மாருதி நிறுவனர் டாக்டர் வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்தி உயிரிழப்பு
- மாருது சுசுகி நிறுவனர் டாக்டர் வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார்.
- இவர் மாருதி சுசுகி மட்டுமின்றி பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.
மாருதி உத்யோக் - இன்று மாருதி சுசுகி இந்தியா நிறுவன தலைவர் டாக்டர் வி கிருஷ்ணமூர்த்தி நேற்று (ஜூன் 26) உயிரிழந்தார். இவருக்கு வயது 97. மாருதி சுசுகி நிறுவன தலைவராக மட்டுமின்றி பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களை கையகப்படுத்தி அவற்றை வளர்ச்சி பாதையில் அழைத்துச் சென்று இருக்கிறார்.
அதன்படி பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா போன்ற நிறுவனங்களை வளர்ச்சி பாதையில் அழைத்துச் சென்றதில் இவரின் பங்கு குறிப்பிடத்தக்க ஒன்று ஆகும். இது மட்டுமின்றி பல்வேறு மிக முக்கிய பொறுப்புகளை வி கிருஷ்ணமூர்த்தி வகித்து இருக்கிறார். இவர் மத்திய தொழில்துறையின் திட்டமிடல் ஆணையத்தின் செயலாளராக பதவி வகித்துள்ளார்.
1981 ஆம் ஆண்டு மாருதி உத்யோக் நிறுவனத்தின் துணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டார். 1985 ஆம் ஆண்டு ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்திற்கு செல்லும் முன், மாருதி 800 மாடல் இவரின் மேற்பார்வையில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. அதிக நட்டத்தில் இயங்கிய ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தை சந்தையின் உச்சிக்கு அழைத்துச் சென்றதில் இவரின் பங்கு மிகப் பெரியது.
இந்திய தொழில்துறையில் இவரின் பங்களிப்புகளை பாராட்டும் வகையில், 1973 ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருதும், 1986 ஆண்டு பத்ம பூஷன் அதன்பின் 2007 ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய விருதான பத்ம விபூஷன் வழங்கப்பட்டது.
"நான் எனது பணியை துவங்கியதில் இருந்து, என் வியாபார காலக்கட்டம் வரை டாக்டர் வி கிருஷ்ணமூர்த்தி எனக்கு தொழில் குருவாக விளங்கினார். டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி உருவானதில் அவரின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இவர் இந்திய தொழில்துறையில் மிகமுக்கியத் துவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவர் ஆவார். இந்திய வளர்ச்சியில் இவரின் பங்களிப்பு அளவிட முடியாத ஒன்று ஆகும். இந்திய தொழில்துறை மற்றும் நாட்டிற்கு இது மிகப் பெரிய இழப்பு," என டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் தலைவர், வேனு ஸ்ரீனிவாசன் தெரிவித்து இருக்கிறார்.