ஆன்மிகம்

சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா தேரோட்டம்

Published On 2016-06-07 08:59 IST   |   Update On 2016-06-07 08:59:00 IST
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
குமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை, ஆவணி மற்றும் வைகாசி ஆகிய மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அது போல இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 11-வது நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.

இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு திருநடை திறப்பு, 6 மணிக்கு மலர் அலங்காரத்துடன் அய்யாவுக்கு பணிவிடை, பகல் 11 மணிக்கு அய்யா தொட்டில் வாகனம் மூலம் தேருக்கு எழுந்தருளல், 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்கு தேரோட்டம் தொடங்கியது.

காவி உடை அணிந்து திருநாமம் தரித்து தலைப்பாகை அணிந்த அய்யாவழி பக்தர்கள் பக்தி கோஷமிட்டவாறு தேர்வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சிக்கு பூஜிதகுரு சாமி தலைமை தாங்கினார். தங்கபாண்டியன், ராஜசேகர், பையன்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்துக்குடைகள் முன் செல்ல தொடர்ந்து சென்ற திருத்தேர் கீழ ரதவீதி, தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதியை சுற்றி வந்து வடக்கு ரதவீதியில், தலைமைப்பதியின் வடக்கு வாசல் பதியை வந்தடைந்தது. அங்கு பக்தர்கள் அய்யாவுக்கு சுருள் படைத்து வழிபாடு செய்ய வெற்றிலை, பாக்கு, பழம், பன்னீர், பூ ஆகிய பொருட்களுடன் நீண்ட வரிசையில் காத்துநின்றனர்.

அங்கு பக்தர்களின் சுருள் ஏற்பு நிகழ்ச்சியும், அருள் ஆசி வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 6.30 மணிக்கு திருத்தேர் நிலைக்கு வந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் பல மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளானோர் பங்கேற்றனர். பள்ளியறை பணிவிடைகளை பால்பையன், பையன் காமராஜ், பையன், அஜித் ஆகியோர் செய்திருந்தனர். இரவு 7 மணிக்கு அய்யா ரிஷப வாகனத்தில் வீதி வலம் வரும் நிகழ்ச்சி, அதன் பின்னர் அன்னதானம், மேலும், கலையரங்கில் அய்யாவழி இன்னிசை, சமய மாநாடு, கருத்தரங்கம் ஆகியவையும் நடந்தது.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அய்யாவுக்கு பணிவிடையும், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியும் நடக்கிறது.

Similar News