ஆன்மிகம்
திருவதிகை திருத்தலம்

அப்பர் நோய் தீர்த்த திருவதிகை திருத்தலம்

Published On 2016-06-07 08:24 IST   |   Update On 2016-06-07 08:24:00 IST
சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட தலங்களில் திருவதிகைத் திருத்தலமும் ஒன்று.
திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்ற ஊரில், புகழனார்–மாதினியார் என்ற தம்பதிக்கு மகனாக அவதரித்தவர் மருள்நீக்கியார். திருநாவுக்கரசரின் இயற்பெயர் இதுதான். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த, மருள்நீக்கியார், தனது அக்காள் திலகவதியின் அன்பான அரவணைப்பில் வளர்ந்து வந்தார். திலகவதி அம்மையார், சைவ சமயத்தின் மீது அதீத பற்றுகொண்ட மிகச்சிறந்த சிவ பக்தை ஆவார்.

ஒரு சமயம் மருள் நீக்கியார் சமண சமயத்தில் சேர்ந்து தொண்டாற்றத் தொடங்கினார். அங்கு அவரது பெயர் தருமசேனர் என்று மாறிப்போனது. இந்த நிலையில் மருள்நீக்கியாருக்கு, தீராத வயிற்று வலி (சூலைநோய்) தோன்றியது. பல மருந்துகளை உட்கொண்டும் அவரது நோய் குணமாகவில்லை. இதனால் அவர் மீண்டும் தனது அக்காள் திலகவதியிடமே திரும்பி வந்தார்.

அப்போது திருவதிகையில் வீற்றிருக்கும் வீரட்டானேஸ்வரருக்கு, தொண்டு செய்து கொண்டிருந்தார் திலகவதி. அவர் தனது தம்பியின் நிலையைக் கண்டு கண்ணீர் வடித்தார். உடனடியாக தம்பியை திருவதிகை ஆலயம் அழைத்துச் சென்று, சிவபெருமானின் திருநீற்றுச் சின்னத்தைத் தரிக்கும்படி செய்தார். அப்போது சிவபெருமானின் மீது பக்தி பெருக்கெடுத்த மருள்நீக்கியார், வயிற்று வலியால் துவண்ட போதிலும், திருவதிகை ஈசனை நினைத்து மனமுருக பதிகம் பாடினார்.

‘கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நானறியேன்

ஏற்றாயடியார்க் கேஇரவும் பகலம் பிரியாது வணங்குவேன் எப்போழுதும்

தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே’

என முதல் பதிகம் தொடங்கி, தனது வயிற்று வலியைப் போக்கும்படி 10 பதிகங்களை கண்ணீர் மல்கப் பாடினார்.

இதையடுத்து சிவபெருமானின் பெரும் கருணையால், மருள்நீக்கியாரின் சூலை நோய் என்னும் வயிற்று வலி தீர்ந்தது. இதையடுத்து அவர் சிவன் பக்தராக மாறினார். சிவபெருமானாலேயே, ‘திருநாவுக்கரசர்’ என்று பெயர் சூட்டப்பட்டார்.

இந்தத் திருவதிகைத் திருத்தலம் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட தலங்களில் இதுவும் ஒன்று.

தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள், பிரம்மாவை நோக்கி தவம் செய்து பல வரங்களைப் பெற்றனர். அந்த வரங்களைக் கொண்டு தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் துன் புறுத்தி வந்தனர். அவர்களால் துன்புற்றவர்கள் அனைவரும் இறைவனிடம் முறையிட்டனர். இதையடுத்து பூமியைத் தேராகவும், சூரிய– சந்திரர்களை தேர் சக்கரங்களாகவும், நான்கு வேதங்களையும் குதிரைகளாகவும், பிரம்மாவை தேரோட்டியாகவும், மற்ற தேவர்களை எல்லாம் தேருடன் வரச் செய்தார்.

மேலும் மேரு மலையை வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும், திருமாலை அம்பாகவும், அம்பின் நுனியில் அக்னியையும் வைத்து அந்த வில்லுடன் தேரில் ஏறினார். தேரில் வந்த அனைத்து தேவர்களும், தங்களால்தான் அந்த அசுரர்கள் மடியப்போகிறார்கள் என்று ஆணவத்துடன் நினைத்துக் கொண்டிருக்க, சிவபெருமான் அசுரர்கள் மீது வில், அம்பு எதையும் பயன்படுத்தவில்லை. மாறாக, அசுரர்களைப் பார்த்து சற்றே சிரித்தார். அவரது சிரிப்பில் அசுரர்கள் மூவரும் எரிந்து சாம்பலானார்கள்.

அழகிய ராஜ கோபுரமும், மண்டபங்களும் கொண்ட இந்தத் திருத்தலத்தில் சிவபெருமான், கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இறைவனின் பெயர் வீரட்டானேஸ்வரர் என்பதாகும். இவர் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். மூலவருக்கு பின்புறத்தில் சுதையால் செய்யப்பட்ட சிவ–சக்தி திருகல்யாணக் காட்சி காணப்படுகிறது.

திருநாவுக்கரசருக்கு இறைவன் திருமணக் கோலத்தை காட்டி அருளிய தலம் இது என்று கூறப்படுகிறது. மூலவரின் கருவறை விமானம் முழுவதும் தேர் போல அமைந்திருக்கிறது. இறைவன் தேரில் வந்து திரிபுரம் எரித்ததை விளக்கும் வகையில் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட தாக கூறப்படுகிறது.

சுவாமியின் வலது புறம் தனிச்சன்னிதியில் நின்ற திருக்கோலத்தில் அம்பாள் காட்சியளிக்கிறார். அம்பாளின் திருநாமம் ‘திரிபுரசுந்தரி’ என்பதாகும். அம்பிகை சன்னிதி அருகே தட்சிணாமூர்த்திக்கு தனி சன்னிதி அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை, திருநாவுக்கரசர் மட்டுமின்றி, திருஞான சம்பந்தர், சுந்தரர் ஆகியோரும் தேவாரப் பாடல்களால் போற்றியுள்ளனர்.

வீரட்டானத் தலங்களிலேயே அதிக பதிகங்களைக் கொண்ட திருத்தலம் இதுவாகும். திருஞான சம்பந்தருக்கு, இங்கு இறைவன் திருநடனக் காட்சியை காட்டியருளியிருக்கிறார். திருநாவுக்கரசருக்கு, திருமணக்கோலம் காட்டியதால், இந்த ஆலயத்தில் திருமண பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன.

பிரகாரத்தின் தென்பகுதியில் மஞ்சள் நிறப் பூக்களுடன், சரகொன்றை மரம் தல விருட்சமாக இருக்கிறது. அதன் அருகே திருநாவுக்கரசருக்கும், திருக்கோவிலில் தொண்டு செய்த அவரது சகோதரி திலகவதிக்கும் சன்னிதிகள் வடக்கு நோக்கியபடி அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் விநாயகர், அருணகிரிநாதரால் பாடப்பெற்ற முருகப்பெருமான், நடராஜர், சண்டிகேஸ்வரர், துர்க்கை, கல்யாண சுந்தரர், ஏகபாதர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன.

பிற கோவில்களைக் காட்டிலும், இந்த ஆலயத்தில் தல மரங்களின் மகத்துவத்தை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அற்புத கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. ராஜகோபுரத்தை அடுத்த வடபுறத்தில் ஒன்பது நவக்கிரகங்களும், அவற்றுக்கு என்னென்ன விருப்ப விருட்சங்கள் என்பதும் கட்டம் கட்டி வளர்க்கப்பட்டு வருகின்றன. அடுத்து வரிசையாக 27 நட்சத்திரத்துக்குரிய தாவரங்களும், மிக அருமையாக காட்சிப்படுத்தப்பட்டு பக்தர்களை பசுமை வளாகத்துக்குள் அழைத்துச் செல்கின்றன.

இத்தல இறைவனை வழிபட்டால், நாள்பட்ட வயிற்று வலியால் துன்பப்படுபவர்களின் பிணி நீங்கும் என்பது ஐதீகம். நோய் உள்ளவர்கள் மூலவருக்கு பாலாபிஷேகம் செய்து, அபிஷேக பாலை பருகுவதுடன், அவர் திருமேனி தழுவிய திருநீற்றை நெற்றியிலும், வயிற்றிலும் பூசிக்கொண்டு, தனது வாய்க்குள்ளும் போட்டுக் கொண்டு, அப்பர் பெருமான் பாடியருளிய தேவாரப்பாடல் பதிகத்தை பாடினால் நிச்சயம் பலன் உண்டு என்கிறார்கள் பக்தர்கள். மேலும் திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தைப்பேறு இல்லாதவர்கள், எதிரிகளின் தொல்லை உள்ளவர்களும் இத்தல இறைவனை வழிபட்டு பலன் பெறு கிறார்கள்.

ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறக்கப்பட்டிருக்கும்.

திருவிழாக்கள்  :

பங்குனி மாதத்தில் இந்த ஆலயத்தில் 10 நாள் வசந்த உற்சவம் நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் 10 நாட்கள் அப்பர் மோட்சம், திருக்கயிலாய காட்சி போன்றவை நடக்கிறது. வைகாசியில் 10 நாள் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சுவாமி புறப்பாடு விசேஷமானதாகும்.

இது தவிர ஆடிப்பூரம், மாணிக்கவாசகர் உற்சவம், மார்கழி மாத நிகழ்வு, நடராஜர் தீர்த்தவாரி, ஆருத்ரா தரிசனம், மகா சிவராத்திரி, கார்த்திகை தீப உற்சவம், சோமவாரம், பங்குனி உத்திரம் போன்ற உற்சவங்களும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது திருவதிகை திருத்தலம்.

Similar News