null
இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஜூனியர் மகளிர் உலகக்கோப்பையை வென்றது இந்தியா
- டைட்டாஸ் சாது, அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- தொடக்கத்தில் அதிரடி காட்டிய கேப்டன் ஷபாலி வர்மா 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.
போட்செப்ஸ்ட்ரூம்:
பெண்களுக்கான முதலாவது ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக ரியானா மெக்டொனால்ட் 19 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேற இங்கிலாந்து அணி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் டைட்டாஸ் சாது, அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்கத்தில் அதிரடி காட்டிய கேப்டன் ஷபாலி வர்மா 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ஸ்வேதா செஹராவத் 5 ரன்னில் அவுட் ஆனார்.
இதனையடுத்து சௌமியா திவாரி -கோங்காடி த்ரிஷா ஜோடி நிதானமாக விளையாடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
கடைசி 3 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், கோங்காடி த்ரிஷா 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் இந்திய அணி 69 ரன்கள் எடுத்து, ஜூனியர் உலக கோப்பையை ருசித்தது.