எஸ்.யு.வி. விற்பனையில் மாஸ் காட்டிய மஹிந்திரா... இத்தனை யூனிட்களா?
- மஹிந்திரா நிறுவனம் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
- முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 29 சதவீதம் அதிகம் ஆகும்.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் அக்டோபர் 2023 மாதத்திற்கான வாகனங்கள் விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில், ஒட்டுமொத்த ஆட்டோ விற்பனையில் 80 ஆயிரத்து 679 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி ஏற்றுமதி செய்யப்பட்ட யூனிட்களும் அடங்கும்.
இதன் மூலம் ஒட்டுமொத்த ஆட்டோ விற்பனையில் மஹிந்திரா நிறுவனம் 32 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. மேலும் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக மஹிந்திரா நிறுவனம் எஸ்.யு.வி. விற்பனையில் சாதனை படைத்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் மஹிந்திரா நிறுவனம் 43 ஆயிரத்து 708 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது விற்பனையில் 36 சதவீதம் அதிகம் ஆகும்.
ஏற்றுமதியை பொருத்தவரை மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த யுடிலிட்டி வாகனங்கள் விற்பனை 556 ஆக இருந்தது. மஹிந்திராவின் வர்த்தக பிரிவு வாகனங்கள் உள்நாட்டு விற்பனையில் 25 ஆயிரத்து 715 ஆக பதிவாகி இருக்கிறது. இதேபோன்று பயணிகள் வாகன பிரிவிலும் மஹிந்திரா நிறுவனம் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
வருடாந்திர அடிப்படையில், மஹிந்திரா நிறுவனம் இதுவரை 2 லட்சத்து 58 ஆயிரத்து 622 பயணிகள் வாகனங்களை உள்நாட்டில் விற்பனை செய்திருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 29 சதவீதம் அதிகம் ஆகும்.