கஷ்டப்படும் குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்கிறேன்- விமர்சித்தவருக்கு ஹர்பஜன் சிங் பதிலடி
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி மற்றும் கேப்டன் மீது பல விமர்சனங்கள் எழுந்தது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியில் யாரிடமும் ஒற்றுமை இல்லையென கேரி கிர்ஸ்டன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் இனிமேலும் பாகிஸ்தான் அணியிலிருந்து நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று கேரி கிர்ஸ்டனுக்கு இந்திய முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் அறிவுரை வழங்கினார்.
இதனையடுத்து, சமூக வலைத்தளங்களில் பலரும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள ஹர்பஜன் சிங்கை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.
மாநிலங்களவை எம்.பி ஹர்பஜன் சிங் எதற்காக கிரிக்கெட் கமெண்ட்ரி செய்து கொண்டிருக்கிறார். இதன்மூலம் மக்களின் வரிப்பணத்தை தான் அவர் வீணடித்து கொண்டிருக்கிறார் என்று எக்ஸ் வலைத்தளத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார்.
அந்த எக்ஸ் பதிவை ஹர்பஜன் சிங் பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார். அதில், "என்னுடைய எம்.பி சம்பளத்தை படிக்க முடியாமல் கஷ்டப்படும் குழந்தைகளின் கல்விச்செலவுக்கு உதவி செய்கிறேன். அதில் ஒரு ரூபாயை கூட நான் எனக்காக செலவு செய்தது கிடையாது. நானும் வரி செலுத்துபவன் தான். உங்களுக்கு தெரிந்தவர் யாருக்காவது படிப்பதற்கு உதவி தேவைப்பட்டால் சொல்லுங்கள், நான் உதவி செய்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.