ரூ. 12 லட்சம் பட்ஜெட்டில் இந்தியாவில் அறிமுகமான மாருதி ஜிம்னி
- மாருதி ஜிம்னி மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
- மாருதி ஜிம்னி மாடல் சீட்டா மற்றும் ஆல்ஃபா என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஜிம்னி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாருதி சுசுகி ஜிம்னி மாடலின் விலை ரூ. 12 லட்சத்து 74 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஜிம்னி மாடல் முன்னதாக ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
இந்த மாடலின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என்றும் அதன் பிறகு ரூ. 25 ஆயிரம் என்றும் மாற்றப்பட்டது. முற்றிலும் புதிய மாருதி ஜிம்னி மாடலுக்கான வினியோகமும் இன்றே (ஜூன் 7) துவங்குகிறது. மாருதி ஜிம்னி மாடல் சீட்டா மற்றும் ஆல்ஃபா என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.
இத்துடன் சிஸ்லிங் ரெட், நெக்சா புளூ, கிரானைட் கிரே, பியல் ஆர்க்டிக் வைட், புளூயிஷ் பிளாக், சிஸ்லிங் ரெட் மற்றும் புளூயிஷ் பிளாக் ரூஃப், கைனடிக் எல்லோ மற்றும் புளூயிஷ் பிளாக் ரூஃப் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஜிம்னி மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப்கள், ப்ரோஜெக்டர் யூனிட், ஐந்து ஸ்லாட்கள் கொண்ட கிரில், பிரமாண்ட் வீல் கிளாடிங், கிரே நிற அலாய் வீல்கள், செவ்வக வடிவம் கொண்ட ஹாலோஜன் டெயில் லைட்கள், டெயில்கேட்டில் ஸ்பேர் வீல் மவுண்ட் செய்யப்பட்டு இருக்கிறது.
2023 மாருதி ஜிம்னி மாடலில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட K15B பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 103 ஹெச்பி பவர், 134 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டிரான்ஸ்மிஷனுக்கு 5 ஸ்பீடு மேனுவல் யூனிட், 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய மாருதி ஜிம்னி மாடல் ஐந்து கதவுகள் கொண்ட மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் குர்கா மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய மாருதி ஜிம்னியின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15 லட்சத்து 05 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.