ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் அருகே முத்துமாரியம்மன் கோவில் விழா

Published On 2016-06-06 09:21 IST   |   Update On 2016-06-06 09:21:00 IST
திருப்பரங்குன்றம் அருகே முத்துமாரியம்மன் கோவில் விழாவில், சாமியாடி அரிவாள் மீது நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் பி.ஆர்.சி.காலனியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் உற்சவம் 11நாட்கள் விமர்ச்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டு விழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.

அன்று ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினார்கள். திருவிழாவையொட்டி கடந்த 11 நாட்கள் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சர்வஅலங்காரமும், பூஜைகள் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 2-ந்தேதி திருவிளக்கு பூஜையும் 4-ந்தேதி சுவாமி ஊர்வலம் வந்து அக்கினி கொப்பரை ஏந்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று (5-ந்தேதி) காலை ஏராளமான பெண்பக்தர்கள் கோவிலின் முன்பு குவிந்து குலவையிட்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி பயபக்தியுடன் வழிபட்டனர். மதியம் ஆயிரக்கானக்காண பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவின் முத்தாய்ப்பாக அரிவாள் மீது ஏறி நின்று கருப்புசாமியாடி பக்தர்களுக்கு குறி சொல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் அருள் வாக்கு கேட்டனர். அவர்களுக்கு அருள்வாக்கு வழங்கியது மெய்சிலிர்க்க வைத்தது திருவிழாவின் இறுதி நாளான இன்று (6-ந்தேதி) மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.

Similar News