ஆன்மிகம்
அழகர்மலைக்கு சென்றடைந்த கள்ளழகரை திரளான பக்தர்கள் மலர் தூவி வரவேற்ற காட்சி.

சித்திரை பெருந்திருவிழா நிறைவு: கள்ளழகர் அழகர்மலை சென்றடைந்தார்

Published On 2017-05-15 11:40 IST   |   Update On 2017-05-15 11:40:00 IST
உலகப்பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவிற்காக மதுரை சென்ற கள்ளழகர், நேற்று அழகர்மலைக்கு திரும்பி இருப்பிடம் சென்றடைந்தார். அவரை பக்தர்கள் மலர்கள் தூவி, கோவிந்தா முழக்கமிட்டு வரவேற்றனர்.
திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றி புகழ்ந்து அழைக்கப்படும், 108 வைணவ திருத்தலங்களில் முக்கியமானதுமான மதுரையை அடுத்து உள்ள அழகர்கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த விழா கடந்த 6-ந்தேதி தொடங்கியது.

8-ந்தேதி கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். மறுநாள் மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெற்று, 10-ந்தேதி சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர்.

மறுநாள் வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலிலிருந்து சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு மண்டூக முனிவருக்கு, கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி சாபம் தீர்த்து அருள்பாலித்தார். அன்றிரவு விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து 13-ந்தேதி நள்ளிரவுக்கு பின்பு பூப்பல்லக்கு விழா நடந்து, தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் முன்பு வையாழியாகி, கள்ளழகர் வந்த வழியாக மலைக்கு திரும்பினார். நேற்று (14-ந்தேதி) அதிகாலை அப்பன் திருப்பதி, கள்ளந்திரி உள்ளிட்ட பல மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்.

பின்பு காலை 10.30 மணிக்கு அழகர்கோவில் கோட்டை வாசலை சாமி வந்தடைந்தார். தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் முன்பு விசேஷ பூஜைகள், தீபாராதனை நடந்தது. பின்னர் அங்கு வையாழியாகி கோவில் உள்பிரகாரத்திற்குள் கள்ளழகர் சென்றார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று முழக்கமிட்டு, மலர்கள் தூவி கள்ளழகரை வரவேற்றனர்.

தொடர்ந்து அதிர்வேட்டுகள் முழங்கின. அவை அழகர்மலையில் எதிரொலித்தன. பின்னர் 18 பெண்கள் பூசணிக்காயில் கற்பூரம் ஏற்றி கள்ளழகர் வந்த தங்க பல்லக்கை மூன்று முறை வலம் வந்து திருஷ்டி கழித்தனர். அதன்பின் காலை 11.15 மணிக்கு மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கல்யாண சுந்தரவல்லி கோவில் யானை முன் செல்ல கள்ளழகர் பக்தர்கள் கூட்டத்தில் மிதந்து கோவிலுக்குள் போய் இருப்பிடம் சேர்ந்தார்.

திருவிழாவிற்காக அழகர்கோவிலில் இருந்து 26 உண்டியல் பெட்டிகள் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக சாமியுடன் சென்று திரும்பின. இந்த திருவிழாவின் போது கள்ளழகர் சுமார் 450-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் சாமி எழுந்தருளினார். இந்த விழாவில் தென்மாவட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகர்கோவிலுக்கு கார், வேன் மற்றும் பஸ் போன்ற வாகனங்களில் வந்து குவிந்து கள்ளழகரை தரிசனம் செய்தனர்.

இதில் கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் செல்வம் மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட காவல் துறை கண்காணிப்பில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று உற்சவ சாந்தியுடன் சித்திரை பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது.

Similar News