ஆன்மிகம்

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தொடங்கியது

Published On 2016-06-07 08:09 IST   |   Update On 2016-06-07 08:09:00 IST
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நாளை (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலும் ஒன்றாகும். கோவிலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நேற்று அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து பிரம்மச்சாரி பூஜை, கஜ பூஜை, நவகிரக சாந்தி நடந்தது. மாலையில் அஷ்டலட்சுமி பூஜை, கோ பூஜை, சிறப்பு பூஜைகள், கடம் யாகசாலை பிரவேசம், முதலாம் கால யாக பூஜை நடந்தது. இரவில் சமய சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

2-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.45 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, மாலை 6 மணிக்கு 3-ம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது. இரவில் ‘நம் நாட்டில் ஜனநாயகம் வெற்றியா? தோல்வியா?‘ என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடக்கிறது. தொடர்ந்து நகைச்சுவை கலைநிகழ்ச்சி நடக்கிறது.

விழாவின் சிகர நாளான நாளை (புதன்கிழமை) காலை 8.45 மணிக்கு 4-ம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, கடம் புறப்படுதல் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு கோவில் விமானத்துக்கும், மூலவர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அம்மனுக்கு புதிதாக செய்யப்பட்ட தங்க திருமேனி கவசம் அணிவிக்கப்பட்டு, கும்பாபிஷேக தீபாராதனை நடைபெறும்.

மாலை 6 மணிக்கு ‘அம்பாள் மகிமை‘ என்ற தலைப்பில் சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு 1,008 திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு ‘கம்பராமாயண பாலகாண்டம்‘ என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. இரவு 10 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 11 மணிக்கு நாராயண சுவாமி சமேத திருவீதி உலா நடைபெறும்.

கும்பாபிஷேக விழாவையொட்டி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். நெல்லை, திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம், நாசரேத்தில் இருந்து குரங்கணிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பக்தர்கள் எளிதில் சாமி தரிசனம் செய்யவும், கும்பாபிஷேக புனித நீர் அனைவரின் மீது தெளிக்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Similar News