ஆன்மிகம்
அவினாசியில் நடந்த தேரோட்டத்தில் பக்தர்கள் அம்மன் தேரை வடம் பிடித்து இழுத்தபோது எடுத்த படம்.

அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அம்மன் தேரோட்டம்

Published On 2017-05-09 09:14 IST   |   Update On 2017-05-09 09:14:00 IST
அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் 2-வது நாளாக அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த மாதம் 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 4-ந்தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி 63 நாயன்மார்களுக்கும் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்றுமுன்தினம் காலை 10.30 மணி அளவில் பெரியதேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர். அதைத்தொடர்ந்து மாலை 4.30 மணி அளவில் தேர் நிலைக்கு வந்தடைந்தது.

2-வது நாளான நேற்று அம்மன் தேரோட்டம் (சிறியதேர்) காலை 11 மணி அளவில் நடைபெற்றது. இதில் சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.



முன்னதாக தேரில் வீற்றிருந்த அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

தேர் ரத வீதிகளில் வலம் வந்து பிற்பகல் 2.45 மணி அளவில் நிலையை வந்து அடைந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி அளவில் கோவில் தெப்பக்குளத்தில் தெப்பத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) நடராஜர் தரிசனமும், 11-ந்தேதி மஞ்சள் நீராட்டும் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

Similar News