ஆன்மிகம்

மும்பையில் களை கட்டும் நவராத்திரி

Published On 2016-10-03 07:48 IST   |   Update On 2016-10-03 07:48:00 IST
நவராத்திரி விழாவையொட்டி பொதுமக்கள் கர்பா, தாண்டியா போன்ற பாரம்பரிய நடனங்கள் ஆடி அசத்துவதால் மும்பை நகரமே களைகட்டியுள்ளது.
மும்பையில் நவராத்திரி விழா நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி மண்டல்கள், அமைப்புகள் சார்பில் ‘தேவி‘ சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. விழா நாட்களில் தேவி சிலைகளுக்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டு வருகின்றன.

நவராத்திரி கொண்டாட்டத்தின் உச்சமான கர்பா, தாண்டியா ஆகிய பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் களை கட்டி உள்ளன.

தேவி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அந்தந்த பகுதியை சேர்ந்த இளம்பெண்கள், ஆண்கள், இளையோர், முதியோர் என வயது பாரபட்சமின்றி அனைவரும் புகழ்பெற்ற ‘தாண்டியா‘ நடனங்கள் ஆடி வருகின்றனர். அவர்கள் பாரம்பரிய உடையணிந்து வந்து நடனமாடி அசத்துகின்றனர்.

மும்பையின் அந்தேரி, வில்லேபார்லே, பாந்திரா, தாதர், குர்லா, தாராவி, முல்லுண்டு, காஞ்சூர்மார்க், காட்கோபர், தகிசர், போரிவிலி, ஜோகேஸ்வரி, கோரேகாவ், மலாடு, வடாலா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திறந்தவெளி மைதானங்களில் கர்பா நடனம் ஆடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானங்கள் இரவு நேரத்தில் மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்கின்றன.

திறந்தவெளி மைதானங்கள் இல்லாத குடிசை பகுதிகளில் சாலையிலேயே இளம்பெண்கள், ஆண்கள் தாண்டியா குச்சிகளை ஒருவருக்கொருவர் தட்டி, பாட்டுக்கு ஏற்றவாறு நடனம் ஆடுகின்றனர். இந்த நடனங்கள் தொடர்ந்து வருகிற 9-ந் தேதி வரையிலும் மும்பையை கலக்க உள்ளன.

Similar News