கிரிக்கெட் (Cricket)

டி20-யில் 501 ரன்கள்: தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் சாதனை

Published On 2022-11-02 10:21 GMT   |   Update On 2022-11-02 10:21 GMT
  • முதலில் பேட்டிங் செய்த அணி 271 ரன்கள் குவித்தது.
  • 2-வது பேட்டிங் செய்த அணி 230 ரன்கள் சேர்த்தது.

ஐ.பி.எல்., பிக் பாஸ் போன்று தென் ஆப்பிரிக்காவில் டி20 சேலஞ்ச் தொடர் நடத்தப்படுகிறது. இந்த வருடம் அறிமுகமாகிய இந்த தொடரில் விளையாடும் அணிகளை ஐ.பி.எல். தொடரில் விளையாடும் அணிகளை வாங்கிய உரிமையாளர்கள்தான் வாங்கியுள்ளன.

லீக் ஆட்டம் ஒன்றில் நைட்ஸ் மற்றும் டைட்டன்ஸ் அணிகள் மோதின. நைட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் இளம் வீரரான தெவால்ட் பிரேவிஸ் அபாரமாக விளையாடி 57 பந்தில் 162 ரன்கள் விளாச, டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. பிரேவிஸின் ஸ்டிரைக் ரேட் 284.21 ஆகும். அவரது ஸ்கோரில் தலா 13 பவுண்டரி, சிக்சர்கள் அடங்கும்.

அதன்பின் 272 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டைட்டன்ஸ் அணி 230 ரன்கள் சேர்த்தது. இரண்டு அணிகளும் இணைந்து 501 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த போட்டியாக இந்த ஆட்டம் அமைந்துள்ளது.

இதற்கு முன் நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் இரண்டு அணிகளும் இணைந்து 497 ரன்கள் குவித்திருந்தது. 2016-ம் ஆண்டு அடிக்கப்பட்ட இந்த ரன்தான் அதிகபட்ச ரன்களாக இருந்தது. தற்போது 7 வருடங்களுக்குப்பின் அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

டி20 கிரிக்கெட்டில் பிரேவிஸ் விளாசிய 162 ரன்கள், நான்காவது அதிகபட்ச ஸ்கோராகும்.

கிறிஸ் கெய்ல் ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் குவித்தது அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. ஆரோன் பிஞ்ச் 172 ரன்களுடன் 2-வது இடத்திலும், ஜிம்பாப்வே வீரர் ஹாமில்டன், ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரதுல்லா ஜாஜாய் ஆட்டமிழக்காமல் 162 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News