எல்லோரிடமும் எளிதாகப் பழகும் துலாம் ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் பஞ்சம ஸ்தானத்தில் பலம்பெற்ற சனியோடு இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே நல்ல காரியங்கள் பலவும் இம்மாதத்தில் நடைபெறும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவர். கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். பக்தி மிகுதியால் புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வருவீர்கள்.
மிதுன - செவ்வாய்
தை 5-ந் தேதி மிதுன ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் வக்ரம்பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பொருளாதாரம் ஏற்ற இறக்கநிலையில் இருக்கும். சில காரியங்கள் கடைசி நேரத்தில்தான் கைகூடும். என்ன இருந்தாலும் இனம்புரியாத கவலை மேலோங்கும். 'மனதில் நினைத்ததை செய்து முடிக்க இயலவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். பணிபுரியும் இடத்தில் கவனம் தேவை. உங்களிடம் கொடுத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். கோபத்தின் காரணமாக பல நல்ல காரியங்களை இழக்க நேரிடும். அங்காரக வழிபாடு அல்லல் தீர்க்கும்.
மகர - புதன்
உங்கள் ராசிக்கு 9, 12-க்கு அதிபதியான புதன், தை 6-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். பாக்கிய ஸ்தானாதிபதி சுக ஸ்தானத்திற்கு வருவதால், ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். தொழிலுக்கு பெற்றோர் வழி ஒத்துழைப்பு கிடைக்கும். பழுதான வீடுகளைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். சிறிய கடன்களைக் கொடுத்து மகிழ்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். போட்டிக் கடை வைத்தோர் விலகுவர். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு அகலும்.
கும்ப - புதன்
தை 23-ந் தேதி கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்போது, பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இல்லத்தில் கல்யாணம், காதுகுத்து, மணிவிழா, கட்டிடத் திறப்பு விழா நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். வரும் நல்ல சந்தர்ப்பங்களை நழுவவிட வேண்டாம். உங்கள் எண்ணங்களைப் பூர்த்தி செய்ய இனிய நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வசதி வாய்ப்புகள் பெருகும். வருமானம் திருப்தி தரும்.
குரு வக்ர நிவர்த்தி
ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், தை 29-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். இக்காலத்தில் கொஞ்சம் கவனமாகவே செயல்பட வேண்டும். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகைக் கிரகம் என்பதால் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் திடீரென எண்ணங்கள் மாறும். ஆரோக்கியச் சீர்கேடுகள் அதிகரிக்கலாம். அதிகார வர்க்கத்தினரால் தொல்லை ஏற்படும். ஒரு சில காரியங்களில் 'நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கின்றதே' என்று கவலைப்படுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு லாபம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பர். கலைஞர்களுக்குத் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் அதிகம்பெற எடுத்த முயற்சி பலன்தரும். பெண்களுக்கு எதையும் தைரியத்தோடு எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டு. பொருளாதாரம் திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 17, 18, 23, 24, 25, 30, 31, பிப்ரவரி: 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.