ஆன்மிகம்

எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு

Published On 2019-04-04 09:11 IST   |   Update On 2019-04-04 09:11:00 IST
சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
சேலம் குமாரசாமிப்பட்டியில் பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி பூச்சாட்டுதல், கம்பம் நடுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சக்தி அழைப்பு நிகழ்ச்சியும், அதன்பிறகு ஏராளமான பெண்கள் மா விளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு ஊர்வலமாகவும் வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

நேற்று கோவிலில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அஸ்தம்பட்டி, குமாரசாமிப்பட்டி, வின்சென்ட், சீரங்கபாளையம், மணக்காடு மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பெண்கள் அதிகாலையிலேயே கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள். மேலும், அம்மனுக்கு ஆடு, கோழிகளை பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைக்க இடவசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது. அங்கு காலை முதல் இரவு வரையிலும் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதனால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். சிலர் அக்னி மற்றும் பூக்கரகங்கள் எடுத்து கோவிலுக்கு வந்தனர். சில பக்தர்கள் விமான அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர். இதையொட்டி இன்று மாலை அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

நாளை (வெள்ளிக்கிழமை) பால்குடம் ஊர்வலமும், இதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதையடுத்து, மாலை 4.30 மணிக்கு வண்டிவேடிக்கை நிகழ்ச்சியும், இரவில் அம்மன் ஊர்வலமும் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு சத்தாபரணம் நடக்கிறது.

Similar News