ஆன்மிகம்

அய்யா வைகுண்டர் அவதார தினவிழா ஊர்வலம் 4-ந்தேதி நடக்கிறது

Published On 2019-02-28 12:01 IST   |   Update On 2019-02-28 12:01:00 IST
நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டர் அவதார தினவிழா ஊர்வலம் வருகிற 4-ந் தேதி நடக்கிறது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் ஜெயந்தி நாளான மாசி 20-ந் தேதியை அய்யா வழி பக்தர்கள், அய்யா வைகுண்டர் அவதார தின விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு அவதார தினவிழா வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

அவதார தின விழாவின் முன் தினமான மார்ச் 3-ந் தேதி காலை 6 மணிக்கு அய்யா வைகுண்டசாமி விஞ்சை பெற்ற திருச்செந்தூர் பதியிலிருந்து நாகர்கோவிலை நோக்கி வாகன பவனி நடைபெறுகிறது.

இந்த வாகன பவனி திருச்செந்தூர், உடன்குடி, செட்டிகுளம், ஆரல்வாய்மொழி வழியாக நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது.

அதே தினம் காலை 9 மணிக்கு அய்யா வைகுண்டசாமி சிறையில் இருந்த திருவனந்தபுரம் சிங்காரத்தோப்பு, பதியில் இருந்து நாகர்கோவிலை நோக்கி மற்றொரு வாகன பவனி புறப்படுகிறது. இந்த வாகன பவனி திருவனந்தபுரம், பாறசாலை, மார்த்தாண்டம், வெட்டூர்ணிமடம் வழியாக நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது.

அன்று இரவு 9 மணிக்கு நாகராஜா கோவில் திடலில் அய்யாவழி சமய மாநாடு நடைபெறுகிறது. அய்யாவழி கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.

வருகிற 4-ந் தேதி அய்யா வைகுண்டர் அவதார தினத்தன்று அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்பு நோக்கி அவதாரதின ஊர்வலம் புறப்படுகிறது. இந்த ஊர்வலத்தில் பல மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியை சென்றடைகிறது. பின்னர் அய்யாவுக்கு பணிவிடை நடக்கிறது. அன்று இரவு சாமிதோப்பில் வாகன பவனி அன்னதர்மம், அய்யா வழி மாநாடு ஆகியவை நடைபெறுகிறது.

வைகுண்டசாமியின் அவதார தினத்தை முன்னிட்டு வருகிற 4-ந் தேதி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News