ஆன்மிகம்
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த பக்தர்கள் சிலுவை பாதையில் மண்டியிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய காட்சி.

வேளாங்கண்ணியில் நாளை பெரிய தேர் பவனி

Published On 2016-09-06 10:01 IST   |   Update On 2016-09-06 10:01:00 IST
வேளாங்கண்ணியில் நாளை பெரிய தேர் பவனி நடைபெறுகிறது. இதற்காக பக்தர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்துக்கு தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலிருந்தும் வெளிநாட்டினரும் வந்து செல்கிறார்கள்.

இந்த ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் காலை, மாலை நேரங்களில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், கொங்கணி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் மாலை கொங்கணி, தமிழ், ஆங்கிலம், மராத்தியில் சிலுவை பாதை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாதா பாடல்களை பாடிய படி புனிதப் பாதையில் சென்றனர்.

நேற்று மாலை பேராலய கலையரங்கில் தமிழில் ஜெபமாலை நடந்தது. நாளை (7-ந்தேதி) மாலை 5.15 மணிக்கு தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் நடக்கிறது.

விண்மீன் ஆலயத்தில் தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அன்று இரவு பெரிய தேர் பவனி நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

8-ந் தேதி அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அன்று காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும்.

மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடியிறக்கம் நடைபெறும். 6.15 மணிக்கு பேராலய கீழ் கோவிலில் மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நடைபெறும்.

கொடியேற்றத்துக்கு முன்பிருந்தே வேளாங்கண்ணிக்கு பல்வேறு மாவட்டங்கள், கிராமங்களிலிருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக வந்த வண்ணம் இருந்தனர்.

நாளை நடைபெறும் தேர் பவனியில் பங்கேற்க ஏராளமானோர் வேளாங்கண்ணியில் திரண்டு உள்ளனர்.

இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

Similar News