வழிபாடு

17-ந்தேதி மண்டல பூஜை: சபரிமலை பக்தர்களுக்கு உதவ அய்யன் செயலி

Published On 2023-11-10 05:39 GMT   |   Update On 2023-11-10 06:46 GMT
  • 16-ந்தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்படுகிறது.
  • வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்படுகிறது.

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக வருகிற 16-ந்தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்படுகிறது. மறுநாள் முதல் நெய் அபிஷேகம் உள்ளிட்ட அனைத்து வழக்கமான பூஜைகளும் தொடங்கும். பக்தர்கள் அன்று முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

சாமி தரிசனத்துக்கு வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்படுகிறது. சபரிமலையில் மண்டல பூஜை தொடங்க ஒரு வாரமே உள்ளதால், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் சபரி மலைக்கு யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் அய்யன் என்ற செயலி அறிமுகப்படுத்ததப்பட்டு உள்ளது. பெரியார் வன விலங்கு சரணாலயம் மேற்கு பிரிவு சார்பில் தனியார் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியை வனத்துறையினர் நேற்று வெளியிட்டனர்.

இந்த செயலியில் பம்பை, சன்னிதானம், சுவாமி ஐயப்பன் சாலை, பம்பை-நீலிமலை, சன்னிதானம், எரிமேலி-அழுதைமலை-பம்பை உள்ளிட்ட சன்னிதான வழித்தடங்களில் உள்ள சேவைகள், யாத்திரையின் அனைத்து அம்சங்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, சபரிமலைக்கு செல்லும் பாரம்பரிய வழத்தடங்களில் உள்ள சேவை மையங்கள், மருத்துவ அவசர சிகிச்சை பிரிவுகள், தங்குமிடங்கள், யானைப்படை குழுக்கள், பொது கழிப்பறைகள், ஒவ்வொரு தளத்தில் இருந்தும் சன்னிதானம் வரை உள்ள தூரம், இலவச குடிநீர் வினியோகிக்கப்படும் இடங்கள் உள்ளிட்ட தகவல்களை இந்த செயலி வழங்குகிறது.

யாத்திரையின் போது பக்தர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்களும் அய்யன் செயலியில் இடம் பெற்றிருக்கிறது. இந்த செயலியை தமிழ், மலை யாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கும் செய்து கொள்ளலாம்.

மேலும் சபரிமலை யாத்திரை செல்லக்கூடிய காட்டுப்பகுதியில் ஆங்காங்கிகே கியூ-ஆர் கோர்டு வைக்கப்பட்டு இருக்கிறது. அதனை ஸ்கேன் செய்தும் செல்போன்களில் அய்யன் செயலியை பதிவிறக்கம் செய்யலாம். ஆப்லைன் மற்றும் ஆன்லைனில் இந்த செயலி வேலைசெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News