சூடுபிடிக்கும் EV சந்தை.. இந்தியாவில் களமிறங்கும் அமெரிக்க நிறுவனம்!
- அமெரிக்க எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா இந்திய சந்தையில் களமிறங்குவதாக தகவல் வெளியானது.
- பிஸ்கர் பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் எஸ்யுவி- ஓஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றன. உலகின் முன்னணி ஆட்டோமொபைல் சந்தைகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதே இதற்கு முக்கிய காரணம் எனலாம். மெல்லிய எலெக்ட்ரிக் கார்கள், இருசக்கர வாகனங்கள் என இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.
அந்த வகையில், சமீபத்தில் வெளியான தகவல்களில், அமெரிக்க எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா இந்திய சந்தையில் களமிறங்க இருப்பதாக கூறப்பட்டன. மேலும் டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலை விரைவில் துவங்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. டெஸ்லா நிறுவனம் டாப் என்ட் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.
எலெக்ட்ரிக் வாகன துறையில் அதிநவீன தொழில்நுட்பம், நீண்ட தூரம் பயணம் செய்யும் திறன், அதிவேக சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தானியங்கி வாகன முறை என பல்வேறு பயனுள்ள அம்சங்களை வழங்குவதில் டெஸ்லா பிரபலமாக அறியப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனமான பிஸ்கர் இந்திய சந்தையில் களமிறங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. வரும் மாதங்களில் பிஸ்கர் நிறுவனத்தின் பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் எஸ்யுவி-யான ஓஷன் மாடல், இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் வாகனம் அமெரிக்க சந்தையில் டெஸ்லா மாடல் Y-க்கு போட்டியாக அமைகிறது.
பிஸ்கர் நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இவை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட உள்ளன. பிஸ்கர் நிறுவனம் செப்டம்பர் மாத வாக்கில் இந்திய சந்தையில் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறது.