XUV700 விலையை உயர்த்திய மஹிந்திரா
- மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV700 மாடல் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
- முன்னதாக இதே காரின் சில வேரியண்ட்கள் விலை குறைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மஹிந்திரா நிறுவனம் XUV700 மாடல் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இம்முறை விலை உயர்வு XUV700 அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். விலை உயர்வு ஒவ்வொரு வேரியண்டிற்கு ஏற்ப ரூ. 20 ஆயிரத்து 072 துவங்கி அதிகபட்சம் ரூ. 36 ஆயிரத்து 814 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
புதிய மஹிந்திரா XUV700 AX7 டீசல் AT லக்சரி பேக் 7 சீட்டர் வேரியண்ட் விலை அதிகளவாக ரூ. 36 ஆயிரத்து 814 உயர்த்தப்பட்டு இருக்கிறது. XUV700 AX3 டீசல் மேனுவல் டிரான்ஸ்மிஷ் 5 சீட்டர் வேரியண்ட் விலை ரூ. 20 ஆயிரத்து 072 உயர்த்தப்பட்டு இருக்கிறது.
விலை உயர்வின் படி மஹிந்திரா XUV700 மாடல் தற்போது ரூ. 13 லட்சத்து 45 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 24 லட்சத்து 95 ஆயிரம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் இந்த கார் இருவித இருக்கை அமைப்புகள் மற்றும் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
மஹிந்திரா XUV700 மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் யூனிட் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 197 ஹெச்.பி. பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
டீசல் என்ஜின் மேனுவல் வேரியண்ட் 182 ஹெச்.பி. பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஆட்டோமேடிக் வேரியண்ட் 182 ஹெச்.பி. பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பேஸ் வேரியண்ட்கள் 153 ஹெச்.பி. பவர், 360 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.