ஆசிய கோப்பை இறுதி ஆட்டம்- பாகிஸ்தானுக்கு 171 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை
- இலங்கை வீரர் பானுகா ராஜபக்சே 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார்.
- பாகிஸ்தான் தரப்பில் ஹரீஸ் ரவூப் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் பங்கேற்றுள்ளன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி பாகிஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. தொடக்க வீரர் குஷல் மெண்டிஸ் டக் அவுட்டானார். மற்றொரு வீரர் நிசங்கா 8 ரன்னுடன் வெளியேறினார். குணதிலகா ஒரு ரன்னுடன் பெவிலியன் திரும்பினார்.
தனஞ்செய டிசெல்வா 28 ரன் அடித்தார். அதிரடி காட்டிய பானுகா ராஜபக்சே 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். கேப்டன் தசுன் சனகா 2 ரன்னுக்கு ஆட்டமிழக்க, ஹசரங்கா டிசெல்வா 36 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். கருணாரத்னே 14 ரன் அடித்தார்.
இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரீஸ் ராவூப் 3 விக்கெட்களை கைப்பற்றினார். நசீம் ஷா, சதாப்கான், இப்திகார் அகமது தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் களம் இறங்குகிறது.