ஆன்மிகம்
திருப்பதிக்கு ஸ்ரீரங்கம் பெருமாள் அனுப்பிய பட்டு வஸ்திரம்

திருப்பதி கோவிலுக்கு ஸ்ரீரங்கம் பெருமாள் அனுப்பிய பட்டு வஸ்திரம், சீர்வரிசை பொருட்கள்

Published On 2019-07-18 09:58 IST   |   Update On 2019-07-18 09:58:00 IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்த ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோவில் சார்பாக பட்டு வஸ்திரங்கள், சீர்வரிசை பொருட்கள் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று நடந்த ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோவில் சார்பாக பட்டு வஸ்திரங்கள், சீர்வரிசை பொருட்கள் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதற்காக ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோவிலில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் செயலாளர் அபூர்வாவர்மா, ஸ்ரீரங்கம் கோவில் இணை கமிஷனர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் திருமலைக்கு வந்தனர்.

அவர்கள் மூங்கில் தட்டுகளில் 6 பட்டு வஸ்திரங்கள் மற்றும் சீர்வரிசை பொருட்களான மஞ்சள், குங்குமம், வெற்றிலைப் பாக்கு, பழம், மலர்கள், மாலைகள், பாதாம், முந்திரி பருப்பு, கற்கண்டு ஆகியவற்றை வைத்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக திருமலையில் உள்ள பேடிஆஞ்சநேயர் கோவிலில் இருந்து திருமலை ஜீயர்சுவாமிகள் மடத்துக்கு வந்தனர். அங்கு வைத்து பட்டு வஸ்திரங்களுக்குச் சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது.

இதையடுத்து ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோவில் அதிகாரிகளும், திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், சிறப்பு அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி மற்றும் அதிகாரிகள் ஜீயர்சுவாமிகள் மடத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்து, பட்டு வஸ்திரங்கள், சீர்வரிசை பொருட்களை மூலவர் வெங்கடாசலபதியிடம் சமர்ப்பணம் செய்தனர்.

Similar News