ஆன்மிகம்

ஜெருசலேமில் ஏசு நாதருடன் தொடர்புடைய தேவாலயம் மீண்டும் திறப்பு

Published On 2018-03-01 08:43 IST   |   Update On 2018-03-01 08:43:00 IST
ஜெருசலேம் நகரில் 2 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிய பெருமைமிக்க தேவாலயம் உள்ளது. இது புனித செபுல்செரி என அழைக்கப்படுகிறது.
இஸ்ரேலின் தலைநகர் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்பால் அறிவிக்கப்பட்டு, பிரச்சினைக்கு உள்ளாகி இருக்கிற ஜெருசலேம் நகரில் 2 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிய பெருமைமிக்க தேவாலயம் உள்ளது. இது புனித செபுல்செரி என அழைக்கப்படுகிறது.

இந்த தேவாலயம், ஏசுநாதர் சிலுவையில் அறைந்து உயிர்துறந்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த இடத்தில் கட்டப்பட்டு உள்ளது என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை ஆகும். இதனால் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உலகம் முழுவதும் இருந்து இந்த தேவாலயத்துக்கு வருகிறார்கள்.

இந்த தேவாலயம், கிரேக்க ஆர்தோடக்ஸ், ஆர்மேனியன், ரோமன் கத்தோலிக்கர்களின் பொறுப்பில் உள்ளது.



இந்த தேவாலய சொத்தை வணிகப்பகுதியாக கருதி வரி விதிக்க ஜெருசலேமில் உள்ள இஸ்ரேல் அதிகாரிகள் முடிவு செய்தனர். வழிபாடு நடத்துகிற, மதக்கல்வி போதிக்கிற இடங்களுக்கு மட்டுமே வரியில் இருந்து விலக்கு அளிக்க முடியும் என அவர்கள் கூறினர். இந்த வரி விதிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பழமை வாய்ந்த தேவாலயத்தை மூடி, நிர்வாகிகள் போராட்டத்தில் குதித்தனர்.

இதன் காரணமாக அங்கு வருகிற ஆன்மிகப் பயணிகள், சுற்றுலாப் பயணிகள் ஆலயத்துக்குள் செல்ல முடியாமல் தவித்தனர். இந்த விவகாரம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கவனத்துக்கு சென்றது. அவர் இதில் தீர்வு காண்பதற்கு ஒரு குழு அமைக்கப்படும் என அறிவித்தார். மேலும், வரி விதிப்பு திட்டத்தை நிறுத்தி வைப்பதாக ஜெருசலேம் நகர மேயர் நிர் பர்க்கட் அறிவித்தார்.

உடனே அந்த தேவாலயத்தை திறக்க நிர்வாகிகள் முடிவு செய்தனர். 3 நாட்களுக்கு பிறகு நேற்று உள்ளூர் நேரப்படி காலை 4 மணிக்கு அந்த தேவாலயத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஆன்மிகப் பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் அங்கு வழக்கம் போல செல்லத் தொடங்கினர்.

Similar News