ஆன்மிகம்
தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.

தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் தேரோட்டம்

Published On 2018-03-01 12:17 IST   |   Update On 2018-03-01 12:17:00 IST
தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை மாவட்டம் தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் மாசி மகப்பெருவிழா கடந்த 20-ந் தேதி முதல் நடந்து வருகிறது.

விழாவையொட்டி தினமும் காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை, இரவில் மண்டகப்படி தீபாராதனை, சுவாமி-அம்பாள் வீதி உலா ஆகியவை நடந்து வருகிறது. மாலையில் சமய சொற்பொழிவு, இரவில் கலைநிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன.

திருவிழாவின் 9-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 6 மணிக்கு சுவாமி- அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நடைபெற்றது. 9.20 மணிக்கு மேளதாளம் மற்றும் அதிர் வேட்டுகள் ஒலிக்க சுவாமி தேர், நிலையத்தில் இருந்து புறப்பட்டது. செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தேரின் முன்பு சிவ பக்தர்கள் வேத பாராயணம் படித்து சென்றனர். பக்தி கோஷங்களை பக்தர்கள் முழங்கிட தேர் தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி வழியாக வந்து 10.25 மணிக்கு நிலையத்தை அடைந்தது. அதன்பிறகு 10.45 மணிக்கு உலகம்மன் தேர் புறப்பட்டது. இந்த தேர் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி 11.30 மணிக்கு நிலையத்தை அடைந்தது.

தேர் திருவிழாவை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர்.

Similar News