என் மலர்tooltip icon
    • சாவர்க்கர் பற்றி அவதூறு பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது.
    • இந்த வழக்கு புனே நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    மும்பை:

    ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கடந்த 2023ல் மார்ச் மாதம் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரை விமர்சித்தார். அவரது இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி அவர்மீது வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தி தெரிவித்த கருத்து வரலாற்று உண்மைகள் அடிப்படையிலானது. அதற்குரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பான ராகுலின் வாதங்களை அடுத்த விசாரணையின்போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி முன்வைக்கும்படி உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை வரும் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர்.
    • இதில் அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் நர்வாலும் உயிரிழந்தார்.

    சண்டிகர்:

    காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் நர்வால் என்பவரும் உயிரிழந்தார். 7 நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணமான நிலையில், தேனிலவு கொண்டாட ஜம்மு காஷ்மீர் வந்தபோது மனைவி கண்முன்னே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டின் கணவனை இழந்த மனைவி அவர் அருகே செய்வதறியாது அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் உலுக்கியது.

    இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த வினய் நர்வால் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அரியானா முதல் மந்திரி நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.

    • ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகம் பந்தர் அப்பாஸ்.
    • பந்தர் அப்பாஸ் துறைமுகம் பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது.

    டெஹ்ரான்:

    ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ், பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் ஈரானின் முக்கிய வர்த்தக மையமாகும். எண்ணெய் ஏற்றுமதிக்கும் மிகவும் முக்கியமானது.

    இங்கிருந்து பல்வேறு பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. இது ஈரானிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியலிலும் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது.

    இதற்கிடையே, பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நேற்று மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 400 பேர் வரை படுகாயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    ரஜாய் துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களில் வெடிப்பு ஏற்பட்டது. தீயை அணைக்கவும் சிக்கியவர்களை மீட்கவும் தீயணைப்பு துறையினர் முயன்று வருகின்றனர் என தெரிவித்தார்.

    இந்நிலையில், ஈரான் துறைமுக வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. காயம் அடைந்தோரின் எண்ணிக்கை 750 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரான்-அமெரிக்கா, ஓமனில் மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நடத்தி வரும் நேரத்தில் பந்தர் அப்பாஸில் வெடிவிபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 201 ரன்கள் குவித்தது.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 44வது லீக் ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.

    பிரியன்ஷு ஆர்யா 69 ரன்னும், பிரப்சிம்ரன் சிங் 83 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    • ரஷிய அதிபர் புதினுடன் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசினர்.
    • வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை டிரம்ப் சந்தித்துப் பேசினார்.

    மாஸ்கோ:

    ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப், வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார்.

    இதற்கிடையே, போரை நிறுத்துவதற்காக டிரம்பின் தூதராக செயல்படும் விட்காப், மாஸ்கோவில் கிரெம்ளின் மாளிகையில் அதிபர் புதினைச் சந்தித்துப் பேசினார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், உக்ரைனுடன் எந்தவித நிபந்தனை இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன் என விட்காப்பிடம் அதிபர் புதின் கூறினார். இதனை பல முறை புதின் கூறியள்ளதாக தெரிவித்தார்.

    போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக ரோம் சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
    • செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2வது சுற்றுக்கு நேரடியாக தகுதிபெற்றார்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற 2வது சுற்றில் ஜோகோவிச், இத்தாலியின் மேட்டியோ அர்னால்டு உடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 3-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ரெட்ரோ திரைப் படத்திற்கான ப்ரோமோஷன் நடைபெற்று வருகிறது.
    • ரெட்ரோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது சூர்யா தனது 46வது படம் குறித்து அறிவித்தார்.

    இயக்குனர் வெங்கி அட்லூரியின் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைதொடர்ந்து, வெங்கி அட்லூரியிடம் அடுத்த படம் குறித்து அஜித் குமார் ஆலோசித்தாக தகவல் கசிந்துள்ளது. இதனால் இருவரும் அடுத்த படத்தில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, வெங்கி அட்லூரி சூர்யாவின் 46ஆவது படத்தை இயக்க உள்ளார் என்ற தகவலும் பரவியது. இந்த படத்திற்கான முந்தைய வேலைகளில் அவர் பிசியாக உள்ளார் என்றும் கூறப்பட்டது.

    சூர்யாவின் 46வது படத்திற்கு பிறகு, அஜித் குமார் உடன் கைக்கோர்ப்பதற்கான திட்டத்தை தொடங்கலாம் எனவும் தெரிகிறது.

    சூர்யா நடிப்பின் வரும் மே 1ம் தேதி திரைக்கு வரவுள்ள ரெட்ரோ திரைப் படத்திற்கான ப்ரோமோஷன் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், தெலுங்கில் நடைபெற்ற மெட்ரோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது சூர்யா தனது 46வது படம் குறித்து அறிவித்தார்.

    அப்போது, அவர் சித்தாரா என்டெர்டெய்ண்மென்ட் தயாரிப்பில் வெங்கி அட்லூர் இயக்கத்தில் தான் நடிக்க உள்ளதாக கூறினார்.

    • கைது செய்யப்பட்டவர்களில் இருவர் அல் கொய்தாவின் ஸ்லீப்பர் செல்களாக பணிபுரிந்ததை கண்டுபிடித்தோம்.
    • சட்டவிரோத குடியேறிகளுக்கு தங்குமிடம் வழங்கும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

    குஜராத்தின் அகமதாபாத் மற்றும் சூரத்தில் நடந்த சோதனை நடவடிக்கைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத வங்கதேச குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவி, சட்டவிரோத வங்கதேசத்தினரைப் பிடிப்பதில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ளது. அகமதாபாத் காவல்துறையினரால் 890 சட்டவிரோத குடியேறிகளும், சூரத் காவல்துறையினரால் 134 பேரும் பிடிபட்டனர்.

    குஜராத் மாநிலத்தில் சட்டவிரோதமாக வசிக்கும் மக்களுக்கு எதிராக குஜராத் காவல்துறை மேற்கொண்ட மிகப்பெரிய நடவடிக்கை இதுவாகும். இவர்களில் பலர் போதைப்பொருள் கடத்தல், மனித கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர், மேலும் சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்களில் இருவர் அல் கொய்தாவின் ஸ்லீப்பர் செல்களாக பணிபுரிந்ததை கண்டுபிடித்தோம்.

    அவர்களின் பின்னணி மற்றும் குஜராத்தில் அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்படும். கைது செய்யப்பட்டவர்களை நாடு கடத்துவதற்கான அனைத்து நடைமுறைகளையும் விரைவில் முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

    மேலும் குஜராத்தில் வசிக்கும் சட்டவிரோத குடியேறிகள் தாங்களாகவே காவல்துறையிடம் சரணடைய வேண்டும் என்றும், இல்லையெனில் அவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள். சட்டவிரோத குடியேறிகளுக்கு தங்குமிடம் வழங்கும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். 

    • தனது முன்னாள் காதலைப் நினைத்து மனம் வருந்தத் தொடங்கினார்.
    • 'ஏ தில் ஹை முஷ்கில்' படத்தில் வரும் காதல் முறிவு பாடலாகும்.

    திருமணத்தில் ஒலிக்கப்பட்ட பாடலால், முன்னாள் காதலின் நினைவு வந்து மணமகன் ஒருவர் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.

    டெல்லியில் நடந்த ஒரு திருமணத்தின்போது DJ 'சன்னா மெரேயா' என்ற பாடலை பிளே செய்தார்.

    இந்தப் பாடலைக் கேட்டதும், மணமகன் உணர்ச்சிவசப்பட்டு, தனது முன்னாள் காதலைப் நினைத்து மனம் வருந்தத் தொடங்கினார்.

    இதனால் அவர் திருமணத்தை நிறுத்திவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் பலவிதமான கருத்து தெரிவித்து வருகின்றனர்

    'சன்னா மெரேயா' என்பது ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் படமான 'ஏ தில் ஹை முஷ்கில்' படத்தில் வரும் காதல் முறிவு பாடலாகும். 

    • விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் ஓடுதளத்திலேயே அதன் டயர் வெடித்தது.
    • பயணிகளை இறக்கிவிடப்பட்டு பழுதடைந்த டயர் மாற்றப்பட்டது.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை 166 பயணிகளுடன் மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது.

    விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் ஓடுதளத்திலேயே அதன் டயர் வெடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து சுதாரித்துக் கொண்ட விமானி ஓடுதளத்தில் பயங்கரமாக குலுங்கியபடி ஓடிய விமானத்தை, சாமர்த்தியமாக இயக்கி நிறுத்தினார்.

    பின்னர், பயணிகளை இறக்கிவிடப்பட்டு பழுதடைந்த டயர் மாற்றப்பட்டது.

    இதனால், 2 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×