ஆன்மிகம்

சிவபெருமானை ஏன் லிங்க உருவில் பூஜிக்கிறார்கள்?

Published On 2016-07-26 14:54 IST   |   Update On 2016-07-26 14:54:00 IST
சிவபெருமானை சிவன் உருவில் பூஜை செய்யாமல் ஏன் அவரை லிங்க உருவில் பூஜிக்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சிவபூஜை செய்பவர்கள் சாதாரணமாக அவரை லிங்க உருவில்தான் பூஜை செய்வார்கள். ஆலயங்களில் கூட சிவ லிங்கத்தையே சிவபெருமானாக பாவித்து பூஜை செய்வார்கள். சிவபெருமானை சிவன் உருவில் பூஜை செய்யாமல் ஏன் அவரை லிங்க உருவில் பூஜிக்கிறார்கள்? சிவனும் சக்தியும் இணைந்ததே சிவலிங்க உருவம் ஆகும்.

சிவன் இன்றி சக்தி இல்லை, அது போலவேதான் சக்தி இல்லாமல் சிவனும் இல்லை. ஆகவே பிரபஞ்சத்தைப் படைத்த சிவபெருமான் எனும் பரப்பிரும்மன் என்பது சிவனும் சக்தியும் இணைந்துள்ள சிவசக்தி ரூபமே என்பதினால் சிவனை தனியான உருவிலே பூஜிக்காமல் சிவசக்தியான லிங்க உருவிலே பூஜிக்கிறார்கள். என்றுமே பார்வதி மற்றும் சிவனுக்கு தனி உருவம் கிடையாது. அவர் உடலில் பாதி பார்வதியாக உள்ளது.

சிவ லிங்கங்கள் நான்கு வகைப்படும். அவற்றில் முதலாவதானது ஆலயங்களில் வைத்து பூஜிக்கப்படும் 'அசல லிங்கம்' என்பதாகும். ஆலயங்களுக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிவலிங்கத்தை 'பரார்த்த லிங்கம்' என்றும் கூறுவார்கள். அது சுயம்பு லிங்கம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், மானுடலிங்கம் என ஐந்து வகைப்படும்.

அவற்றுள், சுயம்பு லிங்கம் என்பது தானாகத் தோன்றியது ஆகும். சிவபெருமானின் புதல்வர்களான வினாயகர் மற்றும் முருகப் பெருமான் போன்றவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டதை காணலிங்கம் என்பார்கள். தைவிக லிங்கம் என்பது விஷ்ணு பகவானும் பிற தேவர்களும் சேர்ந்து ஸ்தாபித்தவை ஆகும். ஆரிட லிங்கம் ரிஷி முனிவர்களால் ஸ்தாபிக்கப்பட்டவை. அவற்றை சில ராக்ஷசர்களும் அசுரர்களும் கூட ஸ்தாபித்து இருக்கிறார்கள். மனிதர்கள் ஸ்தாபித்தவற்றை மானுட லிங்கம் என்பார்கள். ஆலய கோபுரங்களையே கூட தூல லிங்கம் என்றும் கூறுவார்கள்.

இரண்டாவது வகை சிவலிங்கமானது இதயத்தில் சிவலிங்கத்தின் ஒரு உருவை நினைத்து இஷ்ட லிங்கமாக பூஜிக்கப்படும் 'சலன லிங்கம்' என்பதாகும்.

மூன்றாவது வகையிலான சிவலிங்கங்கள் ஹோமங்களில் பூஜிக்கப்படும் 'அசலசல லிங்கம்' ஆகும்.
 
நான்காவது வகை 'சலாசல லிங்கம்' எனப்படும் காணலிங்கமும் நவரத்தினங்களிலான லிங்கங்களும் ஆகும்.

சிவ பூஜையை அனைவராலும் செய்ய முடியாது, செய்யவும் கூடாது. அதற்குக் கட்டுப்பாடுகள் நிறையவே உள்ளன. பூஜைகளில் இரு வகைகள் உள்ளன. சாதாரணமாக வீடுகளில் செய்யப்படும் தினசரி பூஜை மற்றும் இரண்டாவது குருவிடம் இருந்து தீட்ஷை பெற்றுக் கொண்டு செய்யப்படும் பூஜைகள். தினசரி வீடுகளில் சிவபூஜையை ஆசாரத்தோடு செய்யலாம். ஆனால் ஞான மார்கத்துக்கு செல்ல விரும்புபவர்கள் செய்ய வேண்டிய சாஸ்திரோத்தமான சிவ பூஜையை முறைப்படி ஒரு பண்டிதரிடம் இருந்து கற்றறிந்து அவரை ஆசானாக ஏற்றுக் கொண்டு அதன் பின்னரே பூஜைகளை செய்யத் துவங்க வேண்டும். அதற்கு பல நியமங்கள் உண்டு.

Similar News