ஆன்மிகம்

சிறந்த கொடையாளி துரியோதனனா? கர்ணனா?

Published On 2016-06-07 11:26 IST   |   Update On 2016-06-07 11:26:00 IST
உதவ இயலாவிட்டாலும், உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தாலே போதும், எல்லாம் நன்மையே நடக்கும்.
ஒரு நாள் துரியோதனன் கிருஷ்ணரிடம்,"எல்லோரும் கர்ணனையே கொடையாளி என்கிறார்களே! அப்படி அவன் பிரமாதமாக என்ன கொடுத்து விட்டான்.? அப்படி அவன் கொடுத்திருந்தாலும், அவை யாவும் என்னுடைய பொருள் தானே." என்றான்.

"உண்மை தான் துரியோதனா.! உன்னைவிடக் கர்ணனைப் புகழ்வது முட்டாள் தனம் தான் என்ற கிருஷ்ணர்,"ஆறு மாதங்களுக்குப் பின் நான் ஒரு யாகம் இயற்றப்போகிறேன். அதற்கு வேண்டிய எல்லாப் பொருட்களும் சேர்த்து விட்டேன். விறகு ஒன்று தான் பாக்கி. அதை நீ யாக காலத்தில் எனக்கு வழங்க முடியுமா.? என்று கேட்டார்.

கேவலம் விறகுக்காக, அதுவும் ஆறுமாதம் முன்னதாக சொல்ல வேண்டிய அவசியமென்ன என்று எண்ணிய துரியோதனன்," அந்த சமயம் சீட்டு கொடுத்தனுப்பு. அனுப்பி வைக்கிறேன் ,"என்றான்.

மழைக்காலம். வானமே பொத்துக் கொண்டு விட்டாற்போல் மழை நேரத்தில், இருபது வண்டிகளில், யாகத்துக்கு விறகு அனுப்புமாறு
துரியோதனனுக்கு சீட்டு கொடுத்தனுப்பினார் கிருஷ்ணர்.

அதைப் பார்த்த துரியோதனன் சமயம் தெரியாமல் விறகு கேட்கிறானே.! என்று திட்டியபடி

இப்போது சௌகரியப்படாது என்று சொல்லி வண்டிகளைத் திருப்பி அனுப்பி விட்டான்.

திரும்பிப் போகும் வண்டிகளை விசாரித்த கர்ணன், விபரமறிந்து, தன் நாட்டிலுள்ள பழைய வீடுகளை இடித்து, அதிலுள்ள உத்திரங்கள்,
மரங்களை அந்த இருபது வண்டிகளிலும் ஏற்றியனுப்பினான் கர்ணன்.

அதோடு தன் வண்டிகள் இரண்டையும் சேர்த்தனுப்பினான்.

நான்கு மாதங்களுக்குப் பிறகு கிருஷ்ணரைச் சந்தித்தான், துரியோதனன். "கண்ணா.! யாகத்தை எப்போது துவங்கப் போகிறாய்?" என்று கேட்டான்.

"கர்ணனின் உதவியால் யாகம் குறித்த காலத்தில் பூர்த்தி அடைந்து விட்டதே," என்றார் கிருஷ்ணர்.

துரியோதனனுக்கு ஒன்றும் புரியவில்லை. விபரத்தை விளக்கிய கிருஷ்ணர், "துரியோதனா.! இப்போதாவது புரிகிறதா? கர்ணன் உன்னை விட கொடையில் உயர்ந்தவன் என்று? கொடைக்கு பொருட்களும், காலமும் ஒரு பொருட்டேயல்ல; மனம் தான் வேண்டும்," என்றார் கிருஷ்ணர்.

முடிந்தளவு உதவுவோம்;

உதவ இயலாவிட்டாலும், உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தாலே போதும், எல்லாம் நன்மையே நடக்கும்.

Similar News