புதிய மாருதி இன்விக்டோ முன்பதிவுகள் துவக்கம் - விரைவில் வெளியீடு!
- மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய இன்விக்டோ மாடல் பிரீமியம் எம்பிவி பிரிவில் நிலை நிறுத்தப்படுகிறது.
- மாருதி இன்விக்டோ மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது இன்விக்டோ எம்பிவி மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய எம்பிவி மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும். இந்த காருக்கான முன்பதிவு மாருதி சுசுகி வலைதளம் மற்றும் நெக்சா விற்பனை மையங்களில் மேற்கொள்ள முடியும். இன்விக்டோ மாடல் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
இந்திய சந்தையில் மாருதி சுசுகி இன்விக்டோ மாடலின் வெளியீடு ஜூலை 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. மாருதி சுசுகி இன்விக்டோ மாடலின் விலை ரூ. 20 லட்சத்திற்கும் அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இன்னோவா ஹைகிராசை விட வித்தியாசப்படுத்திக் கொள்ள இன்விக்டோ மாடலில் புதிய கிரில்- இரண்டு க்ரோம் ஸ்லாட்கள் வழங்கப்படுகின்றன.
இத்துடன் பம்ப்பர் ரி-வொர்க் செய்யப்பட்டு, புதிய ஹெட்லைட், டெயில் லைட் இன்சர்ட்கள், பிரத்யேக அலாய் வீல் டிசைன் வழங்கப்படுகிறது. உள்புறம் புதிய இன்விக்டோ மாடலில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிகிறது. மாருதி இன்விக்டோ மாடலில் ADAS சிஸ்டத்தின் குறிப்பிட்ட அம்சங்களோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படலாம் என்று தெரிகிறது.
மாருதி சுசுகி இன்விக்டோ மாடலின் டாப் எண்ட் மாடல்களில் 183 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்ட 2.0 லிட்டர் ஸ்டிராங் ஹைப்ரிட் பவர்டிரெயின், e-CVT யூனிட் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதன் என்ட்ரி லெவல் மாடலில் 173 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் e-CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய மாருதி சுசுகி இன்விக்டோ பிரீமியம் எம்பிவி மாடல் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், கியா கார்னிவல் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.