கிரிக்கெட்

சென்னை டெஸ்ட்: இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 236/4

Published On 2024-06-29 12:28 GMT   |   Update On 2024-06-29 12:28 GMT
  • டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 603 ரன்கள் குவித்தது.
  • இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 236 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னை:

இந்தியா-தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா பொறுப்பாக ஆடி சதமடித்து அசத்தினர். ஷபாலி வர்மா-ஸ்மிரிதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்தனர்.

ஸ்மிர்தி மந்தனா 149 ரன் எடுத்து அவுட்டானார். சுபா சதீஷ் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பொறுப்பாக ஆடிய ஷபாலி வர்மா இரட்டை சதம் அடித்து, 205 ரன்னில் வெளியேறினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 55 ரன்னிலும் அவுட்டானார்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி 98 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 525 ரன்கள் குவித்திருந்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 42 ரன்னும், ரிச்சா கோஷ் 43 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 69 ரன்னும், ரிச்சா கோஷ் 86 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

இதன்மூலம் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோர் (603) விளாசிய அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் சுனே லுஸ் மற்றும் மரிஜான் காப் அரை சதம் அடித்தனர்.

இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது. மரிஜான் காப் 69 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்திய அணி 367 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா சார்பில் ஸ்னே ரானா 3 விக்கெட் வீழ்த்தினார்.

Tags:    

Similar News