கடி சிறுத்தை, யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருகிறது.
அவ்வாறு வரும் வனவிலங்குகள் கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருக்கும் பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக இந்த பகுதியில் 8 காட்டு யானைகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இவை அவ்வப்போது விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. ஆதிமதையனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அய்யாசாமி, செந்தில்குமார், ஸ்ரீதர், சுலோச்சனா. இவர்கள் அந்த பகுதியில் உள்ள தங்கள் விளைநிலங்களில் வாழை பயிரிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு காட்டு யானைகள் கூட்டம் இந்த விளைநிலங்களுக்குள் புகுந்து பயிரிடப்பட்டிருந்த 1000த்திற்கும் மேற்பட்ட வாழை பயிர்களை தின்றும், பிடுங்கி எறிந்தும் சேதப்படுத்தியது.
இதேபோல், அதே பகுதியை சேர்ந்த சம்பத்குமார், ராமசாமி, கிருஷ்ணசாமி, தம்பு, ராஜேந்திரன் ஆகியோரின் விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த அவரை மொச்சை பயிர்களை மான்கள் கூட்டம் சேதப்ப டுத்தியது.
இதனால் விவசாயி களுக்கு தலா ரூ.30 ஆயிரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தங்கள் பகுதிகளில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். மேலும் சேதம் அடைந்த பயிர்களுக்கு வனத்துறையினர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வேரின் நுனி பாகம் அழுகி புதிய வேர் தோன்றாமல் செய்து விடும்.
- நூற்புழுக்களின் எண்ணிக்கை பெருமளவு குறைவதுடன், வாழைத்தார்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்
வெள்ளகோவில்:
வாழையில் நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து வேளாண் உதவி பேராசிரியர்கள் ப.மஞ்சு (தாவர நூற்புழுவியல்) மற்றும் சு.ஹேமலதா (மண்ணியல்) ஆகியோர் விளக்கம் தருகின்றனர். அவர்கள் கூறியதாவது:-
விவசாயிகள் நேந்திரன், செவ்வாழை, கதலி, பூவன், மொந்தன் போன்ற வாழை ரகங்களை பயிரிட்டுள்ளனர். இவற்றில் நேந்திரன் மற்றும் செவ்வாழை ரகங்களில் நூற்புழு பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. பொதுவாக வேர் அழுகல் நூற்புழு, வேர் குடையும் நூற்புழு மற்றும் சுருள் வடிவ நூற்புழு போன்றவை அதிக அளவில் வாழையை தாக்கும். ஆனால் தற்போது வேர் முடிச்சு நூற்புழுக்களின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இந்நூற்புழு தாக்கப்பட்ட மரங்களின் முதல் மற்றும் இரண்டாம் நிலை சல்லி வேர்களில் வேர் முடிச்சுகள் காணப்படுகின்றன.
இதனை தொடர்ந்து பாதித்த வேரின் நுனி பாகம் அழுகி புதிய வேர் தோன்றாமல் செய்து விடும். மரத்தின் வளர்ச்சி குன்றி காணப்படும். மேலும் குலை தள்ளும் நாட்கள் அதிகமாகவும், தாரில் சீப்புகளின் எண்ணிக்கை குறைந்தும் மற்றும் காய்களின் நீளம் குறைந்தும் காணப்படும்.
இந்நூற்புழு அதிகமாவதற்கு காரணம் பயிர் சுழற்சி முறையை கடை பிடிக்காமல் ஒரே வகையான பயிரை தொடர்ந்து பயிரிடுவதால் மண்ணில் நூற்புழுக்களின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. நூற்புழுக்களின் தாக்கத்தைக் குறைக்க கரும்பு, பருத்தி மற்றும் தானிய பயிர்களுடன் பயிர் சுழற்சி செய்ய வேண்டும். இதனால் நூற்புழுவின் இனப்பெருக்கம் குறைக்கப்படுகிறது. வாழை கிழங்குகளை நடுவதற்கு முன் ட்ரை கோடெர்மா விவரிடி, சூடோமோனாஸ் ப்ளூரெஸன்ஸ், பேசில்லோமை சஸ் லிலாசினஸ் கலந்த உயிர் பூசணக் கொல்லிகளை தலா 2 கிலோ எடுத்து 1 டன் தொழு உரம் அல்லது வேப்பம் புண்ணாக்குடன் கலந்து 15 நாட்கள் மூடி வைத்து பின் வயலில் இட்டு வாழை நடவு செய்ய வேண்டும்.
வாழை விதைக்கன்றுகளின் வேரை நீக்கி, கிழங்கின் மேல்தோலை நீக்கி, பின்பு வேப்பம் கரைசலில் (15 மில்லி/ லிட்டர் தண்ணீர்) அல்லது 50-55 டிகிரி செல்சியஸ் கொதிநீரில் 30 நிமிடம் மூழ்க வைத்து, பின்பு நிழலில் உலர்த்தி, வாழை கன்றுகளை நடவு செய்ய வேண்டும். வாழை நடும் போது துலுக்க சாமந்தியை ஊடு பயிர் செய்து 60-ம் நாள் பிடுங்கி வாழையை சுற்றி புதைக்கலாம். வாழை கன்று நட்ட மூன்று மற்றும் ஆறாவது மாதங்களில், வேப்பம் புண்ணாக்குடன் (250 கிராம்) எதிர் நுண்ணுயிரிகளான 'பெசி–லோ மைசிஸ் லிலாசினஸ்' மற்றும் 'சூடோமோனாஸ் புளோரசன்ஸ்' ஆகியவற்றை, 30 கிராம் வீதம் கலந்து இடுவதால் மண்ணிலும், வேரிலும் உள்ள நூற்புழுக்களின் எண்ணிக்கை பெருமளவு குறைவதுடன், வாழைத்தார்களின் உற்பத்தியும் அதிகரிக்கும் என்றனர்.
சேலம்:
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் சூறைக்காற்றினால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன.
சேலம் அருகே பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இதில் கடந்த வாரம் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் பல்வேறு இடங்களில் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
பாதிக்கப்பட்ட விவசாயி–களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் பொருட்டு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். மேலும், விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காற்று, மழையினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிர்கள் தற்காத்துக்கொள்ளும் தொழில்நுட்பங்கள் குறித்தும், தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்களை பெற தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகிப் பயன் பெறுமாறு விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.